Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக