Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 6 ஜனவரி, 2024

சேசுசபையை உண்டாக்கின அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார் (St. Ignatius of Loyalo)

 திருநாள் ஜூலை 31ம் தேதி.



ஸ்பெயின் நாட்டில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த உத்தம கத்தோலிக்க கிறிஸ்துவ பெற்றோர்களுக்கு மகனாக அர்ச்.இஞ்ஞாசியார் 1491ம் வருடம் பிறந்தார். இஞ்ஞாசியார் மேல் அந்நாட்டின் அரசன் மிகவும் பிரியமாயிருந்ததினால் அரண்மனையில் இருந்த அரச அலுவலர்களிடையே அவர் மிகுந்த மகிமையுடன் திகழ்ந்தார். இராணுவத்தில் சேர்ந்து வீர தீரச் செயல்கள் புரிந்து புகழ்பெற்றார். "பாம்பலோனா" என்ற கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது இவர் கால்முறிபட்டு கடினக் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 அப்போது அவர் அங்கு, அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரத்தை வாசிக்கிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களைப் அனுக்கிரகத்தினாலேயே பின்பற்றி ஜீவிப்பதற்கு தீர்மானித்தார். பிரதான அப்போஸ்தலரான அர்ச்.இராயப்பர் அவருக்குத் தோன்றி புதுமையாக அவருடைய காலைக் குணப்படுத்தினார். மேலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவும் அவருக்குத் தோன்றி, பசாசு அவரை உபாதித்து வந்த கற்புக்கு எதிரான சோதனைகளையும், பாவநாட்டங்களையும் அவரிடமிருந்து அகற்றினார்கள். தேவமாதா செய்த புதுமையினால், அன்றிலிருந்து சாகுமட்டும், அர்ச்.இஞ்ஞாசியார் அத்தகைய சோதனைகளிலிருந்து ஜீவியகாலம் முழுவதும் காப்பாற்றப்பட்டார். தன் அரண்மனை ஜீவியத்தை விட்டு விட்டு, சாங்கோபாங்கமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தைக் கடைபிடிக்கும் பொருட்டு மோன்செராத் என்ற தேவமாதாவின் தேவாலயத்திற்கு தவயாத்திரையாகச் சென்றார். பயணத்தின்போது ஒரு பிச்சைக்காரனுக்கு தன்னுடைய நல்ல உடைகளைக் கொடுத்தார். அவனுடைய தரித்திர உடையை வாங்கி அணிந்து கொண்டார். இத்தரித்திர கோலத்திலேயே தேவமாதாவின் கோவிலுக்குச் சென்றார். தன்னுடைய போர்வாளை தேவமாதாவின் சந்நிதியில் வைத்தார். பிறகு மிகுந்த மனஸ்தாபத்துடன் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்தார். தன் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தினார். தன் ஜீவியகாலம் முழுவதும் கற்புநிறை விரத்தனாயிருப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்தார். நித்தியத்திற்கும் தேவமாதாவின் சொந்த அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். பரிசுத்த கற்புநிறை விரதத்துவ ஜீவியம் தனக்குக் கிடைக்கும்படி ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தேவமாதாவின் சுரூபத்தின்முன் அழுதுகொண்டே மன்றாடிக் கொண்டிருந்தார். அந்த தயைமிகுந்த திவ்ய மோட்ச இராக்கினி அவருடைய மன்றாட்டை ஏற்றுக் கொண்டதினால் அவர் பெரிய அர்ச்சிஷ்டவரானார். அதன்பிறகு இஞ்ஞாசியார் வியாகுலமாதாவின் சுரூபத்தை தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். அநேக ஆபத்துக்களிலிருந்து வியாகுல மாதா தன்னைக் காப்பாற்றினார்கள் என்று அவரே வெளிப்படுத்தினார்.
மன்ரேசா என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளுக்கும் தரித்திரர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார். கடின தபசும் அனுசரித்து வந்தார். ஆனால் அவ்வூர் மக்கள், தரித்திர கோலத்தில் இருந்த போதிலும் அவர் ஒரு உயர்குடிமகன் என்று அறிந்து அவருக்கு மிகவும் சங்கை மரியாதை செய்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு உடனே, இஞ்ஞாசியார் ஊரை விட்டு வெளியேறி, அருகிலிருந்து மலைக்குகைக்குச் சென்று மறைந்து ஜீவித்தார். நேச ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அவர் அங்கு மிகுந்த கடினமான தபசுகளை அநுசரித்து வந்தார். பிச்சையெடுத்தே உண்டு வந்தார்.

 ஞாயிற்றுக் கிழமைதவிர மற்ற நாட்களில் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உட்கொண்டு ஒருசந்தியிருப்பார். நித்திரையை மிகவும் ஒறுத்துக் குறைப்பார். காயம் வருத்துவிக்கிற இரும்புமுள் ஒட்டியானத்தையும் மகா வேதனை வருத்துவிக்கிற சங்கிலியையும் இடுப்பிலே கட்டிக் கொள்வார். தினமும் தன் சரீரத்தை இரத்தம் புறப்படுகிறவரை அடித்துக் கொள்வார். இவ்வாறாக ஒருவருட காலம் அந்த "மன்ரேசா" குகையிலே கடின தபசு செய்தார்.

அப்படி ஒரு தபசில் ஈடுபட்டிருந்தபோது, விசேஷ தெளிவும் ஞான வெளிச்சமும் அடைந்து ஆண்டவராலே பிரகாசிக்கப்படுகிற போது வெகு ஆனந்தத்தை அவர் அனுபவித்ததுமல்லாமல் மேலான உன்னதமான உணர்ச்சிகள் அவருக்கு உண்டாயிற்று. இதைப்பற்றி குறிப்பிடுகையில் அவர், "அந்தக் குகையில் பரிசுத்த வேதாகமங்கள் இல்லாமல் போனாலும், ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தின வேதகாரியங்களைப் பற்றி மாத்திரம், வேதத்திற்காக என் உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறினார். அர்ச். பரமதிரித்துவ இரகசியத்தை அவர் தரிசனமாகக் காட்சி கண்டார். தேவமாதாவும் அநேகமுறை அவருக்கு அக்குகையில் தோன்றினார்கள்.
அப்போது அதுவரை கல்வி சாஸ்திரங்களைப் படியாமல் இருந்த இஞ்ஞாசியார், அந்தக் குகையிலே "ஞான தியான பயிற்சிகள்" என்ற ஞானதியானத்திற்குரிய ஆச்சரியமான புத்தகத்தை எழுதினார். ஞானத்துக்கு இருப்பிடமான தேவமாதாவே அப்புத்தகத்தை அவர் எழுதும்படிச் செய்தார்கள். அத்தியானங்களின் வழியாக அர்ச்.இஞ்ஞாசியார் வெகு பக்தி சுறுசுறுப்பும் அடைந்ததுமல்லாமல் எண்ணமுடியாத அநேக ஆத்துமங்கள் அப்புத்தகத்தினால் ஞான நன்மையடைந்தன. பாப்பரசர் அதனால் ஏற்படும் ஞானநன்மைகளின் பொருட்டு, உடனே அப்புத்தகத்தை அங்கீகரித்தார். ஆத்துமங்களை இரட்சிக்க கல்வி சாஸ்திரம், முக்கிய தேவை என்று தீர்மானித்த அர்ச். இஞ்ஞாசியார் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் தனது 30வது வயதில் சேர்ந்து கல்வி பயின்றார். அதற்குள்ளாக தான் உண்டாக்கின ஞான தியானங்களைக் கொண்டு அநேக பாவிகளை மனந்திருப்பினார். அதனால் காய்மகாரம் கொண்ட பசாசினாலேயும், மனந்திரும்பாத பாவிகளினாலேயும் அவருக்கு வந்த உபாதைகளுக்குக் கணக்கில்லை. அவரை மாயவித்தைக்காரன் என்று சொல்லி விலங்கிட்டு காவலிலே வைத்தார்கள். ஒருசமயம் பாவிகள் அவரைக் கொடூரமாய் அடித்ததினால் அவர் நினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தார்.
ஒரு பாவியை மனந்திருப்புவதற்காக பனிஉறைந்திருக்கிற ஆற்றுத்தண்ணீரிலே வெகுநேரம் நின்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட கடின அவஸ்தையையும் சட்டைபண்ணாமல் பாவியின் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு மிகப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். இஞ்ஞாசியார், தன் நல்ல நேச ஆண்டவரான சேசுநாதர்பேரில் கொண்டிருந்த சிநேகத்தின்பொருட்டு அளவற்ற ஜெருசலேமுக்கு திருயாத்திரையாகச் சென்றார். அங்கிருந்த திவ்ய கர்த்தர் பாடுபட்ட ஸ்தலங்களுக்கு சென்று அவற்றை, மகா உருக்கத்துடனும்அழுகையுடனும் சேவித்தார்.

இஞ்ஞாசியார் தவயாத்திரையை முடித்துக் கொண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி சாஸ்திரங்களைப் பயின்றார். அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களான இளைஞர்கள் சிலரைக் கொண்டு ஒரு துறவற சபையை உருவாக்க திட்டமிட்டார். தனது ஞானதியானங்களின் வழியாக அவர்களை ஞானஒடுக்கம் செய்ய வைத்தார். அதன்விளைவாக அவ்விளைஞர்கள் பக்தி சுறுசுறுப்புள்ளவர்களானார்கள். அர்ச். பிரான்சிஸ் சவேரியாரும் அந்த இளைஞர்களில் ஒருவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றினார். உலக மகிமையைத் தேடி தீவிரமாக அவர் அலைந்தபோது தான் இஞ்ஞாசியார் அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவராக சேர்ந்தார்.
 "ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் அதனால் அவனுக்கு என்ன பயன்" என்ற சுவிசேஷ வார்த்தைகளின் போதனையைக் கொண்டு அர்ச்.இஞ்ஞாசியார் யார் அவரை மனந்திருப்பியிருந்தார். அந்த இளைஞர் களுடன் இஞ்ஞாசியாரும் சேர்ந்து 7 பேராக வேதசாட்சிகளின் இராக்கினியான தேவமாதாவின் தேவாலயத்திற்குச் சென்று கற்பு, கீழ்படிதல், தரித்திரம் என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் கொடுத்து இஞ்ஞாசியார் தொடங்கவிருந்த சந்நியாச சபைக்கு அஸ்திவாரமிட்டனர்.

 இஞ்ஞாசியார், தன் படிபபை முடித்ததும், குருப்பட்டம் பெற்றார். நம் ஆண்டவர் மேல் அவர் வைத்திருந்த அளவில்லாத நேசத்தின் பொருட்டும், தாழ்ச்சியினிமித்தமும், இஞ்ஞாசியார், தனது சபைக்கு "சேசுசபை" என்று பெயரிட்டார். பிறகு, ரோமாபுரிக்குச் சென்று தனது சபைக்கு பாப்பரசரிடத்தில் அங்கீகாரம் பெற்றார். பிறகு தன் சபையார் மூலம் சத்தியவேதம் போதிக்கவும் அப்பொழுதுதான் திருச்சபையை உலகெங்கும் சீர்குலைக்கும்படியாக தோன்றியிருந்த புரோட்டஸ்டான்ட் பதிதங்களை நிர்மூலம் பண்ணவும் கிறிஸ்துவர்களை சாங்கோபாங்கத்தின் சுகிர்தநெறியில் திருப்பவும் வேண்டிய அலுவல்களில் ஈடுபடலானார். சிந்துதேசமான இந்தியாவிற்கு அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தலைமையில் சில குருக்களை அனுப்பி அங்கு சத்திய வேதத்தைப் போதிக்கச் செய்தார். தேவபராமரிப்பினால் சேசுசபை உலகெங்கும் வெகுவிரைவாக பரவி ஆங்காங்கே சத்தியவேதம் போதிக்கப்பட்டது. “எல்லாம் சர்வேசுரனுடைய அதிமகிமைக்காக" A.M.D.G (AD MAJOREM DEI GLORIAM) என்பதையே விருதுவாக்காகக் கொண்டு இஞ்ஞாசியாரால் நிறுவப்பட்ட சேசுபையால் உலகம் முழுவதிலும் இருந்த அஞ்ஞானத்துக்கும் பதிதங்களுக்கும் குறிப்பாக லுாத்தரன் என்ற பதிதத்திற்கும் பசாசின் இராஜ்யங்களுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது.
கிறிஸ்துவர்களிடையே தாழ்ந்து குளிர்ந்து போயிருந்த பக்திபற்றுதலை மறுபடியும் தூண்டி உயர்த்தும்படியாக அர்ச். இஞ்ஞாசியார் வெகுவாய் உழைத்தார். தேவாலயங்களை புதுப்பித்து வேதத்தைக் கடைபிடியாதவர்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கிறதும், ஞானபிரசங்கங்கள் கொடுப்பதும், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக ஆத்தும சுத்தம் பண்ணி திவ்ய நற்கருணை பந்திக்கு கிறிஸ்துவர்களை ஆயத்தம் செய்வதுமான பல்வேறு ஞான காரியங்களெல்லாம் அர்ச். இஞ்ஞாசியாராலே எங்கும் முக்கியமாக புண்ணிய பழக்க வழக்கங்களாக அனுசரிக்கப்படலாயின. இஞ்ஞாசியாரின் கட்டளையின்படி சேசுசபையார் அனைவரும் உலகெங்கும் பல நாடுகளில் மடங்களைக் கட்டி இளைஞர்களுக்கு இலவசமாக கல்விக் கற்பித்தனர். வேதசாஸ்திரங்களில் அவர்களைப் பயிற்றுவித்தனர்.
சேசுசபையில் உட்படும்படியாக ஏராளமான இளைஞர்கள் முன் வந்தனர். ஜெர்மனி தேசத்திலிருந்து சேசுசபையில் சேர்வதற்காக வந்த ஏராளமான அரசகுலத்தைச் சேர்ந்த ஆண்களுக்காக ரோமாபுரியில் ஒரு பெரிய குருமடத்தை நிறுவினார். அங்கு மற்ற நாடுகளினின்று வரும் இளைஞர்களுக்கும் வெவ்வேறு சிறு மடங்களையும் கட்டினார். திருமணமாகியும் இல்லறத்தில் ஈடுபடாமல் போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பரிசுத்த கற்பைக் காப்பாற்றும்படியாகவும் அவர்கள் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் ஜீவிப்பதற்காகவும் அவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை ஏற்படுத்தினார். மேலும், அனாதை பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் ஞான உபதேசம் கற்பவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை நிறுவினார்.
 திருச்சபையிடமிருந்தும், பல்வேறு உபகாரிகளின் உதவியினாலும் இஞ்ஞாசியார், தான் நிறுவிய எல்லா மடங்களையும் போஷித்து வந்தார். பசாசுகளை ஓட்டுவதிலே இஞ்ஞாசியார் எவ்வளவுக்கு வல்லமை வாய்ந்தவரென்றால் அவருடைய உருவத்திற்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் பயந்து பசாசுகள் ஓடின என்பதை அவருடைய சபைக்குருக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தேவசிநேகத்தின் சுவாலை அவருடைய இருதயத்திலே அடிக்கடி கொளுந்து விட்டு எரியும். அப்போதெல்லாம் அவர் அடைந்த ஞான சந்தோஷத்தினாலே தன் இரு கண்களும் குருடாகும் அளவிற்கு வெகுவாய் கண்ணீர் விடுவார்.

அவர் திவ்யபலிபூசை நிறைவேற்றும்போது தேவசிநேக சுவாலை அவருடைய இருதயத்தில் மிகுதியாக கிளம்பினதால், திவ்யபலிபூசை முடிந்தவுடன் நடக்கக்கூட முடியாதபடிக்கு மிகவும் பலவீனமாகி சோர்ந்து போவார். அப்போது அவரை அவருடைய அறைக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். அவர் தியானத்தில் இருக்கும்போது அநேகமுறை பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை இஞ்ஞாசியார் அவ்வாறு ஒன்றும் சாப்பிடாமலும், பேசாமலும் 8 நாட்கள் தொடர்ந்து பரவசநிலையிலேயே இருந்தார். ஒருசமயம் இஞ்ஞாசியார் ரோமாபுரிக்கு போகிறபோது நம் ஆண்டவர் சிலுவை சுமந்த பிரகாரமாக அவருக்குக் காட்சி தந்து, "நாம் உனக்கு ரோமாபுரியில் பிரசன்னமாயிருப்போம்" என்றார். அன்றிலிருந்து இஞ்ஞாசியாரின் முகத்தைச் சுற்றிலும் ஒளிக்கதிர் புதுமையாக வீசுகிறதை அர்ச். பிலிப் நேரியார் முதலிய சிலர் கண்டனர். அர்ச். சவேரியார் இஞ்ஞாசியாரை மிகவும் சங்கை செய்தவராதலால் அவருக்குக் கடிதம் எழுதும்போது முழங்காலில் இருந்து எழுதுவார். அவரை அர்ச்சிஷ்டவரென்றே அழைப்பார். வேறுபெயரினால் அழைக்கமாட்டார். அர்ச்.இஞ்ஞாசியார் எழுதிய கடிதத்தின் இறுதியில் இருந்த அவருடைய கையொப்பத்தை சவேரியார் கத்தரித்து எடுத்து அதை ஒரு அர்ச்சிஷ்ட பண்டமாக தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் சவேரியார், அவருடைய கையொப்பத்தை நம்பிக் கொண்டு பூமியிலேயும் கடலிலேயும் யாதொரு பயமுமின்றி பயணம் செய்யலாம். மேலும் நான் புண்ணியத்தில் உயர்வதற்கும் என்னுடைய வழியாக சிந்துதேசத்தாருக்கு வருகிற ஞான நன்மைகள் எல்லாவற்றிற்கும் அர்ச். இஞ்ஞாசியாருடைய புண்ணியங்கள் காரணமாயிருக்கின்றன. அவர் மகாபெரிய அர்ச்சிஷ்டவர்” என்றார்.

 அர்ச். இஞ்ஞாசியார் வாக்குக்கெட்டாத பக்திசுறுசுறுப்போடே புண்ணிய ஜீவியம் ஜீவித்தார். 65வது வயதில் அவஸ்தைபட்டு அர்ச்சிஷ்டவராக மரித்தார். அவரால் திருச்சபைக்கு விளைந்த திரளான ஞான நன்மைகளையும் அவர் செய்த எண்ணற்ற புதுமைகளையும் கண்ட 15ம் கிரகோரியார் பாப்பரசர் இஞ்ஞாசியாருக்கு 1622ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் அளித்தார். தேவமாதாவின் கட்டளையின்படியே அர்ச். இஞ்ஞாசியார் ஒருதடவை உலகிற்கு வந்து அப்போது ஜீவித்துக்கொண்டிருந்த அர்ச். பாசி மரியமதலேனம்மாளுக்கு தாழ்ச்சி என்ற புண்ணியத்தின்பேரிலே ஞான பிரசங்கம் செய்தார். சேசுசபை என்ற இந்த மாபெரும் உன்னத சந்நியாச சபையினாலே இதுவரைக்கும் உண்டான மகாத்துமாக்களான அர்ச்சிஷ்டவர்களும் வேதசாஸ்திரிகளும் எவ்வளவு பேர் என்றும் இதனால் உலகிற்கு விளைந்த ஞான நன்மைகள் எவ்வளவு என்றும் மனிதரால் சொல்லமுடியாது. சம்மனசுக்குரிய உயர்ந்த புத்தியும் வார்த்தையும் தான் அந்த ஞானநன்மைகளைப்பற்றி விவரிக்கக்கூடும். A.M.D.G.t

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக