Source: Salve Regina, March 2007
சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்!
வார்த்தையானவர் மாமிசமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார் (அரு. 1:14)
பரலோகமும், பூலோகமும் ஆவலோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த நிகழ்ச்சி அது! மகா பரிசுத்த தமதிரித்துவ தேவனின் இரக்கமுள்ள மீட்பு திட்டத்தின் துவக்கமே அந்த திருநிகழ்ச்சி! ஆதாமின் மீறுதலால் மாசுபட்டு. மோட்சம் அடைபட்டுபோன மனுக்குலம் அங்கலாய்த்து எதிர்பார்த்தி ருந்த நிகழ்வு அது! பாதாளத்தின் இருளில் விடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும், பிதாபிதாக்களும் சர் வேசுரனை தயவோடு மன்றாடி கேட்டுக் கொண்டிருந்த மகா பெரிய நிகழ்ச்சி அது!!
அது என்ன நிகழ்ச்சி?! அதுவே, சேசுகிறிஸ்துவின் மனிதாவதார திரு நிகழ்ச்சி! ஆம். அதுவேதான் ஆதியில் சிங்காரவனத்தில் பரமபிதா, சர்ப்பத்தைச் சபித்து மனுக்குலத்திற்கு வாக்களித்த மீட்பரின் அவதார திருநிகழ்ச்சி. பாவத்தால் இருளடைந்து போன உலகிற்கு ஒளியாக சேசு மீட்பர் தோன்றிய நன்னாள். மனித புத்திக்கு எட்டாத மகா பரிசுத்த தேவ இரகசியமான வார்த்தையான சர்வேசுரன் மனுவுருவெடுத்த அற்புத நாள். அந்த நாளே கிறிஸ்மஸ் என்றால் மிகையாகாது.
ஆம்! அன்றுதான் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட கபிரியேல் தூதர் அர்ச். கன்னிமாமரியிடம் இரட்சகர் சேசுகிறீஸ்துவின் பிறப்பின் மங்கள செய்தியை அறிவித்து; இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருள, உன்னதருடைய வல்லமை அர்ச். கன்னிமரியம்மாளுக்கு நிழலிட, நித்திய வார்த்தையான தேவன் மாமரியின் திருஉதரத்தில் கருவாக உருவானார் (காண்க. லூக். 1:35). உருவில்லா தேவன் உருவெடுக்க மகா பரிசுத்த கன்னி தாயிடம் குடிகொண்டார்! "வார்த்தையானவர் மாமிசமாகி இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு. 1: 14)
மாமரியின் தகுதி!
சுதனாகிய சர்வேசுரனையே கருவாக, மகவாக தமது திருவுதரத்தில் பெற்றுக்கொண்ட மாமரி எத்தகையவர்கள் அவர்களது உயர்வு மகிமை எத்துணை மேன்மையானது? அவர்களது பரிசுத்ததனம் எத்தகையது? என்று யாராலும் எடுத்துரைக்க முடியுமா? என்றால் “ஒருபோதும் முடியாது" "Nun quam satis De Maria" தாழ்ச்சியோடு என்று கூறுகிறார் திருச்சபையின் வேதபாரகரான அர்ச். பெர்னார்ட் . ஏனெனில், பரமபிதாவே கபிரியேல் சம்மனசானவரை அவர்களிடம் அனுப்பி, "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே..."(லூக். 1:28) என்று வாழ்த்தியுள்ளார். இப்படி அனுப்பப்பட்ட கபிரியேல் தூதரும் மாமரியிடம்.. "சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.. (லூக். 1:30) என்று போற்றுகிறார். இஸ்பிரீத்து சாந்துவானவரோ எலிசபெத்தம்மாள் வழியாக, "ஸ்திரீகளுக் குள்ளே ஆசி வதிக்கப்பட்டவள். நீரே பாக்கியவதி.... (லூக், 1:42)என வாழ்த்துகிறார். அதுமட்டுமல்லாமல் அர்ச். கன்னிமரியம்மாளே தமது தெய்வீக தாய்மையால் தமக்கு வந்த உயர்வை எண்ணி மகிழ்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தும் படியாக பாடிய பாடலில், “இக்கால முதல் எல்லா தலைமுறைகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்..." (லூக். 1:48) என்று உரைத்துள்ளார்கள். தாய்த்திருச்சபையும்கூட தமது பாஸ்குகால திரிகால ஜெபத்தில் "பரலோகத்துக்கு இராக்கினியே! பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர். திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் என்று போற்றி ஜெபிக்கிறது.
திருச்சபையின் தலைசிறந்த வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வினாஸ். "நமதாண்டவராகிய சேசுவை பெற்றெடுக்க கன்னிமரியாய் பாக்கியம் பெற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதத்தால் சர்வேசுரனுடைய தாயாவதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்கேற்ற தூய்மையும், பரிசுத்தத்தனத்தையும் அடைந்திருந்தார்கள்” என்று கூறுகிறார். இதைவிட மேலாக மாதா தமது தெய்வீகத் தாய்மையின் அந்தஸ்திற்காக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டதை உணர்த்தும் வண்ணம் அர்ச். சியென்னா பெர்னார்டின், "ஒரு மாது சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்து பெற்றெடுக்க வேண்டுமானால், அவள் ஒரு வகையில் அளவற்ற வரப்பிரசாதங்களின் உதவியால் கடவுளுக்கு சமமாக உயர்த்தப்பட் டிருக்க வேண்டும்!" என்று கூறி வியந்து போகிறார்.
மீட்பு திட்டத்தில் மாதாவின் பங்கு!
கபிரியேல் தூதர் அர்ச், கன்னிமரியம்மாளுக்கு சேசுவின் பிறப்பின் மங்கள வார்த்தையை அறிவித்தபின், மாதாவின் சம்மதத்திற்கு காத்திருந்தார். தேவதூதரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்த மாமரி, ஒரு கணமும் தாமதியாமல “...இதோ. நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." (லூக், 1.38) என்று பதிலளித்தார்கள். அக்கணத்திலேயே மாதாவின் மகா பரிசுத்த இரத்தத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் கிறீஸ்து கருவானார். அர்ச். கன்னிமரியாயின் திருவுதரத்தில் தேவகுமாரனான சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம் தேவமானிட ஒன்றிப்பு (Hypostatic union) நிறைவேறியது! பரலோகத்தையும் பூலோகத்தையும் அதன் சத்துவங்கள் யாவற்றையும் உண்டாக்கி, காத்து பராமரித்து வருகிற எல்லாம் வல்ல தேவன், மனுக்குலத்தின் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்தினாலும், நேசத்தினாலும் ஒன்றுமே இயலாத ஒரு மகனாக உருவெடுக்கிறார். இதனால் அர்ச். கன்னிமரியம்மாள் "Theotokose" "தேவதாய்" ஆனார்கள்! மனுக்குலத்திற்கு சேசு மீட்பரை பெற்றுத் தந்து மாமரி மீட்பரின் தாய் ஆனார்கள். முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால் வரப்பிரசாத வாழ்வை இழந்து போன மனுக்குலத்திற்கு இரண்டாம் ஏவாளாக தமது "Fiat"- "உமது வாக்கின்படியே ஆகட்டும்" என்ற தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலால், தேவவரப்பிரசாதத்தின் ஊற்றானவரையே (மீட்பர்) தம்முள் ஈர்த்துக்கொண்டு மனுக்குலத்திற்கு மீண்டும் உயிரளித்த ஜீவியத்தின் தாயாகவும் ஆனார்கள். தேவசித்தத்தின்படியே. சர்வேசுரனின் மீட்பு திட்டத்தில் அவருடைய சகல பாடுகளிலும் பங்கேற்று சிலுவையில் மீட்பை நிறைவேற்றும் வியாகுலத் தாயாகவும் ஆனார்கள்.
கிறீஸ்தவர்களாகிய நாம் வார்த்தை மனுவுருவெடுத்த திருநிகழ்ச்சியின் மீது பக்தி கொள்ளவேண்டும். சேசுவும் தேவமாதாவும் நம்மீது கொண்ட இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து, அறிந்து அதற்காக நன்றியறிந்து அவர்களை நேசித்து நமது மீட்புக்காக மன்றாடி வரவேண்டும். மனிதாவதார திருநிகழ்ச்சியை நினைவுகூற ஜெபிக்கப்படும் திரிகால ஜெபத்தை தவறாமல் நன்றி உருக்கத்தோடு ஜெபித்து வருவோமாக. நமதன்னையைப் போன்று நமக்கு வரும் துன்பத்துயரங்களை அமைதலோடு "அப்படியே ஆகக்கடவது என்று ஏற்று உத்தம கிறீஸ்தவ வாழ்வு வாழ்வோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக