Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 23 மே, 2018

*மே மாதம் 21-ம் தேதி* *St. Felix, C.* *அர்ச். பெலிக்ஸ்* *துதியர் - (கி.பி. 1587).*

*மே மாதம் 21-ம் தேதி*

*St. Felix, C.*          
*அர்ச். பெலிக்ஸ்*
*துதியர் - (கி.பி. 1587).*   

கான்றாலிசியோ என்னும் ஊரில் ஏழைக் குடும்பத்திலிருந்து பெலிக்ஸ் பிறந்து, சிறுவயதில் ஆடுமாடுகளை மேய்த்து வந்தார். இவருக்கு வயது வந்தபின் விவசாயம் செய்துவந்தார். எவ்வளவு அவசரமான வேலையிருந்த போதிலும், இவர் ஜெபத் தியானத்தை மறக்க மாட்டார். திவ்விய பூசையை பக்தியுடன் கண்ட பின்பே வேலையைத் தொடங்குவார். வயலில் வேலை முடிந்தபின் மாடுகளை மேயவிட்டு, ஒரு மரத்தின்கீழ் உட்கார்ந்து ஜெபம் செய்வார். கர்த்தர் கற்பித்த ஜெபம் முதலிய ஜெபங்களின் அர்த்தத்தை நினைத்து தியானிப்பார். கர்த்தருடைய திருப்பாடுகளை நினைத்து துக்கித்து அழுவார். மற்றவர்கள் இவரை அர்ச்சியசிஷ்டவர் என்று அழைப்பர்கள். இவர் புண்ணிய வாழ்வில் வளரும் கருத்துடன், பிரான்சீஸ்கு சபையில் தப சந்நியாசியாக சேர்ந்தார். மடத்தின் ஒழுங்குகளை வெகு கவனமாக அனுசரித்து, இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்துவந்தார். கடினமான மற்றும் தாழ்ந்த வேலைகளைச் சந்தோஷமாகச் செய்துவந்தார். தளர்ந்த வயதிலும் சிரேஷ்டருடைய உத்தரவுடன் கடின வேலைகளைச் செய்வார். தன்னைப் பெரும் பாவியாகப் பாவித்து, மடத்தின் ஒழுங்கில் குறிக்கப்பட்ட தபசு போதாதென்று எண்ணி, வேறு தவச் செயல்களைக் கடைபிடிப்பார். இவருக்கு வாசிக்கத் தெரியாவிடினும் உத்தமமான புண்ணியவாளர்கூட இவருடைய ஆலோசனையைத் தேடுவார்கள். கடைசியாய், பெலிக்ஸ் தமது புண்ணியத்தாலும் கடுந் தபத்தாலும் மடத்தாருக்கும் ஊராருக்கும் ஞான கண்ணாடியாகப் பிரகாசித்து, தமது 72-ம் வயதில் இம்மையை விட்டு மறுமையை அடைந்தார்.        

*யோசனை*

தங்கள் சரீரப் பிழைப்புக்காக அல்லும் பகலும் உழைப்பவர்கள் தங்கள் ஆன்ம வேலையை மறவாதிருப்பார்களாக.

சனி, 19 மே, 2018

*மே மாதம் 19-ம் தேதி**St. Peter Celestine, P.C.* *அர்ச். பீற்றர் செலஸ்டின்**பாப்பாண்டவர், துதியர் - (கி.பி. 1296).*

*மே மாதம் 19-ம் தேதி*
*St. Peter Celestine, P.C.*            
*அர்ச்.  பீற்றர் செலஸ்டின்*
*பாப்பாண்டவர், துதியர் - (கி.பி. 1296).*  

இவருடைய பெற்றோர் ஏழைகளாயிருந்தாலும் தங்கள் மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.  புத்திக்கூர்மையுள்ள பீற்றர் திறமையுடன் கல்வி கற்று, சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார். இவர் சிறு வயதிலே மிகவும் பக்தியுள்ளவராய் ஜெபத் தியானம் முதலிய ஞானக் காரியங்களைக் கடைப்பிடித்து வந்ததினால், பல முறை தேவதாயாருடையவும், சம்மனசுக்களுடையவும் தரிசனத்தைப் பெற பாக்கியம் பெற்றார். இவருக்கு 20 வயது நடக்கும்போது ஒரு மலைக் கெபியில் வசித்து, ஜெப தபங்களில் காலத்தைக் கழித்தார். இவ்விடத்தில் பசாசாலும் சரீர துர் இச்சையாலும் பல சோதனைகளால் பீடிக்கப்பட்டபோது, தேவ உதவியால் அவைகளை ஜெயித்து புண்ணிய வாழ்வில் உயர்ந்தார். இவருடைய பரிசுத்தத்தனத்தைப்பற்றி கேள்விப்பட்ட அநேகர் இவருக்கு சீஷர்களானபடியால், ஒரு மடத்தைக் கட்டி பரிசுத்த பாப்பரசரிடம் உத்தரவு பெற்று, ஒரு புது சபையை ஸ்தாபித்தார்.  அக்காலத்திலிருந்த பாப்பரசர் இறந்தபோது, பீற்றருடைய பரிசுத்தத்தனத்தையும் புதுமைகளையும்பற்றி கேள்விப்பட்ட கர்தினால்மார்கள் அவரைப் பாப்பரசராகத் தேர்ந்தெடுத்தனர். பாப்பரசர் பட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாகப் போனதினால், கட்டாயத்தின் பேரில் அதற்குச் சம்மதித்து செலஸ்டின் என்னும் பெயரைத் தரித்துக்கொண்டார். நான்கு மாதம் பாப்பரசர் ஸ்தானத்திலிருந்தபின் கர்தினால்மாருடைய ஆலோசனையைக் கேட்டு, பாப்பாண்டவர் பட்டத்தை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு குடிசையில் வசித்து, ஜெபத்தால் ஆண்டவருக்கு ஊழியம் செய்து மோட்ச முடியைத் தரித்துக்கொண்டார்.
*யோசனை*
ஏகாந்தத்தை விரும்புகிறவன் மோட்ச ஆனந்தத்தை அனுபவிப்பான்.

*மே மாதம் 18-ம் தேதி* *St. Theodotus & Co., MM.* *அர்ச். தெயதோதுசும் துணைவரும்* *வேதசாட்சிகள் - (கி.பி. 303)

*மே மாதம் 18-ம் தேதி*

*St. Theodotus & Co., MM.*             
*அர்ச். தெயதோதுசும் துணைவரும்*
*வேதசாட்சிகள் - (கி.பி. 303).*   

தெயதோதுஸ் சின்ன ஆசியாவில் அன்சீரா ஊரில் கடை வைத்து வாழ்ந்து வந்தார். இவர் சிறு வயதிலிருந்தே தேவ பயபக்தியுள்ளவராய் ஜெபம், தபம், உபவாசம், ஒருசந்தி முதலிய புண்ணியங்களை அனுசரித்து, விசேஷமாக ஒறுத்தல் முயற்சியை கடைப்பிடித்து வந்தார். இவருக்கு மிகுந்த செல்வமிருந்தும், அதில் பற்றுதல் வைக்காமல் தான தர்மம் செய்துவந்தார்.  அக்காலத்தில் எழும்பிய பயங்கர வேத கலாபனையில் கணக்கில்லாத கிறீஸ்தவர்கள் வேதசாட்சிகளாக மரித்தார்கள். அநேகர் நாட்டை விட்டு காடுகளுக்கும், மலைகளுக்கும் ஓடிப்போனதினால் பிறமதத்தினர் கிறீஸ்தவர்களுடைய வீடுகளைக் கொள்ளையடித்தார்கள். மேலும் ஊர்களில் தங்கியிருந்த கிறீஸ்தவர்களைப் பசியால் துன்புறுத்தும் எண்ணத்துடன், கடைகளில் விற்கப்படும் ஆகார பொருட்களை சிலைகளுக்குப் படைத்து விற்கும்படி இராயன் கட்டளையிட்டான். அப்போது தெயதோதுஸ் தமது கடையிலுள்ள பொருட்களை கிறீஸ்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து, ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்தார்.  இவர் அநேகப் புதுமைகளைச் செய்து, அஞ்ஞானிகளையும் யூதரையும் மனந்திருப்பி, வேதசாட்சிகளின் திருச்சரீரத்தைப் பக்தியுடன அடக்கம் செய்துவந்தார். அச்சமயத்தில் வேதத்திற்காக பிடிபட்ட 7 கன்னியரைச் சந்தித்து, அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களுக்கு  ஆறுதலும் அளித்தார். அவர்கள் வேதத்திற்காக மரித்தபின் அவர்களுடைய சரீரங்களை அடக்கஞ் செய்தார். இதனால் இவர் பிடிபட்டு, சரீரம் முழுவதும் கிழியும்படி அடிக்கப்பட்டு, நெருப்பில் போட்டு சுடப்பட்டார். கற்களால் இவருடைய அலகு எலும்புகள் உடைக்கப்பட்டு, பெரும் வேதனைக்குரிய  சக்கரத்தில் வாதைப்பட்டு, மரணத்திற்கு உள்ளாகி வேதசாட்சி முடி பெற்றார்.      

*யோசனை*

நாமும் நமது ஆலோசனையாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறருக்கு உதவி புரிவோமாக.

வியாழன், 17 மே, 2018

*மே மாதம் 17-ம் தேதி* *St. Paschal Baylon, C.* *அர்ச். பாஸ்கல் பாய்லோன்* *துதியர் - (கி.பி. 1592).*

*மே மாதம் 17-ம் தேதி*

*St. Paschal Baylon, C.*                                                                                 
*அர்ச். பாஸ்கல் பாய்லோன்*
*துதியர் - (கி.பி. 1592).*   

ஏழைகளான இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்ந்துவந்த போதிலும் மகா புண்ணியவாளர்களாய் வாழ்ந்தனர். கஷ்டத்தினிமித்தம் பாஸ்கல் எழுதப் படிக்க கற்றுக்கொள்ளவில்லை. இவர் ஆடுமாடுகளை மேய்க்கும்போது உயிரெழுத்து மெய்யெழுத்துக்களைக் கற்றுக்கொண்டு சிறிது நாட்களில் வாசிக்கத் திறமைப்பெற்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டே ஞானப் புத்தகங்களை வாசிப்பார். வாசித்ததை மற்ற இடையர் பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பார். தேவையானப் புத்திமதிகளை அவர்களுக்கு கூறுவார். தேவநற்கருணையை அடிக்கடி சந்திப்பார். 24-ம் வயதில் பிரான்சீஸ்கு சபையாரின் மடத்தில் சேர்ந்து தவச் சந்நியாசியாகி மடத்தின் ஒழுங்குகளை உத்தமமாய் அனுசரித்து சகலருக்கும் முன்மாதிரிகையாய் இருந்தார். கடினமான மற்றும் தாழ்ந்த வேலைகளைத் தேடிச் செய்வார். தேவநற்கருணை மட்டில் இவர் அதிசயமான பக்தி வைத்து, அநேக மணி நேரம் சலிக்காமல் அதற்கு முன்பாக இருந்து வேண்டிக்கொள்வார். பலமுறை இவர் பரவசங்கொண்டு மேலே உயர்த்தப்பட்ட விதமாய்க் காணப்படுவார். பாஸ்கல் தமது மடத்தின் வேலையினிமித்தம் பிரயாணம் செய்கையில், இவரைக் கொல்லும்படி பதுங்கியிருந்த பதிதர் கையினின்று பலமுறைப் புதுமையாகத் தப்பித்துக்கொண்டார். இவர் தேவ ஊழியத்தில் உத்தமமாய் வாழ்ந்து நித்திய சம்பாவனைக்கு அழைக்கப்பட்டார். இவர் இறந்தபின் இவருடைய சரீரம் கோவிலில் வைக்கப்பட்டு, இவருடைய ஆத்துமத்திற்காகப் பூசை செய்கையில், தேவநற்கருணை எழுந்தேற்றமான போது, இவர் தமது கண்களைத் திறந்து தேவநற்கருணையை ஆராதிப்பதாகக் காணப்பட்டார்.     

*யோசனை*

நாமும் தேவநற்கருணை மட்டில் விசேஷ பக்தி வைத்து நற்கருணை நாதரை நாள்தோறும் சந்திப்போமாக.

புதன், 16 மே, 2018

*மே மாதம் 16-ம் தேதி* *St. John Nepomucen, M.* *அர்ச். நெபோமுசென் ஜான்* *வேதசாட்சிகள் (கி.பி. - 1393).

*மே மாதம் 16-ம் தேதி*

*St. John Nepomucen, M.*            
*அர்ச். நெபோமுசென் ஜான்*
*வேதசாட்சிகள் (கி.பி. - 1393).*   

இவர் தாய் தந்தையர்pன் மன்றாட்டுக்கு இரங்கி, ஆண்டவர் இவர்களுக்கு ஜான் (அருளப்பர்) என்ற ஆண் குழந்தையை அருளச் சித்தமானார்.  அவர்களும் தங்கள் பிள்ளையை ஆண்டவருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். ஜான் சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்று, தமது ஞான அலுவலை சுறுசுறுப்புடன் செய்துவந்தார்.  இவருடைய மேலானப் பக்தியையும் அறிவையுங் கண்ட பொயேமியா தேச சக்கரவர்த்தியான வென்செஸ்லாஸ் என்பவன் மகிழ்ச்சியுடன் இவரைத் தனது அரண்மனைக்கு விசாரணைக் குருவாகத் தெரிந்துகொண்டான். ஜான் குருவானவர் அரண்மனையிலுள்ள பிரபுக்களுடையவும் மற்ற அதிகாரிகளுடையவும் நடத்தையை விடாமுயற்சியாலும் பிரசங்கத்தாலும் சீர்படுத்தினார். தம்மை ஆன்ம குருவாக நியமித்துக்கொண்ட இராணியை புண்ணிய வழியில் பயிற்றுவித்து வந்தார். தன் இராணியின் நடத்தையை அறிய நூதனப் பிரியங்கொண்ட சக்கரவர்த்தி அவள் பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களைத் தனக்கு அறிவிக்கும்படி ஜான் சுவாமியாரைக் கேட்டான். ஆனால் அவர் பாவசங்கீர்த்தன இரகசியத்தை அறிவிப்பது பெருந் துரோகமென்று அவனுக்கு உணர்த்தியும் சக்கரவர்த்தி அதற்கு செவிசாய்க்காமல் சுவாமியாரை சிறைப்படுத்தி அவரைச் சித்திரவதைச் செய்தும், அவர் அதற்கு இணங்கவில்லை. பிறகு அவருக்குச் சிறந்த வெகுமானங்களைத் தருவதாக வாக்களித்து, இராணியின் பாவங்களைத் தனக்கு அறிவிக்கும்படி கேட்டான். குருவானவர் அதற்குச் சம்மதியாததினால் அவரை நதியில் தூக்கி எறியும்படி கட்டளையிட்டான். வேதசாட்சியின் சரீரம் அதிசய பிரகாசத்தால் சூழப்பட்டு, ஜலத்தில் மிதப்பதைக் கண்ட கிறீஸ்தவர்கள், அதை எடுத்துப் பக்தியுடன் ஒரு பெட்டியில் வைத்து அடக்கம் செய்தார்கள். அவர் இறந்த 330 வருடங்களுக்குப்பின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அவருடைய சரீரம் அழிந்துபோன போதிலும், அவருடைய நாக்கு மாத்திரம் தேவ கிருபையால் அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.      

*யோசனை*

நாவால் ஒரு நாளைக்கு எத்தனையோ விசை ஆண்டவருக்கும் பிறருக்கும் விரோதமாய்ப் பாவம் கட்டிக்கொள்கிறோம். இனி அத்தீங்கைத் திருத்திக்கொள்வோமாக.

*மே மாதம் 15-ம் தேதி* *Ss. Peter & Co., MM.* *அர்ச். பீற்றரும், துணைவரும்* *வேதசாட்சிகள் - (கி.பி. 250)

*மே மாதம் 15-ம் தேதி*

*Ss. Peter & Co., MM.*           
*அர்ச். பீற்றரும், துணைவரும்*
*வேதசாட்சிகள் - (கி.பி. 250).*   

வேதக் குழப்பம் நடக்கும்போது புண்ணியவாளரான பீற்றர் வேதத்திற்காகப் பிடிபட்டு அதிகாரிக்குமுன் நிறுத்தப்பட்டு வீனஸ் என்னும் தேவதைக்குப் பலியிடும்படி கட்டளையிடப்பட்டார். சத்தியக் கடவுளை வணங்குவேனேயன்றி பாவ அக்கிரமங்களைக் கட்டிக்கொண்ட ஒரு வேசியை வணங்க மாட்டேன் என்று இவர் சொல்ல, அதிகாரி கோப வெறிகொண்டு இவரைச் சக்கரத்தில் கட்டி சித்திரவதை செய்யும்படி கட்டளையிட்டான்.  அவ்வாறே வேதசாட்சியை சேவகர் உபாதிக்கும்போது, இவருடைய எலும்புகள் முறிந்து கொடிய வாதைப்பட்டார். பிறகு இவரைச் சிரச்சேதம் செய்தார்கள். வேறு அநேக கிறீஸ்தவர்கள் வேதத்தினிமித்தம் வாதைப்படும்போது, ஒருவன் பயந்து வேதத்தை மறுதலிக்க, உடனே அவன்மேல் பசாசு ஆவேஷமாக ஏறி நிர்ப்பாக்கியனாய்ச் செத்தான். 16 வயதுள்ள தெனிசாள் என்னும் பெண் பயமின்றி அதிகாரியை அணுகி, அவன் கிறீஸ்தவர்களை வாதித்துக் கொல்வதைக் குறித்து அவனைக் கண்டித்தாள். அவள் கிறீஸ்தவளென்று அறிந்த அதிபதி அவளை விபச்சாரியின் வீட்டுக்கு அனுப்பினான். அன்றிரவு ஜோதிப்பிரகாசத்துடன் ஒரு வாலன் அவ்வீட்டில் தோன்றவே அங்கிருந்த அனைவரும் அதைக் கண்டு பயந்தார்கள். அதைப் பார்த்த தெனிசாள், அங்கிருந்தவர்களை நோக்கி, பயப்படாதேயுங்கள், இவர் என் காவல் சம்மனசானவர் என்று தைரியமாய்க் கூறினாள். மறுநாள் மற்ற வேதசாட்சிகளைக் கொலைஞர் கொலைக்களத்திற்கு கூட்டிக்கொண்டு      போனபின் தெனிசாள் சிறையினின்று தப்பித்துப் போய் வேதசாட்சிகளைப் பார்த்து, நானும் உங்களுடன் மோட்சத்திற்குப் போக ஆசையாயிருக்கிறேன் என்று கூறியதை அதிபதி கேட்டு, மற்ற வேதசாட்;சிகளுடன் தெனிசாளையும் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான்.     

*யோசனை*

வேதசாட்சிகள் உலகத்திற்குச் செத்தபடியால் வேதனைகளைப் பொறுமையுடன் அனுபவித்தார்கள். நமக்கு உலக நன்மைகள் மட்டிலுள்ள பற்றுதல்களை விட்டொழித்தாலன்றி ஞானப் பாக்கியத்தைக் கைக்கொள்ள மாட்டோம்.

*மே மாதம் 14-ம் தேதி* *St. Boniface, M.* *அர்ச். போனிபாஸ்*

*மே மாதம் 14-ம் தேதி*

*St. Boniface, M.*          
*அர்ச். போனிபாஸ்*
*வேதசாட்சி - (கி.பி. 307).* 

உரோமையில் அழகும், மிகுந்த சொத்துக்களுக்கும் சொந்தக்காரியான அக்லாயே என்னும் ஒரு பணக்காரி இருந்தாள். இவள் உரோமையிலுள்ள  பிரபுக்கள், தேசாதிபதிகள், வங்கி உரிமையாளர்கள் போன்ற பிரமுகர்களுக்கு பலமுறை சிறப்பாக விருந்து வைத்து பிரபலமடைந்திருந்தாள். இவளுடைய அரண்மனைக் காரியங்களை கவனிக்கும்படி போனிபாஸ் என்பவரை தன் அரண்மனையிலே நியமித்து, இருவரும் பாவ வழியில் வாழ்ந்து வந்தனர்.   போனிபாஸ், தன் எஜமானியுடன் பாவ வழியில் நடந்தபோதிலும் ஏழை எளியவர்கள் மட்டில் தயவு காட்டி, அவர்களை அன்புடன் விசாரித்து வந்தார்.  ஒருநாள் அக்லாயே தன் பாவ நடத்தையைப்பற்றி சிந்தித்து, மனஸ்தாபப்பட்டு, தன் நடத்தையைத் திருத்திக்கொள்ள தீர்மானித்தாள். இவள் போனிபாஸைப் பார்த்து, நாம் இப்படிப் பாவ வழியில் நடந்து இறந்தால், நரகமே நமக்கு கதியாகும். ஆகையால் இதுமுதல் நமது நடத்தையை திருத்திக்கொண்டு வேதசாட்சிகளுடைய மன்றாட்டால் நமது பாவங்களுக்கு உத்தரிப்பது உத்தம வழியாகும். ஆகையால் நீர் கீழ்த்திசைக்குச் சென்று ஒரு வேதசாட்சியின் சரீரத்தை நமது அரண்மனைக்குக் கொண்டுவாரும் என்றாள். அப்படியே ஜெபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ உதவியை மன்றாடி, வேத கலகம் மும்முரமாய் நடக்கும் சிலிசியாவுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரு ஊரில் அநேக கிறீஸ்தவர்கள் கொலைஞரால் வாதைப்பட்டு சாவதைக் கண்டு, அவர்களுக்குத் தைரியம் சொல்வதை அறிந்த அதிபதி, போனிபாஸைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடும்படிக் கட்டளையிட்டான்.  ஆனால் அவர் யாதொரு சேதமுமின்றி சுகமாயிருப்பதை அதிபதி கண்டு அவர் தலையை வெட்டும்படி கற்பித்தான். போனிபாசுடைய ஊழியர் அவருடைய சரீரத்தைக் கொண்டுபோய்த் தங்கள் எஜமானிக்கு கொடுத்தார்கள். அவள் அதை தன் அரண்மனையில் பத்திரப்படுத்தி அதற்கு முன் நாள்தோறும் வேண்டிக்கொண்டு, ஜெபத்திலும் தபத்திலும் தன் வாழ்நாட்களைக் கழித்து, புண்ணிய வழியில் மரித்தாள்.      

*யோசனை*
நாமும் நமது பாவப் பழக்க வழக்கங்களை விட்டொழிக்கும்படி அர்ச்சியசிஷ்டவர்களுடைய உதவியை மன்றாடுவோமாக.

ஞாயிறு, 13 மே, 2018

*மே மாதம் 12-ம் தேதி* *St. Domitilla, V. M.* *அர்ச். தொமிதில்லம்மாள்* *கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.*

*மே மாதம் 12-ம் தேதி*

*St. Domitilla, V. M.*         
*அர்ச். தொமிதில்லம்மாள்*
*கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.* 

ப்ளாவியா தொமிதில்லா என்பவள் இராஜ வம்சத்தில் பிறந்து, சக்கரவர்த்தியான தொமிசியானுக்கு நெருங்கிய உறவினளாயிருந்தாள்.  தொமிசியான் சக்கரவர்த்தி தொமிதில்லாவையும் அவளுடைய மாமனாகிய கிளமென்ஸ் என்பவரையும் வேதத்தினிமித்தம் சிறைப்படுத்தி, கிளமென்ஸைக் கொலைசெய்து தொமிதில்லாவை நாடுகடத்தினான். தொமிதில்லா தனது அரசு அதிகாரிகளான நெறயஸ், அக்கிலேயஸ் என்பவர்களுடன் அவ்விடத்தில் புண்ணியங்களையும் தர்மச் செயல்களையும் செய்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தாள். தொமிதில்லாவும் இரு அதிகாரிகளும் தனித்தனி அறைகளில் வசித்து, ஜெப தபங்களைச் செய்து வெகு கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தபடியால், அவ்விடம் அவர்களுக்கு ஒருவித வேதனைக்குரிய ஸ்தலமாயிருந்தது. தொமிசியான் இறந்தபின் திராஜான் உரோமை இராச்சியங்களுக்கு சக்கரவர்த்தியாகத் தெரிந்துகொள்ளப்பட்டான். அச்சமயத்தில், வேதத்தினிமித்தம் நாடுகடத்தப்பட்ட கிறீஸ்தவர்களை அவன் விடுவிக்கக் கட்டளையிட்டு, தொமிசியானுடைய உறவினர்களைக் கொலை செய்தான். தொமிதில்லா பொய்த் தேவர்களை வணங்காததினால் அவளை நெருப்பில் சுட்டெரிக்கும்படி அவன் கட்டளையிட்டான். தொமிதில்லா மரித்து வேதசாட்சி முடி பெற்றாள்.  

*யோசனை*

இந்த இராஜக் கன்னிகையை நாமும் கண்டுபாவித்து, சுகபோகம் முதலியவைகள் மாயையென்றும், புண்ணியமார்க்கமே நித்திய சம்பாவனைக்கு அழைத்துச் செல்லுமென்று அறிந்துகொள்வோமாக.

*மே மாதம் 13-ம் தேதி* *St. Servatius, B.* *அர்ச். செர்வாசியுஸ்* *ஆயர் - (கி.பி. 384).*

*மே மாதம் 13-ம் தேதி*

*St. Servatius, B.*           
*அர்ச். செர்வாசியுஸ்*
*ஆயர் - (கி.பி. 384).* 

உத்தம குடும்பத்தில் பிறந்தவரும், கல்வியறிவில் சிறந்தவருமான செர்வாசியுஸ் ஜெப தபத்தால் ஆண்டவருக்கு ஊழியம் செய்து புண்ணியவாளனாய் வாழ்ந்துவந்தார். இவருடைய புண்ணியங்களாலும் அருமையான தபத்தாலும் அநேகப் புதுமைகளைச் செய்துவந்தார். இவர் ஒரு மொழியில் பேசும்போது மற்ற ஜாதி ஜனங்கள் தங்கள் தங்கள் மொழியில் புரிந்துகொள்வார்கள். இவரைத் தொட்டவர்களும், இவர் கை கழுவிய நீரைக் குடித்த நோயாளிகளும் சுகமடைந்தார்கள். தேவநற்கருணையைத் தவிர வேறு உணவின்றி அநேக நாட்கள் பிழைத்திருக்கிறார். இவர் தாங்கிரெஸ் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு, அதில் வெகு பிரயாசையுடன் சத்திய வேதத்திற்காக உழைத்துவந்தார். இவருடைய மறைமாவட்டத்தில் துஷ்டப் பதிதரான ஆரியர், மிகுந்த அக்கிரமங்களைச் செய்து அநேகரைத் தங்கள் மதத்தில் கபடமாய்ச் சேர்த்துக்கொண்டார்கள். அன்ஸ் என்னும் காட்டுமிராண்டி ஜனங்களால் தமது தேசம் கொள்ளையடிக்கப்படப் போவதாக ஒரு தரிசனையால் இவர் அறிந்து, அந்தப் பொல்லாப்பு வராதபடி உரோமைக்குத் திருயாத்திரையாகச் சென்று அர்ச். இராயப்பரை பக்தியுடன் வேண்டிக்கொண்டார். அந்தத் தேசத்தாருடைய பாவத்தினிமித்தம் ஆண்டவர் அவர்களைத் துஷ்டரால் அழிக்கச் சித்தம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அந்தப் பயங்கர ஆக்கினையை அவர் பார்க்கமாட்டார் என்றும், அர்ச். இராயப்பர் தந்த தரிசனையில் ஆயர் அறிந்துகொண்டார். செர்வாசியுஸ் ஆயர் அர்ச்சியசிஷ்டவராய் மரித்தபின், முன் கூறப்பட்ட துஷ்ட ஜனங்கள் அத்தேசத்தைக் கொள்ளையடித்து தாங்கிரெஸ் நகரத்தைப் பாழாக்கினார்கள்.       
 
*யோசனை*
நமக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கும்படி ஆண்டவரை மன்றாடுவதுடன் அதற்குக் காரணமான பாவங்களையும் விட்டொழிப்போமாக.

சனி, 12 மே, 2018

*மே மாதம் 9-ம் தேதி* *St. Gregory Nazianzen, Pat.* *அர்ச். நசியான்சென் கிரகோரியார்* *பிதா - (கி.பி. 390)

*மே மாதம் 9-ம் தேதி*
*St. Gregory Nazianzen, Pat.*           *அர்ச். நசியான்சென் கிரகோரியார்*
*பிதா - (கி.பி. 390).*

நசியான்சென் நாட்டில் அர்ச்சியசிஷ்டவர்களான பெற்றோரிடத்தினின்று கிரகோரியார் பிறந்தார். செசாரயே, அலெக்சாந்திரியா முதலிய              பட்டணங்களுக்கு இவர் அனுப்பப்பட்டு, கல்வியில் சிறந்து வேதசாஸ்திரி என்னும் பெயர் பெற்றார். உலகம் கொடுக்கக்கூடிய சிறந்த பெயரையும் மகிமையையும் துறந்துவிட்டு குருப்பட்டம் பெற்று சில காலத்திற்குப்பின் ஆயரானார். இவர் பக்தியிலும் அறிவிலும் சிறந்து விளங்கியமையால், ஆரியப் பதிதப் போதனையால் குழப்பத்திற்குள்ளாகி சீர்குழைந்திருந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாப் பிதாவாக நியமிக்கப்பட்டார். இவருடைய விடா முயற்சியாலும், கஷ்டமான பயணங்களாலும், ஜெப தபத்தாலும் சிறந்த பிரசங்கத்தாலும், குழப்பங்களையும் பிரிவினைகளையும் சீர்படுத்தி, அநேக பதிதரை மனந்திருப்பி சத்திய வேதம் சிறந்து பிரகாசிக்கும்படிச் செய்தார்.  தங்கள் மதம் அழிவதைக் கண்ட பதிதர் கிரகோரியாரைப் பகைத்து தூஷணித்துக் கடைசியாய் அவரைக் கொல்லும்படி ஒரு பாதகனை அனுப்பினார்கள். அந்தப் பாவி அவரைக் கொல்லும் கருத்துடன் அவரை நெருங்கியபோது, மனம் மாறி, அவர் பாதத்தில் விழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்கவே, அவரும் அவனுக்கு மன்னிப்பளித்தார். கிரகோரியார் அலெக்சாந்திரியாவுக்கு பிதாப்பிதாவாக நியமிக்கப்பட்டது திருச்சபை சட்டத்திற்கு விரோதமென்று சிலர் காய்மகாரத்தால் முறையிட்டதை இவர் கேட்டு, அவர்களுடைய முறைப்பாடு ஒழுங்கற்றதென்று அறிந்திருந்தும், தம்மால் திருச்சபைக்குள் குழப்பம் உண்டாகாதபடிக்கு அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிலப் புண்ணியவான்களுடன் தனிமையில் வாழ்ந்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.   

*யோசனை*

நாமும் யாதொரு பொது நன்மையினிமித்தம் பாவமற்ற விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் நமது அபிப்பிராயத்தை விட்டு விடுவது நலமாகும்.

*மே மாதம் 10-ம் தேதி* *St. Isidore, C.*          *அர்ச். இசிதோர்* *துதியர் - (கி.பி. 1130).*

*மே மாதம் 10-ம் தேதி*
*St. Isidore, C.*         
*அர்ச். இசிதோர்*
*துதியர் - (கி.பி. 1130).*

அர்ச். இசிதோர் ஸ்பெயின் தேசத்தில் ஏழையும் தெய்வபயமும் உள்ள உத்தம பெற்றோரிடமிருந்து பிறந்தார். தரித்திரத்தினிமித்தம் அவர்கள் தங்கள் குமாரனை கல்விக் கற்க அனுப்ப சாத்தியப்படாவிடினும், தெய்வ பயத்தில் அவரை வளர்த்துப் பாவத்தை வெறுத்துப் புண்ணியத்தைப் போதித்து, ஜெபம் செய்து ஆண்டவருடைய கற்பனைகளை அனுசரித்து வாழும்படி, நற்புத்தி போதித்துவந்தார்கள். இவரும் தமது பக்தியுள்ளப் பெற்றோரின் புத்திமதிக்கு இணங்கி நடந்தார். இவருக்கு வயது வந்தபின் ஒரு செல்வந்தர் வீட்டில் விவசாய வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையைத் தன் சொந்த வேலையாகப் பாவித்து சுறுசுறுப்புடன் செய்வார். ஏர் உழும் போதும், வண்டியோட்டும் போதும் மற்ற எந்த வேலையைச் செய்யும்போதும் ஆண்டவரை மனதில் தியானிப்பார்.  இவர் ஜெபம் செய்யும் நேரத்தில் சம்மனசுக்கள் இவர் செய்யவேண்டிய வேலையைச் செய்வார்கள். திருட்டு, பொய் முதலியவை இவரிடம் கிடையாது. தன் எஜமானுக்கு எப்போதும் பிரமாணிக்கமாயிருப்பார். தன் வயிற்றுக்காக வேலை செய்த போதிலும் தன் ஆத்துமத்தை மறந்தவரல்ல. அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு வேலையைத் துவக்குவார். ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பூசைக் கண்டு, அன்று அற்ப வேலையையும் செய்யமாட்டார். அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்குவார். இவர் அந்த ஊருக்கு சகலத்திலும் நன்மாதிரியாய் வாழ்ந்தார். இவருடைய எஜமான் புண்ணியவானாயிருந்ததால், வேலைக்காரனால் தன் செல்வத்தை ஆண்டவர் ஆசீர்வதித்துப் பலுகச் செய்தாரென்று கூறி, இவரைத் தன் சகோதரனைப் போல நடத்திவந்தான். இசிதோர் 60 வயது வரை வேலை செய்து புண்ணியவானாக மரித்தார். இவரால் அநேகப் புதுமைகள் நடந்தன.    

*யோசனை*

இசிதோருடைய சரித்திரத்தைக் கேட்ட குடியானவர்களே! தொழிலாளிகளே! ஜெபம் செய்யவும் பாவசங்கீர்த்தனம் செய்யவும் நேரமில்லையென்று இனி சாக்குப்போக்குக் கூறாதீர்கள். சுறுசுறுப்பு, எதார்த்தம், நன்னடத்தை முதலியவைகளை இவரிடத்தில் கற்றுக்கொள்வீர்களாக.