Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 27 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - தீர்த்தம் (Holy Water)

தீர்த்தம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

Sancta Maria, 2012 September-October issue


எப்பொருளையும் சுத்தஞ் செய்வதற்கு இயற்கையில் ஏற்பட்டது தண்ணீரே. இதனிமித்தமே அது உட்சுத்தத்துக்கு அடையாளமென்று சகல மதத்தினராலும் கருதப்படுவது ஆச்சரியமன்று. கிரேக்கரும் உரோமானரும் தங்கள் வேத சடங்குகளில் தண்ணீர் தெளிப்பதை ஓர் முக்கிய அம்சமாக அனுசரித்து வந்தார்கள். சுற்றுப்பிரகாரங்களின் போது, அதைக் கொண்டுதான் பட்டணங்களைச் சுத்திகரித்தார்கள். வயல்களில் பயிரிடுவதற்கு முன், அவைகளைத் தீர்த்தத்தால் தெளிப்பது வழக்கமாயிருந்தது. படைவீரர் யுத்தகளத்துக்குச் செல்லுமுன், தேவர்களின் ஆதரவை அடையும்படி தீர்த்தத்தால் தெளிக்கப் பெற்றார்கள். எஜிப்தியர்களுக்குள் தீர்த்த உபயோகம் வெகு சாதாரணமாயிருந்தது. அவர்களுடைய குருக்கள் ஒவ்வொரு பகலும் இரவும் இருமுறை அதில் ஸ்நானம் செய்ய வேண்டியிருந்தது. நமது நாட்டிலும் இவ்வழக்கம் பிறமதத்தினருள் இருந்து வருவதை அறிவோம். யூதருடைய பலிபொருட்களும் திருப்பாத்திரங்களும் பிரஜைகளுமே தீர்த்தம் தெளிக்கப்பட வேண்டும் என்பதைப்பற்றிய சட்ட திட்டங்கள் யாத்திராகமத்திலும், லேவியர் ஆகமத்திலும் காணக்கிடக்கின்றன.

பழைய ஆகமங்களினின்றே, திருச்சபையில் இப்போது வழங்கி வருகிற தீர்த்தத்தைப் பற்றிய சடங்கு முறைகளில் அநேக அம்சங்கள் தெரிந்து கொள்ளப்பட்டன என்பதற்குச் சந்தேகமில்லை. திருச்சபையில் தீர்த்தத்தின் உபயோகம் அப்போஸ்தவர் காலந் தொட்டே வழங்கி வருகிறது என்று சொல்லக் காரணமுண்டு. யூதர்களுடைய அநுஷ்டானத்தில் ஏற்கனவே இருந்த இந்தச் சடங்கை, அவர்கள் மனந்திரும்புவதற்கு ஓர் தூண்டுதலாக, அர்ச், மத்தேயு, கிறீஸ்தவர்களுக்குள் ஏற்படுத்தினார் என்று சிலர் நினைக்கிறார்கள். முதலாவது அலெக்சாந்தர் என்னும் பாப்பானவர் 117-ம் வருடத்தில் எழுதின ஒரு நிருபத்தில் தீர்த்தப் பிரயோகத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறதுமல்லாமல், 4-வது நூற்றாண்டில் திருச்சபை உபயோகித்த ஆசாரமுறைப் புத்தகத்தில் இதைப்பற்றி விரிவாய் எழுதியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில், பெரிய பூசை ஆரம்பிக்கு முன், ஜனங்கள் பேரில் தீர்த்தந்தெளிக்கும் வழக்கம், 4 ம் சிங்கராயர் என்னும் பாப்பானவர் காலத்திலிருந்து (9-ம் நூற்றாண்டு) நடந்துவருகிறது. கோவிலில் கதவண்டை தீர்த்தத்தொட்டி அமைக்கிற வழக்கம் வெகு பூர்வீகமானது. இரண்டாவது நூற்றாண்டிலேயே இது ஏற்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். மத்திய நூற்றாண்டுகளில் விசுவாசிகள் கோவிலில் பிரவேசிக்கையில் மாத்திரம் தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை வரைந்துகொள்வார்கள். கோவிலைவிட்டு வெளியே போகையில் அவ்விதம் செய்ததில்லை. சர்வேசுரனுடைய வீட்டில் பிரவேசிக்கு முன் சுத்திகரஞ்செய்வது அவசியமேயல்லாது, அதற்குப் பின் அவசியமில்லை என்கிற எண்ணம் இந்த வழக்கத்துக்குக் காரணமாகும். ஆனால், இக்காலத்தில் கோவிலில் பிரவேசிக்கும் போதும் வெளியே போகும்போதும் இரு தடவைகளிலும் தீர்த்தம் உபயோகிக்கிறோம். திருச்சபை இதற்குப் பலனைக் கட்டளை யிட்டிருப்பதினால், இவ்விதம் செய்வதே நல்லது.

Holy water font in the entrance of Saint Mary of the Angels Catholic Church Chicago Illinois

நான்கு வகை தீர்த்தம்:

1. ஞானஸ்நான தீர்த்தம்: இது ஞானஸ்நானம் கொடுப்பதற்கு மாத்திரம் உபயோகிப்பது. பெரிய சனிக் கிழமையிலும் இஸ்பிரீத்து சாந்து திருநாளுக்கு முந்தின தினத்திலும் இதை மந்திரிக்கிறார்கள்.

2. அபிஷேகத் தீர்த்தம்: கோவில் அபிஷேகத்துக்கு மேற்றிராணியார் உபயோகிக்கிற தீர்த்தம்

3. பெரிய சனிக்கிழமை தீர்த்தம்: இதிலிருந்துதான் ஞானஸ்நான தீர்த்தம் மந்திரிக்கப்படுகிறது.

4. சாதாரண தீர்த்தம்: இது அவசியமுள்ள போதெல்லாம் மந்திரித்துக் கொள்ளலாம். வீடுகளிலும் கோவில்களிலும் விசுவாசிகளுடைய உபயோகத்துக்காக வைத்திருப்பது இதுவே. ஆகையால் இதையே "தீர்த்தம்" என்று சொல்வது வழக்கம். இதைப்பற்றி விசுவாசிகள் அறிந்திருப்பது அவசியம்.

தீர்த்தம் மந்திரித்தல்:

தீர்த்தம் மந்திரிக்கையில் குருவானவர் சொல்லுகிற ஜெபங்களில் முக்கியமானவை, உப்பின் பேரிலும் தண்ணீர் பேரிலும் சொல்லுகிற பசாசை ஓட்டும் ஜெபங்களேயாகும். நமது ஆதித்தாய் தகப்பன் சர்வேசுரனுடைய கற்பனையை மீறுவதற்குப் பசாசு காரணமாயிருந்ததுமன்றி, மனிதனுடைய உபயோகத்துக்காக ஏற்பட்ட தாபர வஸ்துக்களின்மீதும் அது வல்லமை அடைந்ததாகத் திருச்சபையின் பிதாக்கள் கருதுகிறார்கள். இந்த கணிப்பைப் பின்பற்றி, தேவ ஊழியத்துக்காக யாதாமொரு தாபர பொருளை அர்ச்சிக்க வேண்டியபொழுது, துஷ்ட அரூபியின் வல்லமை அதைவிட்டு நீங்கும்படியாகப் பசாசை ஓட்டும் ஜெபத்தை அதன்பேரில் சொல்ல வேண்டுமென்று திருச்சபை கற்பித்திருக்கிறது.

தீர்த்தம் மந்திரிக்கிற சடங்கில் உள்ள ஜெபங்கள் வெகு நேர்த்தி யானவை. அவைகள், தீர்த்தப் பிரயோகத்தைக் குறிக்குங் காரணங்களை நன்றாய் விளக்கிக் காட்டுகின்றன. உப்பின்பேரில் சொல்கிற ஜெபத்தால், "அதை உபயோகிக்கிற விகவாசிகளுக்கு ஆத்தும சரீர சௌக்கியம் உண்டாகவேண்டு மென்றும், அது தெளிக்கப்படுகிற இடத்திலிருந்து பசாசு அகன்றுபோக வேண்டு மென்றும், அது யார் யாரைத் தொடுமோ அவர்கள் எல்லோரும் அர்ச்சிக்கப்பட்டு, சகலவித அசுத்தத்தினின்றும் சுத்தியடைந்து, அந்தகார அரூபிகளின் வல்லமையினின்று விடுதலை அடைய வேண்டுமென்றும்" சுயஞ்சீவியரான கடவுளை மன்றாடுகிறோம். தண்ணீர்பேரில் சொல்லுகிற ஜெபங்களில், துஷ்ட அரூபிகள் அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவத்தின் வல்லமையால் இவ்வுலகத்தை விட்டு அறவே ஒழியவும், மனுக்குலத்தின்மட்டில் அவைகளுக்கு யாதொரு அதிகாரம் இல்லாமற்போகவும் மன்றாடுகிறோம். பசாசுக்களைத் துரத்தவும் வியாதிகளைக் குணப்படுத்தவும் பயன்படும்படியாகச் சர்வேசுரன் தண்ணீரை ஆசீர்வதித்து, அது தெளிக்கப்படும் இடங்களின்றும் வியாதியும், பசாசின் வலையும் அகன்றுபோகச் செய்யும்படியும் பிரார்த்திக்கிறோம். இதன்பின்னர், குருவானவர் உப்பைத் தண்ணீரில் கலக்கிறார். இறுதியாய், சர்வேசுரன் இந்த உப்பையும் தண்ணீரையும் அர்ச்சித்து, அது எங்கெங்கே தெளிக்கப்படுமோ அங்கங்கே இருந்து சகல துஷ்ட அரூபிகளும் ஓடிப்போக திவ்விய இஸ்பிரீத்துசாந்துவானவர் அவ்விடங்களில் வாசஞ்செய்ய வேண்டுமென்று மன்றாடுகிற ஜெபத்தைச் சொல்கிறார்.

Blessing of Church Bell at Our Lady of Immaculata Church, St. Mary's, USA

உப்பை உபயோகிப்பதின் கருத்து:

சுத்தஞ்செய்வதற்கும் நெருப்பை அணைப்பதற்கும் தண்ணீர் உபயோகப்படுவதுபோல், எந்தப் பொருளும் புழுத்துக் கெட்டுப்போகாதபடி பாதுகாப்பதற்கு உப்பு உபயோகப்படுகிறது. ஆகையால், தீர்த்தத்திலுள்ள தண்ணீர் பாவக்கறைகளை சுத்தஞ் செய்யவும், நமது ஆசாபாசங்களின் தணலை அணைப்பதற்கும் அடையாளமாயிருக்கிறது. உப்பானது, பாவத்தில் நாம் மீண்டும் தவறி விழாதபடி நம்மைப் பாதுகாப்பதற்கு அடையாளமாயிருக்கிறது. அது ஞானத்துக்கு உருவகமாகவும் இருக்கிறது. நமது திவ்விய இரட்சகர் அப்போஸ்தலரை பூமியின் உப்பு என்று அழைத்தார். ஏனெனில், சுவிசேஷ அறிவு அவர்கள் வழியாய் உலகமெங்கும் பரவ வேண்டியிருந்தது. உப்பின் உபயோகம் யூதருக்குள் வழங்கி வந்ததுமன்றி, திருச்சபையிலும் 2-வது அல்லது 3-வது நூற்றாண்டிலேயே அநுசரிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தீர்த்தப் பிரயோகம்:

திருச்சபை எந்தப் பொருளை மந்திரிக்கும்போதும் தீர்த்தத்தை உபயோகிக்கிறது என்று சொல்லலாம். திருச்சபை ஆசாரமுறைப் புத்தகத்தில், நூற்றுக்கணக்கான இதன் பிரயோகத்தைக் காணலாம். மெய்விவாகம், அவஸ்தைபூசுதல், வியாதிக்காரருக்கு நற்கருணை கொடுத்தல், மரித்தோரை அடக்கஞ் செய்தல் ஆகிய இச்சமயங்களிலும் தீர்த்தம் உபயோகிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனங்கள்பேரில் தீர்த்தம் தெளிப்பதற்கு இருவித கருத்து உண்டு. முதலாவது, அது பாவத்தினின்று நம்மைச் சுத்திகரித்து அர்ச்சித்து ஞானஸ்நானத்தை நினைப்பூட்டுகிறது. இரண்டாவது, நாம் காணப்போகிற பூசை நேரத்தில் நேரிடக்கூடிய பராக்குகளை விலக்கவேண்டும் என்று அறிவித்து, அவைகளை விலக்குவதற்கு உதவியாயிருக்கிறது. 

தீர்த்தம் தெளிக்கும்போது, அது ஒவ்வொருவர் பேரிலும் விழ வேண்டுமென்ற அவசியமில்லை. தெளிக்கிற சமயத்தில் அங்கு கூடியிருப்பவர்கள் எல்லோரும் அதன் பலனை அடைகிறார்கள். பராக்கின்றி பக்தியுடன் பூசை காண்பதற்கு இது உதவியாயிருப்பதினால் ஞாயிற்றுக் கிழமை சகலரும் என்பது தெளிவாகிறது.

பூசை துவக்குமுன் தீர்த்தம் தெளிக்கிற சமயத்தில் கோவிலில் இருக்கப் பிரயாசைப்பட வேண்டும் ஒவ்வொருவரும் தனித்தனியே தீர்த்தத்தைத் தொட்டு உபயோகித்துக் கொள்ளும் ஒவ்வொரு தடவையும் நூறு நாட் பலன் அடையலாம். இந்தப் பலனை அடைவதற்கு, பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரிந்துசாத்து வுடையவும் நாமத்தினாலே என்று சொல்லித் தீர்த்தத்தால் சிலுவை அடையாளம் வரைந்துகொள்ள வேண்டியதுமல்லாமல், தன் பாவங்களைப்பற்றி மனஸ்தாபப்படுவதும் அவசியம். கோவில் வாசலண்டையில் இருந்து சற்று நேரம் கவனித்துப் பார்ப்போமானால், அங்கு வருகிறவர்கள் போகிறவர்களில் எவ்வளவு சொற்பப்பேர் இந்த நிபந்தனைகளை அநுசரிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம். எத்தனையோ பேர் ஈயை விரட்டுவதுபோல் ஓர் அடையாளத்தைக் காட்டிவிட்டு போகிறார்கள். தீர்த்தத்தை உபயோகிப்பதினால் பிரயோசனம் இருக்குமென்றாலும், அதற்கு அளிக்கப்பட்ட பலனை அடைய விரும்புகிறவர்கள் மேற்கூறிய நிபந்தனைகளை அனுசரித்தாலொழிய அந்தப்பலனை அடையமாட்டார்கள் என்று அறிந்திருப்பது நல்லது. 

To Read more please click here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக