Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

saints lives in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
saints lives in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)

 தன்னையே பலியாக்கியவர்



"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.

1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும்  தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.

கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.

"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.

சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.

திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.

"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்

இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.

"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.

பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"

"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.

நான் ஒரு குரு

ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.

அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.

“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.

சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.

“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.

சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.

சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.

இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது


சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil


Life History of St. Maximillian Kolbe