Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 10 ஜனவரி, 2024

அருட்கருவிகள் - அர்ச்சியசிஷ்ட எண்ணெய் (Holy Oils)

 அர்ச்சியசிஷ்ட எண்ணெய்

VI நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941











ருடந்தோறும் பெரிய வியாழக்கிழமை அன்று ஒவ்வொரு மேற்றிராசனக் கோவிலிலும் வெகு நேர்த்தியும் ஆடம்பரமுமான சடங்கு ஒன்று நடை பெறுகிறது. அன்று முதல் அடுத்த வருடம் பெரிய வியாழக்கிழமை வரையிலும் உள்ள நாட்களில், தேவதிரவிய அநுமா னங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்களையும் பொருட்களையும் அர்ச்சிக்கும் பலவித சடங்குகளிலும் உபயோகிக்க வேண்டிய எண்ணெயை இத்தினத்தில் மேற்றிராணியார் மந்திரிக்கிறார்.

எண்ணெய் மந்திரிக்கும் சடங்கில் பலவித ஞான கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. இச்சடங்குக்கு குருக்கள் அநேகர் தேவை. ஏனெனில், அர்ச்சியசிஷ்ட எண்ணெய் திருச்சபை சடங்கு முறையில் உபயோகிக்கிற மற்றப் பொருட்களையெல்லாம்விட அதிக முக்கிய மானது. ஞானஸ்நானம், உறுதிபூசுதல், குருத்துவம், அவஸ்தைப் பூசுதல் ஆகிய இந்நான்கு தேவதிரவிய அநுமானங்களிலும் அர்ச்சிய சிஷ்ட எண்ணெய் பிரயோகிக்கப்படுகிறது. ஆகையால், அதன் தன்மை, பயன், கருத்து முதலியவைகளை அறிந்திருப்பது மிகவும் பிரயோசனமாய் இருக்கும்.

எண்ணெய் உபயோகத்தின் கருத்து: 

கீழ்த்திசை நாடுகளிலும், ஐரோப்பாவின் தென் பாகங் களிலும் ஒலிவ எண்ணெய் அநுதினமும் உபயோகிக்கப்படுகிறது. போஜன பதார்த்தங்களை சமைப்பதற்கு உதவுகிறது மன்றி, மருந்தாகவும் பயன் படுகிறது. முந்தின காலங்களில் தீபங்களுக்கு விசேஷமாய் உபயோகப் படுத்தப்பட்டது இந்த எண்ணெயே. பூர்வத்தில், மல்லக்கச் செட்டிகள், தசை வளம் பெறுவதற்காக இந்த எண்ணெயை உபயோகித்தார்கள். இப்போது கூறின உபயோகங்களை அநுசரித்துத் திருச்சபை ஞான உணவையும், மருந்தையும், அருட்பிரகாசத்தையும், ஞான வல்லபத்தையும் குறிப்பிடுவதற்காக, எண்ணெயை உபயோகிக்கிறது. ஞான வல்லபத்தை அளிக்கும் குறியாக எண்ணெயை உபயோகிப்பது வெகு பொருத்தமுள்ள தென்பதின் நிமித்தம், ஜீவியருக்குமட்டுமின்றி ஜீவனற்றவைகளாகிய மணிகள், பாத்திரங்கள், முதலியவைகளுக்கும் எண்ணெய் பூசி அர்ச்சிப்பது திருச்சபையில் ஏற்படலாயிற்று.

பெரிய வியாழக்கிழமையில் மந்திரிக்கிற எண்ணெய் மூவகைப் படும். ஞான தீட்சைத் தைலம், பரிமளத் தைலம், வியாதியஸ்தர் தைலம். இம்மூன்றும் ஒலிவ எண்ணெய்தான். ஆனால் பரிமளத் தைலத்தில் பால்சம் என்னும் பரிமளவர்க்கம் கலந்திருக்கிறது. மேற்றிராணியார் இம்மூவித எண்ணெய் ஒவ்வொன்றையும் அததற்குரிய விசேஷ ஜெபங்கள் சொல்லி மந்திரிக்கிறார்.

1. ஞானதீட்சைத் தைலம்: 

இந்த அர்ச்சியசிஷ்ட எண்ணெய் விசேஷமாய் ஞானஸ்தானம் பெறப் போகிறவனுடைய நெஞ்சிலும் முதுகிலும் பூகவதற்கு உபயோகப் படுவதினால் இந்தப் பெயர் உண்டாயிற்று. ஞானஸ்நான தீர்த்தம் மந்திரிப்பதற்கும், கோவில் அபிஷேகத்திற்கும், பீடம் அல்லது அர்ச்சியசிஷ்ட கல் மந்திரிப் பதற்கும், குருப்பட்டம் கொடுப்பதற்கும், கத்தோலிக்க இராஜா அல்லது இராணியின் பட்டாபிஷேகத்திற்கும் இந்த எண்ணெய்தான் பிரயோகிக்கப்படுகிறது.

2. பரிமளத் தைலம்: 

முன் கூறிய வண்ணம் பால்சம் என்னும் பரிமளவர்க்கம் இதில் கலந்திருப்பதினால் இதற்கு இப்பெயர் கொடுக்கலாயிற்று. இந்தத் தைலத்தில் பால்சம் கலக்கிற வழக்கம் ஆறாவது நாற்றாண்டில் ஆரம்பமானது. யூதேயா, அரேபியா நாடுகளில் வளருகிற தைல பசையுள்ள ஓர் வகை மரங்களிலிருந்து உண்டாகிற பிசின் போன்ற பொருள்தான் பால்சம் என்று கூறப்படுகிறது. தேவதிரவிய அநுமானத்தால் அருளப்படுகிற வரப்பிரசாதத்துக்கு எண்ணெய் அடையாளமாய் இருப்பது போல், பாவ நாற்றமின்றி புண்ணிய நறுமணம் கமழுவதற்குப் பால்சம் அடையாளமாயிருக்கிறது. பரிமளத் தைலம் என்னும் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் விசேஷமாய் உறுதிபூசுதல் கொடுப்பதற்கு உபயோகப்படுகிறது. உறுதிபூசுதல் பெறுகிறவனுடைய நெற்றியில் இந்தத் தைலத்தால் தான் மேற்றிராணியார் சிலுவை அடையாளமாகப் பூசுகிறார். ஞானஸ் நானத்தில் தண்ணீர் வார்த்தவுடன், உச்சந்தலையில் தடவப் படுவதும் இதுவே. மேற்றிராணியார் அபிஷேகத்திலும் கோவில் அபிஷே கத்திலும், பாத்திரங்கள், பத்தேன, ஞானஸ்நானத் தீர்த்தம், கோவில் மணிகள் முதலியவைகளை மத்திரிப்பதிலும் இது உபயோகிக் கப்படுகிறது.

3. வியாதியஸ்தர் தைலம்: 

அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமாய் வேண்டிய பொருள் இது. மணி மந்திரிப்பதிலும் இது தேவை. இலத்தீன் ரீதியைப் பின்பற்றுகிற ஆலயங்களில் இந்த எண்ணெய் யாதொரு கலப்பின்றி சுத்தமானதாயிருக்கும். கீழ் நாட்டு ரீதியைப் பின்பற்றுகிற சில சபைகளில் இந்த எண்ணெயில் சிறிதளவு இரசம் அல்லது சாம்பல் கலப்பதுண்டு.

அவஸ்தைப்பூசுதலில் எண்ணெய் உபயோகிப்பது அப்போஸ்தலர் காலந்தொட்டு நடந்தேறி வருகிறது என்பதற்கு அர்ச். இயாகப்பர் நிருபமே போதுமான அத்தாட்சி, அவர் சொல்வதாவது: “உங்களில் எவனாவது லியாதியாயிருந்தால், குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தால் அவன் பேரில் தைலம் பூசி பிரார்த்திப்பார்களாக." அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமான பொருளாக இதை ஏற்படுத்தினவர் நமது திவ்விய இரட்சகரே, ஏனெனில் தேவதிரவிய அநுமானங்களை ஏற்படுத்தின ஆண்டவர் தாமே அவைகளுக்குரிய பொருளையும் திட்டம் பண்ணியிருக் கிறாரே யொழிய திருச்சபைக்கு இவ்விதம் செய்ய அதிகாரமில்லை.

பூர்வீக அநுஷ்டானம்: 

ஞானஸ்தானம், குருப்பட்டம், கோவில் அபிஷேகம் முதலியவைகளில் எண்ணெய் உபயோகிக்கும் வழக்கம் பெரும்பாலும் அப்போஸ்தலர் காலத்திலேயே உண்டாயிற்று என்று சொல்ல நியாயமுண்டு. பழைய ஏற்பாட்டில், குருக்களையும் இராஜாக்களையும் அபிஷேகம் பண்ணுவதிலும், பலிகளிலும், சில சுத்திகரச் சடங்குகளிலும் எண்ணெய்ப் பிரயோகம் வெகு சாதராணமாயிருந்தது. திருச்சபை சடங்கு முறைகளில் எண்ணெய்ப் பிரயோகம் உண்டாவதற்கு இதுவே ஆதாரம் என்று சொல்லத்தகும். 

ஞானஸ்நான தீர்த்தம் மந்திரிப்பது 2-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்ட தாயினும், அதில் எண்ணெய் உபயோகிக்கத் துவக்கினது பிற்காலங் களில்தான். 4-ம் நூற்றாண்டிலிருந்தே. பெரிய வியாழக்கிழமையில் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் மந்திரிக்கிற வழக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அக்காலங்களில் ஞான தீட்சைத் தைலமும் பரிமளத் தைலமும் மாத்திரம் பெரிய வியாழக்கிழமையில் மந்திரிக் கப்பட்டன. வியாதியஸ்தர் தைலத்தை அவசியத்துக்குத் தகுந்தாற்போல் அந்நாளிலாவது, வேறு தினங்களிலாவது, சில இடங்களில் குருக்களே மந்திரித்து வந்தார்கள். இப்போது இந்த வழக்கம் நீக்கப்பட்டு திருச்சபையின் சட்டப்படி மேற்றிராணியார் மாத்திரம் பெரிய வியாழக்கிழமையில் இம்மூன்றையும் மந்திரிப்பதற்கு அதிகாரம் பெற்றவராய் இருக்கிறார்.

அர்ச்சியசிஷ்ட எண்ணெய் மந்திரிக்கும் சடங்கு:

மேற்றிராணியாரும் அவரது பரிசாரகருமல்லாமல், கூடுமான இடங்களில் ஒழுங்குப் பிரகாரம், பன்னிரண்டு குருக்களும், ஏழு தியாக்கோன்மாரும், ஏழு சப்தியாக்கோன் மாரும், இச்சடங்கில் கலந்து கொள்வார்கள். மேற்றிராணியார் வெள்ளை அல்லது தங்க ஆயத்தம் அணிந்து வழக்கம்போல் பூசை செய்வார். நடுப்பூசைக்குப் பிறகு பரலோக மந்திரம் துவக்குமுன், பிரத்தியேகமாய்த் தயாரித்து வைத்திருக்கிற மேசை முன்பாக நின்று, வியாதியஸ்தர் தைலம் கொண்டுவரக் கற்பிப்பார். அப்போது சப்தியாக்கோன் ஒருவர் அதைக் கொண்டுவந்து அவர் எதிரில் வைப்பார். மேற்றிராணியார் துஷ்ட அரூபி விலகிப் போவதற்காகச் சொல்லும் ஜெபத்தை அதன் பேரில் உச்சரித்து, ஆத்தும சரீர ஆறுதலுக்காக திவ்விய இஸ்பிரித்து சாந்துவானவர் அதன்மேல் எழுத்தருளி வரும்படி மன்றாடி, சகலவித வியாதி நோவு பலவீனத்துக்கு அது பரம மருந்தாக வேண்டுமென்று பிரார்த்திக்கிறார். 

பின்னர், திவ்விய பூசையைத் தொடர்ந்து நடத்தி நற்கருணை உட்கொண்டபின், பரிமளத் தைலத்தையும் ஞானதீட்சைத் தைலத்தையும் மந்திரிப்பார். இரண்டு தியாக்கோன்மார் தோள்பட்டு (Humeral Veil) அணிந்து, இவ்விரண்டு தைலத்தையும், சப்தியாக்கோன் பால்சத்தையும் சக்கிரீஸ்தியிலிருந்து எடுத்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் முன்பாக, சுற்றுப்பிரகார சிலுவையுடன் ஒரு சப்தியாக்கோனும், எரிகிற மெழுகுதிரிகளுடன் இரு சீடர்களும், மேலே சொல்லப்பட்ட குருக்கள், தியாக்கோன்மார், சப்தியாக்கோன்மார் சகலரும் நடந்து செல்ல, பாடகர் இருவர் சில ஸ்துதிகளைப் பாடிக்கொண்டு போவார்கள். மேற்றிராணியார் பால்சத்தையும் மந்திரித்து, அதோடு சிறிது எண்ணெயைக் கலந்து யார் யார் இந்த எண்ணெயால் பூசப்படுகிறார்களோ அவர்கள் மோட்ச இராச்சி யத்தில் பங்கடையும்படி அவர்களது உள்ளமும் பூசப்படுவதாக என்னும் கருத்துள்ள ஒரு ஜெபத்தைச் சொல்லி எண்ணெயில் மும்முறை சுவாசிப்பார். 

அவருக்குப்பின், பன்னிரு குருக்களும் அவ்வாறே சுவாசிப்பார்கள். துஷ்ட அரூபி விலகிப் போவதற்காக ஜெபம் சொன்னபிறகு பழைய ஆகமத்தில் இருந்த எண்ணெய்ப் பிரயோகங்களை விவரித்துக் காட்டி, தண்ணீராலும் இஸ்பிரித்துசாந்துவினாலும் நலமாய்ப் பிறந்தவர்களின் இரட்சண்யத் தைலமாக உபயோகிக்கப் போகிற இந்த அர்ச்சியசிஷ்ட எண்ணெயை சர்வேசுரன் ஆசீர்வதித்தருள வேண்டுமென்று மன்றாடுகிற, முகவுரையை மேற்றிராணியார் பாடுவார். அதன்முடிவில், எண்ணெயும். பால்சமும் கலந்ததை, பரிமளத் தைலம் இருக்கும் பாத்திரத்தில் வார்த்து, பரிசுத்த பரிமளத்தைலமே வாழ்க என்று மும்முறை பாடி பாத்திரத்தின் ஓரத்தை முத்தி செய்வார். பன்னிரு குருக்களும் அவ்வாறே பாடி முழந்தாட்படியிட்டு வணங்கி முத்தி செய்வார்கள். இவ்வண்ணமே ஞானதீட்சை தைலமும் அதற்குரிய வேறு ஜெபங்களுடன் மந்திரிக்கப்படும். இறுதியில்,

முன்போல் தியாக்கோன்மார் ஆடம்பரமாய் எண்ணெயை எடுத்துக்கொண்டு சக்ரீஸ்தியில் வைப்பார்கள்.

திருச்சபை அர்ச்சியசிஷ்ட எண்ணெயை எவ்வளவு மதிக்கிறதென்று அறிவதற்கு இப்போது சொன்ன சுருக்கமான விபரம் போதுமானதென்று நினைக்கிறோம். ஒவ்வொரு பங்கு கோவிலிலும், சக்ரீஸ்தி சுவரில் அமைத்திருக்கும் பெட்டியில் பத்திரமாய் இந்த எண்ணெயை வைத்திருப்பது வழக்கம். குருக்களல்லாதார் எவரும் இதைத் தொடுவது முறையல்ல. நமது ஆத்தும இரட்சண்யத்துக்கு அவசியமான வரங்களை அடைவதற்காக, தேவதிரவிய அநுமானத்தில் உபயோகிக்கப்படும் எண்ணெயை சங்கையுடன் கையாள வேண்டுமென்பது திருச்சபையின் கருத்து. இதனாலேயே இதை அர்ச்சியசிஷ்ட எண்ணெய் என்று சொல்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக