Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 27 டிசம்பர், 2023

தேவமாதா பிறந்த நாள் - Birth of Our Lady (September 8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி



கடவுளுக்கு அழகிய நாள். இந்த நாளில் பூமியில் பேரதிசயம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் சிருஷ்டி என்றாலும் அவள் பிதாவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள குமாரத்தி, நித்திய வார்த்தையாகிய சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாக இருந்தவள், இஸ்பிரீத்துசாந்துவின் நேச பத்தினி. அவள் சிறு குழந்தை என்றாலும் சகல சிருஷ்டிகளையும்விட மகத்துவத்திலும் பதவியிலும் உயர்ந்தவள். இதற்கு முன் இருந்தவர்கள், இனி இருக்கப் போகிறவர்கள் அனைவரிலும் மேம்பட்டவள். ஏனெனில் ஏனைய சிருஷ்டிகள் கடவுளது ஊழியர்களே; மரியாயோ கடவுளுடைய குமாரத்தி, கடவுளுடைய மாதா, கடவுளுடைய பத்தினி, சுபாவத்திற்கு மேலான கொடைகள் அனைத்தையும் அவள் நிரம்பக் கொண்டிருந்தாள். பிதாவாகிய சர்வேசுரனது. வல்லமையின், சுதனுடைய ஞானத்தின், இஸ்பிரீத்துசாந்துவுடைய அன்பின் உயர்ந்த சிருஷ்டிப்பு அவள். பிதா சுதன் இஸ்பிரித்துசாந்து இவர்களுடன் அவள் அந்நியோன்னிய உறவுகொள்ளவேண்டியிருந்தமையால் அவள் இவ்வுன்னத நிலையில் உண்டாக்கப்பட்டாள். அவளை அவர்கள் அன்புடன் நோக்கினார்கள். கண்டு ஆனந்தம் கொண்டார்கள்; ஒருவன் தன் கைவேலையைக் கண்டு இன்புறுவதுபோல் அவர்கள் மரியாயைக் கண்டு இன்புற்றார்கள்.

ஓ மரியாயே, தொட்டிலில் இருக்கும் நீர் பூமியில் கடவுளது பரகதி, வர்ணிக்க முடியாத அழகு வாய்ந்தவள், மாசு மறுவின் நிழல் முதலாய் அணுகாதவள். நீர் இன்னும் குழந்தை யாயிருக்கும்போதே மிகவும் பரிசுத்த தமதிரித்துவம் உம்மைக் கண்டு மகிழ்ந்தது. ஓ நீர் பாக்கியவதி. கடவுளுக்குப் பிரியப் படுவது மிகப்பெரும் பாக்கியமாகும். இந்தப் பாக்கியத்தை, ஓ என் அன்னையே, நீர் பிறந்தநாளில் இருந்தே நீர் அனுபவித்திருக்கிறீர். நான் பரிசுத்த வாழ்வு நடத்துவேனானால், அனைத்தையும் கடவுளுக்காகச் செய்து வருவேனானால், இந்தப் பாக்கியத்தை நானும் ஓரளவு அனுபவிக்கலாம். ஓ என் சர்வேசுரா, உமக்குப் பிரியப்பட வேண்டுமானால், என்னிடம் நல்ல மனது இருக்க வேண்டும். உமக்கு பிரியப்பட நான்  சிரமத்தைப் பாராமல் முயல வேண்டும்.

மரியாயி பிறந்த நாள் அவளுக்கு அழகிய நாள். தன் தாயான அன்னம்மாளால் தான் அன்புடன் நேசிக்கப்படுவதையும், பரகதிக்கு பூமியானது அன்பளிப்பாகத் தரக்கூடிய மிக்க அழகிய கொடையாக அன்னம்மாளால் மிகவும் பரிசுத்த தமதிரித்துவத்திற்கு தான் ஒப்புக்கொடுக்கப்படுவதையும், மூன்று தேவ ஆட்களாலும் அன்புடன் தான் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் பார்ப்பது மரியாயிக்கு எத்தனையோ ஆனந்தத்தை அளித்திருக்கவேண்டும். தன் பரிசுத்த அன்னையின் பக்தி உணர்ச்சிகளுடன் தன்னையும் ஒன்றித்து, தன்னை முழுமையும் மகோன்னதரான கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதும், அவருக்காகவே வாழத் தீர்மானிப்பதும். மரியாயிக்கு எத்தனை மகிழ்ச்சி தந்தது. அவளது காணிக்கையைக் கண்ட கடவுள் அவளுக்கு உயர்ந்த கொடைகளை நிரம்பக் கொடுத்தது என்ன காட்சி! “ஓ என் நேசமே, நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதே கிடையா" என்னும் உன்னத சங்கீதாகம வசனங்களால் மிகவும் பரிசுத்த தமதிரித்துவம் தன்னை வந்திப்பதைக் கண்டு, அவள் எத்தனை மகிழ்ந்திருப்பாள்! "இவள் எவ்வளவு அழகானவள்! பூமியில் மலர இருக்கும் இம்மலர் எத்தனை அழகு பொருத்தியது!" என சம்மனசுக்கள் அனைவரும் சேர்ந்து கூறி வாழ்த்தியதை அவள் கேட்டாள். "மரியாயி அருணோதயம் போன்றவள்; சந்திரனைப் போல் அழகுள்ளவள், சூரியனைப்போல் காந்தி படைத்தவள்" (உந்.சங்.6:9) மகிழ்ச்சியடைய இத்தனை காரணங்கள் இருந்தன. மரியாயோ "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது; என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கிறது" என தன் உள்ளத்தில் உரைத்தாள்.

பரிசுத்த கன்னிகையின் மகிழ்ச்சியுடன் ஒன்றித்து கடவுளை மகிமைப்படுத்தி, மரியாயை வாழ்த்துவோமாக. நமது மகிழ்ச்சியனைத்தையும் கடவுளில் வைக்கவும், வேறெந்த மகிழ்ச்சியையுமே தேடாதிருக்கவும் அவளிடமிருந்து கற்றுக்கொள்வோமாக. கடவுளில் மாத்திரமே. உண்மையான மகிழ்ச்சி உண்டு; இதுமாத்திரமே இருதயத்தைப் பூரணமாய்த் திருப்தி செய்கிறது, பரசுதியின் முன் சுவையைத் தருகிறது. மரியாயி பிறந்த நாள் மானிட சந்ததிக்கு அழகிய நாள். அது மகிமை பொருந்திய நாள். ஆதாமின் சந்ததியில் பிறந்த ஒரு குழந்தை கடவுளின் மாதாவும், கடவுளின் பத்தினியுமாகத் தேர்த்தெடுக்கப்படுவது மனித சுபாவத்திற்குப் பெருத்த மகிமையல்லவா? இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

அது பாக்கியமான நாள். நீதியின் சூரியனானவரின் முன்னோடியான நட்சத்திரம் உதித்த நாள், தேவ நீதியின் சமுகத்தில் மானிடரின் மத்தியஸ்தியாகவும், மனிதருக்காக பரிந்து பேசுகிறவளாகவும் இருக்கவேண்டியவன் பிறந்த நாள் பாக்கியமான நாளே.

அது நம்பிக்கையின் நாள். ஏனெனில் இந்தத் திருக் குழந்தை ஒரு நாள் நம் அன்னை ஆவாள்; நம்மைப்பற்றி கடவுள் கொண்டுள்ள அன்பும் இரக்கமும் நிறை திட்டங்களை நிறைவேற்ற இவள் ஒத்துழைப்பாள்.

தொட்டிலில் இருக்கும்பொழுதே அவள் ஜெபிக்கிறாள். அவள் தன்னை அர்ச்சித்து புண்ணியங்களில் நாளுக்குநாள்  அதிகரிக்கும் வண்ணம் தனக்காக ஜெபிக்கிறாள். நமக்காக அவள் ஜெபிக்கிறாள், ஏனெனில் தனது வேலை உலகத்தைக் காப்பாற்றுவதும், மானிட இரட்சண்யத்தைப்பற்றிய கடவுளது திட்டங்களில் ஒத்துழைப்பதும் என அவள் அறிவாள்.

கடவுள் பூமியில் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை இவ்விதம் நாம் நிறைவேற்றுகிறோமா? நம்மையும் பிறரையும் அர்ச்சிக்க நாம் உழைக்கிறோமா?

தேவதாய் மேல் நமக்குள்ள பக்தியைப் புதுப்பித்து, அவளுக்கு உகந்த பிள்ளையாய் வாழ நாம் உறுதி செய்வோமாக.

மரியாயைப் பூமிக்கு தந்து, அவளை நம் அன்னையாகவும் நமக்காகப் பரிந்து பேசுகிறவளாகவும், நம் மத்தியஸ்தியாகவும். நம் இரட்சகியாகவும் நியமித்ததற்காக கடவுளுக்கு நாம் நன்றி செலுத்துவோமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக