தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம்
அர்ச். அல்போன்ஸ் மரியா லிகோரியார்
“சுவாமி! நாம் இங்கேயிருக்கிறது நல்லது” (மத் 17:4). இன்றைய சுவிசேஷத்தில், நமது திவ்ய இரட்சகர், தமது சீஷர்களுக்கு மோட்ச மகிமையின் ஒரு காட்சியை சிறிது நேரம் காண்பிக்க சித்தமானார் என்பதை வாசித்தோம். மோட்சத்தில் அடையப் போகும் உன்னதமான மகிமைக்காக உழைப்பதற் கான ஆவலை தமது சீடர்களின் இருதயங்களில் ஏற்படுத்துவதற்காக, நம் நேச ஆண்டவர் அவர்கள் முன்பாக உருமாறினார். அவர் தமது திவ்ய திருமுகத்தின் பேரொளி மிக்க மகிமையை, தமது சிடர்கள் காண்பதற்கு அனுமதித்தார். அப்போது ஏற்பட்ட பேரானந்தத்தினாலும் மகிழ்ச்சி யினாலும் பரவசமான நிலையில் இருந்த அர்ச்.இராயப்பர், “சுவாமி! நாம் இங்கேயிருக்கிறது நல்லது” என்று கூறுகின்றார்.
ஆண்டவரே, இந்த இடத்தை விட்டு இனி ஒருபோதும் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஏனெனில், உமது திவ்ய திருமுகத்தின் பேரழகு வாய்ந்த மாட்சிமையைக் காண்பது ஒன்றே எங்களுக்குப் போதும். அதுவே, இவ்வுலக மகிழ்வுகளையெல்லாம் விட மிக அதிகமாக எங்களுக்கு ஆறுதலை அளிக்கின்றது. மாபெரும் நன்மையாக திகழும் மோட்சத்தை நமக்கு பெற்றுக்கொடுப்பதற்காக நமது திவ்ய இரட்சகர் தமது விலைமதிப்பில்லாத உயிரையே சிலுவை மரத்தில் கையளித்தார். அப்போஸ்தலர் கூறுவது போல, சர்வேசுரனை சிநேகிக்கும் ஆத்துமங்களுக்கு ஆண்டவர் தயாரித்து வைத்திருக்கும் அளவில்லாத தேவவரப்ரசாதங்களைப் பற்றி இவ்வுலகில் எந்த மனிதனாலும் கண்டுணர முடியாது.
“சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனிதருடைய இருதயத்துக்கு அவைகள் எட்டினதுமில்லை" (1 கொரி 2:9). இவ்வுலக ஜீவியத்தில் நமது உணர்வுகளால் அனுபவிக்கும் இன்பங்களைத் தவிர வேறெந்த இன்பத்தைப்பற்றியும் நாம் அறியாமலிருக்கிறோம். ஆனால், எவ்வளவு மகத்துவம் மிக்கவையும், பேரின்பத்திற்குரிய அழகு வாய்ந்தவையும், மோட்சத்தில் உள்ளன! மோட்சத்தைப் பற்றி விவரிக்கையில் அர்ச். பெர்னார்டு, “பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பற்றி ஓ மனிதனே நீ அறிய விரும்பினால், அந்த பேரின்ப இராஜ்யத்தில், உன் இருதயம் ஏற்றுக்கொள்ளாத எதுவும் அங்கு இல்லை. நீ விரும்பும் அனைத்தும் அங்குள்ளன, என்பதை அறிந்து கொள்” என்று குறிப்பிடுகின்றார். கீழே இவ்வுலகத்திலும் சில காரியங்கள், நமது உணர்வுகளுக்கு ஒத்துப்போகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், அதே நேரத்தில் எத்தனை எத்தனையோ காரியங்கள் அனேக நேரங்களில் நம்மை எவ்வளவு கடுமையாக உபாதிக்கின்றன என்பதையும் நாம் காண்கின்றோம்.
பகலின் வெளிச்சத்தை வரவேற்கிறோம். ஆனால் இரவின் இருளை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலங்களில் மகிழ்கின்றோம். ஆனால் குளிர்பனிக்காலம் மற்றும் கோடைக்காலங்களின் கடுமையான சிதோஷ்ண நிலைமை நம்மை வாதிக்கின்றது. மேலும், வியாதியின் உபாதனைகளை நாம் அனுபவிக்க வேண்டும். மனிதர்களின் கொடுமைகளைத் தாங்கவேண்டும். தரித்திரத்தினால் ஏற்படும் வசதிக் குறைவுகளை அனுபவிக்க வேண்டும். நமது அந்தரங்க ஜீவியத்தில் பசாசு தோற்றுவிக்கும் வீண் அச்சங்கள், சோதனைகள், கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும். நமது மனச்சாட்சியில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் நித்திய இரட்சணியத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைப் பற்றிய குழப்பங்கள் நம்மை அலைக்கழிக்கும். ஆனால் மோட்சத்தை அடைந்த பாக்கியவான் களுக்கு யாதொரு துன்ப துயரமும் இருக்காது. “சர்வேசுரன், அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணிர் யாவையும் துடைப்பார்: இனி மரணமே இராது. இனி துக்கமும், அழுகைச் சத்தமும், துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக் கேட்டேன். அன்றியும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்” (காட்சி 21:4,5).
பரலோகத்தில், மரணமும் மரண பயமும் இல்லை. பாக்கியமான அந்தஸ்தில் அங்கு இருக்கும் பாக்கியவான் களுக்கு துயரம் இல்லை. வியாதி இல்லை. ஏழ்மை இல்லை. வசதிகுறைவு என்ற நிலை இல்லை. பகல், இரவு இல்லை. குளிர், உஷ்ணம் என்ற சீதோஷ்ணம் இல்லை. அங்கு எப்பொழுதும் பகலாகவும், பூத்துக்குலுங்கும் இனிய வசந்த காலமாகவே இருக்கும்.பரலோக இராஜ்யத்தில் உபாதனைகள் இல்லை. பொறாமை இல்லை. ஏனெனில், அங்கு ஒருவர் ஒருவரை கனிந்த சிநேகத்தினால் நேசிப்பர். ஒவ்வொருவரும் மற்றவருடைய மகிழ்ச்சியைக் கண்டு தங்களுடைய சொந்த மகிழ்ச்சிபோல அக்களிப்பர். அங்கு நித்திய கேட்டைப் பற்றிய யாதொரு பயமும் இருக்காது. ஏனெனில் அங்கு ஆத்துமம் தேவவரப்ரசாதத்தில், நித்திய காலத்திற்குமாக நிலைபெற்றிருக்கும். எனவே அங்கு யாரும் பாவம் செய்ய முடியாது. அதனால் சர்வேசுரனை இழக்கவும் மாட்டார்கள். மோட்சத்தில் நிங்கள் விரும்புவது அனைத்தும் இருக்கும். அங்கு எல்லாம் புதியனவாக இருக்கும். புதிய அழகுகள், புதிய அக்களிப்புகள், புதிய மகிழ்வுகள் அங்கு இருக்கும். அந்த பரிசுத்த நகரத்தைப் பார்ப்பதிலேயே நமது கண்கள் பூரண திருப்தியடையும். விலையுயர் இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் வெள்ளியினாலும் அழகிய மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு நகரத்தைப் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். ஆனால் மோட்சமானது, இதைவிட எல்லையற்ற விதத்தில் உயர்ந்த அழகைக் கொண்டு திகழ்கிறது. அதுவும் அந்த உன்னத இராஜ்யத்தின் அழகுமிக்க மாட்சிமை, அங்கு அரச ஆடைகளை அணிந்துகொண்டு வசிக்கிறவர்களுடைய அழகினால் இன்னும் அதிக மேன்மைக்கு உயர்வடைகின்றது. இவர்கள் எல்லாரும் அரசர்கள் என்று அர்ச்.அகுஸ்தினார் கூறுகின்றார்.
மோட்சவாசிகள் அனைவரையும் விட அதிமிக மாட்சியும் மகிமையும் மிக்கவர்களும் பேரெழிலழகு வாய்ந்தவர்களுமான பரலோக பூலோக இராக்கினியான நம் தேவமாதாவைக் காணும் பேறு எத்தகைய பேரானந்தத்தை நமக்களிக்கும் என்பதை சற்று தியானிப்போம். நமது நேச ஆண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியின் மகத்துவமிக்க பேரழகைக் காண்பதைப் பற்றியும் தியானிப்போம். இவை நமக்கு எத்தகைய பாக்கியமான பேரின்பங்கள்! ஒரு தடவை அர்ச்.அவிலா தெரசம்மாள் நமது ஆண்டவரின் திவ்யகரத்தைக் காணும் பேறு பெற்றாள். அப்போது அவள் ஆண்டவரின் திருக்கரத்தின் அதிசயத்துக்குரிய பேரழகின் வசிகரத்தைக் கண்ட திகைப்பினால் ஸ்தம்பித்துப்போனாள். மோட்ச நறுமணம் நுகரும் உணர்விற்கு பூரண திருப்தியளிக்கும். பரலோகத்தில் ஒரேதொனியில் ஒன்றிணைந்து இசைவாக எழுப்பப்படும் உன்னதமான கீதங்கள் நமது செவிகளை முழுவதும் திருப்திபடுத்தும். ஒரு தடவை அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் ஒரு சம்மனசானவர் ஒரு இமைப்பொழுது மட்டுமே வயலின் இசைக் கருவியை வாசிப்பதைக் கேட்டார். அப்பொழுது இறந்துவிடும் அளவிற்கு, அவர், பேரானந்தத்தினால் அக்களிப்படைந்தார். சகல அர்ச்சிஷ்டவர்களும் சம்மனசுகளும் தேவமகிமையைப் போற்றிப் பாடுவதைக் கேட்பது எத்தகைய பேரின்பமாக இருக்கும்! “அவர்கள் சதா நித்திய காலங்களிலும் உம்மைத் துதிப்பார்கள்” (சங்.83:4) தேவமாதா சர்வேசுரனைப் போற்றிப்புகழ்வதைக் கேட்பது எத்தகைய மதுரமான இன்பமாக இருக்கும்! அர்ச்.பிரான்சிஸ் சலேசியார், “காட்டில் குயிலின் கீதம் மற்ற எல்லா பறவைகளின் கீதங்களைவிட எவ்வாறு அதிக இனிமையானதாக இருக்கிறதோ, அதைப் போல பரலோகவாசிகளிலேயே அர்ச்.கன்னிமாமரியின் குரலானது அதிக இனிமையானது” என்று கூறுகின்றார். சுருக்கத்தில், மோட்சத்தில் மனிதனால் விரும்பக் கூடியவை அனைத்தும் பேரின்பங்களாக இருக்கின்றன.†
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக