Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 20 டிசம்பர், 2023

அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்

 "அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத்தாள்" (லூக். 2:7)





திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப்பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பார் என்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத்திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன்  அடிமைத்தனத் தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீது என்பவர் இராஜபட்டம் பெற்ற 1032-ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவகுமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையாஸ் வசனித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப்பிறப்பு சம்பவித்தது. 

சேசு இரட்சகருடைய வருகை!

நம் பரிசுத்த வேதத்தை உண்டாக்கியவரான சேசு கிறீஸ்துநாதர் பெத்லெகேமில் பிறந்ததும், பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்து மரித்ததும் சரித்திர வாயிலாக நாம் அறிந்த உண்மைகள். உலக சரித்திரமும் இவற்றிற்கு சான்று பகர்கிறது. எவராலும் மறுக்கப்படாத விதமாய் இவைகள் எண்பிக்கப்பட்டிருக்கின்றன.

பெத்லெகேமில் குழந்தையாய் பிறந்த சேசு மெய்யாகவே கடவுள். அவர் ஏனைய குழந்தைகளைப் போன்றவரன்று: அவர் உண்மை யாகவே கடவுள் என்று எண்பிக்க பல அதிசயங்கள் நடைபெற்றன.

கடவுளாகிய தேவகதன் எல்லா மனிதர்களையும் காப்பாற்றும்படி இப்பூமிக்கு வந்தார். பாஸ்கு வாரத்தில் மனித மீட்புக்காக உயிர்விட்டார். தமது இரட்சிப்பின் பண்டிகையான அர்ச்சியசிஷ்ட வார திருநாட்களுக்கு, கர்த்தர் பிறந்த திருநாள் தயாரிப்பாகும். மோட்சம் போவதற்கான வழியை மனிதருக்கு காட்ட சேசு இப்பூமிக்கு வந்தார். மோட்ச பாதையை பிரகாசிப்பிக்கக்கூடிய ஒளியைத் தர வந்தார். எனவே கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளாகும்.

கர்த்தர் பிறந்த திருநாளையொட்டி ஒவ்வொரு கோவிலிலும், இல்லங் களிலும் குடில் தயாரிப்பதுண்டு. குடிலின் மத்திய ஸ்தானம் குழந்தை சேசுவே. அவரருகில் அவருடைய மாதாவான மரியாயையும் அவரை வளர்த்த தந்தை சூசையப்பரையும் காணலாம். தேவ குழந்தையை தரிசிக்க வந்த இடையர்களையும் அங்கு பார்க்கிறோம். சேசு பிறந்த சில நாட்களுக்கு பின் அவரை தரீசிக்க வந்த மூன்று இராஜாக்களின் உருவங்களை ஜனவரி 6-ம் நாளாகிய மூன்று இராஜாக்கள் திருநாளையொட்டி அங்கு வைப்பார்கள். கர்த்தர் பிறந்த திருநாள் ஒளியின் திருநாளெனக் காட்ட குடிலில் நட்சத்திரங்களையும் காணலாம்.

சேசுவின் பிறப்பானது உலக சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றி ருக்கிறது. அவர் பிறந்த காலத்தில் உரோமை இராஜ்ஜியத்தை செசார் அகுஸ்துஸ் ஆண்டுவந்தான்.

உரோமை இராச்சியம் உலகில் அநேக பகுதிகளில் பரவியிருந்தது. அந்தப் பகுதிகளிலெல்லாம் குடிக்கணக்கு எழுதப்படும்படியாக அரசன் கட்டளை பிறப்பித்தான். ஆதலால் எல்லோரும் தங்கள் பெயர்களை எழுதிக் கொடுக்கும் பொருட்டு தங்கள் தங்கள் சொத்த ஊர்களுக்குப் போனார்கள். சூசையப்பர் தாவிதின் கோத்திரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவராகையால் கர்ப்பிணியான கன்னிமரி யுடன் பெயர் எழுதிக்கொடுக்கும் பொருட்டு, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் நகரத்துக்குச் சென்றார். அந்த நாட்களில் எரோது அரசன் பாலஸ்தீனாவை ஆண்டு வந்தான் (மத் 2:1). சேசு பிறந்த இரவில் அந்த நாட்டில் சில இடையர்கள் விழித்திருந்து தங்கள் கிடைக்கு சாமக்காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். சேசு பிறந்த பெத்லெகேம் ஊர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஊர் இன்னும் இருக்கிறது. சேசு பிறந்த இடத்தில் ஒரு பெரிய ஆலயம் அமைத்திருக்கிறார்கள். சேசுவை துணிகளால் சுற்றி முன்னிட்டியில் (தொழுவத்தில்) கிடத்தினார்கள். அவரைப் பெற்ற தாய் மரியம்மாள் என்றும், அவரை வளர்த்த தந்தை சூசையப்பர் என்றும் தெரியும். இடையர்கள் போய் சேசுவை சந்தித்தார்கள். கீழ் திசையிலிருந்து சோதிட சாஸ்திரிகள் (மூன்று இராஜாக்கள்) அவரைத் தரிசிக்க சென்றனர். 

சேசுவின் பிறப்பானது ஏனையக் குழந்தைகளைவிட அவர் மேம்பட்டவரெனக் காட்டுகிறது. அவரது பிறப்பை சூசையப்பருக்கும் இடையருக்கும் சம்மனசுக்களும், கீழ்த்திசை சோதி சாஸ்திரிகளுக்கு ஒரு நட்சத்திரமும் அறிவிக்கின்றன. சீனாய் மலையில் கடவுள் தம்மை மோயீசனுக்கு வெளிப்படுத்தியபோது தெய்விக ஒளி காணப்பட்டது போல சேசு பிறந்த இரவில் தெய்விக பிரகாசம் பரலோகத்திலிருந்து வந்து காணப்பட்டது என லூக்காஸ் சுவிசேஷத்தில் (2:9) பார்க்கிறோம். கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரம் கடவுளால் அனுப்பப்பட்ட அதிசய நட்சத்திரமாகும்.

நம்மை இரட்சிப்பதற்காகவே சேசு பிறந்தார்!


நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்" (லூக் 1:31) என கன்னிமரியம்மாளிடம் சம்மனசானவர் அறிவித்தார். சேசு என்றால் இரட்சகர் என்று பொருள். "இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்" என இடையர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்தார் (லூக். 2:11). கீழ்த்திசை சோதிட சாஸ்திரிகளுக்கு நோன்றிய நட்சத்திரமானது சேசு அனைவருக்கும் இரட்சகர் எனக் காட்டிற்று. இந்த இரட்சிப்பானது மானிட சந்ததிக்கு ஒரு நல்ல செய்தியாரும்; இந்த நல்ல செய்தியோ பெரும் மகிழ்ச்சியின் ஊற்று, “இதோ எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று இடையர்களுக்கு தேவ தூதன் தெரிவித்தார் (லூக் 2:10). இந்த நல்ல செய்தியானது ஒரு புத்தகத்தில் வரையப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை சுவிசேஷப் புத்தகம் என்கிறோம்.

இடையர்கள் போய் சேசுவை கண்டார்கள். அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும், மகிழ்ச்சியும் யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறானோ, அவன் ஒளியும் சந்தோஷமும் அடைவான். பெத்லெகேம் நகர் மக்களோ சேகவை சட்டைப் பண்ணவில்லை. கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பெற்றார்கள். ஜெருசலேம் நகர் குருக்களோ, சேசுவைப் போய் பார்க்க விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விகும்பினான். சாதாரண மக்களும் அறிஞர்களும், ஏழைகளும் செல்வந்தர்களும் சேசுவைப் பார்க்கப் போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு  நேசிக்கிறார். யூதர்களும் புறஜாதியாரும் சேசுவிடம் போனார்கள்.  சேசு அனைவருக்கும் இரட்சகர் 

கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பலிபூசை நிறைவேற்றுகின்றனர். முதற் பூசையானது சுவிசேஷத்தில் சொல்லப் பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. இரண்டாவது பூசையானது இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும் ஆத்துமங்களில் சேசு பிறப்பதைக் காட்டுகிறது. சேசு கடவுளாகிய மட்டும் நித்தியத்திளிருந்தே இருக்கிறார் எனக்காட்ட “ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார்" என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்றுக் காட்ட “வார்த்தையானவர் மாம்சமானர்" என்றும், தாம் உண்டாக்கிய திருச்சபையில் வசிக்கும் சேசு ஞான விதமாய் ஆத்துமங்களில் பிறக்கிரா ரென்று காட்ட “யார் யார் அவரை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்" என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும் கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டுமென்பதையும் மூன்று பூசைகளும் நம் நினைவுக்கு கொண்டுவருகின்றன. அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல் மாசற்றவர்களாக வாழ்வதே. “நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்".

சேசு தம்மை சாஸ்திரிகளுக்கு காண்பிப்பதை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த சாஸ்திரிகள் புறஜாதியார் அனைவரையும் குறிக்கிறார்கள். சகல ஜாதி ஜனங்களும் இரட்சகரிடம் வருவார்கள் என்பதை இசையாஸ் தீர்க்கதரிசியும், தாவீது இராஜாவும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

கர்த்தர் பிறந்த திருநாளன்று பிறருக்கு நாம் கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு; என்றாலும் கர்த்தர் பிறந்த திருநாளை யொட்டி நாம் பிறருக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சேசு தம்மை இடையர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம் இருதயங்கள் உயிருள்ள குடில்களாக வேண்டும். அந்த குடில்களில் சேசுவை ஏற்றுக்கொள்ள அவற்றை தயாரிக்கும்படி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும். பாவமோ, பாவத்தின் மேல் பற்றுதலோ, நம் இருதயத்தில் இருக்கலாகாது. அப்படியானால் திவ்விய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக் கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

J.M.N உத்தம மக்களை உருவாக்க: 583.# 23

Source : Salve Regina 2010 October - December



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக