அர்ச். சிலுவை அருளப்பர்
அர்ச். சிலுவை அருளப்பர், ஏழைகளாகிய கொன்சாலோ, கேட்டலினா தம்பதியருக்கு 1542, ஜூன் 24 அன்று பிறந்தார். அவருக்கு மூன்று வயதானபோது அவரது தந்தையும், இரண்டு வருடம் கழித்து, வறுமையால் அவரது அண்ணனும் இறந்தார்கள். இதனால் அவரது தாய் வேலை தேடி அவரோடும், மற்றொரு சகோதரனான பிரான்சிஸ்கோவோடும் முதலில் ஆரவாலோ விலும், அதன்பின் மெதினா தெல்காம்போவிலும் குடியேறினாள்.
மெதினாவில் பெரும்பாலும் அநாதைக் குழந்தைகள் படித்த ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் அருளப்பர் அடிப்படையான, பெரும்பாலும் வேதம் சார்ந்த கல்வி பெற்றார். இங்கே ஓரளவு உணவும், உடையும், இருப்பிடமும் அவருக்குக் கிடைத்தன. 1563ல் அவர் கார்மெல் சபையில் சேர்ந்து அர்ச். மத்தியாஸின் அருளப்பர் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடத்தில் கார்மெல் துறவியாக முதல் வார்த்தைப்பாடு தந்த அவர், சாலமான்கா பல்கலைக் கழகத்தில் வேதசாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்றார். இதன்பின் ஃப்ரே லூயித லியோன் என்பவரிடம் அவர் வேதாகமப் பாடம் கற்றார்.
அர்ச். அவிலா தெரேசம்மாளின் சீர்திருத்தப் பணியில் இணைதல்
1567ல் குருப்பட்டம் பெற்ற அவரைத் தனி வாழ்வுப் பிரியம், மவுன, காட்சி தியான வாழ்வு ஆகியவற்றைக் கொண்டு, அதிகக் கண்டிப்புள்ள கர்த்தூசிய சபை ஈர்த்தது. 1567 செப்டம்பரில் அவர் ஸாலமான்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்றார். அங்கே தனது இரண்டாவது புதிய மடத்தைத் தொடங்க வந்திருந்த கார்மெல் கன்னிகையான அவிலா தெரேசம்மாளை அவர் சந்தித்தார். அவள் 1432ல் பாப்பரசர் யூஜீனால் தளர்த்தப்பட்டிருந்த "சபையின் தொடக்க கால விதித் தொகுப்பை" அனுசரிக்கும் வாழ்வைப் புதுப்பிப்பதன் மூலம் கார்மெல் சபையின் பரிசுத்த தனத்தை மீண்டும் கொண்டு வர முயன்றுகொண்டிருந்தாள். இந்நிலையில் அவள் தன் திட்டங் களைப் பற்றி அருளப்பரிடம் பேசினாள்.
பண்டைய விதிகளின்படி, கார்மெல் சபையினர் ஒரு நாளின் பெருமளவு நேரத்தைப் பரிசுத்த கட்டளை ஜெபம் சொல்வதிலும், கற்பதிலும், ஞான வாசகங்களிலும், பூசை நிறைவேற்றுவதிலும் காண்பதிலும், தனி வாழ்விலும் செலவிடவும், துறவற குருக்கள் மடத்தைச் சுற்றியிருந்த மக்களுக்கு சுவிசேஷம் போதிக்கவும், இறைச்சியை முழுமையாக விலக்கவும், திருச் சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் முதல் உயிர்ப்புத் திருநாள் வரை நீண்ட கால உபவாசம் கடைப் பிடிக்கவும், நீண்ட மவுன வேளைகள், குறிப்பாக இரவு ஜெபம் முதல் காலை ஜெபம் வரை அனுசரிக்கப்படவும், எளிய, முரடான, குட்டையான அங்கிகள் பயன்படுத்தப்படவும் கால்களை மூடாத காலணிகள் பயன்படுத்தப்படவும் வேண்டியிருந்தது. இதனால் ஒரு வகையில் இந்தச் சபை காலணிகள் அணியாத சபை என்றும் அழைக்கப்பட்டது.
வால்லடோலிட் நகரத்தில் சிறிது காலம் இருந்தபின், அருளப்பர் துருவேலோ என்னுமிடத் திற்குச் சென்று, புனிதையின் கடுந்தவக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு புதிய கார்மெல் துறவற குருக்கள் சபையை 28.11.1568 அன்று ஸ்தாபித்தார். அன்றே புனிதர் தம் பெயரை சிலுவை அருளப்பர் என்று மாற்றிக்கொண்டார். இந்த மடம் சிறியதாக இருந்ததால், அது அருகிலிருந்த மென்செராத அபாயோ என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. துறவற குருக்களின் கல்விப் பயிற்சிக்காக பாஸ்ட்ரானா என்ற ஊரில் புதிய மடம் ஒன்றை ஸ்தாபித்து, புனிதர் அங்கே குடியேறினார்.
1572ல், அவிலாவுக்குச் சென்ற அவர் தெரேசாவுக்கும், அங்கிருந்த 130 கன்னியருக்கும். ஏரான மான விசுவாசிகளுக்கும் ஆன்ம குருவானார். 1574ல் தெரேசாவுடன் ஸ்ெகோவியாவுக்குச் சென்று அங்கு ஒரு புதிய மடத்தைத் தொடங்கியபின், அவிலாவுக்குத் திரும்பி வந்தார். 1577 வாக்கில், தாம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையுண்ட கிறீஸ்து நாதர் அவருக்குக் காட்சி தந்தார். 1641ல் இக்காட்சியைப் புனிதர் ஒரு சித்திரமாக வரைந்தார்.
1575-77 வாக்கில் ஸ்பானிய கார்மெல் துறவற குருக்களுக்குள் தெரேசா மற்றும் அருளப்பரின் கடுந்தவ வாழ்வை அனுசரிப்பதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. 1566 முதல் காஸ்டைலுக்கு ஒருவரும், அந்தலூசியாவுக்கு ஒருவருமாக, அர்ச், சாமிநாதர் சபைத் துறவிகள் இருவர் கார்மெல் மடங்களின்மீது அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். துறவிகளை மடம் மாற்றுவது, மடத்துத் தலைவர்களையும் கூட அவர்களது பதவிகளிலிருந்து விடுவிப்பது போன்ற அதிகாரங்கள் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. காஸ்டைலுக்கு பெத்ரோ பர்னாண்டஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தலூசியாவின் அதிகாரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ வர்காஸ் என்பவர் ஆவார். இவர் மாற்றங்களை விரும்பிய துறவிகளுக்கு ஆதரவாக இருந்ததால் மீண்டும் பிரச்சினைகள் எழ, இதன் விளைவாக, இத்தாலியிலுள்ள பியாசென்ஸாவில் 1576 மே மாதத்தில் கார்மெல் சபையின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆயினும் குழப்பம் கை மீறிப் போகவே, தெரேசம்மாளின் காலணிகள் அணியாத துறவிகளின் மடங்களை அடியோடு மூடி விட உத்தரவிடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் தெரேசம்மாளின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவா யிருந்ததால், இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை. மேலும் பாப்பரசரின் திருத்தூதரும், பதுவையின் ஆயருமான நிக்கோலோ ஆர்மனேட்டோ என்பவரின் ஆதரவும் அவளுக்கு இருந்தது. இவர் தெரேசம்மாளின் வேண்டுகோளின் பேரில், வர்காஸை நீக்கி விட்டு, ஆல்கலா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குருவான எரோனிமோ க்ராஸியன் என்பவரை அந்தலூசியாவின் அதிகாரியாக்கினார். இந்த குரு தாமே தெரேசம்மாளின் சபையைச் சேர்ந்தவ ராசு இருந்தார். 1576ல் மெதினாவில் பாரம்பரிய கார்மெல் துறவிகளால் கைதுசெய்யப்பட்ட அருளப்பர், திருத்தூதரின் தலையீட்டால், விரைவில் விடுவிக்கப்பட்டார். ஆனால் 1577 ஜூன் 18
அன்று ஆர்மனேட்டோ இறந்தபோது, அருளப்பர் பாதுகாப்பின்றி விடப்பட சீர்திருத்தவாதிகளின் கை ஓங்கியது. 1577 டிசம்பர் 2 அன்று, சீர்திருத்தத்தை எதிர்த்து கார்மெல் துறவிகளின் கூட்டம் ஒன்று அவிலாவில் அருளப்பர் தங்கியிருந்த இல்லத்தில் புகுந்து அவரைச் சிறை செய்தது. ஏற்கெனவே சீர்திருத்தத்திற்கு எதிராயிருந்த சபைத் தலைவர்கள் புனிதரை அவிலாவை விட்டு வெளியேறி. தம்முடைய முதல் மடத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களை விட அதிக அதிகாரமுள்ள ஸ்பெயின் திருத்தூதர் தம் சீர்திருத்தத்தை அங்கீகரித்திருந்தார் என்ற அடிப்படையில் புனிதர் இதை ஏற்க மறுத்திருந்தார். கைது செய்யப்பட்ட அருளப்பர், அச்சமயத்தில் 40 துறவிகளோடு காஸ்டைலில் முன்னணி மடமாக இருந்த டொலேடோ கார்மெல் மடத்திற்கு அவரைக் கொண்டு சென்றார்கள்.
அருளப்பரின் வாதங்களை மீறி, அவர் சபைத் தலைவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வில்லை என்று குற்றஞ்சாட்டி, துறவிகளின் "நீதிமன்றம்" அவரைச் சிறையில் அடைத்தது. ஒரு மடத்தில் சிறை வைக்கப்பட்ட அவர் குறைந்தது வாரம் ஒரு முறை கசைகளால் அடிக்கப்படுவது போன்ற சித்திரவதைகளை அனுபவித்தார்; பத்தடிக்கு ஆறடியுள்ள ஒரு மிகச் சிறிய அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அறையில் விளக்கு ஏதும் இல்லாததால், அறைச் சுவரிலிருந்த ஒரு துளை வழியாக வந்த வெளிச்சத்தில்தான் அவரால் கட்டளை ஜெபத்தைச் சொல்ல முடிந்தது. மாற்ற உடையில்லை. தண்ணீரில்லை, அப்பமும், உப்பு மீன் துண்டுகளும் தேவைக்கும் குறைவாகவே கிடைத்தன.
இச்சமயத்தில்தான் அவர் புகழ்பெற்ற ஞான சங்கீதம் என்னும் கவிதைகளை எழுதினார். தேவையான காகிதத்தை அறைக்குக் காவலாயிருந்த துறவி இரகசியமாகக் கொண்டு வந்து தந்தார். தம் அறைக்கு அடுத்த அறையிலிருந்த ஒரு சிறு ஜன்னல் வழியாக 1578 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் தப்பித்துச் சென்றார்.
ஆறு வார மருத்துவ உதவி பெற்றபின் அவர் தம் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். 1578 அக்டோபரில், பாதணிகள் அணியாத கார்மெல் சபையினர் ஆல்மாடாவரில் நடத்திய கூட்டத் தில் அவர் பங்குபெற்றார். மற்ற கார்மெல் துறவியரின் எதிர்ப்பின் விளைவாக, முறைப்படி கார்மெல் சபையினரிடமிருந்து பிரிந்து வாழ தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் பாப்பரச ரிடம் விண்ணப்பித்தார்கள். இந்தக் கூட்டத்தில் அருளப்பர் எல் கல்வாரியோ என்ற மடத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபோது, தம் "ஞான சங்கீதத்திற்கு" உரை எழுதினார்.
1579-ல் அவர் அந்தலூஸியாவின் பாதணிகள் அணியாத துறவிகளுக்கான புனித பேசில் கல்லூரியின் அதிபராகும்படி பேஸா என்ற நகரத்திற்கு மாற்றப்பட்டார். இப்பதவியில் 1582 வரை இருந்தார். 1580ஆம் ஆண்டில், கார்மெல் சபையினரிடையே நிலவிய பிரச்சினைக்குத் தீர்வு பிறந்தது. ஜூன் 22 அன்று பாப்பரசர் 13ஆம் கிரகோரியார் புதிதாய்ச் சீர்திருத்தப்பட்ட பாதணிகள் அணியாத கார்மெல் சபையினரை அதிகாரபூர்வமாகத் தனிச் சபையாக ஆக்கினார். 1581 மார்ச் 3 அன்று ஆல்கலாவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவர் சபைத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1581 நவம்பரில் சேசுவின் ஆனா என்னும் சகோதரி க்ரானடாவில் ஒரு மடத்தை ஸ்தாபிக்க உதவும்படி அருளப்பர் தெரேசாவால் அங்கே அனுப்பப்பட்டார். சகோதரி ஆனா 1582 ஜனவரி யில் அங்கே போய்ச் சேர்ந்து மடத்தை ஸ்தாபிக்க, ஆலாம்பிராவில் இருந்த மடத்தில் அருளப்பர் தங்கியிருந்தார். 1582-ல் அந்த மடத்தில் அதிபராகவும் ஆனார். அவர் அங்கிருந்தபோது, அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தெரேசம்மாள் மரணமடைந்ததை அவர் அறிந்துகொண்டார்.
1585-ல் அவர் அந்தலூசியாவின் மாகாண அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் எல்லா மடங்களையும் சந்திக்கும்படி அதிகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில், இந்தப் பகுதியில் அவர் ஏழு ஆண்கள் துறவற மடங்களை நிறுவினார். இச்சமயத்தில் அவர் சுமார் 25,000 கி.மீ. தூரம் பயணம் செய்தார் என்று மதிப்பிடப்படுகிறது.
ஜூன் 1588-ல் அவர் சபை அதிபர் சுவாமி நிக்கோலஸ் டோரியா என்பவரின் மூன்றாம் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காஸ்டைலின் ஸெகோவியாவுக்குத் திரும்பி வந்தார். ஆனால் டோரியா சபையில் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களை அவர் விரும்பாததால் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, லா பெனுவேலா என்ற மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே நோயுற்று, சிகிச்சைக்காக உபேலாவிலிருந்த மடத்திற்குச் சென்றார். அங்கே உடல் நிலை மோசமாகி, 1591, டிசம்பர் 14 அன்று அக்கி என்னும் தோல் நோயால் அவர் மரணமடைந்தார்.
1675, ஜனவரி 25 அன்று பாப்பரசர் பத்தாம் கிளமெண்ட் அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கினார். 1726 டிசம்பர் 27 அன்று பாப்பரசர் 13-ஆம் ஆசீர்வாதப்பர் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.
புனிதர் எழுதிய முக்கியமான புத்தகங்கள்: "ஞான சங்கீதம், ""ஆன்மாவின் இருண்ட இரவு." "கார்மெல் மலையேற்றம்"ஆகியவையாகும்.
திருநாள்: நவம்பர் 24.
Source: மாதா பரிகார மலர்-/- நவம்பர் - டிசம்பர், 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக