Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 31 ஜனவரி, 2024

அர்ச். மர்த்தீனம்மாள் - St. MARTINA

சனவரி மாதம் 30-ந் தேதி. க. வே.
அர்ச். மர்த்தீனம்மாள் திருநாள்.
St. MARTINA

ரோமாபுரியில் உயர்ந்த வங்கிஷபதிகளிடத்தினின்று அர்ச். மர்த்தீனம்மாள் பிறந்தாள். அந்தம்மாள் சிறு வயதாயிருக்கையிலே தாய்தகப்பன் இறந்து போனதினாலே அவர்களுடைய ஆஸ்திகளுக்கெல்லாம் அவள் உடையவளானாள். அவளுக்குத் திரவிய மிகுதியும் வயது கொஞ்சமுமாயிருந்தாலும் அவள் ஞான நன்மைகளாகிற புண்ணியங்களை அடைய ஆஸ்திகள் எல்லாவற்றையும் விற்றுப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தாள். பிறகு அந்த நாட்டு இராயனாகிய அலேக்சாந்தரென்கிறவன் கிறீஸ்துவர்களுக்கு விரோதமாய் வேதகலாபத்தை எழுப்பி அர்ச். மர்த்தீனம்மாள் பொய்யான தேவர்களைக் கும்பிட கட்டளையிடுமிடத்தில் அவள் அப்படிக்கொத்த தோஷத்தை நான் ஒருக்காலுஞ் செய்யமாட்டேன் என்றாள். ஆதலால் அந்த இராயனுடைய கட்டளைப்படி யே அப்பொல்லொனென்னும் பொய்த் தேவனை அவள் ஆராதிக்கும்பொருட்டு அவளை அவன் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால் அவள் சிலுவை வரைந்து சேசுநாதரை வேண்டிக்கொண்ட மாத்திரத்தில் பூமி அதிரவே அந்தப் பேய்க் கோவிலில் ஓர் பங்கு இடிந்ததினாலும் அந்தப் பொய்த் தேவனுடைய விக்கிரகந் துண்டு துண்டாய் உடைந்து விழுந்ததினாலும் அவனுடைய பூசாரிகளும் மற்றனேக பிற மதத்தினரும்  கொல்லப்பட்டார்கள். இரண்டு முறை அவளை நிஷ்டூரமாய் அடித்தார்கள்.

 அதன் பிறகு இருப்புச் சீப்பினாலே அவளுடைய தோத்தின் மாமிச மெல்லாம் பீறி வகிர்ந்து அவளுடைய காயங்களுக்குள்ளே கொதித்திருந்த எண்ணெய்யையும் நெய்யையும் ஊற்றினார்கள். அந்தம்மாள் அந்த நிஷ்டூர கொடுமைகளால் மிகவும் வாதைப்பட்டிருந்தாலும் பசாசைக் கும்பிடாத படிக்கு அந்த வேதனைகளைப் பொறுமையோடே அநுபவித்தாள். அதற்குப் பிறகு சிங்கம் புலி முதலான துஷ்ட மிருசங்கள் அடைக்கப்பட்டிருக்கிற வாடியிலே அவளைத் தூக்கிப்போட்டார்கள். ஆனால் அந்த மிருகங்கள் புதுமையாக அவளைத் தொடவில்லை. ஓர் துஷ்ட சிங்கம் அவளுடைய பாதத்திலே படிந்து ஓர் நாய்க்குட்டியைப்போல அவளுடைய காயங்களை நக்கினது. ஆனால் அதை மறுபடி அதின் கெபியிலே கூட்டிக்கொண்டு போகிறபோது இராயனுடைய பந்துக்களில் ஒருவனைக் கொன்று போட்டது.

பின்னும் அவளை நெருப்பிலே தள்ளினாலும் நெருப்பும் புதுமையாக அவளைச் சுடவில்லை. இப்படிக்கொத்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டவர்களில் அநேகர் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய ஞானப்பிரகாசத்தைக் கொண்டு கிறீஸ்துவர்கள் வேதம் மெய்யான
வேதமென்று சொல்லிச் சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தலைகொடுத்து வேதசாட்சிகளானார்கள்.

அர்ச், மர்த்தீனம்மாளின் வேண்டுதல் பலத்தினாலே பூமி நடுங்கிற்று. ஆகாசத்திலேயிருந்து மகா சத்தத்தோடே நெருப்பு சுட்டிகட்டியாய் கட்டிக் விழுந்து பசாசின் கோவில்களும் இடிந்து அதிலிருந்த பேய்ச் சுரூபங்களும்   இடிந்து  வானத்தினின்று பெய்த நெருப்பினால் எரிந்து நொறுங்கிப் போயிற்று. அந்தம்மாள் சரீரத் திலுள்ள காயங்கள் வழியாக மிகுதியான இரத்தத்தோடே பாலுங் கூடப் புறப்பட்டது. அவளுடைய சரீரத்தில் நின்று மிகுந்த பிரகாசமும் நல்ல வாசனையும் வீசப்பட்டது. அவள் பூமியைவிட்டு உயரப் பத்திராசனத்திலிருந்து மோட்சவாசிகளோடே கூடத் தேவதோத்திரம் பண்ணுவதாகக் காணப்பட்டாள். இத்தனை ஆச்சரியமான காரியங்களெல்லாம் அந்த இராயன் கண்டு அல்லது கேட்டிருந்தாலும் அவளை விட்டுவிடாமல் தலையை வெட்டச்சொன்னான்.

தலையை வெட்டினவுடனே ரோமாபுரியெல்லாங் கிடுகிடென நடுங்கினதுமல்லாமல் மர்த்தீனென்கிறவளே மோட்சத்திற்கு வாவென்கிற சத்தமும் ஆகாசத்திலே கேட்கப்பட்டது. இந்த அற்புதங்களெல்லாம் கண்டவர்களுக்குள்ளே அநேகம் பேர் சர்வேசுரனுடைய வேதத்தை விசுவசித்துப் பற்றிக்கொண்டார்கள்.
கிறீஸ்துவர்களே! வழி தப்பி நடக்கிறவன் சூரியன் உதயமான பிறகு நல்ல பாதையைக் கண்டு அதை அநுசரிக்கிறாப்போலே ஞானச் சூரியனாய் விளங்கின இந்தம்மாள் சரித்திரத்தைக் கேட்ட நீங்கள் அந்தம்மாள் நடந்த  புண்ணிய வழியை ஆவலாய்க் கண்டு அநுசரிக்கவேண்டும். அதெப்படியென்றால் அர்ச். மர்த்தீனம்மாள் தம்முடைய ஆஸ்தியைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கிறபோது தன் ஆசையெல்லாம் அழியாத நன்மையின் பேரிலே வைத்தகேயல்லாமல் அழிந்துபோகிற நன்மையின் பேரிலே வைக்கவில்லை யென்று காண்பித்தாள். அவ்வாறே நீங்கள் பூலோக நன்மைகளை அபேட்சியாமல் பிச்சை முதலான புண்ணியங்களின் பேரிலே தாற்பரியம் வைக்கவேண்டும். சிலபேர் திரவியத்தைக் கனமாகவும் பிச்சை முதலான புண்ணியங்களை அற்பமாகவும் எண்ணுகிறார்களென்று அறிந்திருக்கிறோம். இவர்கள் மோசம் போகிறதை ஒரு உவமையினாலே வெளியாக்குவோம். மொனோமொத் தப்பாவென்கிற இராச்சியத்தார்களுக்குள்ளே சிலர் தங்கள் நாட்டிலுண்டான திரளான பொன்னைச் சட்டைபண்ணாமல் ஒரு சாயச்சேலைத் துண்டு வாங்க வெகு பொன் கொடுப்பார்கள். இதை நீங்கள் கேட் கிறபோது சேலைத் துண்டு கொஞ்ச நாளிலே கிழிந்துபோம். பொன் வெகு காலம் இருக்குமென்று நினைத்து அவர்களைப் பைத்தியக்காரனென்று  சொல்லுவீர்கள், அப்படியே பொன் முதலான உலக நன்மைகளும் அழிந்து போகிறதல்லாதே சாகிறபோது அவைகளில் அற்பமாகிலுங் கொண்டு போகக் கூடாது. பிச்சை முதலான புண்ணியங்களோவெனில் அழிந்து போகாமல் மனிதன் சாகிறபோது கூடவரும். ஆதலால் உலக நன்மைகளைக் கனமாகவும் பிச்சை முதலிய புண்ணியங்களை அற்பமாகவும் எண்ணுகிறவர்கள் பைத்தியர்தானே. அவர்களைப் பிடித்த பைத்தியம் அவர்களுக்கு இப்போது தோன்றாதிருந்தாலுஞ் சாகிற சமயத்திலே பெரிதாய்த் தோன்றும். ஆனால் மரணத்துக்குப் பின்பு மாத்திரந் தெளிவது தீராத கஸ்தி வேதனை கொடுப்ப தொழியப் பிரயோசனமாயிராது. பின்னையும் அர்ச். மர்த்தீனம்மாளிடத்திலே சம்பவித்த புதுமைகளைப் பிறமதத்தினர் கண்டு சேசுநாதருடைய வேதம் மெய்யான வேதமென்று நிச்சயித்துப் பேய் ஆராதனையை விட்டுச் சத்திய வேதத்துக்கு உட்பட்டார்களென்று கேட்டீர்களே; அந்த அம்மாளிடத்திலே சம்பவித்த இத்தனை புதுமைகளைக்கேட்டு நீங்கள் அவள் அநுசரித்த வேதமே மெய்யான வேதமென்று உறுதியாய் நம்பி அதிலே நீங்கள் தேவகிருபையாற் சேர்ந்திருக்கிறதின் பேரிலே மிகுந்த சந்தோஷப்பட்டு அதைப் பத்தியோடே அநுசரிக்க வேண்டும். அந்தம்மாள் பெண்பிள்ளை யாயிருந்தாலும் பொய்யான தேவனாகிய பசாசைக் கும்பிடாதபடிக்கு மிகுந்த பிரியத்தோடே வெகு கொடூரமான வேதனைகளை அநுபவித்தாள்.

இப்படியிருக்க நீங்கள் கொஞ்ச அடிகளுக்கஞ்சி அல்லது கொஞ்ச இலாபத்தை விரும்பிப் பசாசுக்கு ஊழியஞ் செய்யலாமோ? உங்களைத் துண்டு துண்டாய் வெட்டினாலும் அர்ச். மர்த்தீனம்மாளைப் போலே வேதத்தில் தைரியமாயிருக்க வேண்டும். சர்வேசுரன் தம்முடைய வேதத்துக்காக மர்த்தீனம்மாள் உயிரைக் கொடுத்ததைப்பற்றி அவளுக்கு ஞான சந்தோஷ இன்பத்தைக் கொடுத்து அவள் முகாந்தரமாக மிகுந்த நன்மைகளைப் பண்ணி அவளை வெகு மகிமைப்படுத்திப் பரலோகத்தில் அவளுக்கு அளவில்லாத பாக்கியத்தைத் தந்தருளினார். சில சேவகர் தங்கள் இராசாவுக்காகச் சண்டையிலே காயம்பட்டாலுஞ் செத்தாலும் அநேகம் விசை இராசா அவர்களுக்கு வெகுமானம் பண்ணாதிருப்பது மன்றி, இன்னான் இன்னான் தனக்காகக் காயம்பட்டான், செத்தானென்று முதலாய் அறியாதிருப்பான். இத்தகைய குறை ஆண்டவரிடத்தில் வராது. தமக்காக வாதை உபத்திரியப்படு கிறவர்களுக்குந் தமது தோத்திரத்துக்காகப் பிரயாசைப்படுகிறவர்களுக்குஞ் சர்வேசுரன் உதாரமாய் வெகு பலனைக் கொடுப்பாரென்கிறதினாலே அப்படிக்கொத்த நல்ல சுவாமிக்கு நீங்கள் பிரமாணிக்கத்துட னே நல்ல ஊழியஞ் செய்து அவருக்குப் பிரியப்படப் பிரயாசைப்பட வேண்டும்.

St. Martina Life History

The daughter of an ex-consul and orphaned at an early age, she was described as a noble and beautiful virgin. She so openly testified to her Christian faith that she could not escape the persecutions under Severus Alexander. Arrested and commanded to return to idolatry, she refused, whereupon she was subjected to various tortures and was finally beheaded.

These tortures according to her vita include being scourged. She was condemned to be devoured by wild beasts in the amphitheater but was miraculously untouched by them. She was then thrown onto a burning pyre, from which she also escaped unhurt, and was finally beheaded. Her hagiography asserts that some of her executioners also converted to Christianity and were themselves beheaded.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக