Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அன்னையின் அமலோற்பவத் திருநாள் - Feast of Our Lady of Immaculate Conception

அன்னையின் அமலோற்பவத் திருநாள்

(டிசம்பர்-8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி

கன்னிமரியம்மாள் கடவுளின் அன்னை ஆக வேண்டியவள் என்னும் ஒரு காரணமே அவள் ஜென்மப் பாவ மின்றி உற்பவித்திருக்கவேண்டும் என்பதற்குப் போதும். 



ஒரு கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக உற்பவிக்கத் திருவுளமிரங்குகிறார். இது மகத்தான ஒரு காரியம். இதை நிறைவேற்ற, நன் இருக்கையின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றிருந்த ஒருவரைத் தவிர, வேறு யாரையும் கடவுள் தேர்ந்தெடுக்க முடியாது. கடவுளது நரம்புகளில் ஓட இருந்த இரத்தம் அதன் ஊற்றிலே கறைப்பட்டிருக்கலாமா? நித்திய வார்த்தையானவர் மரியம்மாளின் உதரத்தை தன் இருப்பிடமாக்கத் தீர்மானித்தார். அந்தப் பரிசுத்த ஸ்தலத்தைப் பசாசு முதலில் தனது வாசஸ்தலமாக்க அவர் சம்மதிப்பாரா? பசாசாகிய சர்ப்பத்தின் தலையை நகக்க வேண்டிய அவன், அவள் ஒரு வினாடி முதலாய் மாசின் அதிகாரத்தில் இருப்பது நியாயமா? கடவுளுடையத் தாயாக வேண்டிய அவள் உற்பவித்த வினாடியிலிருந்தே தன் உயர்பதவிக்கு ஏற்புத் தூய்மையுள்ளவளாயிருந்தாள்; பரிசுத்தவதியாயிருந்தாள்.

அவள் கடவுளுடைய மாதாவாக வேண்டியவள். அதே கடவுளுடைய பிதா. பரலோக பிதாவே. தம்முடைய சுதனுக்கு மாதாவாக வேண்டியவளை, அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே, சம்மனசுக்களைவிட அதிகத் தூய்மையும், பரிசுத்தமுமுள்ளவளாக்கினார். நித்திய வார்த்தையானவர். தம் தாயாகும்படி ஒரு பெண்ணை நித்தியத்திலிருந்தே தேர்ந்தெடுத்தார். அவள் எப்பொழுதும் முற்றிலும் தூய்மையுள்ளவளாயிருக்கும்படிச் செய்தார். அவர் தம் தாய்க்குத் தம்மால் இயன்ற அளவு நன்மை செய்ய விரும்பினார். தம்முடன் அவள் ஒன்றித்துப் பசாசை முறியடித்து, இரட்சண்ய வேலையைச் செய்து முடிக்கவேண்டும். எனவே அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே அவளை அலங்கரித்தார், அவளிடம் பாவக்கறை படாதபடி பார்த்துக்கொண்டார். மரியாயிடமாய் மனித கடவுளை உருவாக்க வேண்டியவர் இஸ்பிரித்துசாந்து: இவ்விதம் மரியாயை அவர் தம் நேசபத்தினி என்னும் புதவிக்கு உயர்த்த இருந்தார். எனவே அவள் முற்றிலும் பரிசுத்தவதியாகவும். ஒரு சிருஷ்டி கொண்டிருக்க வேண்டிய புண்ணியங்கள் அனைத்தையும் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். ஆதலின் மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றி இருக்கவேண்டும் என்றும். சகல வரப்பிரசாதங்களையும் நிரம்ப கொண்டிருக்க வேண்டும் என்றும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், சம்மனசுக்களையும் விட அவள் அதிக பரிசுத்தவதியாயிருக்க வேண்டும் என்றும் கடவுள் நித்தியத்திளிருந்தே தீர்மானித்தார். இவ்விதம் மாதாவாக வேண்டிய அவளுக்கு அமலோற்பவம் என்னும் மகிமை வழங்கப்பட்டது. அகில உலக கத்தோலிக்கரும் அக மகிழ்ந்து ஆர்ப்பரிக்க, 9-ம் பத்திநாதர் பாப்பரசர். கன்னிமரி ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள் என்பது வேத சத்தியம் எனப் பிரகடனம் செய்தது முற்றிலும் நியாயமே. மரியாயின் கிரீடத்தை அலங்கரிக்கும் இப்புதிய இரத்தினத்தை முன்னிட்டு மரியாயை நாம் வாழ்ந்துவோமாக; திருச்சபை யுடன் சேர்ந்து, "என் நேசமுள்ளவளே, நீர் முற்றிலும் அழகு வாய்ந்தவள், ஜென்மப் பாவத்தின் தோஷம் உம்மிடத்தில் இருந்ததில்லை" என்போம்.

மரியாயின் புண்ணியங்கள் அனைத்திற்கும் ஆதித்தொடக்கம் அவளது அமல உற்பவமே மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே மிகப் பரிசுத்தவதி என்றாலும், அவள் மென்மேலும் தன்னை உயர்த்திக்கொண்டு வந்தாள். புண்ணியத்தில் அதிகரித்து வந்தாள். உதிக்கும்பொழுதே மிக்க பிரகாசத்துடன் இருந்த இந்த நட்சத்திரமானது விடாமல் எழும்பிக்கொண்டு வந்ததுடன், பரிசுத்ததனம் என்னும் கதிர்களை தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் வீசிவந்தது. சாதாரண மக்களின் ஆத்துமங்களில் இருக்கும் வரப்பிரசாதத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; நன்மை செய்ய ஆசிக்கும்போது எதிர்ப்பு உண்டாகிறது. தீமையை நோக்கி நாட்டம் இருக்கிறது. நாம் பிறந்ததிலிருந்தே இவ்விரண்டும் நம்மிடம் உண்டு. ஆனால் மாசின்றி உற்பவித்த மரியாயிடம், வரப்பிரசாதமானது எதிர்ப்பை காணவில்லை: ஆத்துமத்தின் சகல வாய்க்கால்களும் வரப்பிரசாதத்தை ஏற்க தயாராயிருந்தன. அவளது ஆத்துமத்தில் வரப்பிரசாதமானது தன்னைத் தடையின்றி பரப்புகிறது, வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சகல புண்ணியங்களும் அங்கு வளரச் செய்கிறது. ஆகவே, உள்ளும் புறமும் அழகுடன் இருந்த மரியம்மாள் மோட்சத்தின்முன், கண்ணைப்பறிக்கும் வெண்மையான அழகிய லீலி மலர்போல் காணப்பட்டாள். எளிய குடிசை என்றாலும் அரசர்களும் அதை மதிக்கச் செய்யும் தாழ்ச்சி அவளிடம் இருந்தது: வேதனையாலும் முறியடிக்க முடியாத பொறுமையை அவள் கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த இனிமையானது எந்த எதிர்ப்பாலும் பாதிக்கப்படவில்லை. ஆபத்து நேரத்திலும் அவள் மன அமைதியுடன் இருந்தாள். மலைகளை அசைக்கும் விசுவாசம் மாத்திரமல்ல, ஆனால் நித்திய வார்த்தையானவரை பரலோகத்திலிருந்து இறங்கச் செய்யும் விசுவாசம் அவளிடம் இருந்தது; அபிரகாமிடம் இருந்த நம்பிக்கையை விட அதிக வீரத்தனம் வாய்ந்த நம்பிக்கை மரியாயிடம் இருந்தது; அவளது சிநேகம், எரியும் சுவாலைக்குச் சமம். மரியாயின் பரிசுத்ததனம் எல்லா உள்ளங்களையும் பரவசப்படுத்தக்கூடியது. "பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள். நீயோ சகலரையும் மேற்கடந்தாய்” (1. 31:29), "மகா உன்னதமானவர் தமது வாசஸ்தலத்தை அர்ச்சித்தா?" (சங். 45:3). எனவே மரியாயின் உள்ளத்தை மிக மகிழ் விப்பது, அவள் பரலோக இராக்கினி கான்பதல்ல; பூலோக அரசி என்பதல்ல; ஆனால் அவளது அமல உற்பவமே. அதனாலேயே லூர்து கெபியில் அன்னையின் பெயரை பெர்நதெத் வினவியபோது. "அமலோற்பவம் நாமே" என அவள் பதிலளித்தாள்.

அன்னையைப் பின்பற்றி புண்ணிய பாதையில் நாம் எப்பொழுதும் முன்னேறிக்கொண்டிருக்கவேண்டும். முன்னேறியது போதுமென ஒருபோதும் சொல்லலாகாது. கடவுளுக்குப் பிரியப்படுவதே அனைத்திலும் நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.

பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மைத் தேடிவருகிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமலோற்பவமானது வரப்பிரசாதங்களின் களஞ்சியம்

 இயற்கையானது தாய்மாரின் உள்ளங்களில் ஒருவித பவவீனத்தை வைத்திருக்கிறது; அதனாலேயே, பிள்ளைகள் நாங்கள் கேட்பதற்கு அதிகமாகவே தாய்மாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதேபோல் மரியாயை அமலோற்பவி என வாழ்த்துகிறவர்களின் மீது ஓர் அன்புணர்ச்சி மரியாயின் உள்ளத்தில் இருக்கிறது. பாவச் சோதனையால் துன்புறுத்தப்பட்ட ஆத்துமங்கள் பாவமில்லாத மரியாயைக் கூவியழைத்திருக்கிறார்கள். அவர்கள் சோதனையில் வெற்றிபெற்றார்கள்; துன்புற்ற ஆத்துமங்கள் ஆறுதலடைந்தன; கலங்கியிருந்த உள்ளங்கள் அமைதியடைந்தன; தைரியமற்றிருந்தோர் திடன் பெற்றார்கள். முற்றுகையிடப்பட்ட பட்டணங்களின் வீடுகளின் கதவுகளில் "மரியாயி பாவமின்றி உற்பவித்தவள்” என எழுதியமையால் நாசத்தினின்று அவை காப்பாற்றப்பட்டன. நெருப்புக்கு இரையாக இருந்த கட்டிடங்கள் ஆயிரம் ஆபத்துக்களால் சூழப்பட்டிருந்த தனி நபர்கள் இந்த வார்த்தைகளை எழுதியதால் அல்லது அவற்றை உச்சரித்ததால் அழிவினின்று தப்பித்தார்கள். பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் உருவத்தைத் தாங்கிய சுரூபங்கள் உலகத்தை அதிசயங்களால் நிரப்பியிருக்கின்றன. அந்தச் சுரூபமானது துன்பங்களை விரட்டி யடித்திருக்கிறது. வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. பாவிகளை மனந்திருப்பியிருக்கிறது. இதனால் அது புதுமை சுரூபம் என எங்கும் அழைக்கப்படுகிறது. பாரீஸ் நகரின் மத்தியில் இருக்கும் ஜெய இராக்கினி மாதாக்கோவில் ஒரு காலத்தில் முற்றிலும் கைவிடப்பட்டதாயிருந்தது; அதை மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு அர்ப்பணம் செய்ததும், உலகிலேயே மிகப் பிரசித்திபெற்ற ஆலயமாயிற்று அது. மக்கள் அந்த ஆலயத்தை விரும்பி சந்திக் கிறார்கள். அநேக புதுமைகள் அங்கு நடக்கின்றன. 9-ம் பத்திநாதர் பாப்பானவர் எதிரிகளின் தாக்குதல்களின் மத்தியில் தம்மை, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயிக்கு ஒப்புக் கொடுத்தார். இதன் விளைவாக, பேரதிசயம் நடந்தது. கொடிய சத்துருக்களால் சூழப்பட்டிருந்த உரோமை நகரில் ஒரு பொதுச் சங்கத்தை நடத்தக்கூடியவரானார். என்னென்ன துன்பம் வந்தாலும், திருச்சபை அதையெல்லாம் மேற்கொள்ளும்; மாசற்ற மரியாயி வழியாக திருச்சபை வெற்றிப் பெற்றுவரும். நமக்குத் துன்பங்களும், சோதனைகளும் வரும்போது அமல உற்பவ அன்னையிடம் நம்பிக்கையுடன் செல்வோமாக.

அமல உற்பவம் நமக்குப் படிப்பினைகளைத் தருகிறது

அமல உற்பவ அன்னையைப் போல் நாம் தூய உள்ள முள்ளவர்களாய் இருக்கவேண்டும். திவ்விய நன்மை உட்கொள்ள இந்தத் தூய்மை அவசியம். மாமிசமான வார்த்தையானவரை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மரியாயி இத்தனை தூய்மையாயிருப்பது தேவையாயிருந்தால், அதே கடவுளை திவ்விய நற்கருணை வழியாக உட்கொள்ளும் நாம், மாசு மறுவற்றவர்களாய் இருக்க வேண்டு மல்லவா? மங்கள வார்த்தை நாளன்று மரியாயி தேவசுதனை தன் உதரத்தில் ஏற்றாள். நாமோ நம் வாழ்நாளில் பலமுறை அவரை ஏற்றுவருகிறோம்.

நாம் நம் மீது, நமது சிந்தனையின் மீது, நமது புத்தியின் மீது, நமது இருதயங்கள் மீது, விழிப்பாயிருக்க வேண்டுமென்று அன்னையின் அமல உற்பவம் படிப்பிக்கின்றது. முற்றிலும் தூய்மையுள்ளவளான, நேர்மையுள்ளவளான, மாசுமருவற்ற, மரியாயி தன் மீது மிக விழிப்புடனிருந்திருக்க, மிக்கபலவீனரும். தீமை மீது அதிக நாட்டம் கொண்டவர்களும், எளிதில் தவறுகிறவர்களுமான நாம் இன்னும் அதிக கவனத்துடன் நம் மீது விழிப்பாயிருக்க வேண்டும்.

உத்தமதனத்தின் பாதையில் நாம் விடாது முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் அமல உற்பவ அன்னை கற்பிக்கிறாள். சகல புண்ணியங்களையும் நிரம்பக் கொண்டிருந்த மரியாயி, தன் வாழ்நாளெல்லாம் புண்ணியங்களில் வளர்ந்து வந்தாள். வரப்பிரசாதத்துடன் ஒத்துழைத்து, அதிக பரிசுத்தவதியாகும் வண்ணம் உழைத்தாள். குறைகள் நிறையப்பெற்றுள்ள நாம் சோம்பேறிகளாய் முன்னேறாமல், பழைய நிலையிலேயே திருப்தியடையலாகாது. முன்னேறாதிருப்பது பின்வாங்குவதாகும். நாம் ஒவ்வொரு நாளும் அதேக வரப்பிரசாதங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுவருகிறோம். அவற்றுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். நமது இவ்வுலகப் பற்றுதல்களை அகற்றி, கடவுள் அழைக்கும் பரிசுத்த நிலையை நோக்கி முன்னேறிச்செல்ல வேண்டும்.

"என் அன்பே, நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதே கிடையா!"(உந்நத சங்கீதம். 4:7



Source: Sancta Maria (Magazine) Nov. - Dec. 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக