Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

varalaaru in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
varalaaru in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17 - அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)

 கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிதத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது)

அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)


அது. 1566 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிநாட்கள். அன்று இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வண்ண, வண்ண அலங்கார வளைவுகள், தோரணங்கள், ஒளியை உமிழும் பல வண்ண விளக்குகள் என எங்கும் ஆடம்பரம்! துணைவேந்தர். பேராசிரியர், அறிஞர்கள். மாணவர்கள், ஊழியர் என பலதரப்பினரும் ஒருவித பதட்டத்தோடு காத்திருந்தனர். வளாகத்தில் மேடைகளும், அறிவார்ந்த சொற்பொழிவு விவாத அரங்கங்களும் தயாராயிருந்தன. அவற்றில் அமைக்கப்பட்டு பங்கேற்று தங்கள் அறிவுத்திறனை எண்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தயாராக நின்றிருந்தனர்.

யாருக்கு இந்த வரவேற்பு? ஆம்! இங்கிலாந்து தேசத்தை ஆளும் தன்னிகரற்ற அரசி முதலாம் எலிசபெத் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்ய வருகிறாள். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தன்னை விளக்கிக் கொண்டு இங்கிலாத்தின் திருச்சபைக்கு தானே தலைவன் என்று அறிவித்து எதிர்ப்பு மதத்தை உருவாக்கிய 8ம் ஹென்றியின் மகள். அவனுக்கும் அவன் தேவதுரோகமாக மணந்து கொண்ட ஆன்போலினுக்கும் பிறந்த வாரிசுதான் இந்த அரசி! தந்தையைப் போலவே பாப்பரசரின் வேதத்தை மறுதலித்து தன்னையே இங்கிலாந்தின் ஆங்கிளிக்கன் சபையின் தலைவியாக அறிவித்து, அவள் பட்டத்திற்கும் வரும்போது வயது 25தான்! ஆனாலும் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் என்ற கதையாக கத்தோலிக்க எதிர்ப்பைக் கடைபிடித்துவந்தாள். கத்தோலிக்க வேதமே இங்கிலாந்தில் இல்லாமல் செய்ய சூளுரைத்தாள்! திவ்விய பலிபூசை, குருக்கள், கத்தோலிக்க மத அனுசாரணம் யாவும் தடைசெய்யப்பட்டது. அப்படி மீறி இங்கிலாந்தில் குருக்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தலை உருளும், அவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஒப்புக்கான விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்கள். இங்கிலாந்து திருச்சபையின் தலைவி அரசியே என்று சத்திய பிரமாணம் செய்து பாப்பரசரை மறுதலிக்காதவர்கள் தேவ துரோகக் குற்றம் சூட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு வயிறு கிழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறாக கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த அவள் படித்த அறிஞர்கள், அறிவுடையோர் கல்வியாளர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்த்தவராக இப்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு வருகைதந்து, தனது கொள்கைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற ஆசித்தாள், அதன் பதிரொலியாகத்தான் இன்றைய "ஆக்ஸ் போர்ட் விஜயம்!"

தமது அரசவை உறுப்பினர்கள் புடை சூழ மகா கம்பீரமாக வந்த அரசி தமது ஆசனத்தில் அமரவும் அவளை வரவேற்கும் படலம் ஆரம்பமாயிற்று.

அங்கே முதல் வரிசையிலே, அறிவுஜீவி, அறிஞர், சிறந்த பேச்சாளர், பேராசிரியர் என்றெல்லாம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன். அரசியை வரவேற்று சொற்பொழிவாற்றும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கன்னியமாக உடையணிந்திருந்த காம்பியன் மிடுக்கான தடையில், அரசியை வணங்கிவிட்டு சொற்பொழிவு மேடையேறி தமது அறிவார்ந்த நடையில் கணீர்குரலால் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியை வாழ்த்தி பேச அவர் கையாண்ட நாவன்மையைக் கண்டு அவையோர் ஆர்ப்பரித்து மகிழ அரசியின் முன்னோர்கள், அவனது ஆட்சி. அவளோடு வந்திருந்த அமைச்சர் பெருமக்கள் என அனைவரையும் பாராட்டி பேசிய காம்பியனின் குரல் அந்த அசங்கத்தின் கையொலியால் கரைந்துபோனது. அவரது பேச்சு திறமையில் உள்ளம் நெகிழ்ந்து மகிழ்ந்த அரசியின் முகம் பிரகாசமடைந்தது. வரவேற்புரையை நிகழ்த்தி முடித்து தலைகுனிந்து அரசியை வணங்கிய காம்பியனுக்கு வயது 26! தமது அறிவுத் திறமையால் "இங்கிலாத்தின் இரத்தினம்" என்று பட்டம் சூட்டப்பட்ட எட்மண்ட பேரொலியால் எழுந்த கரவொலியால் பெருமை பொங்க மேடையை விட்டு இறங்கினார்.

ஆனால், அதே எட்மண்ட் காம்பியன் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அரசியால் "தேசதுரோகி" என்ற பட்டம் சூட்டப்பட்டு கொடூரமாய் தூக்கிலிடப்பட்டு வேதசாட்சியடைந்தார்! ஆம். அதுவே தேவ திருவுளம்! சத்திய வேதமாம், கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசத்திற்காக அவர் இரத்தம் சிந்தினார்.

மனந்திரும்பிய காம்பியன்!

1540 -ம் லண்டன் மாநகரில் பிறந்த எட்மண்ட் காம்பியனின் தந்தை ஒரு புத்தகவியாபாரி. அதனால் தானோ என்னவோ படிப்பில் சிறந்து விளங்கினார். தமது 17வயது வயதில் அர்ச். ஜான் கல்லூரியில் ஃபெல்லோஷிப் பட்டம் பெற்றார். அவர் எவ்வளவுக்கு அறிவுத்திறமையும், நாவன்மையும் கொண்டிருந்தாரானால், அவரைச் சுற்றி எப்போதும் மாணவக் கூட்டம் இருக்கும். அவரது பேச்சை, அதில் மினிரும் அறிவுத்திறமையை சாதூரியத்தை, பழக்க வழக்கங்களை கண்டு பாவிக்கவும், அன்றைய மாணவர்களிடையே ஒருவித ஆவல் இருந்தது. அதனாலேயே அவரோடு சுற்றித் திரிந்தவர்களை "காம்பியன் கூட்டத்தார்" என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியலில், தத்துவ சாஸ்திரத்தில், லத்தீன் மொழியில் புலமை பெற்று "அசாதாரணமான மாணவன்" என்ற பெயர் பெற்றர். ஏழ்மையில் இருந்ததால் அவரது படிப்புச் செலவிற்காக சலுகையும் உதவித்தொகையும் பெற்றார்.


ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகக் கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் ஏற்றுக் கொண்டிருக்கும் போதுதான அங்கே அரசி எலிசபெத்தின் வருகை நிகழ்ந்தது. அவளை வரவேற்பளிக்கத் தெரிவு செய்யப்பட்ட காம்பியனும், தமது அறிவார்ந்த உரையால் அரசியின் பெருமதிப்புக்குள்ளானார். அரசவை கூட்டங்களில் உரையாற்ற அழைக்கப்பட்ட அவர் "இங்கிலாந்தின் இரத்தினம் " என்று கௌரவப்பட்டம் பெற்றார். அரசாங்க ஆதரவு அவருக்கு இருந்ததால் பிற்காலத்தில் உயர்பதவிகள் காத்திருந்தன.

எலிசபெத் அரசி ஆட்சி பொறுப்பேற்கும் வரை கத்தோலிக்கராயிருந்த இவரது குடும்பம், பாப்பரசரின் அதிகாரத்துக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டபோது, அதை ஆதரித்து ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்தது. தமது கல்வி, எதிர்காலம் கருதிய எட்மண்ட் அரசியே இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற சத்திய பிரமாணத்தை செய்தார். புராட்டஸ்டாண்ட் ஆங்கிளிக்கன் சபையில் சேர்ந்திருந்தாலும் அவரது மனதில் ஒரு கலக்கம் தோன்றியது. ஏனெனில் தத்துவ சாஸ்திரம் கற்கும்போது திருச்சபையின் பிதாபிதாக்கள் எழுதிய நூல்களையும் கற்க நேரிட்டது. அவர்களது கத்தோலிக்க விசுவாச உறுதியையும், அதுவே சத்திய வேதம் என்பதை சுட்டிக்காட்ட அவர்கள் தந்த ஆதாரங்களையும் கண்டு உள்ளம் தாக்குண்டவரானார். இந்நிலையில் தான் ஆங்கிலிக்கன் சபையில் தியோக்கன் பட்டம் பெற்றார்.

பலருடைய மதிப்பையும், நட்பையும் பெற்று உயரிய பதவியடைய வாய்ப்பிருந்த போதிலும் தான் ஆங்கிலிக்கன் சபையில் பட்டம் பெற்றது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவரது ஆன்மா சத்தியத்தை நாடி தேட அம்முயற்சியில் இறங்கிய காம்பியன் திருச்சபையின் வரலாற்றை படிக்கலானார். பல பிதாப்பிதாக்களின் நூல்களை கற்று உணரலானார்.

இப்போது அவரது மனம் தவிக்கலாயிற்று. இங்கிலாந்து நாட்டின் அர்ச். அகஸ்டின் காண்டபூரி, அர்ச். எட்வர்ட் அரசன் மற்றும் வேதசாட்சியாக மரித்த அர்ச். தாமஸ் பெக்கட் போன்றோர் சார்ந்திருந்த கத்தோலிக்க சபை உண்மையானதா? எலிசபெத் அரசியை தலைமையாகக் கொண்ட ஆங்கிளிக்கன் சபை சத்தியமான வேதமா? என்று அங்கலாய்த்த அவரது உள்ளம், அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து உண்மையான வேதம் கத்.திருச்சபைதான். தாம் இருக்கும் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் ஒரு பதிதம்! அங்கு சேசுகிறீஸ்து இல்லை! அவரது உண்மையான போதனைகளும் இல்லை. அங்கு ஆன்ம இரட்சிப்பு இல்லை. ஆம்! இரட்சிக்கப்பட சேசுகிறீஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட சத்திய வேதமான பாப்பரசரை தலைவராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையே என்பதை அறிந்து உணர்ந்து கொண்டார். கத்தோலிக்கரானார்.

தேவ அழைத்தல்

அக்காலத்தில் இங்கிலாந்து தேசத்திலிருந்து சுத்தோலிக்க வேதம் அழிக்கப்பட்டு விட்டதால், அதனை மீண்டும் ஏற்படுத்த ஆங்கில கத்தோலிக்கர்கள் விரும்பினார்கள். கத். விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருந்த எண்ணற்ற ஆங்கில நாட்டு மக்களுக்கு தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தவும் குருக்களை உருவாக்க முயற்சி நடந்தது. அதனால் பாப்பரசரின் ஆதரவில் பிரான்ஸ் நாட்டில் துவே (Douay) என்ற இடத்தில் குருமடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு சிறந்த ஆங்கில நாட்டு இளைஞர்களை குருப்பட்டத்திற்கு தயாரித்து குருக்களாக்கி இரகசியமாக இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தனர் ஆனால் அப்படி இரகசியமாக இங்கிலாந்து நாட்டுக்குள் வரும் குருக்களை இனங்கண்டு கைது செய்ய அரசியின் ஒற்றர்கள் கடற்கரையோரம் நிலை கொண்டிருந்தது வேறு விஷயம்!

அப்படிப்பட்ட குருமடத்தில் குருத்துவ பயிற்சி பெற காம்பியனின் உற்ற தோழரான கிரகோரி மார்டின் என்பவர் பிரான்ஸ் நாடு சென்றார். குருமடம் சென்ற அவர் நல்ல உள்ளம் கொண்ட காம்பியனையும் அங்கே அழைத்தார். அதுபோலவே, மற்றொருவர் அர்ச். துர்தி பார்ட் மாயின் என்பவரும் நாடு கடந்து சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து, பிடிபட்டு வேதசாட்சியம் அடைந்தார் என்பது வேறு வரலாறு. இவற்றால் உள்ளம் கவரப்பட்டு உறுதியடைத்த காம்பியன் பாப்பரசருக்கு விரோதமாக தாம் கொடுத்த சத்திய பிரமாணத்திற்கு மிகவும் மனஸ்தாபப்பட்டு வருந்த தன்னை முழுவதும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்க விரும்பினார்.

அச்சமயத்தில்தான் தம்மை ஆங்கிலிக்கன் சபையில் தீயாக்கோன் பட்டம் பெறத் தூண்டிய ரிச்சர்டு ஷென்னே (Richard Cheney) என்ற ஆயருக்கு நீண்ட கடிதம் எழுதினார். கத்தோலிக்க மணப்பான்மை கொண்ட அந்த ஆயர், ஆங்கிலிக்கன் சபையில் பிஷப்பாக இருந்தார். கத்தோலிக்கரான எட்மண்ட் காம்பியன் அவரது தவறான கொள்கையைச் சுட்டிக்காட்டி கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் "60 வயதாகிவிட்ட தாங்கள், நிலையில்லாத உடல் ஆரோக்கியத்தையும், தப்பறையின் மீது வெறுப்பையும் கத்தோலிக்கர்கள் மீது இரக்கமும் கொண்டவர். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஆயர் என்று அழைக்கப்பட்டீர்கள். உமது மௌனத்தால், நீங்கள் விரும்பாத, சாபத்துக்குரிய புராட்டஸ்டாண்ட் பிரிவினையையும் வளர்த்தீர்களே. அதனால் கிறீஸ்துவின் வரப்பிரசாதங்களை பெற முடியாது இருக்கிறீர்கள். தாங்கள் எல்லா ஜெபங்களுடையவும், பலிபூசைகளுடையவும், தேவ திரவிய அனுமானங்களுடையவும் நன்மைகளையும், பலன்களையும் இழந்து போய் இருக்கிறீர்களே! பதீதமதத்தில் என்னநான் எதிர்ப்பார்க்கிறீர்கள்? உமது வாழ்வுதான் என்ன? எதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள்....." என்றெல்லாம் எழுதி அவரை தப்பறையிலிருந்து மீட்டு சத்திய வேதமான கத்தோலிக்க திருச்சபைக்கு வரத் தூண்டினார். ஆனால் அந்தோ! ஆயர் ஷென்னே எந்த முடிவையும் எடுக்காமல் மரணமடைந்தார்!

கத்தோலிக்கத் திருச்சபையில் உட்பட்ட எட்மண்ட காம்பியனின் வாழ்வு தலைகீழாக மாறிப் போனது!

எட்மண்ட் காம்பியன் கத்தோலிக்கராக மனத்திரும்பியதும் தாம்பெரிதும் நேசிந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். அயர்லாந்துக்குச் சென்று அங்கே இரண்டு வருடம் தமது சுத்தோலிக்க நண்பரது குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அந்த நாட்களில் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் திளைத்து புண்ணியத்தில் உயர்ந்தார். அக்குடும்பத்தின் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவந்த எட்மண்ட், டப்ளின் நகரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு கத்தோலிக்க நாடான அயர்லாந்தின் வரலாறு ஒன்றையும் எழுதி அதற்குப் புகழ் சேர்த்தார்.

பின்னர் தமது அழைத்தல் குருவாவதே என்பதை உணர்ந்தவராக துவேக்குச் (Douay) சென்று அங்கே குரு மடத்தில் சேர்ந்தார். "உப தியாக்கோன் பட்டம்" பெற்ற பின் உரோமைக்குச் சென்று அங்கே சேசு சபையில் சேர்ந்தார். பிராக் நகருக்கு நவசந்தியாச வாழ்வுக்காக அனுப்பப்பட்ட எட்மண்ட் காம்பியன் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1578 செப்டம்பர் மாதத்தில் குருப்பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் ஜெர்மன் நாட்டில் புராட்டஸ்டாண்டாரிடையே சேசு சபையினர் ஆற்றிய அரிய காரியங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும் அறிந்த பாப்பரசர் 13-ம் கிரகோரியார் சேசு சபையினரை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்தார். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் எட்மண்ட் காம்பியனும் ஒருவராக இருந்தார்.

இங்கிலாந்துக்கான பயணத்தை துவக்கும் முந்தின நாள் இரவில் அவர் தங்கியிருந்த அறையின் சுவரில் “எட்மண்ட் காம்பியன் வேதசாட்சி" என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். தேவ ஏவுதலால் ஒரு குருவானவர் அப்படி எழுதியிருந்த அந்த வாக்கு நம் புனிதரின் வாழ்வில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது!

1580-ம் ஆண்டு ரோமையிலிருத்து ஜெனிவா நகர் வழியாக இங்கிலாந்து வந்த அவர்கள், திருச்சபையின் எதிரிகளால் அடையாளம் காணமுடியாத வகையில் மாறுவேடம் பூண்டு சென்றனர். அங்கே, இங்கிலாந்தில் கத்தோலிக்க விசுவாசம் நசிந்துபோய் அழித்துகொண்டிகுந்தது! கிறீஸ்தவர்கள் கலாபனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள். "குருக்களே இங்கிலாந்து நாட்டில் இல்லை!” என்ற நிலை ஏற்பட தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்ற முடியாத அவலம் ஏற்பட்டது. சில குருக்கள் மாறுவேடம் பூண்டு விசுவாசிகளின் வீடுகளில் தங்கி, அரசாங்க வீரர்கள் தேடிவந்தபோது பிடிபடாமல் தப்பிக்க பதுங்கு குழிகளில் தங்கினர். இதற்காக ஒவ்வொரு கத் இல்லத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. குருக்கள் அவற்றில் மறைந்து வாழ்த்து குறிப்பிட்ட நாட்களில் அங்கே கூடும் விசுவாசிகளுக்கு திவ்விய பலிபூசை, பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி ஞான வாழ்வில் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை பிடிக்கவென்று ஒற்றர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் "குரு வேட்டையாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் அர்ச். எட்மண்ட் காம்பியன் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே தமது நோக்கத்தை குறிப்பிட்டு கத்தோலிக்க சத்தியங்களை ஆதரித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "எனது அருமை நாட்டு மக்களின் ஞான ஆபத்துக்களையும், தீமைகளையும் மற்றும் அவர்களது ஆங்கார அறியாமையையும் அகற்றி அவர்களைக் காப்பதுவே தமது நோக்கம்" என்று தெரிவித்திருந்தார். காம்பியனும் அவரது சக குருவானவரும் இங்கிலாந்துக்குள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் எப்படியோ சுங்கத்துறையினருக்குத் தெரியவர, துறைமுகம் எங்கும் ஒற்றர்களின் செயல்பாடு அதிகரித்திருந்தது. ஆனாலும் அவர்களது கண்களுக்குத் தப்பி பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்து மக்களுக்கு விசுவாச சத்தியங்களைப் போதித்து, கத்தோலிக்க விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வந்தனர். அநேகர் மனத்திரும்பினார்கள். இதைப்பற்றி சேசுசபை தலைவருக்கு காம்பியன் எழுதிய கடிதத்தில் "...நான் நாள்தோறும் அங்குமிங்கும் போய் பணியாற்றி வருகிறேன். அறுவடை உண்மையாகவே தாராளமாயிருக்கிறது. திருச்சபையின் எதிரிகள் கையில் அகப்பட வெகுநாள் பிடிக்காது. தான் என்னை மறைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் உடை எனக்கே சிரிப்பூட்டுகிறது. பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது..." என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இங்கிலாத்தில் மறைவாக அப்போஸ்தல அலுவவில் ஈடுபட்டுவந்த எட்மண்ட் காம்பியன் புராட்டஸ்டாண்ட் பதிதத்தைக் தாக்கி, கண்டித்து “பத்துக் காரணங்கள்" என்ற அரிய நூலை லத்தீன் மொழியில் எழுதினார். அது. எதிரிகளால் பிடிபடும் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தைப் பற்றி விசாரிக்கும்போது கூற வேண்டிய பதில்கள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. சத்திய வேதத்தை ஆதரித்து ஆங்கிளிக்கள் புராட்டஸ்டாண்ட் பதிதத்தை கண்டிப்பானவராகவும் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூல் 1587 ஜூன் 27-ம் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆலய இருக்கைகளில் 400 பிரதிகள் வைக்கப்பட்டன. அதோடு ஐரோப்பிய நாடுகளிலும்கூட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 48 பதிப்புகளில் வெளியிடப்பட்டது. இது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே, அந்த நூலை எழுதிய எட்மண்ட் காம்பியனை பிடிப்பதற்கு ஒற்றர்களையும், குரு வேட்டைக்காரர்களையும் முழுவீச்சுடன் இறக்கிவிட்டது.

நூல் வெளியிடப்பட்டதும் வேறு எங்காவது மறைவாக சிலகாலம் போய்விடுவது நலம் பயக்கும் என்று எண்ணிய காம்பியனும் அவரது சகக்குருவானவரும் நார்ஃபக் (Norfolk) நகருக்குப் பயணமானார்கள். வழியில் Lyford Grange என்ற ஊர் வரவே அங்கே சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். ஏனெனில் அவ்வூர் செல்வந்தரான திரு.யாட் (Yate) என்பவர் தமது சுத். விசுவாசத்திற்காக லண்டனில் சிறை தண்டனை அனுபவித்தவர். அவரது வயது முதிர்ந்த தாய் தன் வீட்டில் நிரந்தரமாக 2 குருக்களையும் சில சுன்னியர்களையும் தங்கவைத்து பராமரித்து வந்தாள். எனவே அங்கே தங்கி அவரை பாராட்டி விசுவாசிகளை உற்சாகப்படுத்திவிட்டுச் செல்ல முடிவெடுத்தார். புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன் சுவாமி மாறுவேடத்தில் இரகசியமாக வந்தாலும் அவரது வருகை சுற்றுவட்டாரத்திலுள்ள கத். விசுவாசிகளிடையே பரவியது. அரசின் ஒற்றர்களுக்கும் இச்செய்தி எட்டவே அக்குடும்பத்தின் முன்னான் வேலையாளான ஜார்ஜ் எலியாட் என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.

காம்பியன் பட்ட வாதனை!

பிடிபட்ட சங், எட்மண்ட் காம்பியன் சுவாமி லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு அதன் வீதிகளில் பகிரங்கமாக இழுத்துச் செல்லப்பட்டார். முன்னொரு காலத்தில் இதே விதிகளில் சிறந்த கல்வியாளர், இங்கிலாந்தின் இரத்தினம் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் இன்று தாம் கொண்ட சத்திய விசுவாசத்திற்காக கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டு லண்டன் டவர் சிறையில் ஒரு சிறு இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தேம்ஸ் நதிக்கரைக்கு அப்பால் உள்ள லெய்செஸ்டர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எலிசபெத் ராணி வருகை தந்தபோது தாம் நிகழ்த்திய வரவேற்புரையை பாராட்டி தமக்கு ஆதரவாளராக மாறிப்போன அமைச்சர் வெய்செஸ்டர் பிரபுவின் (Earl of Leicester) இல்லம் தான் அது! அங்கே தன் முன்னால் நிற்கும் நபரைக் கண்டு வியந்துபோன எட்மண்ட் காம்பியன் தன் கண்ணை தான் நம்பாது திகைத்தார். ஆம்! அவர் முன்பு நாட்டையாளும் எலிசபெத் அரசியே நின்றிருந்தான். ஒரு காலத்தில் தம்மால் “இங்கிலாந்தின் இரத்தினம்" என்று அழைக்கப்பட்டவர் இன்று தனக்கு எதிராக, தமது வேதத்திற்காக கைதியாக நிற்பதைக் கண்டு முகம் சுளித்தாள் அரசி. ஆனாலும் மிகவும் நயமாக அவரைப் பாராட்டியவள், பிடிவாதத்தை விடுத்து அரசியான தன்னை திருச்சபையின் தலைவியாக ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அபத்த கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக மறுத்துவிடும்படியாக கேட்டாள். அப்படி அவர் செய்தால், ஆங்கிலிக்கன் சபையில் மிக உயர்ந்த அந்தஸ்து அவருக்காகக் காத்திருக்கிறது என்ற ஆசை வார்த்தைகள் கூறினாள். ஆனால் அரசியின் எந்த வார்த்தைகளுக்கும் பணியாமல் தமது விசுவாசத்தில் உறுதியாக நின்ற காம்பியனைக் கண்டு வியந்தவனாக அவரைவிட்டு அகன்றாள்.

ஐந்து நாட்களிலும் அவர் தமது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை 3 தடவைகள் வாதைக் கருளியால் துன்புறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி இரும்பு சட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக இழுத்துக் கொடுமைப்படுத்தப்பட்டார். கை கால்களின் மூட்டுகளும் எலும்புகளும் பிய்ந்து நெட்டுருகிப்போய் கொடூர வேதனையளித்தது. அத்தனையையும் தாங்கிக் கொண்ட எட்மண்ட் காம்பியன் தேவ உதவிக்காக மன்றாடினார் தமது அனைத்து வேதனைகளையும் இங்கிலாந்து தேசம் மீண்டும் சத்திய வேதத்திற்கு வர ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்.

இத்தகைய வாதை நடந்துகொண்டிருக்கும் போதே நான்கு தடவைகள் வேத தர்க்க விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டார். தான் இருந்த நிலையிலும் அவர்களுக்கு தக்கப் பதில் தந்து முறியடித்தார். தம்மைத் துன்புறுத்தியவர்களிடமும் வெகு சாந்தத்தோடு அவர் நடந்துகொண்ட முறையைக் கண்டு வியந்துபோன பிலிப்பு ஹோவர்ட் (Philip Howard) மற்றும்  (Earl of Arundal) மனந்திரும்பினார்கள்.

மீண்டும் வாதைக் கருவியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காம்பியன் சுவாமி மீது குற்றப்படுத்த ஒன்றும் கிடைக்காததால் அவர் இங்கிலாந்தில் புரட்சி ஒன்றை உண்டாக்கும் கருத்தோடு நாட்டிற்குள் வந்ததாக கதைக் கட்டினார்கள். ஆனால் அதனை தமது வாதத்தால் தூளாக்கிய காம்பியன் "நாங்கள் எலிசபெத் அரசிக்கு விரோதமாக எக்குற்றமும் செய்ததில்லை. உங்களுக்கு குற்றமாகத் தெரிவது நாங்கள் எங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பது மட்டுமே!” என்று எடுத்துக் கூறினார்.

தமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் முன்பாக அங்கிருந்த நீதிபதிகளை நோக்கி, "எங்களை இப்போது கண்டனத்துக்கு உள்ளாக்கும் நீங்கள், உங்கள் முன்னோர்கள் அனைவரையுமே கண்டனத்துக்குள்ளாக்குகிறீர்கள். அந்த முன்னோர்களின் தகுதியற்ற வாரிசுகளாக இப்போதுள்ள உங்களால் நாங்கள் கண்டனத்துக்குள்ளாவது எங்களுக்கு மகிழ்ச்சியும் மகிமையுமேயாகும். சர்வேசுரன் எப்போதும் இருக்கிறார். உங்கள் வாரிசுகளும் இப்போது நீங்கள் செய்வதைப் பார்ப்பார்கள். உங்கள் மீது அவர்களும் சர்வேசுரனும் தரும் தீர்ப்பு ஒருநாளும் தவறாது உண்மையாகவேயிருக்கும்" என்று கூறினார். காம்பியன் பிறரைப் போல் அல்லாமல் அரசியின் தனிப்பட்ட அரச அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மரண தீர்ப்பு வழங்கப்பட்டார். அப்போது அங்கே வந்த, தன்னைக் காட்டிக்கொடுத்த எலியட் மற்றும் ஹாப்டன் என்பவர்கள் புனிதரின் அவலநிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். அவர்களை மன்னித்து விட்டதாக புனிதர் அறிவித்தார்.

கொலையாளி தன் வேலையைச் செய்வதற்கு முன்பாக, எட்மண்ட் காம்பியன் சுற்றியிருந்த மக்களைப் பார்த்து, "உங்கள் அரசியும், என் அரசியுமான அம்மையாருக்காக வேண்டுகிறேன். நீடித்த ஆயுளும், எல்லா நலனும் அவர்களுக்கு உண்டாவதாக" என்று ஜெபித்தார். அவரும் அவரோடு தீர்ப்பிடப்பட்ட குருக்களும் வழக்கம்போல் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டார்கள். முதலில் தூக்கிலிடப்பட்டு, உடல் கீழே விழத்தாட்டப் பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு, உடல் துண்டுதுண்டாக பிரிக்கப்பட்டார்கள்.

St. Henry Walpole
அப்போது வெட்டப்பட்ட புனித எட்மண்ட காம்பியனின் இரத்தத்துளி ஒன்று அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றி வால்ப்போல் என்ற இளைஞன் மீது சிதறி விழுந்தது. அதன் பலனாய் அவரும் பின்னாளில் சேசு சபையில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேதசாட்சிய வரம் பெற்றார்! 

வேதசாட்சியான எட்மண்ட் காம்பியனுக்கு 1970-ம் ஆண்டில் அர்ச்சியசிஷ்டப் பட்டம் வழங்கப்பட்டது!

அர்ச். எட்மண்ட் காம்பியனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!



Download Tamil Christmas songs