மண் சிவந்தது!! ||
(அர்ச். அருளானந்தரின் வேதசாட்சியம்)
கொலை களம் நோக்கி! 1693-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் நாள். கதிரவன் கோபாவேசத்தோடே தீக்கற்றைக் கதிர்களால் பூமியை சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய நேரம். அங்கே அந்த ஆளரவமற்ற. ஓரியூர் திட்டையிலே ஒரு பலி நிகழ்ந்தது! அருளானந்தசுவாமி என்று தன்னையே விரும்பி அழைத்துக் கொண்ட சங். ஜான் டி பிரிட்டோ . சே.ச சுவாமிகள் அங்கே கொண்டு வரப்பட்டார். வெண்ணிறக் கரங்கள் பின்புறமாய் கட்டப்பட்டிருக்க காவலர்கள் அவரை இழுத்துக் கொண்டு வந்தார்கள்.
கடந்த சில நாட்களாக தாம் பட்ட கொடுமைகளின் பாதிப்புக்களின்றி நிர்மலமான முகமுடையவராக, மிகுந்த உற்சாகப் பெருக்குடன் கம்பீரமாக நடந்து வரும்
அவரிடம் எந்தவிதமான அயற்சியோ, கலக்கமோ இல்லை! கடந்த நாட்களிலே அவர்பட்ட துன்ப அவமானங்கள்தான் எத்தனை! 40 மைல் கல் தூரத்திற்கு கற்களும், முட்களும் அவரது மெல்லிய பாதங்களையும் உடலையும் குத்திக் காயப்படுத்த, இழுபட்டு வந்த வேதனைகள் தான் எத்துணை! ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கிணற்றில் தலைகீழாகக் கட்டி இறக்கி மூழ்கடித்து அவர்பெற்ற சித்திரவதைக் கொடுமைகள் தான் என்ன!! மன்னர் கிழவன் சேதுபதியின் வீரர்களின் கடுமையான பேச்சும், ஏச்சும் தந்த அவமானம் தான் எத்தகையது? ஆனாலும், இன்று அவரது முகத்திலே முந்தைய நாட்களின் கொடுமைகளின் அடையாளங்கள் எதுவுமே காணப்படவில்லையே! இது தான் வேதசாட்சிகளின் திடனா? அதன் இரகசியம் தான் என்ன ?!
இழுத்துக் கொண்டு வரப்பட்ட சுவாமி, ஏறிட்டு ஓரியூர் மணல் திட்டை நோக்கினார். அங்கே, அந்த மணற்குன்றின் உச்சியிலே, கூரிய முனையுடன் கழுமரம் நாட்டப்பட்டிருந்தது. அதுவே அவரது சிலுவை மரம்! அவரது பலி பீடம்!! அவரது மனம் உவகையால் நிறைந்தது. தாம் எவ்வளவு ஆவலோடு காத்திருந்த பெரும் பேறு கடைசியில் இன்று வந்து சேர்ந்ததே என்று எண்ணி மகிழ்ந்த அவரது உள்ளம் நன்றியால் சர்வேசுரனை துதித்தது. திடனுக்காக மன்றாடியது. .. சுற்றிலும் பார்த்தார். அங்கே, இப்போது மக்கள் மெல்ல மெல்லக் கூடத்துவங்கியிருந்தார்கள். அவர்களுள், தனது அன்புக்குரிய, புதுக்கிறீஸ்தவர்கள் பதைபதைக்க மிகுந்த வேதனையோடு நின்று கொண்டிருப்பதைப்பார்த்தார். அவர்கள் வாயடைத்துப் போய் . . . எதுவும் செய்வதறியாது திகைத்துப் போய் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட நிற்பது அவருக்குப் புரிந்தது. அங்கே தான் மிகவும் நேசிக்கும் இரு மறவ கிறீஸ்தவ இளைஞர்கள் “சுவாமிக்கு பதிலாக எங்களைக் கொல்லுங்கள்!” என்று இரைந்து கத்தியவாறு ஓடிவருவதையும், முரட்டுப்படைவீரர்களால் தடுத்து அடக்கப்படுவதையும் கண்டு புன்முறுவல் பூத்தார்.
நடப்பவற்றைக் காண, வினோதப் பிரியத்தால் வேடிக்கைப் பார்க்க வந்திருந்த இந்து மக்களில் சிலர் முகத்தில் ஆச்சரியம் பொங்க “என்ன! இந்த வெள்ளைக்கார சாமி, ஏதோ விருந்துக்குப் போவது போல அல்லவா செல்கிறார்?! கொல்லப்படப் போகிறோம் என்ற அச்சமும், பயமும் எதுவும் அவரிடம் இல்லையே? இதை எங்கே போய்ச் சொல்ல. . . ?!”” என்று எண்ணியவாறு வாய்பிளந்து வியந்து நின்றிருந்தனர். அவர்களது மனமும் அவருக்காக இரங்கத்தான் செய்தது! “ஆனாலும் இது அரசன் கிழவன் சேதுபதியின் கட்டளையல்லவா? புது வேதத்தை போதித்து வந்த இந்த வெள்ளைக்கார சாமி, நல்லவர் தான். எவ்வளவு நல்லது செய்திருக்கிறார்!. அவரால் நாம் அடைந்த நன்மைகள் எத்தனை. நிகழ்ந்த புதுமைகள் தான் எத்தனை!! இருந்தாலும் இந்த தாதியத் தேவருக்கு இது வேண்டாம்! ... அவர் கிறீஸ்தவ வேதத்துக்கு மாறிவிட்டாராமே? அதனால் ஐந்து மனைவியரில் மூத்தவளை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கிவிட்டாரமே?! .. என்ன அக்கிரமம்?! அவர்களை சகோதரிகளாய் பாவிக்கப் போகிறாராமே! இது என்ன புதுசு! இதில் இளையவள் சேதுபதியின் மருமகளாயிற்றே! வந்தது விணை!! அதுதான் இதற்குக் காரணம். இந்த வெள்ளைக்கார சாமி தான் காரணம் என்று அவரை இப்படிக் கொல்ல உத்தரவிட்டுள்ளாள் சேதுபதி. . . ஆனால், இந்த பரங்கி பண்டார சாமி எவ்வளவு நல்லவர்! அவரை நமது தெய்வங்களால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லையாமே . . ?!” என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டு, இரக்கத்தோடும், ஒருவித தவிப்போடும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
வேதசாட்சிய முடி!
உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, அருளானந்த சுவாமி கால்கள், மணலில் புதைபட நடக்கிறார். அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒரு குரல், “என்ன ! மரண தண்டனைக்குச் செல்பவர் காலில் மிதியடிகளுடன் செல்கிறாரே? இது முறையல்லவே! ” என்று கேட்க, உடனே தாம் அணிந்திருக்கும் மிதியடி குறடுகளை (மரக் காலணிகள்) கழற்றி உதறிவிட்டு, தகிக்கும் அந்த சுடுமணலில் வெறுங்கால்கள் புதைய நடந்து கழுமரம் நடப்பட்டிருந்த உச்சிக்குச் சென்று அவ்விடத்தை முத்தமிட்டார். முழங்காலிட்டு மௌனமாக செபித்த அவரது ஆன்மா தமக்கு இந்த அரிய வேதசாட்சிய பாக்கியத்தை வழங்கிய ஆண்டவருக்கு நன்றி கூறியவராக, தாம் இறுதிவரை இதில் பிரமாணிக்கமாக இருக்கும் வரத்தைக் கேட்டு மன்றாடினார். தமது புது கிறீஸ்தவர்களுக்காகவும், மறவ நாட்டின் மக்கள் விசுவாச ஒளி பெற உருக்கத்தோடு ஜெபித்தார்.
அந்த இறுதி நேரத்திலும் மிகுந்த ஆனந்த பரவசத்தில் திளைத்த சுவாமியின் முகம் பரலோக ஒளியால் பிரகாசிப்பதைக் கண்ட வேத விரோதிகளும், அஞ்ஞான மக்களும் வியந்து போயினர். புன்முறுவல் பூத்துக் குலுங்கும் அவரது முகத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. “என்ன? மரணபயம் என்பதே இவரிடம் இல்லையே?!” என்று ஆச்சர்யப்பட்டனர். ஆனால், கிறீஸ்தவர்களோ, "அய்யோ! சுவாமி!” என்று மனதினுள் அரற்றி துக்கம் கொண்டு கண்ணீர் சொரிய அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுவாமி அருளானந்தர் தன்னைக் கொல்ல ஆணைப்பிறப்பித்த இராமநாதபுரம் மன்னன் கிழவன் சேதுபதிக்காகவும், தண்டனையை நிறைவேற்ற ஓலை அனுப்பிய உதய தேவனுக்காகவும், தீட்டிய வாளுடலும் கொடிய தோற்றத்துடனும் காட்சியளித்த கொலைஞன் பெருமாளுக்காகவும் செபித்தார். “பிதாவே! இவர்களை மன்னியும்! ஏனெனில், இவர்கள் செய்வது இன்னதென்ன அறியார்கள்” என்று மன்றாடினார்.
தமது பரிவாரங்களோடு தண்டனை நிறைவேற்றத்தைப் பார்வையிட வந்த சிற்றரசன் உதயத்தேவன் காலம் தாழ்த்தப்படுவதை அறிந்தவன், தன் மகனை அனுப்பி விரைவில் தண்டனையை நிறைவேற்றப் பணித்தான். இதை உணர்ந்த சுவாமிகள் எழுந்து சற்று தள்ளி நடந்து சென்று அங்கே முழந்தாழிட்டார். பின் நிமிர்ந்து பெருமாளிடம் “நான் தயாராகி விட்டேன்! இனி, நீ உன் கடமையைச் செய்யலாம்” என்று கூறினார்.
உடனே அருகில் நின்றிருந்த போர்வீரன் ஒருவன், அவரது நீண்ட தாடியை ஒரு கயிற்றினால் கட்டி அக்கயிற்றை உடம்போடு சேர்த்துக் கட்டினான். தலையை வெட்டியதும், அது நெஞ்சின் மேல் தொங்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தான். பின்னர் அவரது நீண்ட அங்கியை, இடுப்பு வரை களைந்தான். அப்பொழுது அவரது வெண்ணிற கழுத்திலே இருந்த ஓர் அருளிக்க கயிற்றைக் கண்டான். திடுக்கிட்டவனாய், “ஆ! அது மந்திரக் கயிறு! அது அவரது கழுத்தில் இருக்கும் வரை அவரைக் கொல்ல முடியாது” என்று எண்ணியவனாக, தன் வாளால் அக்கயிற்றை அறுத்தான். வாள் அவரது கழுத்தில்பட்டு... சுர்ரென்று வலி ஏற்படுத்த ... பூமியில் முதல் சொட்டு இரத்தம் சிந்தியது! சுவாமிகள் அதனை தமது முதல் காணிக்கையாக பரமபிதாவுக்கு ஒப்புக் கொடுத்தார்.
. . . எல்லாம் தயாராகியது : முழந்தாளிட்டபடியே குனிந்து தனது கழுத்தைக் காட்டிய சுவாமியின் உள்ளம் தாம் இன்னும் சில கணத்திலே அடையவிருக்கும் பேரின்ப பாக்கியத்தை நினைத்துப் பூரித்தது. கொலைஞன் பெருமாள், மனதைக் கல்லாக்கிக் கொண்டான், அருள் சுரக்கும் சுவாமியின் முகத்தைக் கண்டு நடுங்கிய அவன், அதை மீண்டும் பார்க்க அஞ்சினான். அவனது கரிய நெடிய முரட்டு தேகம் மெல்ல நடுங்கியது! ஆஹா! “நாம் எத்தனையே குற்றவாளிகளுக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளோமே, ஆனால், இன்று மட்டும் ஏன் தமது மனம் இப்படி தயங்குகிறதே? ஐயோ! இந்த பண்டாரச் சாமியிடம் எந்தக் குற்றமும் காணவில்லையே, ஆனாலும் என்ன செய்வது? அரச ஆணையல்லவா” என்றெல்லாம் சிந்தித்தவன் சற்று கண்களை மூடியவனாக "சாமி கடவுளே, என்னை மன்னித்து விடு!”” என்று கூறியவாறு தன் கரங்களில் ஏந்தியிருந்த கூரிய நீண்ட கனமான வாளை, உயரே மேலே . . ஆகாயத்தில் தூக்கினான். பின் தன் முழுபலத்துடன் கீழே, சுவாமியின் கழுத்தில் இறக்கினான். கூரிய அந்த ஆயுதம் ஆழமாய் விழுந்து தலையைத் துண்டித்தது. செங்குறுதி பீறிட்டு அடித்து அந்த தேரி மணல் மேட்டை நனைத்து செம்மண்ணாக்கியது! சிறிது நேரத்தில் உடல் துடித்து அடங்கியது. சுவாமியின் தலை, முன்பக்கமாய் சரிந்து தொங்காமல், பின் பக்கமாய் சாய்ந்து தனது ஆன்மா சென்றதைக் சுட்டிக் காட்டும் மேரையாக விண்ணோக்கி மலர்ந்த வண்ணம் காணப்பட்டது!.
பின்னர் அவரது உடல் களையப்பட்டு (கைகால்கள் வெட்டித் துண்டிக்கப்பட்டு) 10 அடி தூரத்திலிருக்கும் கழுமரத்தில் தொங்கவிடப்பட்டது. அவரது புனித உடலிலிருந்து கடைசி சொட்டு இரத்தமும், தண்ணீரும் சொரிந்து அந்த கழுமரத்தில் வடிந்து அதனை நனைத்து அந்த பூமியை செம்மையாக்கி புனிதப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரையிலும் அந்த ஓரியூர் திட்டையைச் சுற்றிலும் உள்ள மணல் புதுமையாக இரத்த மணலாக - செம்மணல் பூமியாக மாறிப்போனது!. அவர் சிந்திய இரத்தத்துளிகள் அப்பகுதி மக்களுக்கு இரட்சண்ய விதைகளாக மாறின. அவர் தலைகீழாக கட்டி இறக்கப்பட்டு வாதிக்கப்பபட்ட ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் கிணறு மட்டும் இன்றும், புதுமையாக அமிர்தசுவை நீர் வழங்கி அந்த ஊரையே நிறைவிக்கிறது.
... மரியாயின் நிலமாம் போர்த்துக்கல் தேசத்திலே பிறந்து, அர்ச். சவேரியாரைப் போலவே ஆன்ம தாகத்தால் பற்றியெரிந்து, இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டின் மறவர் தேசத்தில் ஓரியூரில் சத்திய வேதத்துக்காக வேதசாட்சிய முடி பெற்ற அர்ச். அருளானந்தர் வேதசாட்சியமடைந்து 329 ஆண்டுகள் கடந்தும், இன்னமும் ஆன்மாக்களை இரட்சிக்க, சத்திய கத்தோலிக்க வேதம் பரவ ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்!
ஆதராம் : 1
The Red Sand 2.
ஓரியூரின் ஒளிவிளக்கு
மறவர் தேசத்து மாணிக்கமாம், வேதசாட்சியான அர்ச். அருளானந்தரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக