Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

daily saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
daily saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 நவம்பர், 2024

November 28 - St. Catherine Laboure

 நவம்பர் 2️8️ம் தேதி

அர்ச்.கத்தரீன் லபூரே

 

கத்தரீன், பிரான்சின் பர்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஃபெயின் லே மோ ஷியர் என்ற ஊரில், பியர்ரே லபூரே என்ற விவசாயியின் மகளாகப் பிறந்தார். இவருடைய தாயார் பெயர் லூயிஸ் லபூரே. இவருடைய பெற்றோர்களுக்குப் பிறந்த 11 குழந்தைகளில் 9வது குழந்தையாக, 1806ம் வருடம், மே 2ம்தேதியன்றுப் பிறந்தார். சிறு வயதிலேயே, தன்னை சர்வேசுரன் அழைப்பதை , துறவற அந்தஸ்திற்கான தேவ அழைத்தலை, உணர்ந்தார்.

அர்ச்சிஷ்டதனத்தில் கத்தரீனை வளர்த்த அவருடைய தாயார், லூயிஸ் லபூரே, கத்தரீனுக்கு 9 வயதானபோது, 1815ம் வருடம், அக்டோபர் 9ம் தேதி மரித்தார்கள். தாயாரை அடக்கம் செய்தபிறகு, தன் அறைக்குத் திரும்பிய கத்தரீனம்மாள், ஒரு நாற்காலியின் மேல் ஏறி, சுவற்றில் ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த தேவமாதாவின் சுரூபத்தைப் பக்தி பற்றுதலுடன் எடுத்து, சுரூபத்தைப் பக்தி பற்றுதலுடன் முத்தி செய்தபடியே, முழங்காலிலிருந்து, “! மகா பரிசுத்த தேவமாதாவே! என் இனிய சிநேகமுள்ள தேவமாதாவே! இனி மேல், நீங்கள் தான் என் தாயாராக இருக்கவேண்டும்!” என்று கூறினார்.

 1818ம் வருடம், கத்தரீன் புதுநன்மை வாங்கினார். அச்சமயம் ஒருநாள், கத்தரீனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு குருவானவர், “என் மகளே! நீ இப்போது, என்னை விட்டு ஓடிப்போகலாம்.ஆனால், ஒரு நாள், நீ என்னிடம் வருவாய்! சர்வேசுரன் உனக்காக திட்டங்களைக் கொண்டிருக்கிறார், என்பதை மறவாதே! என்று கூறி மறைந்தார்.

 சிறிது காலம் கழித்து, சாடிலோன் சுர் சீன் என்ற இடத்திலிருந்த பிறர் சிநேகக்கன்னியரின் மருத்துவமனைக்குக் கத்தரீன் சென்றபோது, அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த குருவானவருடைய படத்தைப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்; அதே குருவானவரை கத்தரீன் தன் கனவில் பார்த்திருந்தார். அந்த குருவானவர் தான், பிறா்சிநேகக் கன்னியர் துறவற சபையை ஸ்தாபித்த அர்ச். வின்சென்ட் தே பவுல் என்பதை அங்கு கத்தரீனம்மாள் அறிந்துகொண்டார்.

 1830ம் வருடம் ஜனவரி மாதம், சாடிலோனிலுள்ள பிறா்சிநேகக் கன்னியா் மடத்தில் , கத்தரீனம்மாள், போஸ்டுலன்ட் என்கிற விருப்பநிலை உறுப்பினராக சேர்ந்தார். அதே வருடம், ஏப்ரல்,21ம் தேதியன்று, பாரீஸிலிருந்த ரூ டூ பாக்கிலுள்ள பிறா்சிநேகக் கன்னியர் சபையின் தாய் மடத்தில், நவசந்நியாசியாகச் சேர்ந்தார். அந்த வருடம், ஜூலை 19ம் தேதி, அவர்களுடைய சபையின் ஸ்தாபகரான அர்ச்.வின்சென்ட் தே பவுலின் திருநாளுக்கு முந்தின நாளன்று, மடத்தின் தாயார், நவசந்நியாசிகளுடைய கூட்டத்தில், அர்ச்.வின்செந்தியாரின் புண்ணியங்களைப் பற்றி விளக்கிக்கூறி, அவற்றைக் கண்டு பாவிக்கும்படி அறிவுறுத்தினார். ஒவ்வொரு நவசந்நியாசிக்கும், அர்ச்சிஷ்டவருடைய அருளிக்கமாக பூசிக்கப்பட்டிருந்த அர்ச்சிஷ்டவருடைய சர்ப்ளீஸிருந்து ஒரு சிறு துண்டை கொடுத்தார். அர்ச்.வின்சென்ட் தே பவுலின மீது கொண்ட அளவு கடந்த சிநேகத்தின் காரணமாக, கத்தரீன், அந்த அருளிக்கத்துண்டை இரு துண்டுகளாக வெட்டி, ஒன்றை வாயில் போட்டு, விழுங்கி விட்டு, மற்றதை, தன் ஜெபப்புத்தகத்தில் வைத்துக் கொண்டார். “மகா பரிசுத்த தேவமாதாவை தன்னுடைய கண்களால் நேரடியாகக் காண்பதற்கு உதவி செய்ய வேண்டும்!” என்று, கத்தரீன், அர்ச்.வின்செந்தியாரிடம், தினமும் வேண்டிக்கொண்டிருந்தார். அர்ச்.கத்தரீன் லபூரேவிற்கு தேவமாதா காட்சியளிக்கத் துவங்கியபோது தான், மகா பரிசுத்த தேவமாதாவின் யுகம் துவங்கியது. அநேகக் காட்சிகளை மகா பரிசுத்த தேவமாதா, கத்தரீனம்மாளுக்கு அளிப்பதற்குத் திருவுளம் கொண்டார்கள்.

முதல் காட்சி: 1830ம் வருடம் ஜூலை 18ம் தேதி இரவு தான், உலக சரித்திரத்தையே மாற்றி அமைத்தது.அந்த இரவில் தான், மகா பரிசுத்த தேவமாதா, நவீன காலத்தினுடைய தேவமாதாவின் யுகத்தைத் துவக்கினார்கள்.

1531ம் வருடம், குவாடலூப்பில் காட்சியளித்ததற்குப் பிறகு 300 வருட காலம் சென்றபிறகு, 1830ம் வருடம் , மகா பரிசுத்த தேவமாதா மறுபடியும் காட்சியளிக்கிறார்கள். 1830ம் வருடம், ஜூலை 18ம் தேதியன்று தான் மகா பரிசுத்த தேவமாதா உலகத்திற்கும் திருச்சபைக்கும் வெகு நீண்ட காலமாக அளிக்கவிருந்த தொடர்காட்சிகள் மற்றும் அறிவுப்புகளுக்கான முதல் காட்சி நிகழ்ந்தது.

24 வயதான இளம் நவசந்நியாசியான அர்ச்.கத்தரீன் லபூரேவைக் கொண்டு, மகா பரிசுத்த தேவமாதா தமது திட்டங்களைத் துவக்கினார்கள். அன்று இரவு கக்தரீனை உறக்கத்திலிருந்து, அவருடைய காவல் சம்மனசானவர், பல முறை மிக மென்மையாக அழைத்து, எழுப்பி விட்டார். கத்தரீன் எழுந்தபோது, தன் காவல் சம்மனசானவரை மகா அழகிய 8 வயது குழந்தையாகப் பார்த்தார். காவல் சம்மனசானவர் அணிந்திருந்த உடை மகா பிரகாசமுள்ள ஒளியுடன் விளங்கியது. காவல் சம்மனசானவர், கத்தரீனிடம், “உடனே, சிற்றாலயத்திற்கு வா! மகா பரிசுத்த தேவமாதா, அங்கே உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!” என்று கூறினார்.

 காவல் சம்மனசானவரைப் பின்தொடர்ந்து, சிற்றாலயத்திற்குச் சென்ற கத்தரீன், நடுச்சாம கிறீஸ்துமஸ் திவ்ய பலிபூசைக்கு ஆயத்தம் செய்யப்பட்டி ருப்பதுபோல், சிற்றாலயத்தின் எல்லா விளக்குகளும் எரிந்துகொண்டு, எங்கும் பிரகாசமான ஒளிமயமாக இருந்தது! பீடத்தின் பரிசுத்த சந்நிதானத்தில், ஆன்ம இயக்குனர் பிரசங்கங்கள் நிகழ்த்தப் பயன்படுத்தும் நாற்காலியின் அருகில் கத்தரீன் முழங்காலிலிருந்தார்.

 திடீரென்று பட்டாடைகளின் சலசலப்பின் சத்தம் கேட்டது; அப்போது மகா பரிசுத்த தேவமாதா மாபெரும் ஒளியுடன் கத்தரீனம்மாளை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தார். அந்த நாற்காலியில் மகா பரிசுத்த தேவமாதா அமர்ந்தார்கள். காவல் சம்மனசானவர், “இவர்கள் தான் மகா பரிசுத்த தேவ மாதா!” என்று கத்தரீனிடம் கூறினார் . உடனே, கத்தரீனம்மாள், தன் கரங்களால், மகா பரிசுத்த தேவமாதாவின் மேல் ஊன்றி சாய்ந்தபடி, தேவமாதாவி னுடைய கனிவுமிக்க திவ்ய திருக்கண்களை நோக்கிப் பார்த்தார்.

  அர்ச்.கத்தரீன் லபூரேவிடம், மகா பரிசுத்த தேவமாதா அற்புதப்பதக்கத்தைக் காண்பித்தார்கள்; இதன் விவரத்தை நாம் நேற்றைய திருநாளில் பார்த்தோம். அற்புதப் பதக்க சுரூபத்தை அணியும் பழக்கம் உலகம் முழுவதும் பரவியது. ஆயிரக்கணக்கான புதுமைகள் உலகம் முமுவதும், அன்றிலிருந்து இன்று  வரை தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. “தீமை நிறைந்த உலகப் பற்றுதல்களை நம்மிடமிருந்து துளைத்து அகற்றக்கூடிய பரிசுத்தக் துப்பாக்கிக் குண்டு!” என்று அர்ச். மாக்ஸ்மிலியன் கோல்பே, இந்த அற்புதப்பதக்கத்தை, அழைப்பார். வெகு அநேக யூதர்கள் இவ்வற்புதப்பதக்கத்தை, அணிந்ததால் புதுமையாக மனந்திரும்பினர்! அல்ஃபோன்ஸ் ராட்டிஸ்போன், இந்த அற்புதப்பதக்கத்தை அணிந்ததால், விசேஷ தேவ சலுகையை மகா பரிசுத்த தேவமாதாவின் அனுக்கிரகத்தால் பெற்று மனந்திரும்பி, தன் மூத்த சகோதரரான தியோடோர் சுவாமியாருடன் சேர்ந்து, யூதர்களை மனந்திருப்பும் வேதபோகக அலுவலை மேற்கொண்டு அதில் பெரும் வெற்றியும் அடைந்தார்; அநேக பசாசின் இரகசிய சபையினர், கம்யூனிஸ்டுகள், அஞ்ஞானிகள், பிற மதங்களைச் சேர்ந்த அநேகர் மனந்திரும்பினர்

அர்ச்.கத்தரீன் லபூரே 1876ம் வருடம் டிசம்பர் 31ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார். 1947ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது .இவருடைய பரிசுத்த சரீரம் புதுமையாக இந்நாள் வரை அழியாத சரீரமாக இருக்கிறது!

அர்ச். கத்தரீன் லபூரேவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!