சங், அந்தோனி சேவியர் சுவாமி
புது வருடச் சிந்தனைக்கு:
தேவமாதா நம் தாயானால், அதை நாம் ஏற்பது மெய்யானால், நாம் இப்போது இருப்பது போல் இருப்போமா? இப்படி அவர்களைப் பற்றி உணர்வற்றிருக்க முடியுமா? மாதா மட்டில் இப்படி அசிரத்தையா யிருப்பது சரியாகுமா?
மாதா அப்போஸ்தலர்கள் எனப்படுகிறவர்களும், மாதாவின் பிள்ளைகள் எனப்படு கிறவர்களும், எவ்வகையிலேனும் தங்களை மாதாவுடையவர்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் ஏன் தான் இப்படி இருக்கிறோம்? உணர்வற்ற மரக்கட்டைகளாக, அலட்சியமாக, தாயை மறந்தவர்களாக, மக்குப் பிடித்து, அன்னைக்கு நேரிடும் துயரங்களாலும், நிந்தைகளாலும் பாதிக்கப்படாதவர்களாக நம்மால் எப்படி இருக்க முடிகிறது?
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களால் என்ன செய்ய முடியும்? இயன்ற அளவு செய்யத் தான் செய்கிறோம்" என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் பின்வருவன வற்றைச் செய்யமுடியும்:
நீங்கள் மாதாவை நேசிக்க முடியும். நேசிக்கிறீர்களா? எந்த அளவுக்கு? இப்போது நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாதா?
மாதாவுக்கு ஆறுதலளிக்கும் பரிகார பக்தி முயற்சிகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? அதிலே மூழ்கிப் போகிறீர்களா? இவ்வளவு பரிகாரம்தான் உங்களால் செய்ய முடியுமா?
பரிகார பக்தியின் அவசியத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். சொல்லி வருகிறீர்களா?
நம்மில் அநேகருக்குப் பரிகார பக்தி என்றால் என்னவென்றே சரியாகப் புரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அது என்ன?
- மாதா பகைக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் உள்ளத்தோடு நேசிப்பது பரிகாரமாகும்.
- மாதா தூஷணிக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை இடைவிடாமல் இருதயத்தில் வாழ்த்துவது பரிகாரமாகும்.
- மாதா மறுக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது பரிகாரமாகும்.
- மாதாவுடன், மாதாவுக்காக நம் வாழ்வை இரவும், பகலும் வாழ்வது பரிகார மாகும். இதையெல்லாம் செய்கிறீர்களா?
- எந்தத் துன்பத்தையும், நோயையும், கவலையையும், அவமானத்தையும் மாதாவுக்கு ஆறுதலாக, பாவிகள் மனந்திரும்பும்படி ஒப்புக்கொடுக்கிறீர்களா?
- உங்களையும், உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் மாதாவுக்கென அர்ப்பணம் செய் திருக்கிறீர்களா?
- மாதாவின் துயரங்களை ஒவ்வொன்றாய் நினைத்து அனுதாபப்பட்டு அவற்றால் பாவிகளை இரட்சிக்க மன்றாடுகிறீர்களா?
- மரியாயின் பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியை அனுசரிக்கிறீர்களா? அது மாதத்துக்கொரு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பரிகார உணர்விலேயே மாதம் முழுவதும் உங்களை இருக்கச்செய்கிறதா?
- மாதாவுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று ஒரு நாளில் எத்தனை தடவை நினைப்பீர்கள்?
- ஒரு நாளில் மாதாவுக்கென எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? மாதா ஊழியமாக என்ன செய்கிறீர்கள்?
- மாதா சாதாரணப் பெண்தான் என்கிறார்கள் ஆங்காரிகள்.
- மாதா நமக்கு அவசியமில்லை என்கிறார்கள் பதிதர்கள்.
- மாதாவுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறார்கள் மார்ட்டின் லூத்தரின் சீடர்கள்.
- மாதாவுக்கு மேலான வணக்கம் ஒன்றும் வேண்டாம். "மரியாளை" வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள் அதிகம் படித்த மேதாவிகள்.
- ஜெபமாலை தேவையா என்று கேலியாகக் கேட்கிறார்கள் மாதாவை உள்ளூரப் பிடிக்காதவர்கள்.
- உத்தரியம் மூட பக்தி என்கிறார்கள் அதன் உண்மையைப் புரிய முடியாத அறிவாளிகள்.
- மாதாவை நேசிக்கக் கூடாது. சங்கிக்கக் கூடாது, அதெல்லாம் விக்கிரக ஆராதனை என்கிறார்கள் அக்கிரமிகள்.
நிந்தைப் பரிகாரமே சிறந்த வழி என்று உறுதிபூண்டு, அதைச் செய்யத் தீவிரம் கொண்டிருக்கிறீர்களா? மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வது ஒன்றே இன்று திருச்சபையையும்,உலகத்தையும் காப்பாற்றும், மற்ற எந்த முயற்சியும் வீணாகச் செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக