Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Punithargal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Punithargal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 19, St. John Eudes - அர்ச்‌. யூட்ஸ்‌ அருளப்பர்

 

ஆகஸ்டு 1️9️ம்தேதி

யூடிஸ்ட்ஸ்குருக்கள்சபை என்று அழைக்கப்படுகிற, சேசுமரியாயின்சபையின்ஸ்தாபகரான அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்திருநாள்

அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, 1601ம்வருடம்‌, பிரான்சிலுள்ள நார்மண்டியைச்சேர்ந்த ரி என்கிற கிராமத்தில்‌, பக்தியுள்ள பெற்றோர்களிடம்பிறந்தார்‌. அவர்கள்இவரைப்பிறந்தவுடனேயே மகா பரிசுத்த தேவ மாதாவிற்கு அர்ப்பணம்செய்து ஒப்புக்கொடுத்தனர்‌. 1615ம்வருடம்‌, கான்என்ற இடத்திலுள்ள சேசுசபைக்கல்லூரியில்படித்தபோது, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்பரிசுத்த கற்பு வார்த்தைப்பாட்டைக்கொடுத்தார்‌; தன்னை முழுமையாக மகா பரிசுத்த தேவ  மாதாவிற்கு அர்ப்பணித்தார்‌;அன்று முதல்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மீதான அத்தியந்த பக்தியானது, இவரிடம்இன்னும்ஆழமாகவும்‌, இன்னும்உயரமாகவும்குறிப்பிடத்தக்கவிதமாக, அதிகரிக்கத்துவங்கியது.

1623ம்வருடம்‌, இவர்‌, வந்.பெரூலின்கர்தினால்ஆண்டகையால்ஸ்தாபிக்கப்பட்ட பிரான்ஸினுடைய ஜெபக்கூட துறவற சபையில்சேர்ந்தார்‌. 1625ம்வருடம்டிசம்பர்‌ 20ம்தேதியன்று,குருப்பட்டம்பெற்றார்‌; அப்போஸ்தல வேதபோதக அலுவலில்ஈடுபட்டு, நார்மண்டியிலும்‌, பர்கண்டியிலும்‌, பிரான்சின்ஏழைகள்வசிக்கும்சேரிகளிலும் மூலை முடுக்குகளிலும்‌, பிரிட்டனியிலும்‌, சுவிசேஷத்தைப்பிரசங்கித்து வந்தார்‌.  குருக்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி மிக முக்கியமானது, என்பதை உணர்ந்தவராக, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, செபக்கூட துறவற சபையிலிருந்து வெளியேறி, சேசுமரியாயின்சபையை ஸ்தாபித்தார்‌. இது யூடிஸ்ட்ஸ்துறவற சபை என்று அறைக்கப்படுகிறது; இச்சபையின்முக்கிய நோக்கம்‌, மிகச்சிறப்பான குருமடத்தினகல்வியை குருமாணவர்களுக்கு அளிப்பதாகும்‌.

இதனுடைய முதல்குருமடம் , கான்என்ற இடத்தில்ஆரம்பிக்கப்பட்டது;: பின்விரைவிலேயே,மற்ற  பல இடங்களிலும்துவங்கப்பட்டது. தீய வழிகளில்ஜீவிக்கும்பெண்களை மனந்திருப்புவதற்காகவும்‌, பாவ வழியிலிருந்து மனந்திரும்பிய உத்தம கத்தோலிக்க ஜீவியம்  ஜீவிக்கிற நிராதரவான பெண்களுக்கு உதவும்படியாகவும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்பிறா்சிநேகத்தின்சபையை அர்ச்‌. யூட்ஸ் அருளப்பா்ஸ்தாபித்தார்‌; புறக்கணிக்கப்பட்ட கத்தோலிக்கர்களிடம்சுவிஷேத்தையும்ஞான உபதேசத்தையும்போதிப்பதற்காக, பங்குகளில்செயல்படக்கூடிய ஒரு வேதபோதக நிறுவனத்தையும்ஸ்தாபித்தார்‌. நீண்ட காலமாக, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, தேவாலயங்களிலும்‌, திறந்த வெளி மைதானங்களிலும்‌, திரளான கூட்டங்களுக்கு, அல்லது அரண்மனைகளில்அரசவையிலுள்ள உயர்குடி மக்களுக்கும்அரசருக்கும்பிரசங்கித்து வந்தார்‌; மக்களிடையே நிலவிய பாவாக்கிரமங்கள்பற்றி, மிக பலமாகக்கண்டித்துப்பிரசங்கித்து வந்தார்‌; இவர்அனுசரித்த தன்னிகறற்ற பரிசுத்தத்தனத்துடன்கூட செய்த நேர்த்தியான பிரசங்கங்கள்‌, மக்களின்இருதயங்களை மிக ஆழமாக ஊடுருவும்சக்திவாய்ந்தவையாக திகழ்ந்தன!

பிரான்ஸ்நாடுமுழுவதும்‌, இவருடைய பிரசங்கங்கள்மிகவும்பிரபல்யமடைந்தன! திரளான மக்கள்பாவ ஜீவியத்தை விட்டு மனந்திரும்பினர்‌! உத்தம கத்தோலிக்கர்களாக ஜீவிக்கலாயினர்‌! நமதாண்டவருடையவும்‌, தேவமாதாவுடையவும்  மகா பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள்,‌ நம்மேல்கொண்டிருக்கும்அளவில்லாத சிநேகத்தினால்பற்றியெரிந்துகொண்டிருக்கின்றன! என்பதை கேட்பவர்இருதயங்களில்ஊடுருவும்படியாக, சேசுமரிய திரு இருதய பக்தியை அயராமல்சென்ற இடங்களிலெல்லாம்‌, பரப்பி வந்தார்‌. நம்மேல்சர்வேசுரன்கொண்டிருக்கும்அளவில்லாத சிநேகத்தினுடைய அடையாளமாக, திவ்ய சேசுமரிய திரு இருதயங்கள்நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன! என்றும்‌, இவ்விரு மகா பரிசுத்த திவ்ய திரு இருதயங்கள்மீது பக்திகொண்டிருக்கும்ஒரு உத்தம கத்தோலிக்க சமுதாயத்திற்கு நாம்எவ்வாறு அழைக்கப்பட்டிருக்கிறோம்‌? என்பதைப்பற்றியும்அயராமல்‌, அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்சென்ற இடங்களிலெல்லாம்‌, ஊக்கத்துடனும்உற்சாகத்துடனும்பிரசங்கித்து வந்தார்‌.

மகா பரிசுத்த சேசுமரிய திவ்ய திரு இருதயங்களுக்குத்தோத்திரமாக, இவர்திவ்ய பூசை ஜெபங்களையும்‌, திருவழிபாட்டின்மற்றும்துறவியர்கன்னியர்ஜெபிக்கக்கூடிய கட்டளை ஜெபங்களையும்இயற்றினார்‌; 1648ம்வருடம்‌, அவுட்டனில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மாசற்ற திரு இருதயத்தின்திருநாள்பிப்ரவரி 8ம்தேதி கொண்டாடப்படுவதற்கு ஏற்பாடு செய்தார்‌. 1672ம்வருடம்‌, அக்டோபர்‌ 20ம்தேதி, திவ்ய சேசுநாதர்சுவாமியின்மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்திருநாள்கொண்டாடப்பட்டது. அர்ச்‌. யூட்ஸ்அருளப்பர்‌, 1680ம்வருடம்‌, ஆகஸ்ட்‌ 19ம்தேதியன்று, சேசுமரியாயின்மகா பரிசுத்தத்திவ்ய திருநாமங்களை பக்திபற்றுதலுடன்உச்சரித்தபடி பாக்கியமாய்மரித்தார்‌. 1925ம்வருடம்‌, மே 31ம்தேதியன்று, 11ம்பத்திநாதர்பாப்பரசரால்இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது. இவர்மரித்தபிறகு, சேசுமரியாயின்சபை, தொடர்ந்து வளர்ந்து கொண்டு வந்தது. 1789ம்வருடம்‌, பிரஞ்சுப்புரட்சி துவங்கியபோது, இத்துறவற சபைக்குருக்கள்‌ 15 குருமடங்களை நடத்தி வந்தனர்‌; சில கல்லூரிகளையும்‌, சில பங்குகளையும்  நடத்தி வந்தனர்‌. பிரஞ்சுப்புரட்சியின்போது, இச்சபையின்எல்லா மடங்களும்மூடப்பட்டன ; இச்சபைக்குருக்கள்மற்ற நாடுகளுக்கு சிதறி ஓடினர்‌; இவர்களில்நான்கு குருக்கள்‌, உதவி தலைமை அதிபரானசங்.பிரான்சிஸ்லூயிஸ்ஹெர்பா்ட்சுவாமியார் உட்பட , பாரீசில்பிரஞ்சுப்புரட்சிக்காரர்களால்‌, வேதசாட்சிகளாகக்கொல்லப்பட்டனர்‌. 1926ம்வருடம்இவர்களுக்கு முத்திப்பேறுபட்டமளிக்கப்பட்டது. 

மற்ற மனிதர்களுடன்வியாபார விஷயமாக, ஏதாவது பேச்சு வார்த்தை நிகழ்த்துவதற்கு முன்னதாக,இந்த குறிப்பிட்ட அலுவலின்போது, அதன்விளைவாக, சர்வேசுரனுக்கு அதிமிக மகிமை ஏற்படவேண்டும்என்பதன்பேரில்‌, அந்த மனிதர்களும்ஏற்புடன்ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்ற கருத்திற்காக, எப்போதும்‌, அவர்களுடைய காவல்சம்மனசானவர்களிடமும்‌, அவர்களுடைய பாதுகாவலர்களான அர்ச்சிஷ்டவர்களிடமும்வேண்டிக்கொள்ளவேண்டும்‌!”- 🏻+ அர்ச்‌.  யூட்ஸ்அருளப்பர் 

ஸ்துதியரான அர்ச்‌. யூட்ஸ்அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


 

திங்கள், 5 பிப்ரவரி, 2024

அர்ச். ஆகத்தா - St. Agatha, February 5

அர்ச். ஆகத்தா (பிப்ரவரி 05
கன்னிகை, வேதசாட்சி



நிகழ்வு

நம் புனிதை ஆகத்தா கொடுங்கோலனும் காமுகனுமாகிய குயின்டசின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளைச் சிறையில் அடைத்து, பலவாறாக சித்ரவதை செய்து, அவளுடைய மார்புகளை குறடுகளால் சிதைத்து, குற்றுயிராய் போட்டிருந்தான்.

அப்போது அவள் இருந்த சிறையின் கதவுகளைத் திறந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார். அவருடைய கையில் கொஞ்சம் மருந்து இருந்தது. அவர் ஆகத்தாவிடம் வந்து, “அம்மா! உன்னுடைய உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும் காயங்களில் மருந்து தடவிவிடுகின்றேன். இதனால் உன்னுடைய காயங்கள் ஆறி, வேதனை தணிந்து விரைவில் நீ குணம் பெறுவாய்” என்றார். ஆகத்தா அவரிடம், “நான் ஆண்டவருக்காக எத்தகைய பாடுகளை மனமுவந்து ஏற்கத் தயார். தயவுசெய்து நீங்கள் என்னுடலில் மருந்து தடவி, நான் ஆண்டவருக்காக பாடுகள் படுவதை தடுத்து விடாதீர்கள்” என்றார். அதற்கு அந்த மனிதர் அவரிடம், “அம்மா! நான் வேறு யாருமல்ல இயேசுவின் தலைமைச் சீடராகிய இராயப்பர்தான். என்னை இங்கே ஆண்டவர் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவர்தான் என்னை உன்னுடைய காயங்களில் மருந்து தடவி விடச் சொல்லி, விசுவாசத்தில்
 இன்னும் திடப்படுத்திவிட்டு வரச் சொன்னார்” என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்து ஆகத்தா, இராயப்பர் தன்னுடைய காயங்களில் மருந்து தடவ அனுமதித்தாள். இதனால் அவள் மறுநாளே உடல் நலம்தேறி, புதுப்பொழிவு பெற்றாள்.

வாழ்க்கை வரலாறு

காத்தோலிக்க கிறிஸ்தவ நெறியை பின்பற்றவது என்பது இன்றைக்கு இருப்பது போல் அன்று அவ்வளவு சுலபமல்ல, கிறிஸ்தவம் படிப்படியாக வளர்ந்த அந்த தொடக்க காலகட்டங்களில் கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்து வாழ்வது என்பது மிகவும் சவாலான காரியம். அத்தகைய சூழலிலும் ஆண்டவர் இயேசுவை தன்னுடைய ஆண்டவராக, எல்லாமுமாக ஏற்றுக்கொண்டு, அவருக்காக தன்னுடைய உயிரைத் தந்தவர்தான் கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். ஆகத்தா.

ஆகத்தா கி.பி மூன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் (235 -251) பிறந்தவர், இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். அக்காலத்தில் உரோமையை குயின்டஸ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் உரோமைக் கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு, கிறிஸ்துவை வழிபடுகின்றவர்களை எல்லாம் கொடுமையாகச் சித்ரவதை செய்து கொலை செய்தான். இவனுடைய அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாது கிறிஸ்துவின் மீது உறுதியான விசுவாசம் கொண்டு விளங்கியவர்தான் ஆகத்தா.

ஆகத்தா கிறிஸ்துவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறாள் என்ற செய்தி மன்னன் குயின்டசுக்குத் தெரிய வந்தது. எனவே, அவன் படைவீரர்களை அனுப்பி ஆகத்தாவை இழுத்து வரச் சொன்னான். மன்னனின் உத்தரவின்பேரில் படைவீரர்கள் அவரை மன்னனுக்கு முன்பாக இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆகத்தாவை ஒருகணம் பார்த்த மன்னன் அவளுடைய அழகில் மயங்கி, அவளைச் சித்ரவதை செய்ய விரும்பாமல், தன்னுடைய ஆசைக்கு உட்படுத்த நினைத்தான். ஆனால் ஆகத்தாவோ, “நான் ஆண்டவருக்கு என்னையே முழுமையாய் அர்ப்பணித்து விட்டேன். அதனால் யாருக்கும் என்னைத் தருவதாய் இல்லை” என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்தாள். இதனால் மன்னன் அவரை சிறையில் அடைத்து அவருடைய சதையை பிய்த்து எடுத்து பலவாறாக சித்ரவதை செய்தான். அப்படியிருந்தாலும் ஆகத்தா தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் கடும் சினமுற்ற மன்னன் அவரை எரியும் தீயில் போட்டு கொன்று போட்டான்.

ஆகத்தா இறக்கும்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். அப்படியிருந்தாலும் அவர் ஆண்டவர் இயேசுவுக்காக செய்த தியாகம் அளப்பெரியது.

கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

விசுவாசத்திற்கு சிறந்த முன்மாதிரியாய் விளங்கிய அர்ச். ஆகத்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.



ஆண்டவருக்கு முழுமையாய் நம்மை அர்ப்பணித்தல்

அர்ச். ஆகத்தாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எப்படி ஆண்டவருக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார் என்பதுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது.

தன்னுடைய ஆசைக்கு ஆகத்தா இணங்க மறுத்ததும் குயின்டஸ் என்ற அந்தக் காமுகன் அவரை அப்போடிசியா என்ற விலைமகளிடம் அனுப்பி வைத்து, தன்னுடைய மாயவலையில் சிக்க வைக்க நினைத்தான். ஆனால், விலைமகளின் திட்டம் ஆகத்தாவிடம் செல்லுபடியாக வில்லை. மட்டுமல்லாமல் அந்த விலைமகன் ஆகத்தாவிடம் தான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டான். தான் போட்ட திட்டம் கைகொடுக்காததினால் கடும்கோபம் கொண்ட மன்னன் அதன்பிறகு ஆகத்தாவை பலவாறாக சித்ரவதை செய்து கொலை செய்தான். இப்படி எத்தனையோ சோதனைகள், அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஆகத்தா ஆண்டவர் இயேசுவுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்தது நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

அர்ச். ஆகத்தாவின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்த அர்ப்பண உணர்வை, உறுதியான விசுவாசத்தை நமதாக்குவோம். அதன்வழியாக ஆண்டவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.

திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள் (STE. CATHERINE DE BOLOGNE.)

மார்ச் மாதம் 11-ந் தேதி.
பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள்
STE. CATHERINE DE BOLOGNE.


பிறப்பு :  8 September 1413
இடம்    :  Bologna, Italy
இறப்பு :  9 March 1463 (aged 49)
இடம்     :  Bologna, Italy

Beatified
1524, Old St. Peter's Basilica by Pope Clement VII

Canonized
22 May 1712, St. Peter's Basilica by Pope Clement XI

Feast
9 March
இத்தாலி இராச்சியத்தில் பொலொஞா என்னும் பட்டணத்திலே உயர்ந்த கோத்திரத்தில் நல்ல கிறீஸ்துவர்களாகிய தாய் தகப்பனிடம் அர்ச். கத்தரீனம்மாள் பிறந்தாள். அச்சமயத்தில் தூரமான பட்டணத்திலிருந்த அவளுடைய தகப்பனாருக்குத் தேவமாதா தரிசனையாகி, அன்று அவனுக்குப் பிறக்கும் மகள் திருச்சபைக்குப் பிரகாசமாயிருப்பாளென்று அவனுக்கு அறிவித்தாள். தாய் தகப்பன் சொன்ன புத்தியை கேட்டுக் கத்தரீனம்மாள் சிறுவயது துவக்கிப் புத்திச் சுறுசுறுப்போடே புண்ணிய வழியிலே நடந்தாள். புத்தி விவரம் அறிந்த மாத்திரத்தில் அவள் பெற்றோர் பிரபுவின் மனைவியிடம் வளர வைக்கப்பட்டாள். ஆனால் அவளுக்கு ஒன்பது வயதானபோது அரண்மனையின் மகிமை வாழ்வையும் உலகத்தையும் வெறுத்துச் சில பக்தப் பெண்களோடு கன்னியாகத் தன்னைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். பின்னும் அர்ச். கிளாரம்மாள் கன்னியாஸ்திரி சபையில் உட்பட்டாள். அதிலே பத்தி, தேவசிநேகம், பிறசிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலான புண்ணியங்களால் உச்சிதமான விதமாய் விளங்கினாள். எல்லாருக்கும் ஊழியம் பண்ணத் தேடுவாள். அதிக தாழ்மையுள்ள அலுவல்களையும், எளிமையான வஸ்திரங்களையுஞ் சந்தோஷமாய் தனக்குத் தெரிந்து கொள்வாள். ஆயினுந் தேவ சித்தத்தால் மடத்து முதலாளியானாள். கர்த்தர் அவளுக்குத் தீர்க்கதரிசன வரம் முதலான சில விசேஷ தயை செய்தருளினார். ஆயினும் ஓர் சமயத்தில் அவள் தன்னிடத்திலே வெகு புண்ணி யங்கள் இருப்பதைக் கண்டு கர்வம் கொண்டு பேசினதால் அதற்கு அபராதமாக ஐந்து வருஷம் அவளுக்கு வெகு துக்கம் வருகிறதற்குச் சர்வேசுரன் சித்தமானாரென்று அவள் தான் இயற்றிய புத்தகத்திலே எழுதி வைத்தாள். அந்தத் துக்கத்தின் மிகுதிக்குத் தன் பாவங்கள் காரணமென்று அவள் நினைத்து அதை மிகப் பொறுமையோடே அனுபவித்தாள்.

அந்தப் புண்ணியவதி தேவநற்கருணையின் பேரிலே வைத்த பத்தியினாலே அதின் பேரில் அவள் தியானம் பண்ணும்போது சந்தோஷத்தினால் அழுவாள். அவள் பூசை காண்கிறபோது மிகுந்த தாழ்ச்சி பத்தியாயிருந்ததினால் ஒரு பூசையிலே சம்மனசுகள் பாடுகிற திருப்பாடல்கள் புதுமையாக அவளுக்குக் கேட்கப்பட் டது. கர்த்தர் பிறந்த திருநாள் இரவில் அந்தம்மாள் தியானத்திலிருந்தபோது தேவமாதா குழந்தை சேசு நாதரை ஏந்தின வண்ணம் அவளுக்குத் தரிசனையாகி அந்தத் திவ்விய குழந்தையை அவள் கையிற் கொடுத்தாள். அந்தத் திவ்விய குழந்தையை வாங்கி அணைத்து முத்தி செய்தபோது எத்தனை சந்தோஷத்தை அனுபவித்தாலென்று சொல்லக்கூடாது.

 அர்ச். பிரான் சீஸ்கென்பவரும் அவளுக்கு இரண்டு விசை தரிசனையானார். அந்தப் புண்ணியவதி ஐம்பது வயது வரை தரும வழியிலே நடந்த பிறகு, 1463-ம் வருஷம் மார்ச் மாதம் 9-ம் தேதி காலம்பண்ணி மோட்ச பாக்கியத்தை அடைந்தாள்.

 கிறீஸ்துவர்களே! அர்ச். கத்தரீனம்மாள் தன் வாயினாலே கட்டிக்கொண்ட அற்ப குற்றத்திற்கு ஐந்து வருஷம் வெகு துக்க துயரத்தை நல்ல மனதோடே அனுபவித்தாள். தம்பீ ! வாயினாலும், மனதினாலும், கிரியையினாலும் நீ கட்டிக்கொண்ட பெரிய பாவங்களுக்கு அபராதமாகக் கொஞ்ச நாளாகிலும் கொஞ்ச மாதமென்கிலும் அனுபவிக்க வேண்டிய கஸ்தி பொல்லாப்புகளைப் பொறுமையோடே அனுபவிக்க வேண்டாமோ? அவைகளைப் பொறுக்க மனதில்லாமல் சர்வேசுரன் பேரிலே நீ முறையிட இடமுண்டோ? உனக்கு வருகிற கஸ்திக்கு நீ செய்த பாவங்கள் காரணமென்று இந்த அர்ச். கத்தரீனம்மாளைப் போல அடிக்கடி நினைத்தால் அந்தம்மாளுடைய பொறுமைக்கொப்ப நீயும் பொறுமை அடைவாயே இதல்லாமல் உன்னிடத்திலே அநேகம் நன்மையிருந்தாலும் அதினாலே உன்னையே புகழ்ந்து பேச வேண்டாம். ஏனெனில் உன்னிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் ஆண்டவருடைய உதவியினால் அல்லவோ வந்தன. சுவாமி உன்னைக் கைவிட்டால் நீ பாவங்கள் நிறைந்தவனாய் இருப்பதல்லாமல் அற்ப புண்ணியமாகிலுஞ் செய்ய மாட்டாய். உன்னிடத்திலுள்ள நன்மைகளுக்குள்ளே ஒரு நன்மையாகிலும் அவரிடத்திலிருந்து வாங்காத நன்மையுண்டோ? நன்மைகளெல்லாம் ஆண்டவராலே நீ கைக்கொண்டிருக்கையிலே அந்த நன்மைகள் முகாந்தரமாக நீ உன்னைக் கொண்டாடலாமோவென்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் திருவுளம்பற்றினதை நன்றாய் யோசித்துத் தாழ்ச்சியாய் இருக்கக்கடவாய். ஒரு சுரூபத்திற்கு உயிர் வந்து அது தன்னிடத்திலுள்ள பொற்பூச்சு முதலான சித்திர வர்ணங்களைக் கண்டு, தன்னைக் கொண்டாடுகிறதைச் சித்திரக்காரன் கேட்பானேயாகில், நான் இந்த வர்ணமெல்லாம் உனக்குக் கொடுத்திருக்கையில் நீ என்னை நினையாமல் உன்னைக் கொண்டாடலாமோ வென்று சொல்லுவது நியாயந்தானல்லவோ ? அவ்வாறே உன்னிடத்திலிருக்கிற நன்மையைக் குறித்து யோசிக்கவேண்டும். அர்ச். கத்தரீனம்மாள் மிக விசுவாசத்தோடேயும் பத்தியோடேயுந் திவ்விய பூசை கண்டதினால் சம்மனசுகளுடைய திருப்பாட்டுகளைப் புதுமையாகக் கேட்பதற்குப் பாத்திரமானாள். பராக்காயிருந்து அநேகங் குறையோடே பூசை காண்கிறவர்கள் இதைக் கேட்டு வெட்கப்படவேண்டும். பெரிய வெள்ளிக்கிழமையிலே சேசுநாதர் கபால மலையிலே மரணத்தை அடைந்தபோது நீங்கள் அங்கே இருந்திருப்பீர்களேயாகில், பராக்கில்லாமல் மிக உருக்கத்தோடேயும் பத்தியோடேயும் இரத்தஞ் சிந்தின அந்தப் பலிபூசையைக் காண்பீர்களல்லவோ? உங்களுக்கு மெய்யாகவே விசுவாசமிருந்தால், இரத்தஞ் சிந்தாத இந்தப் பலிபூசையைக் காண்கிறபோது அவ்வாறே இருக்கவேண்டும். அதேனென்றால், அந்தப் பலியிலே பிதாவாகிய சர்வேசுரனுக்கு நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த சேசுநாதர் தாமே இந்தப் பூசைபலியிலும் பிதாவுக்குக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறார். ஆதலால் பூசைகாண்கிற பாக்கியம் உங்களுக்கு எத்தனைமுறை அகப்படுமோ அத்தனை முறையும் நீங்கள் உயிருள்ள விசுவாசத்தோடும் பத்தியோடும் பூசை காணவேண்டும். தேவமாதா அர்ச். கத்தரீனம்மாள் கையிலே தமது திவ்விய குழந்தையாகிய சேசுநாதரைக் கொடுத்தபோது அந்தம்மாள் மிகுந்த பாக்கியத்தை அடைந்தாள். அப்படிக்கொத்த பாக்கியத்திற்கு நீங்கள் பங்காளிகளாயிருக்க வேண்டுமானால் நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கவேண்டும். அதன் வழியாகச் சேசுநாதர் உங்கள் இருதயத்திலே வருவாரென்பதினாலே அதைவிட மேலான பாக்கியங் கிடையாதென்று உணர்வோம்.

 விவரம்:- இந்த அர்ச்சியசிஷ்டையுடைய திருச்சரீரம் இன்னும் அழியாமல் இருக்கின்றது. அவள் மரித்து அநேக வருஷத்திற்குப் பிறகும் அது இன்னும் உயிராய் இருப்பதுபோல் தோன்றுவதுமன்றி உஷ்ணமுள்ளதுமாயிருந்தது.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)

 தன்னையே பலியாக்கியவர்



"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.

1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும்  தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.

கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.

"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.

சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.

திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.

"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்

இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.

"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.

பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"

"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.

நான் ஒரு குரு

ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.

அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.

“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.

சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.

“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.

சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.

சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.

இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது


சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil


Life History of St. Maximillian Kolbe

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய பிலேத்தென்பவர் (Philete Disciple of St. James)

அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய 

பிலேத்தென்பவர் சரித்திரம்.

PHILÉTE DISCIPLE DE ST. JACQUES LE MAJEUR.

பிலேத்தென்பவன் ஒரு மாயவித்தைக்காரனிடம் மாய்கை கற்றுப் பழகினான். இப்படி இருக்கையில் அப்போஸ்தலரான அர்ச். பெரிய யாகப்பர் யூதேயா  தேசத்தில் சர்வேசுரனுடைய திவ்விய வேதத்தைப் போதிக்கிறபோது அவர் பண்ணின ஆச்சரியமான புதுமைகளை உலகத்தார் கண்டு அவரோடே தர்க்கம் பண்ணப் பிலேத்து கெட்டிக்காரனென்று எண்ணி அதற்கு அவனைத் தெரிந்து கொண்டார்கள். அப்படி யே பிலேத்து அர்ச். யாகப்பரோடு தர்க்கம் பண்ணு மிடத்தில் அவன் தோல்வியடைந்ததுமன்றி அர்ச். யாகப்பர் சொன்ன நியாயங் களைக் கண்டுபிடித்து மனந்திரும்பி அக்கியானத்தையும் மாய்கை வித்தைத் தொழிலையும் விட்டுவிட்டு ஞானஸ்நானம் பெற்றான்.

பிறகு தனக்கு மாய்கை வித்தை சாஸ்திரம் படிப்பித்தவனிடத்தில் போய் நடந்த செய்திகளை வெளிப்படுத்தி அவனுஞ் சேசுநாதருடைய வேதத்தைத் தழுவும் பொருட்டுப் புத்தி சொன்னான். எர்மொஜேனென்னும் அந்த மனிதன் இந்தச் செய்தியை அறிந்து மிகக் கஸ்திப்பட்டுத் தன்னுடைய சீஷன் கிறீஸ்துவனானதி னாலே அவன் பேரிலே மிகக் கோபம் கொண்டு பில்லி சூனியம் வைத்துப் பிலேத்தின் கை கால் வழங்காதிருக்கப் பண்ணினான். இதை அர்ச். யாகப்பர் அறிந்து தமது கையிலிருந்த ஒரு சின்ன சீலையை அவரிடம் அனுப்பினார். பிலேத்து அதை மிக வணக்கத்தோடு வாங்கின உடனே அதைக்கொண்டு அந்தப் பில்லி சூனியம் நீங்கிப்போய்க் கை கால்கள் எப்போதும்போல் நன்றாய் விழங்கி வந்தது. அவருக்குக் குணமான பிற்பாடு ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்ட ஆரோக்கியத்தை வேதம் போதிக்கச் சுற்றித் திரிந்து பிரயாசைப்படுவதிலே செலவழித்தார். இப்படி இருக்கையிலே திருச்சபையின் எதிரிகள் அவரைப் பிடித்துக் காவலிலே வைத்தார்கள். அவர் அநேக நாள் காவலிலே இருந்து கடைசியிலே வேதசாட்சியாக மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே ! அர்ச். பிலேத், உலகத்தானும் மாய்கை வித்தைக்காரனுமாய் இருந்தாலும், அர்ச். யாகப்பரோடே தர்க்கம் பண்ணுமிடத்தில் சத்தியத்தைக் கண்டுபிடித்தவுடனே, முன்னையைப்போல தீய வழியில் நடவாமல் நியாயத் தின்படியே நடக்கத் துவக்கினார். அவ்வாறே நீங்களும் நடக்கவேண்டும். இருட் டிலே நடக்கிறவனுக்குப் பள்ளம், மேடு, கிணறு, தாழ்வு, சேறு, பாம்பு இன்னவிடத்தில் இருக்கிறதென்று தெரியாதென்பது உண்மை. ஆனால் அவனுக்கு முன்னே தீ வர்த்தியின் வெளிச்சம் அவனுக்கு நல்ல வழிகாட்டிப் போகிறபோது, அதற்குப் பின் நடந்தால் அவனுக்குக் கேடுவராது. அவன் அந்தத் தீவர்த்தியின் பிறகே போகாமல் தன்மனதின்படியே நடக்கிறபோது கிணறு பள்ளங்களில் விழுவது இயற்கை, அறியாமையாகிய அந்தகாரத்திலே சத்தியமானது ஞானப்பிரகாசம்போல் இருக்கிறதன்றி ஆண்டவர் மனிதர்களுக் குக் கட்டளையிட்ட புத்தியைக்கொண்டு சத்தியத்தைக் கண்டு பிடிக்கலாம்.

அதைக் கண்டுபிடித்த பிறகு, அதின்படியே நடக்க மனிதனுக்குக் கடமை யுண்டு. இதை நன்றாய்க் கண்டுபிடிக்க இப்போது சொல்லப்போகிற உவமையை கேளுங்கள். மாடானது நல்ல பயிரைக் கண்டவுடனே அதைத் தின்கிறபோது பயிரிட்டவனுக்கு வெகு சேதமென்று நினையாமல் தன் பசி அமருமட்டும் அந்தப் பயிரைத் தின்னும். புலியானது காட்டிலே தனிமையாய்ச் சிறு குழந்தையையோ பெரிய இராசாவையோ கண்டவுடனே அவர்கள்மேல் பாய்ந்து பட்சிக்கிறபோது, அதிலே பெரும் தீங்கு இருக்கிறதென்று நினையா மல் தன் சுபாவ கொடுமையின்படியே பாயும். யானை மதமெடுத்துத் திரிகிற போது, அதன் முன்பாக வீடு வாசல் மாடு மனிதர் என்ன எதிர்பட்டாலும் அதை அழித்துத் தகர்த்துப் போடும். அது பெரிய அநியாயமாயிருந்தாலும் அதை நினையாமல் தன் ஆங்காரத்தின்படியே செய்யுமே. மிருகங்களுக்குப் புத்தி இல்லாததினாலே அவைகள் நீதி நியாயங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உண்மை. மனிதரோவெனில், மெய்யான தேவனை வணங்காமல், பொய்யான தேவர்களை வணங்குகிறதும், பில்லி சூனியம் வைக்கிறதும், களவு செய்வதற்குத் துர்ப்புத்தி சொல்லுவதும், கோள் சொல்லுகிறதும், இவை முதலான பல பொல்லாங்கு செய்கிறதும் அநியாயமென்று 'அவரவருக்குச் சர்வேசுரன் கொடுத்த புத்தியைக் கொண்டு கண்டு பிடிக்கலாம்.

ஆனால் சில பேர்கள் தங்கள் இஷ்டத்தின்படியே பொல்லாத ஆசையை அநுசரிக்க மனதாயிருக்கிறதே யல்லாமல், நியாயத்தின்படியே நடக்க மனதில்லாமல் இருக்கிறார்கள். இதினாலே இத்தகையோர்களுடைய நடத் தைக்கும் மிருகங்களுடைய நடத்தைக்கும் வேற்றுமை காணோம். நீங்கள் புத்தியில்லாத வஸ்துவைப் போல நடவாதபடிக்கு நியாயத்தைக் கண்டுபிடித்த வுடனே அதற்குத் தக்கபடி நடக்கவேண்டும். பழி வாங்குகிறதும் மோக பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறதும் ஆகாதென்று கோபக்காரனும் பொல்லாத இச்சையுள்ளவனும் முதலாய் ஒத்துக்கொள்ளுவார்கள். கோப வெறியிலும் காம வெறியிலும் புத்தி மயங்கித் தங்களுக்குச் சில நியாயந் தோன்றுகிற தென்று அவர்கள் சொல்லுவார்களாக்கும். பச்சைக் கண்ணாடியை மூக்கிலே வைத்துப் பார்க்கிறவனுக்கு எல்லாம் பச்சையாய்த் தோன்றும். அதை எடுத்து விட்டுப் பார்க்கிறபோது, பச்சை நிறம் நீங்கி எல்லாம் இயற்கையாய்க் காணப்படும்.

அப்படி கோபக்காரனுக்கும் பொல்லாத இச்சை யுள்ளவனுக்கும் நியாயமில்லா திருந்தாலும் அந்தப் பாவ மயக்கம் இருக்குமட்டும் அடாத நியாயந் தோன்றும். அந்த மயக்கம் நீங்கின பிறகு, முந்தி நியாயமென்று தோன்றினது அநியாயமாகத் தோன்றும். தாகமுள்ள வியாதிக்காரன் வைத்தியன் விலக்கின தண்ணீரின் பேரிலே வெகு ஆசையாயிருக்கிறபடியினாலே தண்ணீரைக் குடிக்க வேண்டுமென்று ஆயிரம் விசை சொன்னாலும் அவன் அப்படி சாதிக்கிறது நியாயமல்ல. அவன் வைத்தியனைக் கேட்டுத் தண்ணீர் குடிக்கலாமென்று இவன் சொன்னால் அப்போது அது ஞாயந்தானென்று ஒத்துக்கொள்ளலாம். அவ்வண்ணமே ஞான வியாதிக்காரராகிய பாவிகள் தங்கள் துராசைகளை அநுசரிக்காமல் ஞான வைத்தியராகிய குருக் களையோ, பத்தியுள்ள நல்ல கிறீஸ்துவர்களையோ புத்தி கேட்டுத் தங்களுக்குத் தோன்றுகிற சந்தேகங்களைச் சொல்லி அவர்கள் சொல்லும் ஞாயத்தின்படியே நடக்கவேண்டும்.


Download Tamil Catholic Songs Click here

Read more saints lives history in tamil.






சனி, 13 ஜனவரி, 2024

அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.

 மார்ச் மாதம் 28-ம் தேதி.

அர்ச். கொந்திறான் இராசா


ST. GONTRAN.

கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை  பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.

விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.

கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!

பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17. - அர்ச். லூசியா (அர்ச். பிரகாசியம்மாள்)

 St.Lucy's Feast - Dec 13 - celebrated as festival of lights

திருநாள்: டிசம்பர் 13


Born .      கி.பி 283

இடம்         Syracuse, Roman Empire

தந்தை     பெயர் தெரியவில்லை 

தாய்          யுற்றிக்கியா

Died      304 Syracuse, Western Roman Empire


பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் வேதசாட்சியான லூசியா சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கத்தோலிக்க கிறிஸ்தவராக  வளர்க்கப்பட்டு வந்தார் . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . லூசியாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை ஆண்டவருக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார் 

இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட லூசியா , "அம்மா . நாம் அர்ச். ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும்  அர்ச். ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு அர்ச். ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த லூசியாவின் கனவில் அர்ச். ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய்? உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு ஆண்டவருக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை சர்வேசுரன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.

லூசியா இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட லூசியா , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் .புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள்" என்று கூறினார் . லூசியா அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .

 இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் லூசியா பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்' "இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள்" என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "ஆண்டவருக்கு சொந்தமானவள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல இஸ்பிரித்து சாந்துவானவர்  துணை நிற்பார் .ஏனெனில் பரிசுத்த வாழ்வு வாழ்வோர் யாவரும் இஸ்பிரித்து சாந்துவானவரின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது இஸ்பிரித்து சாந்துவானவர் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள்" என்றார் , லூசியா . 

இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , லூசியாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற அர்ச். லூசியாவிடம் மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள் . எனவே தான் அர்ச். லூசியாவை பிரகாசியம்மாள் என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . லூசியாவைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது . 

சனி, 16 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17 - அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)

 கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிதத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது)

அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)


அது. 1566 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிநாட்கள். அன்று இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வண்ண, வண்ண அலங்கார வளைவுகள், தோரணங்கள், ஒளியை உமிழும் பல வண்ண விளக்குகள் என எங்கும் ஆடம்பரம்! துணைவேந்தர். பேராசிரியர், அறிஞர்கள். மாணவர்கள், ஊழியர் என பலதரப்பினரும் ஒருவித பதட்டத்தோடு காத்திருந்தனர். வளாகத்தில் மேடைகளும், அறிவார்ந்த சொற்பொழிவு விவாத அரங்கங்களும் தயாராயிருந்தன. அவற்றில் அமைக்கப்பட்டு பங்கேற்று தங்கள் அறிவுத்திறனை எண்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தயாராக நின்றிருந்தனர்.

யாருக்கு இந்த வரவேற்பு? ஆம்! இங்கிலாந்து தேசத்தை ஆளும் தன்னிகரற்ற அரசி முதலாம் எலிசபெத் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்ய வருகிறாள். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தன்னை விளக்கிக் கொண்டு இங்கிலாத்தின் திருச்சபைக்கு தானே தலைவன் என்று அறிவித்து எதிர்ப்பு மதத்தை உருவாக்கிய 8ம் ஹென்றியின் மகள். அவனுக்கும் அவன் தேவதுரோகமாக மணந்து கொண்ட ஆன்போலினுக்கும் பிறந்த வாரிசுதான் இந்த அரசி! தந்தையைப் போலவே பாப்பரசரின் வேதத்தை மறுதலித்து தன்னையே இங்கிலாந்தின் ஆங்கிளிக்கன் சபையின் தலைவியாக அறிவித்து, அவள் பட்டத்திற்கும் வரும்போது வயது 25தான்! ஆனாலும் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் என்ற கதையாக கத்தோலிக்க எதிர்ப்பைக் கடைபிடித்துவந்தாள். கத்தோலிக்க வேதமே இங்கிலாந்தில் இல்லாமல் செய்ய சூளுரைத்தாள்! திவ்விய பலிபூசை, குருக்கள், கத்தோலிக்க மத அனுசாரணம் யாவும் தடைசெய்யப்பட்டது. அப்படி மீறி இங்கிலாந்தில் குருக்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தலை உருளும், அவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஒப்புக்கான விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்கள். இங்கிலாந்து திருச்சபையின் தலைவி அரசியே என்று சத்திய பிரமாணம் செய்து பாப்பரசரை மறுதலிக்காதவர்கள் தேவ துரோகக் குற்றம் சூட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு வயிறு கிழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறாக கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த அவள் படித்த அறிஞர்கள், அறிவுடையோர் கல்வியாளர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்த்தவராக இப்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு வருகைதந்து, தனது கொள்கைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற ஆசித்தாள், அதன் பதிரொலியாகத்தான் இன்றைய "ஆக்ஸ் போர்ட் விஜயம்!"

தமது அரசவை உறுப்பினர்கள் புடை சூழ மகா கம்பீரமாக வந்த அரசி தமது ஆசனத்தில் அமரவும் அவளை வரவேற்கும் படலம் ஆரம்பமாயிற்று.

அங்கே முதல் வரிசையிலே, அறிவுஜீவி, அறிஞர், சிறந்த பேச்சாளர், பேராசிரியர் என்றெல்லாம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன். அரசியை வரவேற்று சொற்பொழிவாற்றும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கன்னியமாக உடையணிந்திருந்த காம்பியன் மிடுக்கான தடையில், அரசியை வணங்கிவிட்டு சொற்பொழிவு மேடையேறி தமது அறிவார்ந்த நடையில் கணீர்குரலால் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியை வாழ்த்தி பேச அவர் கையாண்ட நாவன்மையைக் கண்டு அவையோர் ஆர்ப்பரித்து மகிழ அரசியின் முன்னோர்கள், அவனது ஆட்சி. அவளோடு வந்திருந்த அமைச்சர் பெருமக்கள் என அனைவரையும் பாராட்டி பேசிய காம்பியனின் குரல் அந்த அசங்கத்தின் கையொலியால் கரைந்துபோனது. அவரது பேச்சு திறமையில் உள்ளம் நெகிழ்ந்து மகிழ்ந்த அரசியின் முகம் பிரகாசமடைந்தது. வரவேற்புரையை நிகழ்த்தி முடித்து தலைகுனிந்து அரசியை வணங்கிய காம்பியனுக்கு வயது 26! தமது அறிவுத் திறமையால் "இங்கிலாத்தின் இரத்தினம்" என்று பட்டம் சூட்டப்பட்ட எட்மண்ட பேரொலியால் எழுந்த கரவொலியால் பெருமை பொங்க மேடையை விட்டு இறங்கினார்.

ஆனால், அதே எட்மண்ட் காம்பியன் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அரசியால் "தேசதுரோகி" என்ற பட்டம் சூட்டப்பட்டு கொடூரமாய் தூக்கிலிடப்பட்டு வேதசாட்சியடைந்தார்! ஆம். அதுவே தேவ திருவுளம்! சத்திய வேதமாம், கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசத்திற்காக அவர் இரத்தம் சிந்தினார்.

மனந்திரும்பிய காம்பியன்!

1540 -ம் லண்டன் மாநகரில் பிறந்த எட்மண்ட் காம்பியனின் தந்தை ஒரு புத்தகவியாபாரி. அதனால் தானோ என்னவோ படிப்பில் சிறந்து விளங்கினார். தமது 17வயது வயதில் அர்ச். ஜான் கல்லூரியில் ஃபெல்லோஷிப் பட்டம் பெற்றார். அவர் எவ்வளவுக்கு அறிவுத்திறமையும், நாவன்மையும் கொண்டிருந்தாரானால், அவரைச் சுற்றி எப்போதும் மாணவக் கூட்டம் இருக்கும். அவரது பேச்சை, அதில் மினிரும் அறிவுத்திறமையை சாதூரியத்தை, பழக்க வழக்கங்களை கண்டு பாவிக்கவும், அன்றைய மாணவர்களிடையே ஒருவித ஆவல் இருந்தது. அதனாலேயே அவரோடு சுற்றித் திரிந்தவர்களை "காம்பியன் கூட்டத்தார்" என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியலில், தத்துவ சாஸ்திரத்தில், லத்தீன் மொழியில் புலமை பெற்று "அசாதாரணமான மாணவன்" என்ற பெயர் பெற்றர். ஏழ்மையில் இருந்ததால் அவரது படிப்புச் செலவிற்காக சலுகையும் உதவித்தொகையும் பெற்றார்.


ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகக் கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் ஏற்றுக் கொண்டிருக்கும் போதுதான அங்கே அரசி எலிசபெத்தின் வருகை நிகழ்ந்தது. அவளை வரவேற்பளிக்கத் தெரிவு செய்யப்பட்ட காம்பியனும், தமது அறிவார்ந்த உரையால் அரசியின் பெருமதிப்புக்குள்ளானார். அரசவை கூட்டங்களில் உரையாற்ற அழைக்கப்பட்ட அவர் "இங்கிலாந்தின் இரத்தினம் " என்று கௌரவப்பட்டம் பெற்றார். அரசாங்க ஆதரவு அவருக்கு இருந்ததால் பிற்காலத்தில் உயர்பதவிகள் காத்திருந்தன.

எலிசபெத் அரசி ஆட்சி பொறுப்பேற்கும் வரை கத்தோலிக்கராயிருந்த இவரது குடும்பம், பாப்பரசரின் அதிகாரத்துக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டபோது, அதை ஆதரித்து ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்தது. தமது கல்வி, எதிர்காலம் கருதிய எட்மண்ட் அரசியே இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற சத்திய பிரமாணத்தை செய்தார். புராட்டஸ்டாண்ட் ஆங்கிளிக்கன் சபையில் சேர்ந்திருந்தாலும் அவரது மனதில் ஒரு கலக்கம் தோன்றியது. ஏனெனில் தத்துவ சாஸ்திரம் கற்கும்போது திருச்சபையின் பிதாபிதாக்கள் எழுதிய நூல்களையும் கற்க நேரிட்டது. அவர்களது கத்தோலிக்க விசுவாச உறுதியையும், அதுவே சத்திய வேதம் என்பதை சுட்டிக்காட்ட அவர்கள் தந்த ஆதாரங்களையும் கண்டு உள்ளம் தாக்குண்டவரானார். இந்நிலையில் தான் ஆங்கிலிக்கன் சபையில் தியோக்கன் பட்டம் பெற்றார்.

பலருடைய மதிப்பையும், நட்பையும் பெற்று உயரிய பதவியடைய வாய்ப்பிருந்த போதிலும் தான் ஆங்கிலிக்கன் சபையில் பட்டம் பெற்றது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவரது ஆன்மா சத்தியத்தை நாடி தேட அம்முயற்சியில் இறங்கிய காம்பியன் திருச்சபையின் வரலாற்றை படிக்கலானார். பல பிதாப்பிதாக்களின் நூல்களை கற்று உணரலானார்.

இப்போது அவரது மனம் தவிக்கலாயிற்று. இங்கிலாந்து நாட்டின் அர்ச். அகஸ்டின் காண்டபூரி, அர்ச். எட்வர்ட் அரசன் மற்றும் வேதசாட்சியாக மரித்த அர்ச். தாமஸ் பெக்கட் போன்றோர் சார்ந்திருந்த கத்தோலிக்க சபை உண்மையானதா? எலிசபெத் அரசியை தலைமையாகக் கொண்ட ஆங்கிளிக்கன் சபை சத்தியமான வேதமா? என்று அங்கலாய்த்த அவரது உள்ளம், அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து உண்மையான வேதம் கத்.திருச்சபைதான். தாம் இருக்கும் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் ஒரு பதிதம்! அங்கு சேசுகிறீஸ்து இல்லை! அவரது உண்மையான போதனைகளும் இல்லை. அங்கு ஆன்ம இரட்சிப்பு இல்லை. ஆம்! இரட்சிக்கப்பட சேசுகிறீஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட சத்திய வேதமான பாப்பரசரை தலைவராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையே என்பதை அறிந்து உணர்ந்து கொண்டார். கத்தோலிக்கரானார்.

தேவ அழைத்தல்

அக்காலத்தில் இங்கிலாந்து தேசத்திலிருந்து சுத்தோலிக்க வேதம் அழிக்கப்பட்டு விட்டதால், அதனை மீண்டும் ஏற்படுத்த ஆங்கில கத்தோலிக்கர்கள் விரும்பினார்கள். கத். விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருந்த எண்ணற்ற ஆங்கில நாட்டு மக்களுக்கு தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தவும் குருக்களை உருவாக்க முயற்சி நடந்தது. அதனால் பாப்பரசரின் ஆதரவில் பிரான்ஸ் நாட்டில் துவே (Douay) என்ற இடத்தில் குருமடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு சிறந்த ஆங்கில நாட்டு இளைஞர்களை குருப்பட்டத்திற்கு தயாரித்து குருக்களாக்கி இரகசியமாக இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தனர் ஆனால் அப்படி இரகசியமாக இங்கிலாந்து நாட்டுக்குள் வரும் குருக்களை இனங்கண்டு கைது செய்ய அரசியின் ஒற்றர்கள் கடற்கரையோரம் நிலை கொண்டிருந்தது வேறு விஷயம்!

அப்படிப்பட்ட குருமடத்தில் குருத்துவ பயிற்சி பெற காம்பியனின் உற்ற தோழரான கிரகோரி மார்டின் என்பவர் பிரான்ஸ் நாடு சென்றார். குருமடம் சென்ற அவர் நல்ல உள்ளம் கொண்ட காம்பியனையும் அங்கே அழைத்தார். அதுபோலவே, மற்றொருவர் அர்ச். துர்தி பார்ட் மாயின் என்பவரும் நாடு கடந்து சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து, பிடிபட்டு வேதசாட்சியம் அடைந்தார் என்பது வேறு வரலாறு. இவற்றால் உள்ளம் கவரப்பட்டு உறுதியடைத்த காம்பியன் பாப்பரசருக்கு விரோதமாக தாம் கொடுத்த சத்திய பிரமாணத்திற்கு மிகவும் மனஸ்தாபப்பட்டு வருந்த தன்னை முழுவதும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்க விரும்பினார்.

அச்சமயத்தில்தான் தம்மை ஆங்கிலிக்கன் சபையில் தீயாக்கோன் பட்டம் பெறத் தூண்டிய ரிச்சர்டு ஷென்னே (Richard Cheney) என்ற ஆயருக்கு நீண்ட கடிதம் எழுதினார். கத்தோலிக்க மணப்பான்மை கொண்ட அந்த ஆயர், ஆங்கிலிக்கன் சபையில் பிஷப்பாக இருந்தார். கத்தோலிக்கரான எட்மண்ட் காம்பியன் அவரது தவறான கொள்கையைச் சுட்டிக்காட்டி கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் "60 வயதாகிவிட்ட தாங்கள், நிலையில்லாத உடல் ஆரோக்கியத்தையும், தப்பறையின் மீது வெறுப்பையும் கத்தோலிக்கர்கள் மீது இரக்கமும் கொண்டவர். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஆயர் என்று அழைக்கப்பட்டீர்கள். உமது மௌனத்தால், நீங்கள் விரும்பாத, சாபத்துக்குரிய புராட்டஸ்டாண்ட் பிரிவினையையும் வளர்த்தீர்களே. அதனால் கிறீஸ்துவின் வரப்பிரசாதங்களை பெற முடியாது இருக்கிறீர்கள். தாங்கள் எல்லா ஜெபங்களுடையவும், பலிபூசைகளுடையவும், தேவ திரவிய அனுமானங்களுடையவும் நன்மைகளையும், பலன்களையும் இழந்து போய் இருக்கிறீர்களே! பதீதமதத்தில் என்னநான் எதிர்ப்பார்க்கிறீர்கள்? உமது வாழ்வுதான் என்ன? எதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள்....." என்றெல்லாம் எழுதி அவரை தப்பறையிலிருந்து மீட்டு சத்திய வேதமான கத்தோலிக்க திருச்சபைக்கு வரத் தூண்டினார். ஆனால் அந்தோ! ஆயர் ஷென்னே எந்த முடிவையும் எடுக்காமல் மரணமடைந்தார்!

கத்தோலிக்கத் திருச்சபையில் உட்பட்ட எட்மண்ட காம்பியனின் வாழ்வு தலைகீழாக மாறிப் போனது!

எட்மண்ட் காம்பியன் கத்தோலிக்கராக மனத்திரும்பியதும் தாம்பெரிதும் நேசிந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். அயர்லாந்துக்குச் சென்று அங்கே இரண்டு வருடம் தமது சுத்தோலிக்க நண்பரது குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அந்த நாட்களில் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் திளைத்து புண்ணியத்தில் உயர்ந்தார். அக்குடும்பத்தின் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவந்த எட்மண்ட், டப்ளின் நகரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு கத்தோலிக்க நாடான அயர்லாந்தின் வரலாறு ஒன்றையும் எழுதி அதற்குப் புகழ் சேர்த்தார்.

பின்னர் தமது அழைத்தல் குருவாவதே என்பதை உணர்ந்தவராக துவேக்குச் (Douay) சென்று அங்கே குரு மடத்தில் சேர்ந்தார். "உப தியாக்கோன் பட்டம்" பெற்ற பின் உரோமைக்குச் சென்று அங்கே சேசு சபையில் சேர்ந்தார். பிராக் நகருக்கு நவசந்தியாச வாழ்வுக்காக அனுப்பப்பட்ட எட்மண்ட் காம்பியன் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1578 செப்டம்பர் மாதத்தில் குருப்பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் ஜெர்மன் நாட்டில் புராட்டஸ்டாண்டாரிடையே சேசு சபையினர் ஆற்றிய அரிய காரியங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும் அறிந்த பாப்பரசர் 13-ம் கிரகோரியார் சேசு சபையினரை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்தார். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் எட்மண்ட் காம்பியனும் ஒருவராக இருந்தார்.

இங்கிலாந்துக்கான பயணத்தை துவக்கும் முந்தின நாள் இரவில் அவர் தங்கியிருந்த அறையின் சுவரில் “எட்மண்ட் காம்பியன் வேதசாட்சி" என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். தேவ ஏவுதலால் ஒரு குருவானவர் அப்படி எழுதியிருந்த அந்த வாக்கு நம் புனிதரின் வாழ்வில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது!

1580-ம் ஆண்டு ரோமையிலிருத்து ஜெனிவா நகர் வழியாக இங்கிலாந்து வந்த அவர்கள், திருச்சபையின் எதிரிகளால் அடையாளம் காணமுடியாத வகையில் மாறுவேடம் பூண்டு சென்றனர். அங்கே, இங்கிலாந்தில் கத்தோலிக்க விசுவாசம் நசிந்துபோய் அழித்துகொண்டிகுந்தது! கிறீஸ்தவர்கள் கலாபனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள். "குருக்களே இங்கிலாந்து நாட்டில் இல்லை!” என்ற நிலை ஏற்பட தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்ற முடியாத அவலம் ஏற்பட்டது. சில குருக்கள் மாறுவேடம் பூண்டு விசுவாசிகளின் வீடுகளில் தங்கி, அரசாங்க வீரர்கள் தேடிவந்தபோது பிடிபடாமல் தப்பிக்க பதுங்கு குழிகளில் தங்கினர். இதற்காக ஒவ்வொரு கத் இல்லத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. குருக்கள் அவற்றில் மறைந்து வாழ்த்து குறிப்பிட்ட நாட்களில் அங்கே கூடும் விசுவாசிகளுக்கு திவ்விய பலிபூசை, பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி ஞான வாழ்வில் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை பிடிக்கவென்று ஒற்றர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் "குரு வேட்டையாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் அர்ச். எட்மண்ட் காம்பியன் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே தமது நோக்கத்தை குறிப்பிட்டு கத்தோலிக்க சத்தியங்களை ஆதரித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "எனது அருமை நாட்டு மக்களின் ஞான ஆபத்துக்களையும், தீமைகளையும் மற்றும் அவர்களது ஆங்கார அறியாமையையும் அகற்றி அவர்களைக் காப்பதுவே தமது நோக்கம்" என்று தெரிவித்திருந்தார். காம்பியனும் அவரது சக குருவானவரும் இங்கிலாந்துக்குள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் எப்படியோ சுங்கத்துறையினருக்குத் தெரியவர, துறைமுகம் எங்கும் ஒற்றர்களின் செயல்பாடு அதிகரித்திருந்தது. ஆனாலும் அவர்களது கண்களுக்குத் தப்பி பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்து மக்களுக்கு விசுவாச சத்தியங்களைப் போதித்து, கத்தோலிக்க விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வந்தனர். அநேகர் மனத்திரும்பினார்கள். இதைப்பற்றி சேசுசபை தலைவருக்கு காம்பியன் எழுதிய கடிதத்தில் "...நான் நாள்தோறும் அங்குமிங்கும் போய் பணியாற்றி வருகிறேன். அறுவடை உண்மையாகவே தாராளமாயிருக்கிறது. திருச்சபையின் எதிரிகள் கையில் அகப்பட வெகுநாள் பிடிக்காது. தான் என்னை மறைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் உடை எனக்கே சிரிப்பூட்டுகிறது. பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது..." என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இங்கிலாத்தில் மறைவாக அப்போஸ்தல அலுவவில் ஈடுபட்டுவந்த எட்மண்ட் காம்பியன் புராட்டஸ்டாண்ட் பதிதத்தைக் தாக்கி, கண்டித்து “பத்துக் காரணங்கள்" என்ற அரிய நூலை லத்தீன் மொழியில் எழுதினார். அது. எதிரிகளால் பிடிபடும் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தைப் பற்றி விசாரிக்கும்போது கூற வேண்டிய பதில்கள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. சத்திய வேதத்தை ஆதரித்து ஆங்கிளிக்கள் புராட்டஸ்டாண்ட் பதிதத்தை கண்டிப்பானவராகவும் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூல் 1587 ஜூன் 27-ம் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆலய இருக்கைகளில் 400 பிரதிகள் வைக்கப்பட்டன. அதோடு ஐரோப்பிய நாடுகளிலும்கூட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 48 பதிப்புகளில் வெளியிடப்பட்டது. இது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே, அந்த நூலை எழுதிய எட்மண்ட் காம்பியனை பிடிப்பதற்கு ஒற்றர்களையும், குரு வேட்டைக்காரர்களையும் முழுவீச்சுடன் இறக்கிவிட்டது.

நூல் வெளியிடப்பட்டதும் வேறு எங்காவது மறைவாக சிலகாலம் போய்விடுவது நலம் பயக்கும் என்று எண்ணிய காம்பியனும் அவரது சகக்குருவானவரும் நார்ஃபக் (Norfolk) நகருக்குப் பயணமானார்கள். வழியில் Lyford Grange என்ற ஊர் வரவே அங்கே சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். ஏனெனில் அவ்வூர் செல்வந்தரான திரு.யாட் (Yate) என்பவர் தமது சுத். விசுவாசத்திற்காக லண்டனில் சிறை தண்டனை அனுபவித்தவர். அவரது வயது முதிர்ந்த தாய் தன் வீட்டில் நிரந்தரமாக 2 குருக்களையும் சில சுன்னியர்களையும் தங்கவைத்து பராமரித்து வந்தாள். எனவே அங்கே தங்கி அவரை பாராட்டி விசுவாசிகளை உற்சாகப்படுத்திவிட்டுச் செல்ல முடிவெடுத்தார். புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன் சுவாமி மாறுவேடத்தில் இரகசியமாக வந்தாலும் அவரது வருகை சுற்றுவட்டாரத்திலுள்ள கத். விசுவாசிகளிடையே பரவியது. அரசின் ஒற்றர்களுக்கும் இச்செய்தி எட்டவே அக்குடும்பத்தின் முன்னான் வேலையாளான ஜார்ஜ் எலியாட் என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.

காம்பியன் பட்ட வாதனை!

பிடிபட்ட சங், எட்மண்ட் காம்பியன் சுவாமி லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு அதன் வீதிகளில் பகிரங்கமாக இழுத்துச் செல்லப்பட்டார். முன்னொரு காலத்தில் இதே விதிகளில் சிறந்த கல்வியாளர், இங்கிலாந்தின் இரத்தினம் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் இன்று தாம் கொண்ட சத்திய விசுவாசத்திற்காக கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டு லண்டன் டவர் சிறையில் ஒரு சிறு இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தேம்ஸ் நதிக்கரைக்கு அப்பால் உள்ள லெய்செஸ்டர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எலிசபெத் ராணி வருகை தந்தபோது தாம் நிகழ்த்திய வரவேற்புரையை பாராட்டி தமக்கு ஆதரவாளராக மாறிப்போன அமைச்சர் வெய்செஸ்டர் பிரபுவின் (Earl of Leicester) இல்லம் தான் அது! அங்கே தன் முன்னால் நிற்கும் நபரைக் கண்டு வியந்துபோன எட்மண்ட் காம்பியன் தன் கண்ணை தான் நம்பாது திகைத்தார். ஆம்! அவர் முன்பு நாட்டையாளும் எலிசபெத் அரசியே நின்றிருந்தான். ஒரு காலத்தில் தம்மால் “இங்கிலாந்தின் இரத்தினம்" என்று அழைக்கப்பட்டவர் இன்று தனக்கு எதிராக, தமது வேதத்திற்காக கைதியாக நிற்பதைக் கண்டு முகம் சுளித்தாள் அரசி. ஆனாலும் மிகவும் நயமாக அவரைப் பாராட்டியவள், பிடிவாதத்தை விடுத்து அரசியான தன்னை திருச்சபையின் தலைவியாக ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அபத்த கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக மறுத்துவிடும்படியாக கேட்டாள். அப்படி அவர் செய்தால், ஆங்கிலிக்கன் சபையில் மிக உயர்ந்த அந்தஸ்து அவருக்காகக் காத்திருக்கிறது என்ற ஆசை வார்த்தைகள் கூறினாள். ஆனால் அரசியின் எந்த வார்த்தைகளுக்கும் பணியாமல் தமது விசுவாசத்தில் உறுதியாக நின்ற காம்பியனைக் கண்டு வியந்தவனாக அவரைவிட்டு அகன்றாள்.

ஐந்து நாட்களிலும் அவர் தமது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை 3 தடவைகள் வாதைக் கருளியால் துன்புறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி இரும்பு சட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக இழுத்துக் கொடுமைப்படுத்தப்பட்டார். கை கால்களின் மூட்டுகளும் எலும்புகளும் பிய்ந்து நெட்டுருகிப்போய் கொடூர வேதனையளித்தது. அத்தனையையும் தாங்கிக் கொண்ட எட்மண்ட் காம்பியன் தேவ உதவிக்காக மன்றாடினார் தமது அனைத்து வேதனைகளையும் இங்கிலாந்து தேசம் மீண்டும் சத்திய வேதத்திற்கு வர ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்.

இத்தகைய வாதை நடந்துகொண்டிருக்கும் போதே நான்கு தடவைகள் வேத தர்க்க விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டார். தான் இருந்த நிலையிலும் அவர்களுக்கு தக்கப் பதில் தந்து முறியடித்தார். தம்மைத் துன்புறுத்தியவர்களிடமும் வெகு சாந்தத்தோடு அவர் நடந்துகொண்ட முறையைக் கண்டு வியந்துபோன பிலிப்பு ஹோவர்ட் (Philip Howard) மற்றும்  (Earl of Arundal) மனந்திரும்பினார்கள்.

மீண்டும் வாதைக் கருவியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காம்பியன் சுவாமி மீது குற்றப்படுத்த ஒன்றும் கிடைக்காததால் அவர் இங்கிலாந்தில் புரட்சி ஒன்றை உண்டாக்கும் கருத்தோடு நாட்டிற்குள் வந்ததாக கதைக் கட்டினார்கள். ஆனால் அதனை தமது வாதத்தால் தூளாக்கிய காம்பியன் "நாங்கள் எலிசபெத் அரசிக்கு விரோதமாக எக்குற்றமும் செய்ததில்லை. உங்களுக்கு குற்றமாகத் தெரிவது நாங்கள் எங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பது மட்டுமே!” என்று எடுத்துக் கூறினார்.

தமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் முன்பாக அங்கிருந்த நீதிபதிகளை நோக்கி, "எங்களை இப்போது கண்டனத்துக்கு உள்ளாக்கும் நீங்கள், உங்கள் முன்னோர்கள் அனைவரையுமே கண்டனத்துக்குள்ளாக்குகிறீர்கள். அந்த முன்னோர்களின் தகுதியற்ற வாரிசுகளாக இப்போதுள்ள உங்களால் நாங்கள் கண்டனத்துக்குள்ளாவது எங்களுக்கு மகிழ்ச்சியும் மகிமையுமேயாகும். சர்வேசுரன் எப்போதும் இருக்கிறார். உங்கள் வாரிசுகளும் இப்போது நீங்கள் செய்வதைப் பார்ப்பார்கள். உங்கள் மீது அவர்களும் சர்வேசுரனும் தரும் தீர்ப்பு ஒருநாளும் தவறாது உண்மையாகவேயிருக்கும்" என்று கூறினார். காம்பியன் பிறரைப் போல் அல்லாமல் அரசியின் தனிப்பட்ட அரச அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மரண தீர்ப்பு வழங்கப்பட்டார். அப்போது அங்கே வந்த, தன்னைக் காட்டிக்கொடுத்த எலியட் மற்றும் ஹாப்டன் என்பவர்கள் புனிதரின் அவலநிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். அவர்களை மன்னித்து விட்டதாக புனிதர் அறிவித்தார்.

கொலையாளி தன் வேலையைச் செய்வதற்கு முன்பாக, எட்மண்ட் காம்பியன் சுற்றியிருந்த மக்களைப் பார்த்து, "உங்கள் அரசியும், என் அரசியுமான அம்மையாருக்காக வேண்டுகிறேன். நீடித்த ஆயுளும், எல்லா நலனும் அவர்களுக்கு உண்டாவதாக" என்று ஜெபித்தார். அவரும் அவரோடு தீர்ப்பிடப்பட்ட குருக்களும் வழக்கம்போல் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டார்கள். முதலில் தூக்கிலிடப்பட்டு, உடல் கீழே விழத்தாட்டப் பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு, உடல் துண்டுதுண்டாக பிரிக்கப்பட்டார்கள்.

St. Henry Walpole
அப்போது வெட்டப்பட்ட புனித எட்மண்ட காம்பியனின் இரத்தத்துளி ஒன்று அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றி வால்ப்போல் என்ற இளைஞன் மீது சிதறி விழுந்தது. அதன் பலனாய் அவரும் பின்னாளில் சேசு சபையில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேதசாட்சிய வரம் பெற்றார்! 

வேதசாட்சியான எட்மண்ட் காம்பியனுக்கு 1970-ம் ஆண்டில் அர்ச்சியசிஷ்டப் பட்டம் வழங்கப்பட்டது!

அர்ச். எட்மண்ட் காம்பியனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!



Download Tamil Christmas songs