Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

life history of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
life history of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

August 16 - ST. ROCH - அர்ச்‌. ஆரோக்கிய நாதர்

 

ஆகஸ்டு 16ம் தேதி

அர்ச்‌. ஆரோக்கிய நாதர் திருநாள் (கொள்ளை நோய் அகல இவரிடம் வேண்டிக் கொள்ளவேண்டும்- கொள்ளை நோயின் பாதுகாவலர்)

 

ரோச் என்ற ஆரோக்கிய நாதர், பிரான்சிலுள்ள மோன்ட்பெல்லியர் நகரின் மேயருடைய மகனாக 1295ம் வருடம் பிறந்தார்; இவர் பிறந்தபோது, இவருடைய மார்பின் மீது புதுமையாக ஒரு சிவப்பு சிலுவை பதிந்திருந்தது; அது, இவருடன் வளர்ந்து வந்தது. இவருக்கு 20 வயதானபோது, பெற்றோர்களை இழந்து அநாதையானார்; இவருடைய தந்தை மரணப்படுக்கையிலிருந்த போது, இவரை அந்நகரத்தின் மேயராக நியமித்தபோதிலும், ஆரோக்கியநாதர், ஒரு யாசக திருயாத்ரீகராக உரோமாபுரியை நோக்கிப் புறப்பட்டார்; அச்சமயம், இத்தாலியை ஒரு கொள்ளை நோய், அலைக்கழித்தது; கொள்ளை நோயில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, இவர் பணிவிடை புரிந்தார்; விரைவிலேயே பியாசென்சா என்ற இடத்தில், இவரும், அந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டார்

மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல், அர்ச்‌. அரோக்கியநாதர், அந்த இடத்தை விட்டு அருகிலிருந்த ஒரு காட்டிற்குள் சென்று, அங்கிருந்த இலைகள் மரக்கிளைகளைக் கொண்டு , ஒரு குடிசையை அமைத்து, அதில் தங்கியிருந்தார்; அருகில் புதுமையாக, ஒரு நீரூற்று தோன்றி, அவருடைய தாகத்தைத் தணித்தது; ஒரு வேட்டை நாய், தேவ பராமரிப்பினால், இவருக்குத் தினமும் உண்பதற்கு, ஒரு ரொட்டியைக் கொண்டு வந்து கொடுத்தது! இந்த நாய், அருகிலிருந்த ஒரு நகரத்தில் வசித்த கொத்தார்டு பாலஸ்டிரெல்லி, என்ற ஒரு உயர்குடிபிரபுவுக்குச் சொந்தமான நாய். தினமும் ஒரு ரொட்டியை தன்னுடைய நாய், யாருக்குக் கொண்டு செல்கிறது, என்பதை அறிந்து கொள்ள இவர் ஆர்வத்துடன் ஒரு நாள், அதைப் பின்தொடர்ந்து சென்ற போது, அங்கே, அர்ச்‌. அரோக்கியநாதரைக் கண்டுபிடித்தார்; அவருடைய அர்ச் சிஷ்டதனத்தகைக் கண்டு, அவர் பால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டார்: அவரைப் பாராட்டிப் போற்றினார்; அர்ச்சிஷ்டவருடைய தேவைகளை கவனித்துக்கொண்டார்.

புதுமையாக வியாதியிலிருந்து குணமடைந்ததும்அர்ச்‌. ஆரோக்கிய நாதர்பிரான்சிலுள்ள தன் சொந்த ஊரான மோன்ட்பெல்லியருக்குத் திரும்பிச் செல்லத் தீர்மானித்தார்; அச்சமயம், பிரான்ஸ், போரில் ஈடுபட்டிருந்தது. பிரான்ஸ் நாட்டின் எல்லையை அடைந்தபோது, பிரான்ஸ் நாட்டின் இராணுவ வீரர்கள், இவரை ஒரு அயல்நாட்டின் ஒற்றர் என்று சந்தேகித்துக் கைது செய்து, சிறையிலடைத்தனர். அர்ச்‌.  ஆரோக்கியநாதர், அந்நகரின் ஆளுநனராக இருந்த தனது  சொந்த மாமாவின் கட்டளையினால், சிறையிலடைக்கப் பட்டார்; கைதியைப் பற்றிய நேரடி விசாரணை எதுவும் செய்யாமல், இவருடைய மாமா, இவரை சிறையில் அடைத்தார்

தன் சொந்த மாமாவிடம் தன்னைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல், இந்த அநீதியான தண்டனையைத் தன் பாவங்களுக்குப் பரிகாரமாக, அர்ச்‌.  ஆரோக்கியநாதர் ஏற்று அமைதியாகவும் பொறுமையாகவும் அனுபவித்தார். கைது செய்த வீரர்களிடம், அர்ச்‌. ஆரோக்கிய நாதர், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு வார்த்தை முதலாய்ப் பேசாமலிருந்தார். பரலோகம் தனக்கு எதைக் கட்டளையிட்டிருக்கிறதோ, அதை, அர்ச்‌. ஆரோக்கிய நாதர், நமதாண்டவரைப் பின்பற்றி, முழு மனதுடனும், மவுனக்துடனும் ஏற்றுக்கொள்ள ஆசித்தார்.  போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இவரை எல்லோரும் முழுமையாக, மறந்து விட்டனர்

இவ்விதமாக இவர் சிறைச்சாலையில் 5 வருடகாலமாக இருந்ததால், மிகவும் தளர்ந்து பலவீனமானார்; தன் இறுதிநேரம் அண்மையிலிருப்பதை அறிந்து, ஒரு குருவானவரை கடைசி தேவதிரவிய அனுமானங்கள் கொடுப்பதற்கு வரவழைக்க வேண்டும் என்று கேட்டார்.  குருவானவர், சிறைக்குள் நுழைந்தபோது, சுபாவத்திற்கு மேற்பட்டவிதமாக, அர்ச்‌.  ஆரோக்கியநாதரின் சிறை முழுவதும் ஒளிர்வதையும், அர்ச்சிஷ்டவர் ஒரு விசேஷ பரலோக ஒளியினால் சூழப்பட்டு, பிரகாசத்துடன் திகழ்வதையும் கண்டார்

அர்ச்‌.  ஆரோக்கிய நாதர் மரித்தபோது, ஒரு எழுத்துப்பலகை சுவரில் தோன்றியது! அதில் ஒரு சம்மனசானவர், பொன் எழுத்துக்களால், அர்ச்‌.  அரோக்கிய நாதரின் பெயரை தனது கரத்தினால் எழுதினார். மேலும், “அர்ச்‌.  ஆரோக்கிய நாதரின் பரிந்துரையைக் கேட்பவர்கள் கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்!” என்கிற தீர்க்கதரிசனமான வாக்கியத்தையும் அதே பலகையில் சம்மனசானவர் எழுதினார். புதுமையான இப்பரலோக நிகழ்வைப் பற்றி, குருவானவர் அறிவித்தபோது, அர்ச்‌.  ஆரோக்கியநாதரின் மாமாவான ஆளுநனரும், அவருடைய தாயாரும், அதாவது, அர்ச்சிஷ்டவரின் பாட்டியும் சிறைக்கு வந்து பார்த்தனர்; அவருடைய பாட்டி, அவருடைய நெஞ்சின் மீதிருந்த செஞ்சிலுவையைக் கண்டு, இறந்துபோயிருப்பவர், தனது பேரன், ஆரோக்கிய நாதர் தான்! என்று, அடையாளம் கண்டுகொண்டார்கள்

உடனே, இவருடைய மாமாவான ஆளுநன், மாபெரும் ஆடம்பரமான விதமாக, அர்ச்‌.  ஆரோக்கியநாதரின் அடக்கச் சடங்கை நிகழ்த்தினார். இவர் இறந்த பிறகு, இவருடைய பரிந்துரையால் நிகழ்ந்த அநேக புதுமைகள், திருச்சபையின் தலைமைப் பீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபிறகு, 8ம் உர்பன் பாப்பரசரால், ஆரோக்கியநாதருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது. இவருடைய பெயரை வேத சாட்சிகளின் பெயர்ப் பட்டியலில், 14ம் கிரகோரி பாப்பரசர் சேர்த்தார். தொற்று வியாதிகளிலிருந்தும், கொள்ளை நோய்களிலிருந்தும், பாதுகாத்துக்கொள்வதற்காக, அர்ச்‌. ஆரோக்கியநாதரிடம் வேண்டிக் கொள்ளவேண்டும்! என்று, சம்மனசானவர் வந்து அறிவித்த விசேஷ அறிவிப்பின்படி, அர்ச்‌.  ஆரோக்கியநாதர், இந்நோய்களிலிருந்து, நம்மைப் பாதுகாக்கும் நம் பரலோக பாதுகாவலராகத் திகழ்கிறார். இவரை அர்ச்‌. ரோக்கோ, என்று இத்தாலியிலும், அர்ச்‌.  ரோக் என்று, ஸ்பெயினிலும் அழைக்கின்றனர்.

 அர்ச் ஆரோக்கிய நாதரே! எங்களை சகல ஆத்தும சரீர கொள்ளை நோய்களிலிருந்தும் காப்பாற்றி, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!