Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள் (STE. CATHERINE DE BOLOGNE.)

மார்ச் மாதம் 11-ந் தேதி.
பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள்
STE. CATHERINE DE BOLOGNE.


பிறப்பு :  8 September 1413
இடம்    :  Bologna, Italy
இறப்பு :  9 March 1463 (aged 49)
இடம்     :  Bologna, Italy

Beatified
1524, Old St. Peter's Basilica by Pope Clement VII

Canonized
22 May 1712, St. Peter's Basilica by Pope Clement XI

Feast
9 March
இத்தாலி இராச்சியத்தில் பொலொஞா என்னும் பட்டணத்திலே உயர்ந்த கோத்திரத்தில் நல்ல கிறீஸ்துவர்களாகிய தாய் தகப்பனிடம் அர்ச். கத்தரீனம்மாள் பிறந்தாள். அச்சமயத்தில் தூரமான பட்டணத்திலிருந்த அவளுடைய தகப்பனாருக்குத் தேவமாதா தரிசனையாகி, அன்று அவனுக்குப் பிறக்கும் மகள் திருச்சபைக்குப் பிரகாசமாயிருப்பாளென்று அவனுக்கு அறிவித்தாள். தாய் தகப்பன் சொன்ன புத்தியை கேட்டுக் கத்தரீனம்மாள் சிறுவயது துவக்கிப் புத்திச் சுறுசுறுப்போடே புண்ணிய வழியிலே நடந்தாள். புத்தி விவரம் அறிந்த மாத்திரத்தில் அவள் பெற்றோர் பிரபுவின் மனைவியிடம் வளர வைக்கப்பட்டாள். ஆனால் அவளுக்கு ஒன்பது வயதானபோது அரண்மனையின் மகிமை வாழ்வையும் உலகத்தையும் வெறுத்துச் சில பக்தப் பெண்களோடு கன்னியாகத் தன்னைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். பின்னும் அர்ச். கிளாரம்மாள் கன்னியாஸ்திரி சபையில் உட்பட்டாள். அதிலே பத்தி, தேவசிநேகம், பிறசிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலான புண்ணியங்களால் உச்சிதமான விதமாய் விளங்கினாள். எல்லாருக்கும் ஊழியம் பண்ணத் தேடுவாள். அதிக தாழ்மையுள்ள அலுவல்களையும், எளிமையான வஸ்திரங்களையுஞ் சந்தோஷமாய் தனக்குத் தெரிந்து கொள்வாள். ஆயினுந் தேவ சித்தத்தால் மடத்து முதலாளியானாள். கர்த்தர் அவளுக்குத் தீர்க்கதரிசன வரம் முதலான சில விசேஷ தயை செய்தருளினார். ஆயினும் ஓர் சமயத்தில் அவள் தன்னிடத்திலே வெகு புண்ணி யங்கள் இருப்பதைக் கண்டு கர்வம் கொண்டு பேசினதால் அதற்கு அபராதமாக ஐந்து வருஷம் அவளுக்கு வெகு துக்கம் வருகிறதற்குச் சர்வேசுரன் சித்தமானாரென்று அவள் தான் இயற்றிய புத்தகத்திலே எழுதி வைத்தாள். அந்தத் துக்கத்தின் மிகுதிக்குத் தன் பாவங்கள் காரணமென்று அவள் நினைத்து அதை மிகப் பொறுமையோடே அனுபவித்தாள்.

அந்தப் புண்ணியவதி தேவநற்கருணையின் பேரிலே வைத்த பத்தியினாலே அதின் பேரில் அவள் தியானம் பண்ணும்போது சந்தோஷத்தினால் அழுவாள். அவள் பூசை காண்கிறபோது மிகுந்த தாழ்ச்சி பத்தியாயிருந்ததினால் ஒரு பூசையிலே சம்மனசுகள் பாடுகிற திருப்பாடல்கள் புதுமையாக அவளுக்குக் கேட்கப்பட் டது. கர்த்தர் பிறந்த திருநாள் இரவில் அந்தம்மாள் தியானத்திலிருந்தபோது தேவமாதா குழந்தை சேசு நாதரை ஏந்தின வண்ணம் அவளுக்குத் தரிசனையாகி அந்தத் திவ்விய குழந்தையை அவள் கையிற் கொடுத்தாள். அந்தத் திவ்விய குழந்தையை வாங்கி அணைத்து முத்தி செய்தபோது எத்தனை சந்தோஷத்தை அனுபவித்தாலென்று சொல்லக்கூடாது.

 அர்ச். பிரான் சீஸ்கென்பவரும் அவளுக்கு இரண்டு விசை தரிசனையானார். அந்தப் புண்ணியவதி ஐம்பது வயது வரை தரும வழியிலே நடந்த பிறகு, 1463-ம் வருஷம் மார்ச் மாதம் 9-ம் தேதி காலம்பண்ணி மோட்ச பாக்கியத்தை அடைந்தாள்.

 கிறீஸ்துவர்களே! அர்ச். கத்தரீனம்மாள் தன் வாயினாலே கட்டிக்கொண்ட அற்ப குற்றத்திற்கு ஐந்து வருஷம் வெகு துக்க துயரத்தை நல்ல மனதோடே அனுபவித்தாள். தம்பீ ! வாயினாலும், மனதினாலும், கிரியையினாலும் நீ கட்டிக்கொண்ட பெரிய பாவங்களுக்கு அபராதமாகக் கொஞ்ச நாளாகிலும் கொஞ்ச மாதமென்கிலும் அனுபவிக்க வேண்டிய கஸ்தி பொல்லாப்புகளைப் பொறுமையோடே அனுபவிக்க வேண்டாமோ? அவைகளைப் பொறுக்க மனதில்லாமல் சர்வேசுரன் பேரிலே நீ முறையிட இடமுண்டோ? உனக்கு வருகிற கஸ்திக்கு நீ செய்த பாவங்கள் காரணமென்று இந்த அர்ச். கத்தரீனம்மாளைப் போல அடிக்கடி நினைத்தால் அந்தம்மாளுடைய பொறுமைக்கொப்ப நீயும் பொறுமை அடைவாயே இதல்லாமல் உன்னிடத்திலே அநேகம் நன்மையிருந்தாலும் அதினாலே உன்னையே புகழ்ந்து பேச வேண்டாம். ஏனெனில் உன்னிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் ஆண்டவருடைய உதவியினால் அல்லவோ வந்தன. சுவாமி உன்னைக் கைவிட்டால் நீ பாவங்கள் நிறைந்தவனாய் இருப்பதல்லாமல் அற்ப புண்ணியமாகிலுஞ் செய்ய மாட்டாய். உன்னிடத்திலுள்ள நன்மைகளுக்குள்ளே ஒரு நன்மையாகிலும் அவரிடத்திலிருந்து வாங்காத நன்மையுண்டோ? நன்மைகளெல்லாம் ஆண்டவராலே நீ கைக்கொண்டிருக்கையிலே அந்த நன்மைகள் முகாந்தரமாக நீ உன்னைக் கொண்டாடலாமோவென்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் திருவுளம்பற்றினதை நன்றாய் யோசித்துத் தாழ்ச்சியாய் இருக்கக்கடவாய். ஒரு சுரூபத்திற்கு உயிர் வந்து அது தன்னிடத்திலுள்ள பொற்பூச்சு முதலான சித்திர வர்ணங்களைக் கண்டு, தன்னைக் கொண்டாடுகிறதைச் சித்திரக்காரன் கேட்பானேயாகில், நான் இந்த வர்ணமெல்லாம் உனக்குக் கொடுத்திருக்கையில் நீ என்னை நினையாமல் உன்னைக் கொண்டாடலாமோ வென்று சொல்லுவது நியாயந்தானல்லவோ ? அவ்வாறே உன்னிடத்திலிருக்கிற நன்மையைக் குறித்து யோசிக்கவேண்டும். அர்ச். கத்தரீனம்மாள் மிக விசுவாசத்தோடேயும் பத்தியோடேயுந் திவ்விய பூசை கண்டதினால் சம்மனசுகளுடைய திருப்பாட்டுகளைப் புதுமையாகக் கேட்பதற்குப் பாத்திரமானாள். பராக்காயிருந்து அநேகங் குறையோடே பூசை காண்கிறவர்கள் இதைக் கேட்டு வெட்கப்படவேண்டும். பெரிய வெள்ளிக்கிழமையிலே சேசுநாதர் கபால மலையிலே மரணத்தை அடைந்தபோது நீங்கள் அங்கே இருந்திருப்பீர்களேயாகில், பராக்கில்லாமல் மிக உருக்கத்தோடேயும் பத்தியோடேயும் இரத்தஞ் சிந்தின அந்தப் பலிபூசையைக் காண்பீர்களல்லவோ? உங்களுக்கு மெய்யாகவே விசுவாசமிருந்தால், இரத்தஞ் சிந்தாத இந்தப் பலிபூசையைக் காண்கிறபோது அவ்வாறே இருக்கவேண்டும். அதேனென்றால், அந்தப் பலியிலே பிதாவாகிய சர்வேசுரனுக்கு நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த சேசுநாதர் தாமே இந்தப் பூசைபலியிலும் பிதாவுக்குக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறார். ஆதலால் பூசைகாண்கிற பாக்கியம் உங்களுக்கு எத்தனைமுறை அகப்படுமோ அத்தனை முறையும் நீங்கள் உயிருள்ள விசுவாசத்தோடும் பத்தியோடும் பூசை காணவேண்டும். தேவமாதா அர்ச். கத்தரீனம்மாள் கையிலே தமது திவ்விய குழந்தையாகிய சேசுநாதரைக் கொடுத்தபோது அந்தம்மாள் மிகுந்த பாக்கியத்தை அடைந்தாள். அப்படிக்கொத்த பாக்கியத்திற்கு நீங்கள் பங்காளிகளாயிருக்க வேண்டுமானால் நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கவேண்டும். அதன் வழியாகச் சேசுநாதர் உங்கள் இருதயத்திலே வருவாரென்பதினாலே அதைவிட மேலான பாக்கியங் கிடையாதென்று உணர்வோம்.

 விவரம்:- இந்த அர்ச்சியசிஷ்டையுடைய திருச்சரீரம் இன்னும் அழியாமல் இருக்கின்றது. அவள் மரித்து அநேக வருஷத்திற்குப் பிறகும் அது இன்னும் உயிராய் இருப்பதுபோல் தோன்றுவதுமன்றி உஷ்ணமுள்ளதுமாயிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக