Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

அர்ச். ஆகத்தா - St. Agatha, February 5

அர்ச். ஆகத்தா (பிப்ரவரி 05
கன்னிகை, வேதசாட்சி



நிகழ்வு

நம் புனிதை ஆகத்தா கொடுங்கோலனும் காமுகனுமாகிய குயின்டசின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளைச் சிறையில் அடைத்து, பலவாறாக சித்ரவதை செய்து, அவளுடைய மார்புகளை குறடுகளால் சிதைத்து, குற்றுயிராய் போட்டிருந்தான்.

அப்போது அவள் இருந்த சிறையின் கதவுகளைத் திறந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார். அவருடைய கையில் கொஞ்சம் மருந்து இருந்தது. அவர் ஆகத்தாவிடம் வந்து, “அம்மா! உன்னுடைய உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும் காயங்களில் மருந்து தடவிவிடுகின்றேன். இதனால் உன்னுடைய காயங்கள் ஆறி, வேதனை தணிந்து விரைவில் நீ குணம் பெறுவாய்” என்றார். ஆகத்தா அவரிடம், “நான் ஆண்டவருக்காக எத்தகைய பாடுகளை மனமுவந்து ஏற்கத் தயார். தயவுசெய்து நீங்கள் என்னுடலில் மருந்து தடவி, நான் ஆண்டவருக்காக பாடுகள் படுவதை தடுத்து விடாதீர்கள்” என்றார். அதற்கு அந்த மனிதர் அவரிடம், “அம்மா! நான் வேறு யாருமல்ல இயேசுவின் தலைமைச் சீடராகிய இராயப்பர்தான். என்னை இங்கே ஆண்டவர் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவர்தான் என்னை உன்னுடைய காயங்களில் மருந்து தடவி விடச் சொல்லி, விசுவாசத்தில்
 இன்னும் திடப்படுத்திவிட்டு வரச் சொன்னார்” என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்து ஆகத்தா, இராயப்பர் தன்னுடைய காயங்களில் மருந்து தடவ அனுமதித்தாள். இதனால் அவள் மறுநாளே உடல் நலம்தேறி, புதுப்பொழிவு பெற்றாள்.

வாழ்க்கை வரலாறு

காத்தோலிக்க கிறிஸ்தவ நெறியை பின்பற்றவது என்பது இன்றைக்கு இருப்பது போல் அன்று அவ்வளவு சுலபமல்ல, கிறிஸ்தவம் படிப்படியாக வளர்ந்த அந்த தொடக்க காலகட்டங்களில் கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்து வாழ்வது என்பது மிகவும் சவாலான காரியம். அத்தகைய சூழலிலும் ஆண்டவர் இயேசுவை தன்னுடைய ஆண்டவராக, எல்லாமுமாக ஏற்றுக்கொண்டு, அவருக்காக தன்னுடைய உயிரைத் தந்தவர்தான் கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். ஆகத்தா.

ஆகத்தா கி.பி மூன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் (235 -251) பிறந்தவர், இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். அக்காலத்தில் உரோமையை குயின்டஸ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் உரோமைக் கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு, கிறிஸ்துவை வழிபடுகின்றவர்களை எல்லாம் கொடுமையாகச் சித்ரவதை செய்து கொலை செய்தான். இவனுடைய அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாது கிறிஸ்துவின் மீது உறுதியான விசுவாசம் கொண்டு விளங்கியவர்தான் ஆகத்தா.

ஆகத்தா கிறிஸ்துவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறாள் என்ற செய்தி மன்னன் குயின்டசுக்குத் தெரிய வந்தது. எனவே, அவன் படைவீரர்களை அனுப்பி ஆகத்தாவை இழுத்து வரச் சொன்னான். மன்னனின் உத்தரவின்பேரில் படைவீரர்கள் அவரை மன்னனுக்கு முன்பாக இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆகத்தாவை ஒருகணம் பார்த்த மன்னன் அவளுடைய அழகில் மயங்கி, அவளைச் சித்ரவதை செய்ய விரும்பாமல், தன்னுடைய ஆசைக்கு உட்படுத்த நினைத்தான். ஆனால் ஆகத்தாவோ, “நான் ஆண்டவருக்கு என்னையே முழுமையாய் அர்ப்பணித்து விட்டேன். அதனால் யாருக்கும் என்னைத் தருவதாய் இல்லை” என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்தாள். இதனால் மன்னன் அவரை சிறையில் அடைத்து அவருடைய சதையை பிய்த்து எடுத்து பலவாறாக சித்ரவதை செய்தான். அப்படியிருந்தாலும் ஆகத்தா தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் கடும் சினமுற்ற மன்னன் அவரை எரியும் தீயில் போட்டு கொன்று போட்டான்.

ஆகத்தா இறக்கும்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். அப்படியிருந்தாலும் அவர் ஆண்டவர் இயேசுவுக்காக செய்த தியாகம் அளப்பெரியது.

கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

விசுவாசத்திற்கு சிறந்த முன்மாதிரியாய் விளங்கிய அர்ச். ஆகத்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.



ஆண்டவருக்கு முழுமையாய் நம்மை அர்ப்பணித்தல்

அர்ச். ஆகத்தாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எப்படி ஆண்டவருக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார் என்பதுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது.

தன்னுடைய ஆசைக்கு ஆகத்தா இணங்க மறுத்ததும் குயின்டஸ் என்ற அந்தக் காமுகன் அவரை அப்போடிசியா என்ற விலைமகளிடம் அனுப்பி வைத்து, தன்னுடைய மாயவலையில் சிக்க வைக்க நினைத்தான். ஆனால், விலைமகளின் திட்டம் ஆகத்தாவிடம் செல்லுபடியாக வில்லை. மட்டுமல்லாமல் அந்த விலைமகன் ஆகத்தாவிடம் தான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டான். தான் போட்ட திட்டம் கைகொடுக்காததினால் கடும்கோபம் கொண்ட மன்னன் அதன்பிறகு ஆகத்தாவை பலவாறாக சித்ரவதை செய்து கொலை செய்தான். இப்படி எத்தனையோ சோதனைகள், அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஆகத்தா ஆண்டவர் இயேசுவுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்தது நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

அர்ச். ஆகத்தாவின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்த அர்ப்பண உணர்வை, உறுதியான விசுவாசத்தை நமதாக்குவோம். அதன்வழியாக ஆண்டவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக