Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 9 அர்ச். அலெக்சியுஸ்

 அர்ச்சிஷ்டவர்களின் ஜீவிய சரிதை: 
அர்ச். அலெக்சியுஸ் 


5ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில், ரோமாபுரியில், அலெக்சியுஸ் என்ற ஒரு அர்ச்சிஷ்டவர் ஜீவித்து வந்தார். இவர் மறைந்த ஜீவியம் நடத்திவந்தார். இவர், யுஃபேமியன் என்ற உரோமாபுரியின் அரசாங்கத்தின் செனட் உறுப்பினருடைய மகன். யுஃபேமியன், திரண்ட சொத்திற்கு அதிபதியாக, இருந்தார். அலெக்சியுஸ் மிகச் சிறிய வயதிலேயே, தேவ ஏவுதலுக்குக் கீழ்ப்படிந்தவராக, தனது வீட்டை விட்டு, வெளியேறினார்; அறிமுகமில்லாத ஒரு அந்நிய நாட்டிற்குச் சென்றார். சர்வேசுரனுடைய அழைத்தலை, தன் இருதய அந்தரங்கத்தில் உணர்ந்து, அதற்குக் கீழ்ப்படிந்த இவர், தன் தந்தையின் வீட்டை விட்டு வெளியேறி, நமதாண்டவர் பிறந்த புண்ணிய பூமி இருந்த கீழைநாடுகளுக்குத் திருயாத்திரையாகச்சென்றார். 17 வருடகாலமாக, தவயாத்திரையாகச் சென்று, ஜெபதப ஜீவியத்தில் ஈடுபட்டிருந்தார். ஆத்தும் சரீர ஆபத்துக்களின் மத்தியில், அர்ச். அலெக்சியுஸ் தவயாத்திரையாக, ஆண்டவரின் திருப்பாதம் பதிந்த பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில், அலைந்து திரிந்தார்.

நமதாண்டவர் மட்டில், கொண்டிருந்த தேவசிநேகத்தை வெளிப்படையாகக் காண்பிக்கும் விதமாக, அர்ச். அலெக்சியுஸ், ஒரு ஏழைப் பிச்சைக்காரனுடைய தோற்றத்தில், சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்து, சொந்த வீட்டிலேயேதான் யாரென்பதை யாருக்கும் தெரியப்படுத்தாமல், அங்கேயே தன் இறுதிக் காலத்தைக் கழிப்பதற்கு, உறுதியான ஓர் தீர் மானத்தை எடுத்தார். அவர், அவ்வாறு உரோமை நகரத்தை அடைந்தபோது, ஒரு தெருவில், தந்தை, யுஃபேமியனை சந்தித்தார். தந்தை, மிக ஆடம்பரமாக, திரளான பணிவிடைக்காரர்கள் புடைசூழ, அநேக பரிவாரங்களுடன் வருவதைக் கண்டார். ஏனெனில், அரசாங்கத்தில், அவர் மிக உயர்ந்த பதவியை அடைந்திருந்தார். அர்ச். அலெக்சியுஸ், 17 வருட காலமாக மேற்கொண்டிருந்த கடுமையான தபசி மிகுதியினால், அவர், வெகுவாக உருமாறியிருந்தார்; மேலும், அவர் உடுத்தியிருந்த எளிய பிச்சைக்காரனுடைய கந்தலாடையும், அதன் தோற்றமும், அவரை யாரும், அலெக்சியுஸ், என்று அடையாளம் காணமுடியாதபடிச் செய்திருந்தது.

அலெக்சியுஸ், தன் தந்தையை அணுகி, பிறர்சிநேகத்திற்கடுத்த தர்ம காரியமாக, தனக்கு அவருடைய இல்லத்தின் வளாகத்திலேயே, தங்குவதற்கு, ஓரிடத்தைத் தரும்படி கேட்டார்; அவரது உண்வு மேஜையிலிருந்து கீழே விழும் உணவுத் துண்டுகளே, தன்னைப் போஷிப்பதற்குப் போதுமானது என்று கூறினார். அரசாங்கத்தின் பேரவை உறுப்பினரான, யுஃபேமியன், எளிய பிச்சைக்கார கோலத்திலிருந்த அலெக்சியுஸ் மீது மனமிரங்கினார்; தன் ஊழியர்களில் ஒருவனிடம், ஏழைப் பிச்சைக்காரரான அலெக்சியுஸைத் தங்கச் செய்வதற்கும், அவருக்கு வேண்டிய உணவளிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் படி கட்டளையிட்டார். அந்த ஊழியக்காரன், அலெக்சியுஸை, ஒரு மோசமான இருண்ட குடியிருப்புப் பகுதிக்குக் கூட்டிச் சென்றான்; அங்கிருந்த ஒரு படிக்கட்டின் அடிப்பகுதியிலிருந்த ஒரு சிற்றரையில் அவரைத் தங்க வைத்தான். இங்கு, அலெக்சியுஸ் தன் ஜீவியத்தின் கடைசி 22 வருட காலத்தை துன்பத்திலும், ஊழியர்களுடைய இகழ்ச்சிகளின் மத்தியிலும் பொறுமையாக செலவழித்தார்.

அவருடைய சொந்த வீட்டின் வேலைக்காரர்கள், அவரை, யாரென்று அறியாமலிருந்ததால், அவரை ஒரு பிச்சைக்காரன் என்று எண்ணியிருந்ததால், அடிக்கடி, அவரைப் பரிகசித்தனர்; எள்ளி நகையாடினர்; சிறுமைப்படுத்தினர்; சில கொடிய ஊழியர்கள், அவரை அடித்துத் துன்புறுத்தி மகிழ்ந்தனர். அப்போதெல்லாம், நேச ஆண்டவர் பட்ட கொடூரமான பாடுகளின் உபத்திரவங்களுக்குப் பரிகாரமாக, சொந்த வீட்டிலேயே, தனக்கு ஏற்படும் இந்த நிந்தை அவமானங்களை, அசைக்க முடியாத பொறுமையுடன் ஏற்று, அனுபவித்தார். இவ்வாறு, அவரது தந்தையின் வீட்டில் ஒரு பிச்சைக்காரராக தங்கியிருந்த போது, அவருடைய ஜீவியம், ஒறுத்தல், தபசு, உபவாசத்துடன் கூடிய நீண்டதொரு இடைவிடாத ஜெபமாகத் திகழ்ந்தது.

கடைசியில், தனக்கு சாவு சமீபத்திலிருப்பதை உணர்ந்த அலெக்சியுஸ், ஒரு ஊழியனிடம், எழுதுவதற்குத் தேவையான எழுதுகோலையும், ஒரு தாளையும் பெற்றுக்கொண்டார். அந்த தாளில், அவர் தன் ஜீவிய சரித்திரத்தை முழுவதுமாக எழுதினார். எங்கெல்லாம் தவ யாத்திரையாக அலைந்து திரிந்தார் என்கிற விவரத்தையும், வீட்டைவிட்டு வெளியே சென்றதும், என்னவெல்லாம் அவர் அனுபவிக்க நேரிட்டது, என்பதைப் பற்றியும், தான், இவ்வளவு வருடங்களாக, காணாமல் போயிருந்த அவர்கள் மகன் அலெக்சியுஸ் என்றும், அந்நிய நாடுகளிலும், சொந்த வீட்டிலும் அனுபவித்த சகல துன்பங்கள் பற்றியும் எழுதினார்; அவற்றையெல்லாம் நேச இரட்சகர் அனுபவித்த நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரம் தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகளின் மனந்திரும்புதலுக்காகவும், பொறுமையுடன், ஏற்று ஒப்புக் கொடுத்து வருதாகவும், எழுதினார். இந்தத் தாளை, அவர் சாகும் வரை, தன் கையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில், அவருடைய பெற்றோர் தேவாலயத்தில் திவ்விய பலிபூசை கண்டு கொண்டிருந்தபோது, அர்ச். அலெக்சியுஸ், பாக்கியமாக மரித்தார்; அவருடைய ஆத்துமம், சரீரத்தை விட்டு, பரலோகம் சென்றதைக் குறிக்கும் ஓர் மோட்ச அறிவிப்பாக, உரோமை நகரிலிருந்த எல்லா தேவாலயங்களின் மணிகளும் தானாகவே, புதுமையாக அடிக்கத் துவக்கின! அப்போது, உரோமை நகர மக்கள் எல்லோரும் கேட்கும் விதமாக, ஓர் அசரீரியான குரலொலி மோட்சத்திலிருந்து கேட்டது : யுஃபேமியனுடைய இல்லத்திற்குச் செல்லுங்கள்; இதோ அங்கே சர்வேசுரனுடைய மாபெரும் நண்பர் இறந்துவிட்டார்; அவர் உரோமாபுரிக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அவருடைய சகல விண்ணப்பங்களும், கேட்கப்பட்டன, என்று, மிகத்தெளிவாக அக்குரலொலி மூன்று முறை ஒலித்தது. யுஃபேமியன், விரைந்து, தன் வீட்டிலுள்ள படிக்கட்டின் அடியிலிருந்த சிற்றரைக்கு நேராகச் சென்று பார்த்தார். அப்போதுதான், தன் மகன் அலெக்சியுஸ், ஏழைப் பிச்சைக்காரக் கோலத்திலிருப்பதைக் கண்டார்; ஆச்சரியமடைந்தார்.

அப்போது தான் அவர் மரித்திருப்பதைக் கண்டதும், அழுதார்; அவர் கரத்திலிருந்த தாளை எடுத்து, அழுது கொண்டே , உரத்தச் சத்தமாக வாசித்தார். தன் பரிசுத்தக்குமாரனை, வாரியெடுத்து அரவணைத்தபடியே அழுதுகொண்டிருந்தார். தந்தையால் ஒரு வார்த்தை முதலாய் பேசுவதற்குக் கூடாமல் போனது. அவரது தாயார், இன்னும் கூடுதல் வேதனையு டன், அன்பு மகனே! உன்னைக் கண்டுபிடிப்பதற்கு, எனக்கு ஏன் இவ்வளவு காலதாமத மாயிற்று? என்று அலறியபடி, அழுதார்கள். 

சங். மிக்கேல் முல்லர், CSSR : courtesy: Catholic Aug 22,2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக