சிறிய புஷ்பம்
அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்டதே “சேசுவின் சிறிய புஷ்பம்.
சிறிய புஷ்பம் என்று சொன்ன மாத்திரத்தில் அது 'அர்ச். குழந்தை தெரேசம்மாள்' என்று உடனே எவரும் சொல்லக் கூடும். சேசுவின் சிறிய புஷ்பம் என்ற காரணப் பெயர் இந்த அர்ச்சியசிஷ்ட கன்னிகைக்கு உண்டாகக் காரண மென்ன என்று கேட்டால் அது அநேகருக்குத் தெரியாது. ஆயினும் இது அவளுடைய பல உருவப் படங்களில் ஒன்றையெடுத்துச் சற்று உற்று நோக்குவோருக்குக் சட்டெனத் தெளிவாகும். எப்படியெனில், ஒரு வகையான படத்தில் அர்ச்சியசிஷ்டவள் தனது கைகளில் சிலுவையில் பாடுபட்டு மரித்த சேசுநாதரின் திருச்சுரூபத்தையும், அதோடு ரோஜா மலர்களையும் ஏந்திக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அதன் அர்த்தத்தைச் சிந்தித்துப் பார்த்தவர் எத்தனை பேரோ! பாடுபட்ட அவ்வுருவமும் அப்புஷ்பங்களும் அழகுக்காக அந்த அம்மாளின் கைகளில் இருக்கின்றனவா? அநேகர் பாடுபட்ட சுரூபங்களையும், படங்களையும் மற்ற உருவங்களையும் காட்சிக்கு வைத்தி ருப்பது போல் அந்த அர்ச்சியசிஷ்ட கன்னிகையும் வெளித்தோற்றத்திற்காக அதை வைத்திருக்கின்றாளா? அல்ல, அல்ல, அவள் அவ்விதம் வைத்திருப்பதன் கருத்தும் விசேஷமும் வேறு.
அதாவது, சேசுநாதர் சுவாமி பாடுபட்ட உருவத்தைப் பார்த்த அர்ச்சிய சிஷ்டவள் அவருடைய பாடுகளின் பேரில் தியானித்து அவரைப் போல் தானும் ஆத்துமங்களுக்காகச் சாகிறதானாலும் சரி, அதற்கு சம்மதம் என்றிருந்தாள். அவர் பேரிலும் ஆத்துமங்களின் பேரிலும் வைத்த சிநேகத்தால் தன் சித்தத்தையும், சரீரத்தையும் ஒறுக்க உடன்பட்டாள். இது அவள் கூறியவைகளிலிருந்து தெரிய வருகின்றது.
அவன் கூறியவைகளாவன: “என் சுய மனதை முறித்து. நாவை அடக்கி, ஒருவரும் பார்க்கக் கூடாத அற்ப சொற்ப உதவி ஊழியங்களைப் பிறருக்குச் செய்யப் பிரயாசைப் பட்டேன். யாதொரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஏற்ற வழிவகைகளையும் தகுந்த சாதனங்களையும் தேடி உபயோகிப்பது அவசியம். சிலுவையின் வழியாக நான் ஆத்துமங்களை இரட்சிக்க வேண்டுமென்று அவர் எனக்குத் தெரிவித்திருக்கிறார்."
"மெய்யான தேவ சிநேகமின்றி நாம் செய்யும் எந்தக் காரியமும் வீண் என்று அறிந்தேன்; மிகவும் பிரபல்யமான அதியுன்னத புண்ணிய முயற்சி முதலாய் தேவ சிநேகமில்லையானால் பிரயோஜனமற்றதே." "ஒரேயொரு காரியம் மாத்திரம் செய்ய வேண்டும். அதாவது, சிறு புண்ணியப் பலிகளாகிய பூ மலர்களை சேசுவின் சமுகத்தில் தெளித்து தன்னை முழுவதும் அவருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்துவிடுவதுதான் அர்ச்சியசிஷ்டவளாக வழி" என்று சொல்லியிருக்கிறாள். 'பிரசங்கத்தினால் செய்யும் அப்போஸ் தலத்துவத்தைப் பார்க்கிலும் ஜெபத்தின் அப்போஸ்தலத்துவம் அதிக மேன்மையானதல்லவா? ஆயிரக்கணக்கான ஆத்துமங்களை இரட்சிக்கும் சுவிசேஷ வேலையாட்களுக்காக வேண்டிக் கொள்வது நமது அலுவலா யிருக்கும் போது நாமும் அவர்களைப் போல் ஆத்தும இரட்சணியத்துக்காக உழைக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்."
"பூமலர் தெளித்தல்" என்றால் என்ன? அதாவது, சிறு காரியங்களில் தன்னைத்தானே ஒறுத்தலாம்; கிரமமற்ற பார்வை, பிறச்சிநேகத்துக்கு விரோதமான வார்த்தை முதலானவைகளை அடக்கி ஜெயித்தல், நான் செய்யும் அற்பக் கிரியை முதலாய் சிநேகத்தை முன்னிட்டுச் செய்வேன். அது இன்பமானாலும் சரி. துன்பமானாலும் சரி, சகலமும் சிநேகத்துக்காகவே அனுபவிப்பேன் என்று தீர்மானித்து நடத்தல்: இதுதான் "பூமலர் தெளித்தல்" என்று சொல்லப்படும். “என் கையில் கிடைக்கும் பூக்களையெடுத்து ஓர் இதழ் விடாமல் எல்லாவற்றையும் தெளிப்பேன்." இதைப் போல் அநேக தடவைகள் அவள் சொல்லியிருப்பதுமன்றி, எத்தனையோ அற்ப சொற்பமான காரியங்களையும் செய்திருக்கிறாள்.
அவள் ஆண்டவரை அதிகமதிகமாய் நேசிக்க, நேசிக்க ஆத்தும இரட்சணிய ஆவலும் மென்மேலும் அதிகரித்தது. இந்தக் கொள்கை அவளுக்கு மட்டுமல்ல, ஆனால் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் உண்டு. ஏனெனில் சர்வேசுரனைச் சிநேகிக்கிறவர்கள் அவர் நேசிக்கிறவர்களை நேசிக்காமலிருக்க முடியாது. இதனாலேயே தேவசிநேகமும், பிறர் சிநேகமும் இணைபிரியாத சங்கிலி யெனச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆண்டவர் ஆத்துமங்களை நேசித்ததால் தமது உயிரையே கையளித்தார். அப்படியே அவரை நேசிக்கிற அர்ச்சியசிஷ்ட வர்களும் ஆத்துமாக்களுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாரா யிருக்கிறார்கள். ஆன்மாக்களை இரட்சிக்கும் அலுவலை விட மேலானது வேறொன்றுமில்லை. ஆகையால் அர்ச். சின்ன தெரேசாள் ஆண்டவரை நேசித்து அவருக்காக ஆத்துமங் களையும் நேசித்தாள்.
இந்த அலுவவைச் செய்ய அவள் தெரிந்துகொண்ட வழியென்ன? தான் வெளியில் போய்ப் பிரசங்கிக்க முடியாதென்றும், அரும்பெரும் காரியங் கனளச் செய்ய தான் ஆற்றல் இல்லாதவள் என்றும் அறிந்த அர்ச்சியசிஷ்டவள் குருக்களுக்காக வேண்டிக்கொள்ளுதலிலும், அதனோடு அற்ப சொற்ப ஒறுத்தல்களைச் சேர்த்தலிலும் தன் கவனத்தைச் செலுத்துவாளாயினள். இந்த ஒறுத்தல் முயற்சிகளைத்தான் சிறிய புஷ்பங்கள் என்று அவள் சொல்வது வழக்கம். இந்தப் பூக்கள் தான் பாடுபட்ட சுரூபத்தோடே ஒன்றித்திருக்கின்றன. இவைகள்தான் அவளுடைய படத்தில் காணப்படும் ரோஜா மலர்கள். அதாவது, சேசுநாதருடைய பாடுகளோடு தன்னுடைய அற்ப சொற்ப அலுவல்களாகிய ஒறுத்தல்களை ஒன்றிக்கிறாள். இதுதான் சேகநாதருக்குப் பிரியமானது. ஆத்துமங்களுக்காக உழைப்பதைவிட மேலாக அவர் மதிப்பதும், விரும்புவதும் வேறொன்றுமில்லை. மலர் மாலைகளைவிட இந்த ஒறுத்தல் மாலைதான் உத்தமமானது. மேலும் அற்பக் காரியங்களை அவமதித்து, பெருங்காரியங்களைச் செய்யலாமென்றிருந்தால், அவை சாத்தியமாகுமோ என்னவோ? அப்படிக் காரியங்கள் செய்யக்கூடிய காலம் வந்த போதிலும், அந்நேரத்தில் அவற்றைச் செய்யக் கூடுமெனச் சொல்வதற்கு இல்லை. சிறு கைங்கரியங்களைச் செய்து அனுபவ சித்தியடையாமல் திடீரெனப் பெரியதோர் காரியத்தைச் சாதிப்பது எவ்வாறு? இலவு காத்த கிளிபோல் ஏமாற வேண்டியதுதான். நாட்டில் உள்ள பத்துக் குருவிகளைவிட கையிலுள்ள ஒன்றே சாலச் சிறந்தது. அற்பக் காரியங்களை அசட்டை செய்தவர்கள் அரும்பெரும் காரியங்களை நிகழ்த்துவது அபூர்வம்; குதிரைக் கொம்பாகி விடும்.
மேலும் சேசுநாதர் சுவாமி மற்ற வழிகளையெல்லாம் விட்டு விட்டு பாடுபடும் பாதையையே பலனுள்ளதாகக் கொண்டார். (ஆத்துமங்களை இரட்சிப்பதற்கு) இதற்கு மேலான வழி வேறென்ன உண்டு? அவரே வழி. அவரைப் பின்பற்றுதலே முறை.
இவற்றையெல்லாம் அறிந்த நமது நாயகி குழந்தை தெரேசாள் தனது சிறு புண்ணிய முயற்சிகளைப் பூவெனக் கொண்டு அதை ஆண்டவரின் பாடு களோடு ஒன்றித்து, அதன் பலனை ஆத்துமாக்களுக்கு அளிப்பதே தனது அலுவல் எனக் கொண்டாள். பரலோகத்திற்குத் தான் சென்ற போதும் அங்கிருந்து பூமியிலுள்ள நமக்கு இப்பூக்களைத் தருவதாக சித்தங் கொண்டாள். வான்வீட்டில் கஷ்டங்களில்லை. ஆகையால் அங்கிருந்து அவள் அள்ளியிறைக்கும் மலர்களோ சர்வேசுரனின் வரப்பிரசாதங்களேயன்றி வேறல்ல: இந்தச் செய்கையைக் குறிக்கும் படத்தையும் காணலாம். அவள் இவ்வுலகிலிருந்த போது தனது சிறிய புஷ்பங்களைச் சேசுவின் பாடுகளோடு ஒன்றித்ததன் பலன்களை இப்போது அவள் பரலோகத்தில் அனுபவிப்பதோடு நமக்கும் தாராளமாய்த் தருகிறாள். இதனோடு அவள் மடத்தில் சேரும்போது தன்னைத்தானே சிறிய புஷ்பம் என்று அழைத்தாள்.
அதாவது கார்மெல் மடத்தை ஒரு பூந்தோட்டமாகவும், அதில் தான் பிரவேசித்ததால் அங்கு இருந்த கன்னிகா மலர்க் கூட்டத்தில் தன்னை ஒரு சிறு கன்னிகையாகப் பாவித்து, "சிறிய புஷ்பம்" எனச் சொல்லிக்கொண்டாள். அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்ட தே "சேசுவின் சிறிய புஷ்பம்."
அவளுடைய கிரியைகளால், சிறு ஒறுத்தல் முயற்சிகள் ஆகிய மலர்களால் அவளுடைய சிறிய புஷ்டமானது எது என்று நன்றாய் விளங்குகிறது. இச்சிறு புஷ்பங்கள் சகலருக்கும் உண்டு, அவைகளைச் சேசுநாதருடைய திருப்பாடு களோடு ஒன்றித்து நறுமணம் கமழும் ரோஜா புஷ்பங்களாக மாற்றினாள் தமது அர்ச்சியசிஷ்டவள். நம்மில் அப்படிச் செய்கிறவர்கள் எத்தனை பேர்? நாம் ஏன் அவள் செய்தது போலச் செய்யக் கூடாது? "கேளுங்கள் கொடுக்கப் படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்று திருவாய் மலர்ந்தருளிய திருவள்ளல் எப்போதும் அருள்புரியச் சித்தமாயிருக்கிறார்.
"மனமுண்டானால் இடமுண்டு," "செவியுள்ளோர் கேட்கட்டும், கண்ணுள்ளோர் காணட்டும்" என்கிறார். நமது ஆத்துமக் காதுகளும், கண்களும் இன்னும் திறக்கப்பட வில்லையா? எவ்வளவு காலம். அவருக்குக் காது கொடாமலும், அவரை உற்று நோக்காமலுமிருப்போம்? எவ்வளவு காலம் அசமந்தமா யிருப்போம்? எவ்வளவு காலம் சோம்பேறிகளாய் ஜீவிப்போம்? நமக்குப் புத்தி வருவது எப்போது? குழந்தை தெரேசம்மாள் சிறிய புஷ்பம்தான்; ஆனால் அவள் பெரிய அர்ச்சியசிஷ்டவள். அவள் என்ன பெருங்காரியத்தைச் செய்தாள்? தன் அந்தஸ்தின் கடமைகளைச் செய்தாள். அதைப் பிரமாணிக்கமாய்ச் செய்தாள்; சேசுநாதரின் பாடுகளோடு தனது அற்ப அலுவல்களை ஒன்றித்தாள். வேறொன்றும் செய்யவில்லை. நமது கடமைகளை நாம் ஏன் பிரமாணிக்க மாய்ச் செய்ய முடியாது? அவைகளை நாம் ஏன் சேசுவின் திருப்பாடுகளோடு ஒன்றிக்க முடியாது? நாம் ஏன் ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ள முடியாது? இனிமேலாவது சுறுசுறுப்பாய் எழுந்திருப்போம்: அர்ச்சியசிஷ்ட வளைப் பின் செல்வோம்;சேசுநாதரைத் தொடர்வோம்.
ஆத்துமங்களை இரட்சிக்க நம்மால் கூடியதெல்லாம் செய்வோம். ஆண்டவர் நமக்குத் திருவருள் பாலிப்பார். அர்ச். குழந்தை தெரேசம்மாள் சகாயம் செய்வாள். சேசுவின் சிறிய புஷ்பமென்னும் பெரிய அர்ச்சியசிஷ்டவளே, எங்களுக்காக எப்போதும் வேண்டிக்கொள்ளும். உமது மூலமாய் ஆண்டவர் எனக்குப் புரிந்த சகல நன்மைகளுக்காகவும் மிகவும் நன்றியறித் திருக்கிறோம். கடமைகளைச் சரியாய்ச் செய்யாதவர்களென்று கண்டனத் திற்கு நாங்கள் உட்படாதபடி எங்கள் சிறு அலுவல்கள், ஒறுத்தல் முயற்சி களெல்லாம் சர்வேசுரன் முன்பாகப் பேறுபலனுள்ள அநேக சிறு மலர்களாய் மாறும் படிக்கு எங்களுக்கு உதவி புரியும்.
நாங்கள் செய்யும் சிற்சில ஒறுத்தல் உபவாச முயற்சிகளும், தவக் கிரியைகளும், மற்றும் அற்பப் புண்ணியச் செய்கைகளும், எங்களுக்கு வீண் பெருமை சிலாக்கியத்தை உண்டுபண்ணாமல் சகல மகிமையும் தோத்திரமும் சர்வேசுரனுக்கே சதா காலமும் உண்டாகக்கடவதென்று சமாதானமாய் ஆண்டவரில் அகமகிழ எங்களுக்கு அருள்புரிய உமது பூமாரியைப் பொழியத் தீவிரியும். கர்த்தரின் திருத்தாயான அர்ச். கன்னிமரியன்னையையும் நோக்கி வேண்டிய எங்களை அவர்களது பிள்ளைகளாக அந்த அம்மணியின் அடைக்கலத்தில் சேரும்; அப்பெருமாட்டியின் பேருபகாரத்தை எங்களுக்காகக் கோரும். கன்னிகா ரத்தினமே, கருணைக் களஞ்சியமே, சேசுவின் சிறிய புஷ்பமே, பெரிய அர்ச்சியசிஷ்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
Virgin and Doctor of the Church
Parents: Marie Françoise-Thérèse Martin
Born: 2 January 1873
Place: Alençon,[1] Orne, France
Died 30 September 1897 (aged 24)
Lisieux, Calvados, France
Beatified 29 April 1923 by Pope Pius XI
Canonized 17 May 1925 by Pope Pius XI
Feast
3 October (Pre-1969 Roman Calendar, Melkite Calendar)
Patronage Missionaries, France, Russia, those suffering with HIV/AIDS or tuberculosis, florists and gardeners, orphaned children, those who are homeless, and aviators
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக