Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

February -4 St. John De Britto - அர்ச். அருளானந்தர்

 பிப்ரவரி 04ம் தேதி

ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவர் அருளானந்தர்


அர்ச்‌.அருளானந்தர்‌ என்று அழைக்கப்படுகிற, அர்ச்‌.ஜான்‌ டி பிரிட்டோ , 1647ம்‌ வருடம்‌, மார்ச்‌ 1ம்‌ தேதியன்று, போர்த்துக்கல்‌ தலைநகர்‌ லிஸ்பனில்‌, அரச குடும்பத்தைச்‌ சேர்ந்த உயர்‌ குலத்தில்‌ பிறந்தார்‌. இவருடைய தந்தை சால்வடோர்‌ டி பெரைரா, பிரேசிலில்‌ போர்த்துக்கல்‌ அரசருடைய பிரதிநிதியாக பொறுப்பேற்றிருந்தபோது, மரித்தார்‌. அருளானந்தர்‌, 1662ம்‌ வருடம்‌ சேசு சபையில்‌ சேர்ந்தார்‌. உலகப்‌ புகழ்‌ பெற்ற கோயிம்பரா பல்கலைக்கழகத்தில்‌ கல்வியை முடித்து விட்டு, இவர்‌, தென்னிந்தியாவிலுள்ள மதுரையை 1673ம்‌ வருடம்‌, அடைந்தார்‌; இது, சேசு சபையினருடைய வேதபோதக அலுவலுக்கான மண்டலத்தைச்‌ சேர்ந்தது. மறவர்கள்‌ நிறைந்த இராமநாதபுரத்தைச்‌ சேர்ந்த பகுதியில்‌, இவர்‌ கத்தோலிக்க வேதத்தைப்‌ போதித்தார்‌.அரசன்‌ இவரை 1684ம்‌ வருடம்‌ கைது செய்து, சிறையில்‌ வைத்தான்‌. பின்னர்‌, நாட்டை விட்டு, இவரை வெளியேற்றினான்‌. இவர்‌ மறுபடியும்‌ 1687ம்‌ வருடம்‌,லிஸ்பனுக்குத்‌ திரும்பினார்‌. இவருடைய நண்பரும்‌ அரசருமான 2ம்‌ பேத்ரோ, இவரைத்‌ தன்னுடனேயே வைத்துக்‌ கொள்ள பெரிதும்‌ ஆசித்தார்‌; இவருக்கு வேதபோதக அலுவல்களுக்கான நிதித்‌ துறையின்‌ அதிபராக பொறுப்பை அளித்தார்‌. ஆனால்‌, 1690ம்‌ வருடம்‌, இவர்‌ இன்னும் 24 புதிய வேதபோதகக்‌ குருக்களுடன்‌, அதே மறவ இராஜ்ஜியத்திற்குத்‌ திரும்பி வந்தார்‌. தமிழ்‌ மொழியைக்‌ கற்று அதில்‌ தேர்ச்சியடைந்தார்‌; தமிழிலேயே ஞான உபதேசத்தைக்‌ கற்றுக்கொடுத்தார்‌. அநேக மறவர்களை கத்தோலிக்கர்களாக மனந்திருப்பினார்‌; மறவ நாட்டில்‌, இவ்விதமாக இவர்‌ மேற்கொண்ட வேதபோகக அலுவலில்‌ அமோக வெற்றியடைந்தார்‌. 

 மறவ இளவரசனான தடியத்தேவனை மனந்திருப்பினார்‌;இவனுக்கு பல மனைவிகள்‌ இருந்தனர்‌.முதல்‌ மனைவியை மட்டும்‌ வைத்துக்‌ கொண்டு மற்ற பெண்களை விலக்க வேண்டும்‌ என்கிற அர்ச்சிஷ்டவரின்‌ அறிவுறுத்தலுக்கேற்ப அவனும்‌ அதே போல்‌ செய்தான்‌. அவ்வாறு விலக்கப்பட்ட ஒரு பெண்‌, அண்டை நாட்டின்‌ அரசனான சேதுபதியின்‌ சகோதரரின்‌ மகளானதால்‌, அந்த அரசன்‌, கிறீஸ்துவர்களை உபாதிக்கலானான்‌. அர்ச்‌அருளானந்தரும்‌, அவருடைய சக குருக்களும்‌, கைது செய்யப்பட்டு, இராமநாதபுரத்திற்கு இழுத்துச்‌ செல்லப்பட்‌ டனர்‌. அங்கு, பிராமணர்கள்‌, அர்ச்‌.அருளானந்தரைக்‌ கொல்ல வேண்டும்‌ என்ற ஆலோசனையை அரசனுக்குக்‌ கூறினர்‌. அர்ச்‌.அருளானந்தரை, தண்ணீர்‌ தொட்டியில்‌ அமிழ்த்தியும்‌, இந்துக்‌ கோவிலுக்குள்‌ அடைத்து வைத்தும்‌, கரடு முரடாயிருக்கிற பாதைகளில்‌, குதிரையில்‌ கட்டி இழுத்தும்‌, சித்ரவதைச்‌ செய்தனர்‌. 1693ம்‌ வருடம்‌, பிப்ரவரி 4ம்‌ தேதி, அவ்வருடத்தின்‌ தபசுக்காலத்தின்‌ முதல்நாளான சாம்பல்‌ புதன்‌ கிழமையன்று, அர்ச்‌.அருளானந்தரை, ஓரியூர்‌ மணலிற்கு இட்டுச்‌ சென்றனர்‌. இவருடைய தலையை வெட்டுவதற்கு, மிகக்‌ கூர்மையான ஒருவாளுடன்‌, ஒரு கொலைஞன்‌, தயாராயிருந்தான்‌. அர்ச்‌.அரு ளானந்தர்‌, அவனுக்கு சமாதானம்‌ கூறி வாழ்த்தினார்‌; பின்‌ மணலில்‌ முழங்காலிலிருந்து, தன்‌ தலையைக்‌ குனிந்தபடி, கொலைஞனுக்குத்‌ தன்‌ கழுத்தைக்‌ காண்பித்தார்‌. திரளாகக்‌ கூடியிருந்த மக்கள்‌ முன்பாக, அர்ச்‌.அருளானந்தர்‌, நமதாண்டவருக்காக தலை வெட்டப்பட்டு, தன்‌ இரத்தத்தைச்‌ சிந்தி, வேத சாட்சிய முடியைப்‌ பெற்றுக்‌ கொண்டார்‌. ஒருவர்‌ தலை வெட்டப்படும்போது, அந்த நபர்‌ முன்பக்கமாகத்‌ தரையில்‌ விழுவார்‌; ஆனால்‌, அர்ச்‌.அருளானந்தர்‌, தலை வெட்டப்பட்டபோது, பின்பக்கமாக விழுந்தார்‌; இவருடைய வீரத்துவத்தை, சர்வேசுரன்‌ அங்கீகரித்து ஏற்றுக்‌ கொண்டதை, இதன்‌ மூலம வெளிப்படுத்துகிறார்‌. கோலியாத்‌ முன்‌ பக்கமாக தரையில்‌ விழுந்தான்‌; அது வெட்கத்திற்குரிய காரியம்‌ என்பதைக்‌ காண்பிக்கிறது. அர்ச்சிஷ்டவருடைய கைகால்களை வெட்டி, அவருடைய சரீரம்‌ மட்டும்‌, ஒரு கம்பில்‌ ஊடுருவக்குத்தப்பட்டுத்‌ தொங்க விடப்பட்டிருந்தது. அதிலிருந்து வடிந்த அர்ச்சிஷ்டவருடைய திருஇரத்தம்‌, மணிலில்‌ பட்டு, அந்த பிரதேசம்‌ முழுவதுமுள்ள மணல்‌ எல்லாம்‌ சிவப்பாக மாறியது. இந்த புதுமையை இன்றும்‌ கூட, ஓரியூரில்‌ நாம்‌ காணலாம்‌; இந்த அற்புத செந்நிற மண்ணை, வீடுகளுக்கு பக்திபற்றுதலுடன்‌, அருளிக்கத்தைப்போல்‌ பாவித்து பயன்படுத்துகிறவர்களுக்கு அநேக புதுமைகள்‌ நிகழ்ந்துவருகின்றன. இதனாலேயே இவர்‌, அற்புத செந்நிற மண்ணின்‌ அர்ச்சிஷ்டவர்‌ என்று அழைக்கப்படுகிறார்‌. இவருடைய சரீரத்தை, கிறீஸ்துவர்கள்‌, இரகசியமாக, வணக்கத்து டன்‌ எடுத்துப்‌ பத்திரமாக, சேசு சபைகுருக்கள்‌ மூலமாக, போர்த்துக்கல்‌ நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்‌. 

 அர்ச்‌.அருளானந்தரான அர்ச்‌.ஜான்‌ டி பிரிட்டோவின்‌ உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க தாயார்‌, தன்‌ பிரிய மகன்‌, ஆண்டவருக்காக வேதசாட்சியாக தமிழ்‌ மறவர்களால்‌ கொடூரமாகக்‌ கொல்லப்பட்டார்‌ என்பதைக்கேட்டு, துக்கப்படுவதற்குப்‌ பதிலாக, ஒரு பெரிய வேதசாட்சியும்‌, அர்ச்சிஷ்டவருமான தாய்‌ என்பதைக்‌ குறித்து பெருமையடைந்தார்கள்‌. லிஸ்பனுக்கு வந்த தன்‌ மகனுடைய பரிசுத்த சரீரத்தை வாங்க வந்தபோது, கறுப்பு உடை அணியாமல்‌, திருமண உடை அணிந்து வந்து, ஆடம்பரமாக வாங்கினார்கள்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக