Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 22 - அர்ச். சியன்னா கத்தரீனம்மாள் (St. Catherine of Sienna, April 30)

 ஏப்ரல் 30ம் தேதி


🌹வேதபாரகரான அர்ச். சியன்னா கத்தரீனம்மாள் திருநாள்🌹




இவள் இத்தாலியிலுள்ள சியன்னா நகரில் 1347ம் வருடம் மார்ச் 25ம் தேதியன்று 24 பிள்ளைகள் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தாள். இவளுடைய தந்தை ஜியாகோமோ டி பெனின்காசா என்பவர் கம்பளியில் சாயம் பூசும் வேலை செய்தார். இவளுக்கு ஆறு வயதானபோது, நமதாண்டவர் தாமே, பாப்பரசருடைய உடையையும் தொப்பியையும் அணிந்தவராகக் காட்சியளித்தார். ஆண்டவருடைய இரண்டு பக்கங்களிலும், அர்ச். இராயப்பரும் அர்ச். சின்னப்பரும் இருந்தனர். ஆண்டவர், தமது திவ்ய பார்வையை கத்தரீன் மீது பதித்திருந்தார்.

ஆண்டவர் கத்தரீனுக்கு, தமது சிலுவை அடையாளத்தினால் விசேஷ ஆசீர்வாதத்தை அளித்தார். பிற்காலத்தில் அர்ச். கத்தரீனம்மாள், பாப்பரசரை, பிரான்சிலுள்ள அவிஞோனிலிருந்து, உரோமைக்கு மறுபடியும் கொண்டு வந்து சேர்ப்பதில், முக்கிய பங்கு வகிக்கப் போவதைப் பற்றிய முன்னறிவிப்பாக இக்காட்சி திகழ்ந்தது!

இவளுக்கு ஏழு வயதானபோது, தன் கன்னிமையை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்தாள்; 16வது வயதில், அர்ச். சாமிநாதர் துறவற சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தாள்.

1370ம் வருடம், கோடை காலத்தில், இவளுடைய 23ம் வயதில், தேவ இரகசியங்களின் விசேஷ வெளிப்படுத்தல்களுக்கான பரலோகக் காட்சிகளை தொடர்ச்சியாகக் காணும் பாக்கியம் பெற்றாள்; இக்காட்சிகளில், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம் ஆகியவற்றைக் கண்டாள். 

பீசா நகரத்திலிருந்தபோது, 1375ம் வருடம் தபசுகாலத்தின் நான்காம் ஞாயிற்றுக் கிழமையன்று, இவள் ஐந்து காய வரத்தைப் பெற்றாள்; இவள் உருக்கமாக ஜெபித்து வேண்டிக்கொண்டதினிமித்தமாக, இவள் தனது சரீரத்தில் பெற்ற ஐந்து காயங்கள், இவள் உயிருடன் வாழும் வரை வெளியரங்கமாகக் காணப்படவில்லை! இவள் இறந்தபிறகே வெளியரங்கமாக இவளுடைய சரீரத்தில் காணப்பட்டன!  இவள் ஆண்டவருடன் எப்போதும் உள்ளரங்கமாக ஞான விதத்தில் உரையாடிக் கொண்டிருப்பாள்; இவள் பக்தியிலும் கிறீஸ்துவ உத்தமதனத்திலும் நாளுக்கு நாள் உயர உயர, வீட்டில் இவளுக்குத் துன்பங்களும், தொல்லைகளும் அதிகரித்தன; வீட்டு வேலைகள் மிகக் கடினமாக நாள் முழுவதும் இருந்தன; அவற்றையெல்லாம் சளைக்காமல் முடித்து விட்டு, எஞ்சிய நேரத்தில், தன் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு குடிசையில் ஆண்டவருடன் தனிமையாக, ஏகாந்தத்தில் தேவசிநேக முயற்சி களில் ஈடுபட்டிருப்பாள்; மற்ற சமயங்களில், இவள் எப்போதும், புற அலுவல்கள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை ஆண்டவருக்காக  மிகுந்த பிரமாணிக்கத்துடனும்,  ஆர்வத்துடனும், மிக நேர்ததியாகவும் நிறைவேற்றிய படியே, தன் இருதயத்தில் ஞான விதமாக அமைத்திருந்த சிற்றறையில் தன் நேச சேசுவுடன் தேவ சிநேக உரையாடல்களில் ஈடுபட்டிருப்பாள்; 

இவளிடம் பாப்பரசர்களும், கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும் ஞான காரியங்களில் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர்; இவள், 1377ம் வருடம், 11ம் கிரகோரியார் பாப்பரசரை, வற்புறுத்தி, அவிஞோனிலிருந்து, உரோமைக்குத் திரும்பும்படிச் செய்தாள். இவள் இறந்தபிறகு, திருச்சபையை பெரிதும் பாதித்திருந்த மேற்கத்திய பிரிவினையை நிவர்த்திசெய்து அதை முற்றிலும்  அகற்றுவதற்காக இவள் மோட்சத்திலிருந்தபடி மாபெரும் முயற்சி செய்ததை எல்லோராலும் உணர முடிந்தது! 

1380ம் வருடம், ஏப்ரல் 29ம் தேதி, இவள் தனது 33ம் வயதில் பாக்கியமாய்  மரித்தாள்; இவளுடைய பரிசுத்த சரீரம் புதுமையாக அழியாத சரீரமாக இருப்பதை 1430ம் வருடம் கண்டறிந்தனர்! “அர்ச்.சியன்னா கத்தரீனம்மாளின் உரையாடல்கள்” என்ற பெயரில்  அவள் எழுதிய கடிதங்கள் எல்லாம் ஒரு கிரந்த நூலாக அச்சிடப்பட்டது! கத்தோலிக்க திருச்சபை சரித்திரத்தில், இது, மகா திறமையுடன் எழுதப்பட்ட ஞான நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது!🌹✝


அவிஞோன் பாப்புத்துவம் அல்லது மேற்கத்திய பிரிவினை என்றால் என்ன?

அவிஞோன் பாப்புத்துவம் என்பது,  கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில் 1309ம் வருடம் துவக்கி 1378ம் வருடம் வரையிலான காலத்தைக் குறிக்கிறது; இக்காலத்தில் பாப்பரசருடைய  பத்திராசனம் உரோமையிலிருந்து, பிரான்சி லுள்ள அவிஞோன் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது! இத்தாலியில் நிலவிய அரசியல் குழப்பத்தின் நெருக்கடி காரணமாக, பிரான்சில் ஆட்சி செய்த 4ம் பிலிப் அரசரால் வலுவந்தமாக, உரோமையிலிருந்து, 5ம் கிளமென்ட் பாப்பரசர் பிரான்சிலுள்ள அவிஞோன் நகரத்திற்கு வரவழைக்கப்பட்டார்; அங்கேயே பாப்பரசருடைய பத்திராசனத்தை ஸ்தாபித்தார்.


அவிஞோனில் தங்கியிருந்த ஏழு பாப்பரசர்கள் 

5ம் கிளமென்ட்     1305-1314

22ம் அருளப்பர்     1316-1334

12ம் ஆசீர்வாதப்பர் 1334-1342

4ம் கிளமென்ட்     1342-1352

4ம் இன்னசென்ட்   1352-1362

5ம் உர்பன்     1362-1370

11ம் கிரகோரி       1370-1378 இப்பாப்பரசர் உரோமாபுரிக்கு பாப்பரசருடைய பத்திராசனத்தை மறுபடியும் கொண்டு வந்தார்.

இந்த ஏழு பாப்பரசர்களும் பிரெஞ்சு பாப்பரசர்களாயிருந்தனர்; இச்சமயம், இருந்த 134 கர்தினால்மார்களில் 111 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். இவ்விதமாக 11ம் கிரகோரி பாப்பரசர் பாப்புத்துவத்தை உரோமாபுரியில் ஸ்தாபித்தபிறகும் கூட, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்தினால்கள், ஒரு எதிர்போப்புவைத் தேர்ந்தெடுத்து, அவிஞோன் நகரில்  காலியாயிருந்த பாப்பரசரின் பத்திராசனத்தில் இந்த எதிர்போப்புவை அமர்ததினர். இதன் பின்னர், ஒருவருக்குப் பின் ஒருவராக எதிர்போப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருச்சபையின் ஒரு பகுதி  ஆளப்பட்டது! இவ்விதமாக மேற்கத்திய பிரிவினை திருச்சபையில் ஏற்பட்டது. 1414ம் வருடம் கான்ஸ்டன்ஸ் நகரில் கூட்டப்பட்ட திருச்சபை சங்கத்தின்போது, திருச்சபையில் நிலவிய இம்மாபெரும் முரண்பாடு முற்றிலுமாக தீர்க்கப்பட்டு நீக்கப்பட்டது; இக்காரியம் சமாதானமாக நிறைவேறுவதற்கு, அர்ச்.சியன்னா கத்தரீனம்மமாள் மோட்சத்திலிருந்து  உதவினாள். அவிஞோனிலிருந்து, பாப்புத்துவத்தினுடைய இறுதி அடையாளச் சின்னங்கள் எல்லாம் முழுமையாக அகற்றப்பட்டன! இவ்விதமாக 1417ம் வருடம்  மேற்கத்திய பிரிவினை முற்றிலுமாக முடிவடைந்தது! 🌹✝


🌹அர்ச்.சியன்னா கத்தரீனம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Life History of St. Catherine of Sienna in Tamil. 

Born in 25 March 1347

Died on 29 April 1380

 In 1461 Pope Pius II proclaimed her saint 

In 1866 Pius IX included her as one of the patron saints of Rome. 

In 1939, along with St Francis of Assisi, St Catherine of Siena was proclaimed patron saint of Italy by Pope Pius XII.

In 1970 Paul VI conferred the title of Doctor of the Universal Church.

Feast day on April 30th.



Tags: St. Catherine of Sienna, Saint Catherine, Saint Catherine of Sienna, Life History of Saints in Tamil, Saints History, Tamil books


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக