Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 3 St. Leonard of Port Maurice Life History in Tamil

 அர்ச்.போர்ட்மோரீஸின் லியோனார்டு

(1676-1751), திருநாள் நவம்பர் 26



ஜெனோவா நகரின் அருகிலுள்ள மோரீஸ் என்னும் துறைமுக நகரத்தில் அர்ச்.லியோனார்டு, 1676ம் வருடம், தோமினிக் காசோவா என்ற கப்பல் தலைவனுடைய மகனாகப் பிறந்தார். இரு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும், இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவருக்கு 13 வயதான போது, ஒரு புகழ் பெற்ற ரோமன் கல்லூரியில் சேர்ந்தார். அது, அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார் படித்த கல்லூரி. பக்தியிலும் ஞானத்திலும் கத்தோலிக்க ஒழுக்கத்திலும், நல்ல அலுவல்களிலும், சிறந்து விளங்கியதால், நாளடைவில், இவரும், இன்னொரு ஞானப்பிரகாசியார் என்ற பெயர்பெற்றார். இங்கு, கல்வியை முடித்தவுடன், மருத்துவத்துறையில் உயர்கல்வி கற்பதற்கு ஆசித்தார். ஆனால், ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் பிரான்சிஸ்கன் சந்நியாச மடத்தை சந்தித்த போது, பரிசுத்த குருத்துவத்திற்கான தேவஅழைத்தலைப் பெற்றார். 1697ம் ஆண்டு, அக்டோபர் 2ம் நாளன்று அச்சபையில் உட்பட்டார். விரைவிலேயே அர்ச்சிஷ்டதனத்தினால், அம்மடத்தினுடைய மகிமையாக விளங்கினார்.

சபைவிதிகளை நுட்பமாக அனுசரித்தார். ஆழ்ந்த பக்திபற்றுதலுடன் ஜெபத்தில் ஈடுபட்டார். சேசுமரியாயின் மிதான பக்தியினால் இவருடைய இருதயம் எப்பொழுதும் பற்றி எரிந்தது. கடினதபசினாலும், தாழ்ச்சியினாலும், இடைவிடாத பிறர்சிநேக அலுவல்களினாலும் இவருடைய அர்ச்சிஷ்ட ஜிவியம் பரிமளித்தது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக, சீன தேசத்திற்கு செல்வதற்கு மிகவும் திவிரமான ஆவல்கொண்டார். ஆனால், இவருடைய சரீர பலவினத்தினால், சொந்த நாட்டிலேயே பிரசங்கிப்பதற்கு இவரால் கூடாமற் போயிற்று. தபசு மிகுந்த ஜீவியத்தினால், இவருடைய தேகபலம் நாளுக்கு நாள் குறைந்து, இறந்துபோகும் அளவிற்கு மெலிந்தார்.

ஆனால், தேவமாதாவின் பராமரிப்பினால், சாகாமல், புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். சரீர ஆரோக்கியத்தைத் திரும்ப பெற்றார். அதற்கு நன்றியறிதலாக, மிகுந்த ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் பங்குகளை சந்தித்து, தியானங்களையும் பிரசங்கங்களையும் நிகழ்த்தினார். 24 வருடங்களில் இத்தாலி முழுவதும், கோர்சிகா திவு (இங்கு ஒழுக்கமற்றமக்களே வாழ்ந்து வந்தனர்)  முழுவதிலுமுள்ள சகல பங்குகளையும் விசாரித்து, மக்களை ஞானஜீவியத்தில் ஸ்திரப்படுத்தினார். தம்முடைய பாவங்களுக்காகவும், தமது நாட்டிலுள்ள சகல கிறீஸ்துவ மக்களுடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்வதற்காக, இரவு கண்விழித்து ஜெபித்தும், தன்னையே சாட்டையால் இரத்தம் வருமட்டும் அடித்துக்கொண்டும் தபசு செய்து, ஆண்டவருடைய இரக்கத்திற்காக மன்றாடி வந்தார். இத்தகைய கடுமையான தபசுடன் ஜீவித்து வந்ததால், இவருடைய ஞானதியானப் பிரசங்கங்கள் மிகுந்த ஞான பலனைக்கொடுத்தன.

 அவற்றைக் கேட்போர் இருதயங்களில், தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உத்தமமான மனஸ்தாபத்தை ஏற்படுத்தின. ஞான அறிவுரைகள் அவர்களுடைய இருதயங்களில் பதிந்தன. இவ்வாறாக, திரளான பாவிகளை மனந்திருப்பினார். ஃப்ளோரன்ஸ் நகருக்கருகில் இருந்த இன்கோர்டோ என்ற இடத்தில், போதக துறவியர்கள் ஞான தியான பிரசங்கங்களை நன்கு தயாரிப்பதற்காகவும், உலகசந்தடிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு வேண்டிய ஏகாந்தமான சூழ்நிலையை அளிப்பதற்காகவும், தபசு அனுசரிப்பதற்காகவும் ஏற்றபடியான ஒரு தியான இல்லத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமானார். ரோமாபுரியில் பல பக்த சபைகளை ஏற்படுத்தினார். அதில், சேசுவின் திரு இருதய சபை குறிப்பிடத்தக்கது. “திவ்ய சேசுவே, என் மேல் இரக்கமாயிரும்!” என்ற மனவல்லிய ஜெபத்தை அடிக்கடி ஜெபிக்கும்படி, சென்ற இடமெல்லாம், இவர் மக்களிடம் கற்பித்து வந்தார். 

அதே போல், இத்தாலியா நாடெங்கிலும், திவ்ய நற்கருணை மேல் பக்தியை பரப்பி வந்தார். தேவாலயங்களில், மகாபரிசுத்த தேவநற்கருணைக்கு இடைவிடாத ஆராதனையை மக்கள் செய்யும்படியான வழக்கத்தையும் சென்ற இடங்களிலெல்லாம் ஏற்படுத்தினார். ஆண்டவருடைய திவ்ய பாடுகளின்மேல் பக்தியையும், சிலுவைப்பாதை செய்யும் பக்திமிகுந்த பழக்கத்தையும் பரப்பினார். மேலும் தன்னுடைய ஜீவியத்தில் தேவமாதாவிடமிருந்து பெற்ற சகல நன்மைகளுக்கு நன்றியறிந்த தோத்திரமாக, தேவமாதாவின் அமலோற்பவத்தின் மேல் கொள்ள வேண்டிய பக்தியையும் பரப்பி வந்தார்.

பொலோஞாவில் போதக பிரசங்கங்களை முடித்துக்கொண்டு, ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் மடத்திற்கு திரும்பிய அர்ச். லியோனார்டு, 1751ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் நாள் பாக்கியமாக மரித்தார். இவருடைய ஜீவியநாட்களிலேயே புதுமைகள் நிகழ்ந்திருந்தபோதிலும், இவர் இறந்தபிறகு, அனேக புதுமைகளால் இவரை மகிமைப்படுத்த சர்வேசுரன் சித்தமானார். உலகில் வாழ்ந்தபோதே, இவரை நன்கறிந்த ஆறாம் பத்திநாதர் பாப்பரசர், இவருக்கு, 1796ம்வருடம் முத்திப்பேறு பட்டமளித்தார். 9ம் பத்திநாதர் பாப்பரசர் 1867ம் ஆண்டு, ஜூன் 29ம் நாள், இவருக்கு அர்ச்சிஷ்ட பட்டமளித்தார். 11ம் பத்திநாதர் இவரை வேதபோதகதுறவியரின் பாதுகாவலராகப் பிரகடனப்படுத்தினார். 

இவருடைய திருநாள் நவம்பர் மாதம் 26ம் நாள். †

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக