Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

Feb. 9 - கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். அப்போல்லோனியா


பிப்ரவரி 09ம் தேதி

கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். அப்போல்லோனியா திருநாள்

இவள் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த கன்னிகை. மிகுந்த பக்தியுடன் கிறிஸ்தவ வேதத்தை அனுசரித்து வந்தாள். தேசியுஸ் சக்கரவர்த்தி உரோமையை ஆண்டபோது, கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏற்பட்ட வேதகலாபனத்தின் போது, கிபி 249ம் வருடம், கிறிஸ்தவ வேதத்திற்காக வேதசாட்சியாகக் கொல்லப்பட்டாள். மகிமையான வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றாள்.

வேதசாட்சியாக மரிப்பதற்கு முன்பாக, கொலைஞர்கள் இவளுடைய பற்களை பிடுங்கி எடுத்தனர். பின்னர், கிறிஸ்துவை மறுக்காவிட்டால் உயிருடன் நெருப்பில் சுட்டெரிக்கப்போவதாக அச்சுறுத்தினர். இதைக் கேட்டதும், அர்ச். அப்போல்லோனியா கொலைஞர்களிடம் கால அவகாசம் கேட்டாள். ஆண்டவரை நோக்கி மன்றாடி ஜெபித்த பிறகு, நெருப்பில் விழுந்து வேதத்திற்காக உயிரை விட்டாள்.

அர்ச். அப்போல்லோனியாவின் மீதான பக்தி மிகுந்த பிரபலமடைந்தது. மத்திய நூற்றாண்டு காலத்திலிருந்து, இவளுடைய பரிசுத்த பற்கள் புதுமையாக பெருகி, பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. பல்வலியால் அவதிப்படுகிறவர்களுக்கு, அர்ச். அப்போல்லோனியா பாதுகாவலியாகத் திகழ்கிறாள்.

ஐரோப்பிய ஓவியர்கள், அர்ச். அப்போல்லோனியாவின் வேதசாட்சிய மரணத்தை மிக அருமையாக ஓவியங்களாக வரைந்துள்ளனர். இத்தாலிய சிற்பக்கலையில், இவளது உருவப்படங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

17ம் நூற்றாண்டின் ஓவியரும் சிற்பியுமான குயிடோ ரெனி, அர்ச். அப்போல்லோனியாவைச் சித்தரித்திருந்தார். அவரது ஓவியங்களில், அர்ச். அப்போல்லோனியா ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், இரு கொலைஞர்கள் அவளைப் பிடுங்குவதற்கு ஆயத்தமாக, ஒரு குறடை ஏந்தியபடி நிற்பதாகவும் காணலாம்.

அர்ச். அப்போல்லோனியாவின் பரிசுத்த அருளிக்கங்கள் உரோமாபுரியிலுள்ள அர்ச். அப்போல்லோனியா தேவாலயத்தில் பூஜிதமாக வைக்கப்பட்டுள்ளன. வேதசாட்சியின் பரிசுத்த தலை, டிராஸ்ட்வெரெ என்ற இடத்திலுள்ள சாந்தா மரியா பசிலிக்காவில் உள்ளது. பரிசுத்த கரங்கள், சான் லொரென்ஸோ ஃபுவோரி லெ முரா பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய நூற்றாண்டுகளில், பல்வலியால் அவதிப்பட்டவர்களின் வலிவேதனையை அர்ச். அப்போல்லோனியாவின் பரிசுத்த பற்கள் குணப்படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

அர்ச். அப்போல்லோனியாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!

#catholictamil #saintslifeintamil #punithargal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக