Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 ஜனவரி, 2024

சேசுநாதர் புறஜாதியாருக்கும் ஆண்டவர் மூன்று அரசர்கள் திருநாள்: ஜனவரி 6

 "தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் சரிவேசுரனைத் தரிசிப்பார்கள்" என்கிறார் தம் ஆண்டவர் (மத் 5:8). தேவ வார்த்தையாகிய ஆத்துமங்களின் ஒளி உலகில் தோன்றியபோது, உலகமும் குறிப்பாக, திவ்ய இரட்சகரின் வருகைக்காகவே ஆயத்தம் செய்யப்பட்டிருந்த இஸ்ராயேல் இனமும் இருளில் மூழ்கியிருந்தது. "அவர் தமக்குரியவர்களிடத்தில் வந்தபோதும், அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. " அவர்கள் உலக செல்வச்செழிப்பிலும், வானளாவிய உலக அதிகாரத்திலும், உலகத்தையே அடக்கியாளும் வல்லமையிலும் மெசையாவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக ஏழ்மையே உருவான ஓர் உத்தம கன்னிகையின் திருவுதரத்தில் இருந்த உலகத்தின் ஒளியானவரைத் தங்கள் இல்லத்திலும் கூட ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வரவில்லை. சத்திரமும் கூட அவருக்கு இடம் தரவில்லை.

ஆனால் பெத்லகேமிலிருந்து ஏறத்தாழ 1500 கி.மீ. தொலைவில், அநேகமாக பெர்சியாவில் இருந்த மூன்று சோதிட சாஸ்திரிகளுக்குத் தம்மை வெளிப்படுத்த சர்வேசுரன் சித்தங்கொள்கிறார். அர்ச். மத்தேயு அவர்களுடைய பெயர்களை நமக்கு அறிவிக்கவில்லை. ஆனால் உரோமைத் திருச்சபையின் பாரம்பரியம், அவர்களுடைய பெயர்கள் கஸ்பார். மெல்கியோர் மற்றும் பல்தசார் என்று அறிவிக்கிறது. அவர்கள் நட்சத்திரங்களை ஆராய்ந்து எதிர்காலத்தை உரைக்கிற அஞ்ஞானப் பொய் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அப்படியிருக்க, யூதர்களில் பெரும் ஞானிகளுக்கும். விவேகிகளுக்கும் தம் உலக ஆகமனத்தை மறைத்துக்கொண்டு, திவ்ய இரட்சகர் இந்தப் புறஜாதியாரான அஞ்ஞானிகள் மூவருக்குத் தம்மை வெளிப்படுத்தக் காரணம் என்ன? தமது நட்சத்திரத்தைக் கொண்டு அவர்களைத் தம்மிடம் அவர் அழைத்து வந்த காரணமென்ன?

நாம் தொடக்கத்திலேயே கூறியபடி, அவர்கள் தூய இருதயமுள்ளவர்களாய் இருந்தார்கள். தாங்கள் முன்பின் அறியாத நாட்டில், தங்களுக்குத் தெரியாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்திருக்கிற "யூதர்களின் அரசரைக்" காணும் ஆர்வம் அவர்களுக்கு ஞான சுறுசுறுப்பைத் தருகிறது. ஒட்டகங்களின்மீது அமர்ந்து, 1500 கி.மீ. தூரம் இலக்கு சரியாகத் தெரியாமல், வழியில் வரக் கூடிய வழிப்பறிக் கொள்ளையரின் தாக்குதல், உஷ்ணம், குளிர், மழை, உடல் சோர்வு, போன்ற எந்த ஆபத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல், திவ்ய இரட்சகரைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரே குறிக்கோளோடு அவர்கள் புறப்பட்டார்கள். அந்த பக்தியார்வத்திற்குத் தம்முடைய திவ்ய காட்சியின் மூலம் தேவ பாலன் சம்பாவனையளித்தார்.

அவர்கள் தாழ்ச்சியோடு இருந்தார்கள், அவர்களது பயண காலம் மூன்று மாதங்கள் நீடித்தது என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று மாதங்களுக்குள் குசையப்பர் தம்முடைய திருக்குடும்பம் தங்குவதற்கான ஓர் எளிய வீட்டை அல்லது குடிசையை நிச்சயம் கண்டுபிடித்திருப்பார். இவர்களோ அரசர்கள், ஞானிகள். பிறந்திருப்பவரோ பரம ஏழையான ஒரு பரிசுத்த கன்னிகையின் மடியில், ஏதுமறியாதவராகவும், அனைத்திற்கும் தம் தாயைச் சார்ந்திருப்பவராகவும் இருக்கிற ஒரு பச்சிளங் குழந்தையாயிருக்கிறார். ஆனால் அவரே தங்கள் தேவனும், இரட்சகருமானவர் என்று தங்களுக்கு மேலிருந்து தரப்பட்ட புதிய விசுவாசத்தில் அவர்கள் உறுதியாயிருந்தார்கள். "வீட்டில் பிரவேசித்துப் பாலனை அவர் தாயான மரியம்மாளோடு கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து அவரை ஆராதித்தார்கள்" (மத்.1:11) என்று மத்தேயு அறிவிக்கிறார். இதில் வெளிப்பட்ட உத்தமமான தாழ்ச்சி அவர்களைத் தூய இருதயத்தினர் என்று நிரூபிக்கிறது.

இதன்பின் அவர்கள் தங்கள் சர்வேசுரனும், இரட்சகருமான திவ்ய பாலனுக்குத் தந்த காணிக்கைகளின் மூலம், தாங்கள் அவரைத் தங்கள் அரசராகவும் (பொன்), சர்வேசுரனாகவும் (தூபம்). இரட்சகராகவும் (மீரை) ஏற்றுக்கொண்டதை அவர்கள் அறிக்கையிட்டார்கள். இவ்வாறு, கீழ்த்திசையிலிருந்து ஓர் உலகத்தன்மையான பயணத்தை மட்டுமல்ல, மாறாக, அவர்கள் அஞ்ஞானவாதத்திலிருந்து புறப்பட்டு, நித்திய இரட்சணியத்தின் கர்த்தராகிய திவ்ய பாலனை நோக்கித் தங்கள் இருதயங்களிலும் ஒரு ஞானப் பயணத்தை நடத்தி, அவரை வந்தடைத்திருந்தார்கள். தங்களுக்குத் தரப்பட்ட விசுவாச ஒளியை, எந்தத் தடையைப் பற்றிய கவலையும் இன்றி அவர்கள் இறுகப் பற்றிக்கொண்டார்கள். நட்சத்திரங்களைக் கணக்கிட்டு, எதிர்காலம் உரைக்கும் சோதிட சாஸ்திரிகளாக, பொய் மதத்தினராக இருந்தவர்கள். உண்மையில் மனுவுருவான சர்வேசுரனால் மீட்டு இரட்சித்துக் கொள்ளப்பட்ட முதல் புறஜாதியாராக ஆனார்கள். மேலும், புறஜாதியாரின் பிரதிநிதிகளாயிருந்து, அவதரித்த வார்த்தையானவர் யூதர்களுக்கு மட்டுமின்றி, புறஜாதியாருக்கும். உலகம் முழுவதற்குமே இரட்சகராயிருக்கிறார் என்று தங்கள் செயல்களின் மூலம் அவர்கள் அறிக்கையிட்டார்கள். இந்த விசுவாசம் சிறு குழந்தை வடிவில் சர்வேசுரனைத் தரிசிக்கும்" பாக்கியத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

அவர்கள் கள்ளங்கபடற்றவர்களாகவும் இருந்தார்கள். யூதர்களின் இராஜாவாயிருந்த ஏரோதிடமே சென்று, "யூதருடைய இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? ஏனெனில் கீழ்த் திசையில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரை ஆராதிக்க வந்தோம்" என்று அவர்கள் விசாரித்ததில் அவர்களுடைய இந்த மாசற்ற தன்மை வெளிப்படுகிறது. மேலும், சேசுபாலனைக் கண்டு, அவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கைகள் செலுத்தியபின், தங்களுக்குத் தரப்பட்ட தேவ கட்டளையின்படி, வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றதன் மூலம், அவர்கள் தங்கள் கீழ்ப்படிதல் என்னும் புண்ணியத்தையும் நிரூபிக்கிறார்கள்.

நாமும் இந்தப் பரிசுத்த ஞானிகளைப் போல, திவ்ய பாலனை நோக்கி, நம் இருதயங்களில் ஒரு ஞானப் பயணத்தை நிகழ்த்தி அவரிடம் வந்து சேர்வோமாக. நாமும் ஒரு வகையில் அஞ்ஞானிகள்தான். உலக செல்வத்தையும், சரீர இச்சையையும், பொன்னையும், பொருளையும், மண்ணையும் தெய்வமாக ஏற்று ஆராதிக்கிற விக்கிரக ஆராதனையாளர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். அவரோ நேசப் பொறாமையுள்ளவராயிருக்கிறார். தம்மை விட ஒருவன் தன் சொந்தத் தந்தையையும், தாயையும், மனைவி, மக்களையும் கூட அதிகமாக நேசிப்பதை அவர் அனுமதிப்பதில்லை. பிளவுபட்ட நேசத்தை அவர் விரும்புவதில்லை. ஆகையால் கீழ்த்திசையின் ஞானிகளைப் போல நாமும் நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமத் தோடும், முழு சத்துவத்தோடும் அவரைத் தேடி வந்து, நம் தேவசிநேகமாகிய பொன்னையும், நம் தாழ்ச்சியாகிய மீரையையும், நம் ஆராதனையாகிய தூபத்தையும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம். அவருக்கு மட்டுமே சொந்தமாயிருப்போம் என்று வாக்களித்து, இத்திருநாளின் பேறுபலன்களை நிறைவாய்ப் பெற்றுக்கொள்வோம்.

மரியாயே வாழ்க! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக