Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 ஜனவரி, 2024

தபசுகால ஆயத்த ஞாயிறுகள்: செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா (Septuagesima, Sexagesima and Quinquagesima)

 


பாஸ்கு காலச் சுற்று என்பது செப்துவாஜெஸிமா ஞாயிறு முதல் தமத்திரித்துவத் திருநாள் வரை நீடிக்கும் வழிபாட்டுக் காலமாகும். வழிபாட்டு ஆண்டாகிய சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் பாஸ்கு காலச் சுற்று, வழிபாட்டின் மையமான பரம இரகசியமும், நம் விசுவாசத்தின் அடிப்படை சத்தியமுமான நம் திவ்ய இரட்சகரின் உயிர்ப்பின் ஞாயிறை உள்ளடக்கியதாக இருப்பதால் அது மற்ற காலச் சுற்றுகளைவிட அதிக முக்கியமானதாக இருக்கிறது.

இந்தச் சுற்றின் தொடக்கத்தின் முதல் மூன்று ஞாயிறுகள் முறையே செப்துவாஜெஸிமா, செக்ஸாஜெஸிமா, குவின்குவாஜெஸிமா என்று அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று வார காலம் பொதுவாக செப்துவாஜெஸிமா காலம் என்றே அழைக்கப்படுகிறது. பாப்பரசர் முதலாம் பெலாஜியன் அல்லது அவருக்கு அடுத்து வந்த பாப்பரசர் மூன்றாம் அருளப்பரால் இந்தக் காலம் திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலம் அடிப்படையில் தபசு காலத்திற்கான தயாரிப்புக் காலமாக இருக்கிறது. கிறீஸ்தவ மனத்தைத் தபசுகாலத்தின் ஆழ்ந்த பக்தியார்வத்திற்கும், தவத்திற்கும் ஏற்றபடி ஆயத்தம் செய்வது இதன் நோக்கமாக இருக்கிறது. 

செப்துவாஜெஸிமா (சப்தரிகை) ஞாயிறு என்பதற்கு, கிறீஸ்துநாதரின் உயிர்ப்புக்கு முன் எழுபதாம் நாள் என்பது பொருளாகும். இந்த ஞாயிறு வாசகங்கள், ஆதாமின் பாவத்தால் மனுக் குலம் துன்பத்திற்கும், சாபத்திற்கும் உட்பட்டு வருந்துவதையும், மனிதன் தன் பாவத்திற்காக வருந்தி, கடவுளின் இரக்கத்தைத் தேடினால் அவன் இரட்சிக்கப்படுவான் என்பதையும் நினைவு படுத்துகின்றன. ஆதாம் சபிக்கப்பட்டபோதே மெசையாவின் வருகையும், இரட்சணியமும் அவருக்கும். அவருடைய சந்ததிக்கும் வாக்களிக்கப்பட்டன. உரிய காலம் வந்த போது, உலகில் தோன்றிய இரட்சகர் தமது சமாதான சுவிசேஷத்தின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கும்படி நம்மை அழைக்கிறார். அப்படி உழைப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவியத்தையும் வாக்களிக் கிறார். "அதிகமதிகமாய் அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்" (பிலிப். 2:12) என்பதுதான் இன்றைய பூசையின் முக்கியக் கருத்து.

அடுத்து வருவது செக்ஸாஜெஸிமா (சடிகை) ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் அறுபதாம் நாள் என்பதாகும். நம்முடைய உழைப்பு தவத்திற்கேற்ற பலனைத் தர வேண்டுமானால், துன்பங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும், மனித பலவீனத்திலேதான் கடவுளின் வல்லமை பூரணமாய் விளங்குகிறது என்றும், இதன் காரணமாக, கிறீஸ்துநாதரின் வல்லமை நம்மில் வாசம் பண்ணும்படி, நம் பலவீனங்களில்தான் நாம் சந்தோஷ மாய் மேன்மை பாராட்ட வேண்டும் என்றும் இன்றைய நிருபம் கற்பிக்கிறது, தேவ வார்த்தை என்னும் விதை விதைக்கப்பெற்று, தேவசிநேகத்தின் கனிகளைத் தருகிற நல்ல நிலமாய் நாம் இருந்து, முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் தர வேண்டுமென்று இந்த ஞாயிறு சுவிசேஷ வாசகம் நமக்கு அறிவிக்கிறது.

இறுதியாக வருவது, குளின்குவாஜெஸிமா ஞாயிறு ஆகும். இதன் பொருள் கிறீஸ்து நாதரின் உயிர்ப்புக்கு முன் ஐம்பதாம் நாள் என்பதாகும். சிலுவையின் பரம இரகசியம் மனித னுடைய புத்திக்கு எப்போதும் கடினமானதாகவே தோன்றுகிறது (1 கொரி. 1:23), கிதீஸ்து நாதருடன் மூன்று ஆண்டுகளாகச் சேர்ந்திருந்த அப்போஸ்தலர்களும் இதைக் கண்டுபிடிக்க வில்லை. தனிமையாக விடப்பட்ட நம் ஆண்டவர் சிலுவையின் பாதையில் தன்னந்தனியே நடந்து செல்கிறார். துன்பங்களின் வழியாகவே பாவப் பரிகாரம் செய்யப்பட முடியும் என்னும் உண்மை சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரைத் தியானிப்பதால் விளங்குகிறது. மெய்யான தேவ சிநேகம் இல்லாவிடில், விசுவாசம், பிறர்சிநேகம் ஆகியவை உட்பட எந்தப் புண்ணியத்தாலும் பலனில்லை என்று திருபம் படிப்பிக்கிறது. மேலும் சிலுவையாலன்றி இரட்சணியமில்லை என்றும், இரட்சணியமடைய விசுவாசம் இன்றியமையாதது என்றும் பரிசுத்த சுவிசேஷம் உணர்த்துகிறது.

இந்த ஞாயிறுகளின் பெயர்கள் பொதுவாக, தபசுகாலத்தின் நாற்பது நாட்களையும் குறிக்கும் குவாத்ராஜெஸிமா என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டவையாகும். தபசு காலத்திற்கான ஆயத்தம் முதலில் தபசுகாலத்தின் முதல் ஞாயிறுக்கு முந்திய ஞாயிறன்று தொடங்கியது. இது "தோமினிக்கா (ஞாயிறு) இன் குவின்குவாஜெஸிமா" (பாஸ்குத் திருநாளுக்கு ஆயத்தமான 50 நாட்களுக்குள் வரும் முதல் ஞாயிறு) எனப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இக்காலம் 60 நாட்கள் உள்ளதாக ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செக்ஸாஜெஸிமா ஞாயிறு எனப்பட்டது. இறுதியாக, இக்காலம் 70 நாட்கள் என்று ஆக்கப்பட்டு, அதன் முதல் ஞாயிறு செப்துவாஜெஸிமா என்று அழைக்கப்பட்டது. இந்த 50, 60, 70 என்ற எண்கள் தோராயமானவையே.

சில வேத அறிஞர்கள் செப்துவாஜெஸிமா என்பது, இஸ்ராயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்காகத் தவம் செய்யும்படி அனுபவித்த எழுபது ஆண்டு அடிமைத்தனத்தை ஒரு மாதிரிகையாகக் கொண்டு திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட தபசுகாலத்தின் தொடக்கம் என்றும், இந்த எழுபது நாட்களிலும் கத்தோலிக்க விசுவாசிகள் உண்மையான தவ உணர்வோடு தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, சேசுக்கிறீஸ்துநாதரின் உயிர்ப்போடு தங்கள் உயிர்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டு என்று அது குறித்துக் காட்டுவதாகவும் கருதுகிறார்கள்.

மொத்தத்தில், விதை பலன் தருவதற்கு அது மண்ணோடு மண்ணாக மக்கி மடிவது அவசியம். சேசுநாதரோடு மகிமையில் உயிர்ப்பதற்கு, அவரோடு பாடுபடுவது அவசியம். சிலுவையால் அன்றி இரட்சணியம் இல்லை. துன்பம் இன்றி, நித்திய மகிமையை அடைதல் இல்லை என்பதையே இந்த செப்துவா ஜெஸிமா காலமும், அதைத் தொடர்ந்து வரும் தபசு காலமும் நமக்குப் படிப்பிக்கின்றன.



மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி, 2024


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக