தன் உறவினர் எலிசபெத்தம்மாள் கருத்தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்ட மரியாள் அவளை பார்க்க விரும்பினாள். யூதேயா நாடு தெற்கே நெடும் தொலையிலிருந்ததது. அங்கே செல்வதென்றால் பலநாள் பயணம் செய்ய வேண்டும். மலைப்பாங்கான இடம். எனினும் மரியாள் விரைந்து சென்றாள். எலிசபெத்தம்மாளின் வீட்டை அடைந்தாள். அப்போது அவள் திவ்விய இஸ்பிரித்து சாந்துவீனால் ஏவப்பட்டு மரியாள் கடவுளின் தாய் என்பதை உணர்ந்தாள். பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே: உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்கு கிடைத்தத்தெப்படி? என்று உரைக்க கூறினாள். அவ்வேளை அவள் வயிற்றிலுள்ள குழந்தை களிப்பால் துள்ளியது.
கன்னி மரியாள் கடவுளைக் கொண்டாடி என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது. என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழுந்து மகிழ்கின்றது. ஏனெனில் தமது அடியாருடைய தாழ்மையை கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார். ஆகையால் இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள என்று தீர்க்கத்தரிசனமாய் உரைத்தார்கள்.
மரியாள் மூன்று மாத காலம் அந்த இல்லத்தில் தங்கினார். கடவுளின் தாயாயிருந்தும் வீட்டு வேலைகளைச் செய்து உதவினாள். பிறர் சிநேகத்தோடு அவர்களோடு பழகினாள். அவர்களோடு கடவுளின் அரிய செயல்களையும் அளவிலா அன்பைப் பற்றியும் உரையாடினாள். மூன்று மாதங்கள் முடிந்தபின் தம் வீடு திரும்பினாள்.
தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தித்த திருநாளை ஜீலை மாதம் 2ம் தேதி நாம் கொண்டாடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக