Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - சாம்பிராணித் தூபம் (Incense)


நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




தேவ ஆராதனை முயற்சிகள் ஆடம்பரச் சிறப்புடன் நடைபெறுவதற்கு அல்லாமல்  செய்பவர்களும், அம்முயற்சிகளில் பங்கடைகிற  சகலரும் பக்தி பற்றுதலில் அதிகரிக்கும்படியாக சடங்குமுறை ஆசாரங்கள் மிகுந்த பிரயோசனமுள்ளவைகள் என்று திருச்சபை எப்போதும் அங்கிகரித்திருக்கிறது.

யாதாமொரு வேத ஆசாரமுறை அல்லது சடங்கு ஆரம்பத்தில் அஞ்ஞானிகளால் அல்லது யூதரால் அனுசரிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்தின்பொருட்டு, அந்த ஆசாரம் அல்லது சடங்குமுறை நாம் அநுசரிக்கத் தக்கதல்லவென்று திருச்சபை விலக்கிவிடுகிறதில்லை. திருச்சபையில் இப்போது வழங்கி வருகிற ஆராதனை ஆசார முயற்சிகளிற் சில மோயிசன் சட்டத்தில் உள்ளவைகள். வேறு சில அஞ்ஞானிகள் அநுசரித்தவைகள். இதனிமித்தம், திருச்சபை விரோதிகள் சிலர் கத்தோலிக்க வேதம் கிறீஸ்தவ அஞ்ஞானம் என்று குறைகூறத் தலைப்பட்டார்கள். இது முழுவதும் தப்பறையானது. ஏனெனில் மனிதன் கடவுளை ஆராதிக்கிற வழிமுறைகளில் அநேக அநுஷ்டானங்கள். கடவுள் மட்டில் மனிதனுக்குள்ள பக்தி பற்றுதலை வெளியரங்கமாய்க் காட்டுபவைகள் என்கிற அளவில், அவைகள் குற்றமற்றவைகள் என்று திருச்சபை  அறிந்து, அவைகளில் சிறந்த சில அநுஷ்டானங்களைத் தனது ஆசாரமுறையில் ஏற்றுக்கொண்டது. அவ்வாறே, தீர்த்தப் பிரயோகம், சுருபங்கள் அணிவது. சாம்பிராணித் தூபம் ஆராதனையில் உபயோகிப்பது. இவை யாவும் ஏற்கனவே யூதர் அல்லது அஞ்ஞானிகள் அனுசரித்தவைகள்தான். இவைகளெல்லாம் பக்திப் பற்றுதலை மூட்டுவதற்குச் சிறந்த சாதனங்கள். இவைகளை உபயோகிப்பதில் அஞ்ஞானம் ஒன்றுமில்லை. ஞானமே முழுவதும் பொருந்தியிருக்கிறது.


சாம்பிராணி, ஆசியாவின் சில பாகங்களில் சாம்பிராணி ஜாதி மரங்களில் உண்டாகும் பிசின். இதைப் பொடித்து நெருப்புக் கங்குகளின் மேல் தூவினால், சுகந்தம் வீசும் வெள்ளை நிறமான புகை கிளம்புகிறது. இந்தப் புகைக்குத் தான் தூபம் என்று பெயர்.

பழைய ஆகமங்களில் இதன் பிரயோகத்தைப்பற்றிய குறிப்புகள் அநேகம் உண்டு. தேவ கூடார ஆலயத்தில், காலை மாலை சாம்பிராணி புகைப்பதற்கென்று ஒரு பீடம் ஏற்பட்டிருந்தது. யாத்திராகமத்தில் அதைக் குறித்துச் சொல்லியிருப்பதாவது: சுகந்த வர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும். எடுத்துப் பொடித்துத் தூளாக்கிக் கூடாரத்துக்கு முன்பாக வைப்பாயாக, இத்தர் சாம்பிராணித் தூபம் மகா பரிசுத்தமானதென்று உணரக்கடவாய். சங்கீதங்களிலும், இசாயாஸ், ஜெரேமியாஸ். மலக்கியாஸ் தீர்க்கத் தரிசனங்களிலும், அர்ச். ஸ்நாபக அருளப்பரின் தந்தையாகிய சக்கரியாஸ் கண்ட காட்சியை எடுத்துரைக்கிற சுவிசேஷ பாகத்திலும் சாம்பிராணித் தூபத்தைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

அஞ்ஞானிகள் தங்கள் ஆராதனையில் அதை உபயோகித்தார்கள் என்பதற்கு ஒளிட், வீர்ஜில் என்னும் புலவர்கள் அத்தாட்சி கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உரோமானருடைய ஆராதனையைப்பற்றி, அந்த வழக்கம் நமது நாட்டிலிருந்துதன் உரோமானருக்குள் பரவிவது என்று சொல்ல நியாயமுண்டு. சூடம், கற்பூரம், இவைகளின் உபயோகம் இக்காலத்திலும் இந்துமத ஆலயங்களில் வெகு சாதாரணம் என்பது நாமே அறிந்த விஷயம். எஜிப்து தேசத்து ஆலயங்களிலும் கல்லறைகளிலும் உள்ள சித்திரங்கள், இப்போது நாம். உபயோகிக்கிற தூபக் கலசங்களைப் போன்ற பாத்திரங்களில் சாம்பிராணியைப் புகைத்து அரசருக்குந் தேவர்களுக்குத் தூபங்காட்டி ஆராதனை செலுத்துவதைக் காட்டுகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் தூபப்பிரயோகம்

எக்காலத்தில் ஏற்பாடாயிற்று என்று திட்டமாய்ச் சொல்ல முடியாது. ஐந்தாம் நூற்றாண்டுக்குமுன் அது பிரயோகிக்கப்பட்டதாகச் சொல்வதற்குக் தீட்டமான அத்தாட்சி இல்லை. ஆயினும் பழைய ஆகமங்களில் அதன் பிரயோகம் வெகு சாதாரணமாய் இருந்ததுபற்றி, கத்தோலிக்கத் திருச்சபையிலும் அது பூர்வீக காலந்தொட்டே வழங்கி வந்திருக்கும் என்று சொல்ல நியாய முண்டு, இது உரோமையிலும் ஐரோப்பாவின் மேற்பாகங்களிலும் ஆரம்பிக்கும் முன்னரே, ரஷ்யாவிலும் கீழ்திசை நாடுகளிலும் வழங்கி வந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. துவக்கத்தில், பூசையில் சுவிசேஷம் வாசிக்கையில் மாத்திரம் தூபம் பிரயோகித்தார்கள். நாளடைவில், பூசையின் வேறு  பாகங்களிலும் இதர ஆராதனை முயற்சிகளிலும் உபயோகிக்க லானார்கள்.

இக்காலத்தில், திருச்சபையின் ஆடம்பர ஆராதனை முயற்சிகளில் தூபம் காட்டுவது முக்கியமான அம்சங்களில் ஒன்றாய் விளங்குகிறது. இலத்தின் ரீதிப்பிரகாரம் தனிப்பூசையில் தூபம் உபயோகிப்பதில்லை. ஆடம்பர அல்லது பெரிய பாட்டுப்பூசையில், பிரவேச கீதத்துக்கு (Introit) முன்னும், சுவிசேஷ ஆரம்பத்திலும், பாத்திரம் ஒப்புக்கொடுத்த பின்னும், எழுந்தேற்ற சமயத்திலும் உபயோகிக்கப்படுகிறது. மரித்தவர்களுக்காகச் செய்யும் பாட்டுப்பூசையில், மேலே கூறின சமயங்களுள் முதல் இரண்டு வேளைகளிலும் உபயோகிப்பதில்லை பலி ஒப்புக்கொடுக்கிற குருவானவருக்கும் பணிவிடை செய்கிற உதவிக் குருக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகத் தூபங்காட்டுவது பாட்டுப்பூசைச் சடங்கில் ஏற்பட்டது. பூசையிலுமின்றி, சுற்றுப்பிரகாரங்கள், ஆசீர்வாதம், மரித்தோர் அடக்கச் சடங்கு முதலியவைகளிலும் தூபம் உபயோகிக்கிறார்கள். ஆட்களுக்கு மாத்திரமல்ல, அருளிக்கங்கள், சுரூபங்கள், படங்கள் முதலியவைகளுக்கும் தூபம் காட்டுவது உண்டு. சில பொருட்களை மந்திரிக்கையிலும் தூபம் உபயோகப்படுகிறது.

தூபங்காட்டுவதின் கருத்து என்ன? இது எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதே. சாம்பிராணி எரிவது. விசுவாசிகளிடம் இருக்கவேண்டிய பற்றுதலுக்கும், அதிலிருந்து கிளம்பும் சுகந்த வாசனை கிறீஸ்தவ புண்ணியத்தின் நறுமணத்திற்கும், மேலே எழும்பும் புகையானது. சர்வேசுரனுடைய சந்நிதானத்துக்கு ஏறிச் செல்லுகிற நமது ஜெபத்துக்கும் அடையாளமாம். அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தில் சொல்லியிருப்பது போல்,அர்ச்சியசிஷ்டவர்களின் ஜெபமாகிய தூபப்புகை சம்மனசுவின் கரத்திலிருந்து சர்வேசுரனுக்கு முன்பாக ஏறிச் சென்றது. தூபங்காட்டுவது மரியாதை வணக்கத்தின் அறிகுறி என்பதே பொதுக்கருத்து. ஆகையால் வெளிர் சிறப்புக்கும் பக்தி பற்றுதலை எழுப்புவதற்கும் சாம்பிராணித் தூபம் சிறந்த சாதனம் என்பதற்குச் சந்தேகமில்லை.

ஆண்டவரே என் விண்ணப்பம் தீபத்தூபமாகவும், என் கைகளை ஏந்துதல் அந்திப் பலியாகவும் உமது சமூகத்தில் ஏறக்கடவது (சங். 140:2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக