பிப்ரவரி 09ம் தேதி
அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச். சிரில்
அர்ச். சிரில், கி.பி. 376ம் வருடம், அலெக்சாண்டிரியாவில் பிறந்தார். இவருடைய மாமாவும், அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவுமான தியோ ஃபிலியுஸ், இவருக்கு தபோதன ஜீவியத்திற்கு தேவையான ஞான பயிற்சியை அளிக்க, எகிப்திய பாலைவன தபோதனர்களிடம் அனுப்பினார். 9 வருடங்களுக்குப் பிறகு, தியோஃபிலியுஸ் இறந்தபோது, சிரில் 36வது வயதில் அலெக்சாண்டிரியாவின் மேற்றிராணியாராக பதவி ஏற்றார்.
பதவியை ஏற்றவுடன், அலெக்சாண்டிரியாவில் உள்ள அனைத்து பகைமை கோவில்களையும் மூடினார். திருச்சபையை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். யூதர்களால் ஏற்பட்ட கலவரங்களால், அவர்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கி.பி. 428ம் ஆண்டு, கான்ஸ்டான்டிநோபிளின் பிதாப்பிதாவாக நெஸ்டோரியஸ் பதவி ஏற்றார். அவரது தவறான போதனைகள் பற்றி, அர்ச். சிரில், பாப்பரசருக்கு அறியப்படுத்தினார். மகா பரிசுத்த தேவமாதா பற்றிய திருச்சபையின் போதனைகளை காத்து, நேர்த்தியான பிரசங்கங்களையும் எழுத்துக்களையும் வழங்கினார்.
431ம் ஆண்டு, எபேசுஸ் நகரில் கூடிய திருச்சபைச் சங்கத்தில், "சர்வேசுரனுடைய மாதா" என்ற பட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அர்ச். சிரில், வாழ்நாள் முழுவதும், தேவமாதாவின் மகத்துவம் பற்றியும், ஆண்டவரின் இருவேறு சுபாவங்களை விளக்கும் நூல்களை எழுதியும் பிரசங்கித்தும் தன்னைத்தான் அர்ப்பணித்தார்.
அர்ச். சிரில், மகா பரிசுத்தத் தமதிரித்துவம் மற்றும் ஆண்டவரின் மனிதவதாரம் பற்றிய வேத சத்தியங்களை ஆய்வுகளின் மூலம் விளக்கியார். நெஸ்டோரியப் பதிகம் மற்றும் பெலேஜியனிசம் ஆகிய தவறான போதனைகளை அழித்து அகற்றினார்.
அவர், கி.பி. 444ம் ஆண்டு இறந்தார். அர்ச். சிரில் எழுதிய நூல்கள், துல்லியமான சிந்தனை, நுட்பமான வெளிப்படுத்துதல், காரண காரிய திறன் ஆகியவற்றால் சிறந்து விளங்குகின்றன. 1882ம் ஆண்டு, 13ம் சிங்கராயர் பாப்பரசர், அவரை திருச்சபையின் வேதபாரகராக பிரகடனம் செய்தார்.
அர்ச். சிரிலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!
#catholictamil #saintslifeintamil #punithargal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக