பிப்ரவரி 19ம் தேதி
அர்ச். கொன்ராட்
இவர், இத்தாலியின் லொம்பார்டியைச் சேர்ந்த பிளெசென்சா என்ற இடத்தில் ஓர் உயர்குடியில், 1290ம் வருடம் பிறந்தார். இவர் இளமையில் வீரத்துவ விளையாட்டுகள் மேல் மாபெரும் ஆர்வமுள்ளவராயிருந்தார். ஆர்வமுள்ள வேட்டைக்காரர்; லோடியைச் சேர்ந்த உயர் குடிமகனின் மகளான யுஃப்ரோசின் என்பவளை திருமணம் செய்தார்.
ஒரு சமயம், இவர் ஒரு காட்டு மிருகத்தை வேட்டையாடியபோது, அந்த விலங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்ததால், அந்த புதருக்கு நெருப்பை வைத்தார். அந்நெருப்பு புதரை ஒட்டியிருந்த வயல்வெளி முழுவதையும், அருகிலிருந்த பெரிய காட்டையும் சேர்த்து எரித்து சாம்பலாக்கியது. இதில் அறுவடைக்குத் தயாராயிருந்த தானியங்கள் எல்லாம் சேதமாயின!
பிளெசென்சாவின் ஆளுநன், காட்டையும் வயலையும் தீக்கிரையாக்கியவன் யார் என்பதைக் கண்டறிய ஆயுதம் தாங்கிய படைவீரர்களைக் அனுப்பி வைத்தான். அதற்குள் கொன்ராட், நகரத்திற்குள் ஓடிவிட்டார். அச்சமயம், வயல்வெளியில் கறுகிப்போயிருந்த விறகுக் குச்சிகளைக் கட்டிகளாகக் கட்டி எடுத்துச் சென்ற ஒரு ஏழை விவசாயியைக் கைது செய்தனர். விவசாயியின் மேல் குற்றம் சுமத்தி, அவரை ஒரு தட்டில் படுக்க வைத்து சகல ஆக்கினைகளாலும் உபாதித்தனர்; இறுதியாக அவரை சாவுக்கு தீர்ப்பிட்டனர்.
அந்த ஏழை விவசாயியை, கொலைக்களத்திற்கு இட்டுச் செல்கிற போது, கொன்ராட் வீட்டிற்கு முன்பாகக் கொண்டு சென்றனர். அப்போது தான், இவர் விவசாயியை எதற்காக கொலைக்களத்திற்கு இட்டுச் செல்கின்றனர் என்பதைப் பற்றி அறிந்தார். மனச்சாட்சியின் உறுத்தலினால் உந்தப்பட்டவராக, வெளியே ஓடிப்போய், விவசாயியை வீரர்களிடமிருந்துக் காப்பாற்றினார். எல்லோர் முன்பாகவும், "வயலில் நெருப்பை நான் தான் வைத்தேன்!" என்று அறிவித்தார்.
கொன்ராட், கவர்னரிடம் சென்று, தவறுதலாக வைத்த நெருப்பு இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியதைப் பற்றி விளக்கிக் கூறி, அந்த சேதத்தை ஈடு செய்வதற்கான பணத்தைத் தருவதாகக் கூறினார். கொன்ராட்டின் மனைவியும், தாராள மனதுடன் தான் கொண்டு வந்திருந்த டெளரிப் பணத்தையும், கணவருக்கு உதவும்படியாக அளிக்க முன்வந்தார்கள்.
இந்நிகழ்வு உலக ஆஸ்திகளின் மாயத் தோற்றத்தைப்பற்றிய ஒரு பாடத்தை கொன்ராட்டிற்குக் கற்றுக் கொடுத்தது. அர்ச். கொன்ராட்டும் அவருடைய மனைவியும், ஒத்த மனநிலையுடன், சர்வேசுரனுக்காகத் தங்களையே எஞ்சிய ஜீவியகாலத்தில் அர்ப்பணிக்கத் தீர்மானித்தனர். அதன்படி, கொன்ராட், பிரான்சிஸ்கன் மடத்தில் சேர்ந்தார். இவருடைய மனைவி, ஏழை கிளாரம்மாள் கன்னியர் மடத்தில் சேர்ந்தார்.
வெகுக் குறுகிய காலத்திலேயே, உத்தமதனத்தில் முன்னேறினார்; இவருடைய சாங்கோபாங்கத்தின் பரிசுத்தத்தனம், இவருடைய முந்தைய நண்பர்கள் மற்றும் திருயாத்ரீகர்களை, இவரிடம் கவர்ந்திழுத்தது. ஆனால், அர்ச். கொன்ராட், உலகத்தை முற்றிலுமாக துறந்து விட ஆசித்தார். எனவே, இவர் மறைவாக உரோமைக்குச் சென்று, அங்கிருந்து சிசிலி தீவிற்குச் சென்றார்.
அங்கு, சிராக்கூஸிலுள்ள நோட்டோ பள்ளத்தாக்கில் 36 வருட காலம், ஒரு உயர்ந்த மலையிலுள்ள குகையில் தபோததனராக வாழ்ந்தார். இந்த மலை இப்போது "கொன்ராட் மலை" என்று அழைக்கப்படுகிறது. இங்கு, இவர் அசாதாரணமான தபசை மேற்கொண்டார்; வெறுந்தரையில் படுத்துறங்குவார்; ரொட்டி, தண்ணீர் மற்றும் சில காட்டு மூலிகைகளை உண்டு உயிர்வாழ்ந்தார். இருப்பினும், பிசாசு இவரை மிகக் கொடூரமாக சோதித்து அலைக்கழித்தது.
அச்சமயம், அர்ச். கொன்ராட் சர்வேசுரனை மகிழ்விப்பதற்காக, இடைவிடாமல் தளரா ஊக்கத்துடன் ஜெபித்ததால், புதுமை செய்யும் வரத்தையும், தீர்க்கதரிசன வரத்தையும் சர்வேசுரன் இவருக்கு அளித்தார்.
நோட்டோவிலுள்ள ஒரு பிரசத்திபெற்ற ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இவர் தவறாமல் கடைசி 30 வருட காலம் தொடர்ந்து பக்திபற்றுதலுடன் சந்தித்து வந்தார். இவ்விதமாக, 1351ம் வருடம், பிப்ரவரி 19ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, ஆண்டவருடைய இப்பரிசுத்த பாடுபட்ட சுரூபத்தின் முன்பாக முழங்காலிலிருந்து ஜெபித்துக் கொண்டிருந்தபோது, பாக்கியமாய் அர்ச். கொன்ராட் மரித்தார்.
இவருடைய விருப்பத்தின்படி, நோட்டோவிலுள்ள அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். ஒரு வெள்ளிப் பேழையில் இவருடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது.
1515ம் வருடம், பத்தாம் சிங்கராயர் பாப்பரசர், இவருடைய திருநாளை நோட்டோவில் கொண்டாடுவதற்கு அனுமதித்தார். 1625ம் வருடம், 8ம் உர்பன் பாப்பரசர், இவருக்கு அர்ச்சிஷ்டப் பட்டம் அளித்தார்.
அர்ச். கொன்ராட்! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக