Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 1 பிப்ரவரி, 2025

January 12 - வேதசாட்சியான உரோமையின் அர்ச்சிதாசியானா

ஜனவரி 12ம் தேதி

வேதசாட்சியான உரோமையின் அர்ச்சிதாசியானா 

இவள் உரோமாபுரியைச் சேர்ந்த மிகவும் பிரசத்தி பெற்ற உயரிய குடும்பத்தில் பிறந்தாள். இவள் தனது கன்னிமையை திவ்விய சேசுகிறீஸ்து நாதர் சுவாமிக்கு அர்ப்பணித்து, கன்னியாஸ்திரியாக ஜீவிக்க தீர்மானித்தாள்.

அலெக்சாண்டர் செவருஸ் சக்கரவர்த்தியாக ஆண்ட காலத்தில், இவள் கைது செய்யப்பட்டாள். அப்போலோ தேவதையின் கோவிலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்தும்படி வலுவந்தம் செய்யப்பட்டாள். அர்ச்சிதாசியானா ஆண்டவரை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினாள். உடனே பூகம்பம் ஏற்பட்டது; அந்த அஞ்ஞான விக்கிரகங்கள் அனைத்தும் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தன.

அப்போலோ கோவிலின் ஒரு பாகம் இடிந்து, அஞ்ஞான குருக்கள் மேல் விழுந்தது. விக்கிரகங்களுக்குள் மறைந்து தங்கி வாழ்ந்திருந்த பிசாசு, கூக்குரலிட்டு, அந்த கோவிலை விட்டு பறந்து போனது. கூடியிருந்தவர்கள், பிசாசின் நிழலைக் கண்டனர்.

இதைக் கண்ட அஞ்ஞானிகள் கோபமடைந்து, அர்ச்சிதாசியானாவின் கண்களை இரும்புக் கொக்கிகளால் பிடுங்கி சித்ரவதை செய்தனர். இக்கொடிய துன்பங்களை பொறுமையுடன் ஏற்று அனுபவித்தபடி, அர்ச்சிதாசியானா தன்னை வேதனைக்குள்ளாக்குவோருக்காக வேண்டிக்கொண்டாள். அவர்களுடைய மெய்ஞானக் கண்களை ஆண்டவர் திறக்கும்படி பிரார்த்தித்தாள். உடனே, அவர்களில் எட்டுபேர் மனம் திரும்பி வேதசாட்சிகளானார்கள்.

பின், அஞ்ஞானிகள் அர்ச்சிதாசியானாவை டயானா தேவதையின் கோவிலுக்கு இழுத்துச் சென்றனர். டயானா தேவதைக்கு பலி செலுத்த வற்புறுத்தினர். அர்ச்சிதாசியானா சிலுவை அடையாளத்தை வரைந்து, ஜெபித்தபின் ஆண்டவரை நோக்கி பிரார்த்திக்கத் தொடங்கினாள். திடீரென்று, மாபெரும் இடியும் மின்னலும் ஏற்பட்டு, அஞ்ஞான தேவதையையும் பலிப்பொருட்களையும் அஞ்ஞான குருக்களையும் இடி தாக்கியது.

பின்னர், ஒரு சர்க்கஸில் பசியுடனிருந்த சிங்கத்தின் முன்பாக அர்ச்சிதாசியானாவை தள்ளிவிட்டனர். ஆனால், அந்த சிங்கம் அவளுடைய பாதத்தண்டையில் படுத்துக் கொண்டது.

கி.பி. 235ம் வருடம், ஜனவரி 12ம் தேதியன்று, அர்ச்சிதாசியானா, ஒரு வாளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டு வேதசாட்சியாக மரித்தாள்.

அர்ச்சிதாசியானாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக