Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 6 ஜனவரி, 2024

அர்ச்.குழந்தை சேசுவின் தெரசம்மாள்: வேதபோதக நாடுகளின் பாதுகாவலி

 எஸ்கிமோக்கள் என்ற உறைபனி நாட்டில் வாழும் மனிதர்களிடம் சத்திய வேதத்தைப் போதிப்பதற்காக அமலோற்பவ மாதாவின் சபையைச் சேர்ந்த வேதபோதக சபைக் குருக்கள் (Oblates of Mary Immaculate) கனடா நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹட்சன் வளைகுடாவில் தங்கள் வேதபோதக அலுவலை துவக்கியிருந்த போது, சங். ஆர்சின் டர்குவெடில் O.M.I சுவாமியார் 1911ம் வருடம் முதல் 1915 அங்கு சென்று அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டு அவர்களுக்கு நம் ஆண்டவரைப்பற்றிய சுவிசேஷத்தையும் நம் வேதத்தின் ஞானஉபதேசத்தையும் கற்பித்து வந்தார். 1916ம் ஆண்டு வந்தது. அந்த ஆண்டில், அவருடைய வேதபோதக அலுவலினால் அங்கு எந்த ஒரு வெளிப்படையான ஞானபலனும் ஆத்தும ஆதாயமும் இல்லாமல் போனது. அந்த ஹட்சன் வளைகுடாக் கடல் உறைந்து போகக்கூடிய பனிக்காலத்திற்கு முன் அக்டோபர் மாதத்தில் ஒரு விநோதமான அதிசயம் நிகழந்தது.

அம்மாதத்தில் அப்பகுதிக்கான கடைசி படகு வந்து சேர்ந்தது. அதில் யாரோ ஒருவர் சுவாமியாருக்கு இரு கடிதங்கள் அனுப்பியிருந்தனர். முதல் கடிதத்தில் "ஒரு சிறிய ஆன்மாவின் வரலாறு" என்ற அர்ச்.குழந்தை சேசுவின் தெரசம்மாளைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பேடு இருந்தது. அதில் அந்த சிறிய அர்ச்சிஷ்டவள் வேதபோதக அலுவல்மீது கொண்டிருந்த உன்னதமான ஆர்வத்தைப்பற்றியும் பனிமீது அவள் கொண்டிருந்த நேசத்தைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தன. மற்றொரு கடிதத்தில் சிறுமலர் அர்ச்,தெரசம்மாளின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட தூசி இருந்தது. உடனே சங். டர்குவெடில் சுவாமியாரின் மனதில் ஒரு எண்ணம் தூண்டப்பட்டது. அன்று மாலையே சில எஸ்கிமோக்களை தன் அறைக்கு வந்து அங்கிருக்கும் அடுப்பினருகில் அமர்ந்து தங்களை சூடுபடுத்திக்கொள்வதற்காக அழைத்தார். அவர்களும் வந்தனர். அவர் அவர்கள் முன்பாக சிறு ஹார்மோனியத்தைக் கொண்டு இசையை வாசித்தார். அப்போது சுவாமியாரின் திட்டப்படி, சகோதரர் ஜிரார்ட் அந்த எஸ்கிமோக்களின் பின்புறமாக வந்து அர்ச்.குழந்தை தெரசம்மாளின் கல்லறை தூசியை அந்த எஸ்கிமோக்கள் மேல் தூவினார். பிறகு, அந்த இரு ஓப்லேட் துறவியரும் அன்று இரவு முழுவதும் தேவநற்கருணை பேழைமுன்பாக நீண்ட ஜெபத்தில் ஈடுபட்டு உருக்கமாக அந்த எஸ்கிமோக்களின் மனந்திரும்புதலுக்காக மன்றாடினர்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில், எஸ்கிமோக்கள் சுவாமியாரிடம் வந்து தங்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கும்படி விண்ணப்பித்தனர். தனக்குள் ஏற்பட்ட அளவில்லா வியப்பை அடக்கியவராக உடனே அவர்களுக்கு சங்.டர்குவெடில் சுவாமியார் ஞானஉபதேசத்தைக் கற்பிக்கலானார். எஸ்கிமோக்கள் சென்றதும், அவர் சிறுமலரான அர்ச்.குழந்தை தெரசம்மாளை நோக்கி "சிறுமலரே! நீர் மிக நேர்த்தியான வேதபோதகர். உமது இந்த உன்னத அலுவல் தொடரட்டும்!" என்று மிக தாழ்ந்த குரலில் ஜெபித்தார். இதன்பிறகு அப்பகுதியில் ஏராளமான எஸ்கிமோக்களுடைய மனந்திரும்புதல்கள் ஸ்திரமாக தொடர்ந்து ஏற்பட்டன. 1925ம் ஆண்டு ஜூலை 15ம் நாளன்று அப்பகுதியின் அப்போஸ்தல அதிபராக சங். டர்குவெடில் சுவாமியார் நியமிக்கப்பட்டார். விரைவில் அது ஒரு மேற்றிராசனமாக உயர்த்தப்பட்டு அதன் முதல் மேற்றிராணியாராக சங். டர்குவெடில் சுவாமியார் நியமிக்கப்பட்டார். எஸ்கிமோக்களின் அப்போஸ்தலராக விளங்கும் வந். டர்குவெடில் ஆண்டகையும் அவருக்கு எஸ்கிமோக்களிடம் ஏற்பட்ட அற்புதமான அனுபவங்களுமே 1923ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் பெற்ற அர்ச்.குழந்தை தெரசம்மாள் வேதபோதக நாடுகளின் பாதுகாவலி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றனர். Courtesy: "Mid Snow and Ice" - Rev. Fr. Pierre Douchaussois, O.M.I

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக