Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2024

உரோமாபுரி தன் விசுவாசத்தை இழக்கும்! - (“Rome will lose the Faith and become the seat of the antichrist”. Our Lady of Saleth)

 "உரோமாபுரி தன் விசுவாசத்தை இழக்கும்!"



1846, செப்டம்பர் 19 அன்று, பரிசுத்த தேவமாதா பிரான்ஸிலுள்ள ல சலேத்தில், மாக்ஸிமின், மெலானீ என்ற இரு குழந்தைகளுக்குக் காட்சியளித்தார்கள். பல தீர்க்கதரிசனங் களிடையே மாமரி, “உரோமை தன் விசுவாசத்தை இழக்கும்; அது அந்திக்கிறீஸ்துவின் ஆசனமாகும்" என்னும் பயங்கரமுள்ள ஒரு தீர்க்கதரிசனத்தையும் வெளியிட்டார்கள். இன்று வரை மறைக்கப்பட்டிருக்கிற பாத்திமாவின் மூன்றாம் இரகசியத் தோடு இந்தத் தீர்க்கதரிசனம் நெருங்கிய தொடர்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பாத்திமாவில் மாதா ரஷ்ய அர்ப்பணத்தைப் பற்றிய தனது இரகசியத்தின் இரண் டாம் பாகத்தின் முடிவில், "போர்ச்சுக்கலில் விசுவாச சத்தியம் எப்போதும் பாதுகாக்கப்படும்" என்று அறிவித்தார்கள். முதல் இரண்டு இரகசியங்களில் இல்லாத விசுவாச சத்தியம் என்ற வார்த்தையின் மூலம், இதுவே மூன்றாம் இரகசியத்தின் முதல் வாக்கியம் என்பதையும், இந்த இரகசியம் நவீன உரோமையின் விசுவாச இழப்பால், கத்தோலிக்க உலகம் முழுவதும் பரவ இருந்த ஒரு விசுவாச மறுதலிப்பையும், அதற்கு மருந்தாக கத்தோலிக்கத் திருச்சபை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற பரிசுத்த பாத்திமா ஜெபமாலை மாதாவின் வேண்டுகோளையும் பற்றிப் பேசுகிறது என்று நாம் எளிதாக ஊகிக்கலாம்.

1884, அக்டோபர் 13, பாப்பரசர் 13ஆம் சிங்கராயர் கண்ட பயங்கரக் காட்சியில் பசாசு நம் ஆண்டவரிடமே அவருடைய திருச்சபையை அழிப்பதாக சவால் விட்டு, அதற்குத் தனக்கு 75 முதல் 100 ஆண்டுக் காலம் வேண்டுமென்று கேட்டான். அது அவனுக்கு அனுமதிக்கப்பட்டது. சரியாக 75 ஆண்டுகள் கழித்து (1884 + 75) 1959-ஆம் ஆண்டில், முதல் நவீனவாதப் பாப்பரசரான 23-ஆம் அருளப்பர் ஒரு பொதுச் சங்கத்தைத் தாம் கூட்ட விரும்புவதாக அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்படக் கட்டளையிட்டார். அவரது விருப்பப்படி, 1962-ல் தொடங்கி 1965-ல் முடிந்த இரண்டாம் வத்திக்கான் சங்கம், "மனுமகன் இரண்டாம் முறை வரும்போது, பூலோகத்தில் விசுவாசத்தைக் காண்பார் என்று நினைக்கிறாயோ?" என்னும் நம் ஆண்டவரின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் விதமாக, திருச்சபையின் விசுவாசத்தைப் பெருமளவுக்கு அழித்து, அந்திக் கிறீஸ்துவின் ஆட்சியைத் தொடங்கி வைத்த முக்கியமான ஞான அணு ஆயுதமாக இருந்தது. இச்சங்கத்தில் நான்கு முக்கியத் தப்பறைகள் "அதிகாரபூர்வமாகத்" திருச்சபையில் அறிமுகப்

படுத்தப்பட்டன. அவை பிரெஞ்சுப் புரட்சியின் நாத்திக நோக்கங்களை அடிப்படையாகக் கொண் டிருந்தன. அவை: அதன் முதல் நோக்கமான “சுதந்திரத்தை" (Liberty) அடிப்படையாகக் கொண்ட "மதச் சுதந்திரம் மற்றும் மனச் சுதந்திரம் "(Religious liberty and Liberty of conscience), இரண்டாவது நோக்கமான "சமத்துவத்தை" (Equality) அடிப்படையாகக் கொண்ட பாப்புத்துவ-மேற்றிராணித் துவ சமத்துவம் (Collegiality) மற்றும் மூன்றாம் நோக்கமான "சகோதரத்துவத்தை" (Fraternity) அடிப் படையாகக் கொண்ட ஒரு போலியான “கிறீஸ்தவ ஒன்றிப்பு"(false ecuminism) ஆகியவையாகும்.

இந்தத் தப்பறைகளின் மூலம் கத்தோலிக்கப் பாரம்பரிய விசுவாசமற்றதும், கிறீஸ்துநாதர் தந்த நோக்கமாகிய தேவ மகிமையையும், ஆன்ம இரட்சணியத்தையும் அடியோடு மறந்துவிட்டு, அல்லது புறக்கணித்துவிட்டு, ஒரு புதிய "பலித்தன்மையற்ற" மனித வழிபாட்டுடனும், புதிய ஞான உபதேசத்துடனும், புதியதொரு வேதாகமத்துடனும், புதிய, பதித போதகங்களுடனும், ஒரு புதிய பாதையில் ஆத்துமங்களை நரகத்தை நோக்கி இட்டுச் செல்வதும், இருபதாம் நூற்றாண்டு மனிதனைத் தன் வழிபாட்டின் மையமாகக் கொண்டதுமான ஒரு "சங்கச் சபை" தோன்றியுள்ளது. இதைக் குறித்து ஆறாம் சின்னப்பர், "மனிதனாய் அவதரித்த கடவுளின் மதம் (அதாவது, பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை), கடவுளாக ஆக்கப்பட்டுள்ள

மனிதனின் மதத்தை (இரண் டாம் வத்திக்கான் சங்கத்தில்) சந்திக்கிறது. என்ன (தீமை நடந்து விட்டது?)” என்ற பயங்கரமான வார்த்தைகளைக் கூறினார் (DC 1966, pp. 63 ct seq.). இந்தச் சங்கச் சபையே இன்று அதிகாரத் துடன் செயல்பட்டுக்கொண்டிருக்க, தனது 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கைவிடாமல், சங்கச் சபையின்கலாபனைக்கு" உள்ளானாலும், தன் விசுவாசத்தை இழந்து விடாமல், அதைப் பாதுகாத்து வரும் "சத்தியத் திருச்சபை" சலேத் தீர்க்கதரிசனத்தின்படி "மறைந்திருக்கிறது." சேசுநாதரின் திருச்சரீரம் அவரது திருப்பாடுகளுக்கும், திரு மரணத்திற்கும் பிறகு கல்லறையில் மூன்று நாட்கள் மறைந்திருந்தது போலவே, இன்று சிலுவை சுமந்துகொண்டு, தன் கல்லறையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிற சத்தியத் திருச்சபையும், அவரைப் போலவே ஒரு நாள் முன்பை விட அதிக மகிமையோடு உயிர்த்தெழும் நாளுக்காக மன்றாடுவோமாக.

ஆக, சத்திய விசுவாசம் மறைக்கப்பட்டு விட்டது. “ஒரு விசுவாச சத்தியத்தை மறுதலிப்பது, சகல சத்தியங்களையும் மறுதலிப்பதற்குச் சமமானது" என்பதையும், சத்தியத் திருச்சபையால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள எந்த ஒரு விசுவாச சத்தியத்தையும் மறுதலிப்பவன் தானாகவே திருச்சபை விலக்கத் தண்டனைக்கு (Latae Sententiae-Automatic Excommunication) உட்பட்டு, நித்திய ஜீவியத்தை இழக்கும் ஆபத்தில் இருக்கிறான் என்பதை மறந்தவர்களாக இன்று நவீனத் திருச்சபையின் ஞான அதிகாரிகளும் கூட, பகிரங்கமாகப் பெரும்பாலான விசுவாச சத்தியங்களை மறுத்து வருகிறார்கள்.

பாத்திமா இரகசியம் முன்னுரைத்தது போல, ஒரு மாபெரும் விசுவாச மறுதலிப்பு தோன்றி, ஆன்மாக்களை மிகப் பெரும் எண்ணிக்கையில் விழுங்கி வருகிறது. உதாரணமாக, 17.10.1984 தேதியிட்ட La Croix பத்திரிகை யில் (அதாவது 30 வருடங்களுக்கு முன்பே) வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, "திருச் சபையின் மூத்த மகளாகியபிரான்ஸ் நாட்டு மக்களில் 49 சதவீதத்தினர் கிறீஸ்துவின் உயிர்ப் பையும், 57% பேர் அமல உற்பவத்தையும், 50% பேர் திவ்ய நற்கருணையில் சேசுவின் மெய்ப் பிரசன்னத்தையும், 63% பேர் பரிசுத்த தமத்திரித்துவத்தையும், 65% ஜென்மப் பாவத்தையும், 75% பேர் உத்தரிக்கிற ஸ்தலத்தையும், பசாசு என்ற ஒன்று இருப்பதையும், 77% பேர் நரகத்தையும் மறுதலித்து இருக்கிறார்கள். (: "Peter, Lovest Thou Me?" page 50).

விசுவாச அழிவை அடுத்து, நல்லொழுக்க விதிகளும் இன்று முழுமையாக மறக்கப்பட்டு விடும் சூழல் தோன்றியுள்ளது. சமூக ஊடகங்கள் குறிப்பாகப் பரிசுத்த கன்னிமைக்கும், கற்புக்கும் எதிரான அருவருப்பான காட்சிகளால் நிரம்பி வழிகின்றன. ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங் களில் மெய்விவாகப் பிரமாணிக்கமும், குடும்பம் என்னும் கட்டமைப்பும், அதனால் சிறு குழந்தைகளின் ஞானப் பாதுகாப்பும் மிகப் பெருமளவுக்கு அழிக்கப்பட்டு விட்டன. திருமண மின்றி சேர்ந்து வாழுதல், வெறும் ஒரு நாள் உறவு, மறு நாள் எதுவுமே நடக்காதது போலப் பிரிந்து செல்லுதல், தந்தை பெயரை அறியாத குழந்தைகள், ஓரின உறவுகள். ஓரினத் திருமணங்கள், ஜசிந்தாவின் தீர்க்கதரிசனத்தின் வழியாக மாமரி எச்சரித்த, “வினோத நாகரீக பாணிகள், உடைகளின் பாணிகள்," விபச்சாரம், இரத்த உறவுகளுக்குள்ளும் அசுத்த உறவுகள் என்பவை போன்ற பயங்கரமான காரியங்கள் மிகவும் இயல்பான காரியங்களாகி விட்டன.

உலகமும் தன் பங்கிற்கு ஆத்துமங்களை வேட்டையாடி வருகிறது. பிறரை ஏமாற்றுவதும், "திறமையாகக் கொள்ளையடிப்பதும், " ஏழைகளுக்கு இரங்காதிருப்பதும், தேவைகள் ஏதுமின்றி யும் கூட, திருடியாவது பொருட்களைச் சேர்ப்பதும், மது, நடன அரங்குகள், பாவத்தையே பொழுது போக்காகக் காட்டும் ஒளிக் காட்சிகள் போன்றவையும் பெருகி, ஆத்துமங்களை வஞ்சிக்கின்றன.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஓரினத் திருமணம் தேவத்திரவிய அனுமான முறைப்படி இல்லாவிட்டாலும், சாதாரண முறையில் குருக்களால் "மந்திரிக்கப்பட" வத்திக்கான் அனுமதியளிக்கிறது. பல சமயங்களில் எல்லாத் தீமைகளும் நிறைந்தவையாகிய பதித, பிரிவினை, ப்ரொட்டஸ்டாண்ட் சபைகளும் கூட சங்கச் சபையை விட நல்லவை போலத் தோன்றும் அளவுக்கு அது தீமையில் ஊறித் திளைத்துக்கொண்டிருக்கிறது. “பச்சமாமா" என்ற பெயரில் வத்திக்கானில் விக்கிரக வழிபாட்டுக்குச் சமீபத்தில் பாப்பரசர் தலைமையில் செயல் விளக்கம் காட்டப்பட்டது. எக்கு மெனிசம் என்ற பெயரில் பதித சபைகளோடு மட்டுமின்றி, சேசுநாதரின் தெய்வீகத்தை மறுக்கும் மற்ற மதங்களும் கூட இரட்சணியத்தின் வழிகளாக சங்கச் சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க ஆலயங்களில் சர்வ தேச மத நல்லிணக்க மாநாடு என்ற பெயரில், இந்துத்துவம், பௌத்தம், முகம்மதியம், அஃப்ரிக்க வூடூ என்ற பில்லிசூனிய மதம் போன்ற மதங்களின் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிறீஸ்துநாதர் “கடவுளர்களில் ஒருவராக," அல்லது பெரும் புரட்சியாளராகப் பார்க்கப்படுகிறார். அவரது தெய்வீகம், நவீன கத்தோலிக்கர்களால் மறுதலிக்கப்படுகிறது.

ஆக, விசுவாச மறுதலிப்பும், நல்லொழுக்கக் கேடுகளும் உரோமையிலிருந்தே வருகின்றன என்பது தெளிவாகிறது. ஆயினும் உரோமையின் இந்தச் சீர்கேட்டுக்கு உரோமையை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. உலகத்தின், குறிப்பாக, கத்தோலிக்க விசுவாசிகளின் பாவங்கள்தான் அந்திக் கிறீஸ்து வருவதற்கான பாதையைத் திறந்து வைத்து, அவனை வரவேற்கச் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. இதற்கு எதிராக நம்மை எச்சரித்து, இந்த இறுதிக் காலங்களில் சரியான பாதையில் நம்மை வழிநடத்தும்படியாகவே தேவமாதா பல முறை உலகிற்கு வந்தார்கள்: ல சலேத்தில் கண்ணீர் சிந்தியபடி, பாவத்தின் காரணமாக, மனிதர்களுக்கு வரவிருந்த தண்டனைகளை முன்னறிவித் தார்கள்; லூர்தில் பாவங்களுக்குப் பரிகாரமாக, "தவம்! தவம்! தவம்!" செய்யும்படி வற்புறுத்தி னார்கள்; பாத்திமாவில், ஆன்மாக்களையும், உலகத்தையும், திருச்சபையையும் காப்பாற்றும்படி இவை தனது மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டுமென்றும், தனது மாசற்ற இருதயத் திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்றும் அவசர வேண்டுகோள் விடுத்தார்கள். ஜப்பானின் அக்கிற்றா காட்சியில் மனிதனின் பாவங்களைக் குறித்துக் கண்ணீர் சிந்தினார்கள். தேவ இரகசிய ரோஜா மாதா காட்சியில் தேவ ஊழியர்களின் பிரமாணிக்கமின்மைக்குப் பரிகாரமாகத் தவம் செய்யும்படி நம்மைக் கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால் நினிவேயைப் போல மனந்திரும்பித் தவம் செய்யாமல், இன்றைய ஆன்மாக்களும், உலகமும், சங்கச் சபையும் சோதோம், கொமோராவைப் பின்பற்றித் தொடர்ந்து பாவங்களை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்நிலையில், நம் ஆண்டவர் மத். 24, 25-ஆம் அதிகாரங் களிலும், தேவ அன்னை விசேஷமாக பாத்திமாவிலும் முன்னுரைத்துள்ள தண்டனைகளிலிருந்து இவை மூன்றும் தப்புவது கிட்டத்தட்ட இயலாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இன்னும் பகிரங்கத் தண்டனை முழு அளவில் தொடங்கவில்லை என்பதால், இன்னும் நமக்கு நேரம் இருக் கிறது என்று நம்பி, இனியாவது மரியாயின் மாசற்ற இருதய பக்தியாகிய முதல் சனி பக்தியையும், ஜெபமாலை பக்தியையும் பக்தியோடும், அன்போடும் அனுசரித்து, மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு ஆறுதல் அளித்து, நம்மையும், நம்மைச் சார்ந்த ஆத்துமங்களையும், உலகத்தையும், திருச் சபையையும் கடும் தண்டனைகளிலிருந்து காப்பாற்ற முன்வருவோமாக.

மரியாயே வாழ்க!

மே - ஜூன், 2024


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக