Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 21 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - சிலுவையும் - பாடுபட்ட சுரூபமும் (Cross)

Source: Salve Regina May June -  12


சிலுவையும் பாடுபட்ட சுரூபமும்



நமது திவ்விய இரட்சர் சிலுவை மரத்தில் அறையுண்ட பாவனையாய்ச் செய்த சுரூபம் பாடுபட்ட சுரூபம். எனப்படுகின்றது; சுரூபம் இல்லாத வெறுஞ் சிலுவைக்குச் சிலுவை என்று பெயர். கிறீஸ்துவ ஆராதனை ஸ்தலங்கள், பள்ளிக்கூடங்கள், தர்ம ஸ்தாபனங்கள் முதலியவைகளை இதர மத ஸ்தாபனங்களினின்று பிரித்துக்காட்டுகிற வெளி அடையாளம் சிலுவையே.

பூர்வீக காலங்களில், பெரும் குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வது அநேக நாடுகளில் வழக்கமாயிருந்தது. அதிக பழமையான வழக்கம் குற்றவாளியை ஓர் மரத்தில் ஆணிகளால் அல்லது கயிறுகளால் தொங்க விட்டு தூக்குப் போடுவதுதான். பின்னர் இரு மரத்துண்டுகளை உபயோகிக்கிற வழக்கம் ஏற்பட்டது. உரோமையர் அடிமைகளையும் சிலுவையில் அறைந்து கொல்வார்கள். இத்தகைய மரணத் தீர்ப்பு பெற்றவர்களின் கைகளைச் சிலுவையின் குறுக்குச் சட்டத்தில் விரித்து வைத்துக் கைகளையும் பாதங்களையும் இருப்பாணிகளால் சிலுவையோடு சேர்த்து அறைந்து தொங்கவிடுவார்கள். இது மிகவும் குரூரமான தண்டனை என்று சொல்லத் தேவையில்லை. நமது திவ்விய இரட்சகர் இப்போது சொன்ன குரூரமான விதமாய் அறையுண்டு மரித்தார்.

சிலுவையானது அக்காலங்களில் குரூர வாதனை செய்யும் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டாலும், அஞ்ஞானிகள் அதற்குச் சங்கை செலுத்திவந்தது குறிப்பிடத்தக்கது. அது சூரிய சுழற்சிக்கு அடையாளமாகவும் உயிருக்கு அறிகுறியாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. எஜிப்து தேசத்திலும் அசீரியா நாட்டிலும் சிலுவை உற்பத்தி, சக்திக்கு உருவமாக எண்ணப்பட்டது.

பௌத்த மதத்தினர் அதை மறு ஜீவியத்துக்கு அடையாளமாகக் கருதினதாகவும் சொல்கிறார்கள். ஆனால் நமது சிலுவைக்கும் அவர்கள் உபயோகித்த சிலுவைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பது உண்மை. ஆயினும் அந்த அஞ்ஞானிகள் அதே அடையாளத்தை இலௌகீக சீவியத்தின் குறியாகக் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு விசேஷந்தான். கிறீஸ்தவ வேதம் உரோமை இராச்சியம் முழுவதிலும் பரவத் துவக்கினதிலிருந்து, சிலுவையை விசுவாச சின்னமாகவும், பக்திக்குரிய பொருளாகவும், பகிரங்கமாய் எங்கும் உபயோகிக்கலானார்கள். திருச்சபை சிலுவையையும் பாடுபட்ட சுரூபத்தையும் மந்திரிப்பதற்கு விசேஷ ஜெபங்களை ஏற்படுத்தி, அவைகள் இரண்டையும் விசுவாசப் பற்றுதலோடு பிரயோகிக்கும்படி விசுவாசிகளைத் தூண்டினது.

மெய்யான சிலுவை:



நமது திவ்விய இரட்சகர் பாடுபட்ட சிலுவை இப்போது எங்கே இருக்கிறது? கொன்ஸ்தாந்தீன் மகா சக்கரவர்த்தியின் தாயாகிய ஹெலனம்மாள் 326-ம் ஆண்டில், எருசலேமுக்குத் திருயாத்திரையாகச் சென்றபொழுது, கல்வாரிமலையில் பல குழிகளைத் தோண்டிப் பரிசோதித்ததின் பயனாக மூன்று சிலுவைகள் அகப்பட்டன. அவைகளில் எது நமது திவ்விய இரட்சகருடையது என்று தெரிந்துகொள்ள இயலாததால் எருசலேம் நகர் மேற்றிராணியாராகிய மக்காரியுஸ் ஆண்டவர் சொன்ன யுத்திக்கிணங்கி, அந்தச் சிலுவைகள் ஒவ்வொன்றையும் வியாதியாயிருந்த ஓர் ஸ்திரியின்மேல் வைக்க, அவைகளில் ஒன்று அவளைத் தொட்டவுடன் அவள் திடீரெனப் புதுமையாய் சொஸ்தமடைந்ததினால், அச்சிலுவையே நமது திவ்விய இரட்சகர் பாடுபட்ட சிலுவை என்று தெரிந்துகொண்டார்கள். அந்த சிலுவையின் குறுக்குச் சட்டத்தை எருசலேமில் வைத்துவிட்டு, நீண்ட பாகத்தைக் கொன்ஸ்தாந்தீன்க்கு  (Constantinople) அனுப்பினார்கள். இதில் பெரிதான பாகம் சிறிது காலந்துக்குப் பிறகு உரோமைக்கு அனுப்பப்பட்டு பரிசுத்த சிலுவைக் கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. கொன்ஸ்தாந்தினோபிளில் இருந்த பாகத்தை 13-ம் நூற்றாண்டில் பிராஞ்சிய அரசராயிருந்த அர்ச். லூயிஸ் பாரீஸ் பட்டணத்துக்குக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். எருசலேமில் இருந்த பாகத்தை பெர்சியா தேசத்தார் அபகரித்துக் கொண்டுபோக. 628-ம் வருடத்தில் எராக்கிளியுஸ் (Heraclius) சக்கரவர்த்தி அதை மீட்டுக் கொண்டு வந்தார் ஆனால் முகமதியர் எருசலேமைத் தங்கள் வசமாக்கின பின், அது எங்கே போயிற்றென்று அறிய வழியில்லை.

ஆணிகள்:

நமது திவ்விய இரட்சகரை அறைந்த ஆணிகள் மூன்றா. நான்கா என்பதைப் பற்றி இன்னும் அபிப்பிராய பேதம் இருந்துவருகிறது. சில படங்களில், பாதங்களை அறைத்த ஆணி ஒன்றாகவும், வேறு சில பாடங்களில் இரண்டாகவும் காட்டியிருக்கிறது. பாதத்தைத் தாங்கும் பலகையொன்று சித்தரிக்கப்பட்ட படங்களில் பாதங்களை ஒன்றித்து ஒரே ஆணியால் அறைந்ததாகக் காட்டியிருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆணிகளைக் குறித்து அநேகர் பல சங்கதிகள் சொல்லிக் கொள்கிறார்கள். இவைகளையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை இல்லை. அவைகள் விசுவாச சத்தியங்கள் அல்ல. ஆயினும், பற்பல இடங்களில் மெய்யான சிலுவையின் துண்டுகள் இருக்கிறன்றனவென்று சொல்வதை நம்ப இடமுண்டு.

பாடுபட்ட சுரூபம்:

திவ்விய பூசை செய்யும் பீடத்தில் பாடுபட்ட கரூபம் இருக்க வேண்டும் என்பதை திருச்சபையின் கட்டளை, கல்வாரி மலையில் நடந்த பலியைத் தொடர்ந்து நடத்தும் பலியே திவ்விய பூசையாகயால், இந்தக் கட்டளையின் கருத்து வெளிப்படையாயிருக்கிறது. சுற்றுப்பிரகாரங்களின் முன்னணியில் கொண்டுபோவது வழக்கமாய்ப் பாடுபட்ட சுரூபமே. கத்தோலிக்க இல்லங்களில் இதைப் பகிரங்கமான இடத்தில் வைத்துச் சங்கிக்கவேண்டும் என்பது திருச்சபையின் விருப்பம். பாடுபட்ட சுரூபத்தின் தலைப்பில் I.N.R.I. என்னும் நான்கு எழுத்துக்கள் வரைந்திருப்பது வழக்கம். "சேசு நசரேன் யூதர்களின் இராஜா" என்ற அர்த்தம் கொண்ட Iesus Nazarenus Rex Iudaeorum என்னும் இலத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் இவை. பிலாத்துஸ் இட்ட கட்டளைப்படி நமதாண்டவரை அறைந்த சிலுவையின் தலைப்பில் இந்த வார்த்தைகள் செதுக்கப்பட்ட பலகை மாட்டியிருந்ததே இதற்குக் காரணம், சிலுவையின் அடிப்பாகத்தில் ஒரு மண்டையோடும் எழும்புகளும் காட்டியிருப்பதும் உண்டு. கல்வாரிமலை எபிரேய மொழியில் கோல்கோத்தா (Golgotha) என்பார்கள். இதற்கு அர்த்தம் “மண்டையோட்டின் ஸ்தலம்". ஆதி மனிதனாகிய ஆதாம் இவ்விடத்தில் புதைக்கப்பட்டாரென்று அவர் நிமித்தம் உண்டான பாவநோஷத்தை நீக்க வந்த சேசுநாதர் அதே இடத்தில் மரித்தார் என்றும் எடுத்துக் காட்டுவதற்காக, சிலுவையின் அடியில் ஆதாமின் மண்டை யோடு காட்டப்பட்டிருக்கிறதென்று சிவர் சொல்வார்கள்.

நன்றி: ஞானோபதேசக் கோர்வை: 3-ம் பாகம். பக். 281-284. கத்தோலிக்க களஞ்சியம் இரண்டாம் பதிப்பு. திருச்சி. 1941

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக