Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 13 ஜனவரி, 2024

அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.

 மார்ச் மாதம் 28-ம் தேதி.

அர்ச். கொந்திறான் இராசா


ST. GONTRAN.

கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை  பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.

விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.

கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!

பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக