Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 26 - அர்ச். ஃபுளோரியன் (St. Florian, May 4)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

மே 0️⃣4️⃣ம் தேதி 

🌹வேதசாட்சியான அர்ச். ஃபுளோரியன் திருநாள்🌹

(இவர் தீயணைப்புப் படை வீரர்களின் பாதுகாவலர்)



🌹ஃபுளோரியன் கிபி 250ம் வருடம் ஆஸ்திரியாவிலுள்ள செஸியும் என்ற இடத்தில், 250ம் வருடம் பிறந்தார். இவர் உரோமை இராணுவத்தில் சேர்ந்து, அயரா உழைப்பினால் உயர்ந்த பதவியை அடைந்தார். ஆஸ்திரியாவிலுள்ள நோரிகும் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த உரோமை இராணுவப் படையின் நிர்வாகியாக ஏற்படுத்தப்பட்டிருந்தார்.

அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான தியோக்ளேஷியன், கிறீஸ்துவர்களைத் தண்டித்து உபாதிக்க வேண்டும் என்கிற தனது கட்டளையை ஃபுளோரியன் நிறைவேற்றகிறதில்லை என்பதை அறிந்து, அதிர்ச்சியடைந்தான். எனவே, ஃபுளோரியனுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள சகல கிறீஸ்துவர்களையும் கொல்லவும், தனது கட்டளையை ஏன் ஃபுளோரியன் பின்பற்றுகிறதில்லை என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவும், அகுவிலியுஸ் என்கிற இன்னொரு அதிகாரியை, சக்கரவர்த்தி அனுப்பி வைத்தான். அகுவிலியுஸ், ஃபுளோரியனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ஃபுளோரியன், அகுவிலியுஸிடம், “நானும் ஒரு கிறீஸ்துவன்! கிறீஸ்துவர்களுடைய கதியை நானும் அடைந்துகொள்வேன்! என்று சக்கரவர்த்தியிடம் போய் கூறு!” என்று கூறினார். அகுவிலியுஸ், ஃபுளோாரியனிடம், “நீ கிறீஸ்துவ வேதத்தை கைவிட்டால், உனக்கு ஒரு உயர் பதவி கிடைக்கும்!” என்று கூறினான். அதை அர்ச்.புளோரியன் மறுத்து விட்டார். உடனே கோபவெறியுடன், ஃபுளோரியனை சாட்டையால் அடிக்க உத்தரவிட்டான். அப்போதும் திடமாக தனது வேத விசுவாசத்தில் நிலைத்திருந்த அர்ச்.ஃபுளோரியன், அகுவிலியுஸிடம்,  “சக்கரவர்ததிக்காக போர்களில்  அநேக காயங்களை என் சரீரத்தில் அனுபவத்திருக்கிற நான், என் சத்திய வேதமான கத்தோலிக்க விசுவாசத்திற்காக சில சிராய்ப்புகளை என் சரீரத்தில் தாங்க மாட்டேனா?” என்று கூறினார். அப்போது, அகுவிலியுஸ், அர்ச்.ஃபுளோரியனை நெருப்பினால் எரித்துக் கொல்லக் கட்டளையிட்டான்.

ஆஸ்திரியாவில் லோர்க் என்ற இடத்தில், அர்ச்.ஃபுளோரியனை, நெருப்பினால் சுட்டெரிக்கும்படியாக, உரோமைப் படை வீரர்கள் ஆயத்தம் செய்தபோது, அர்ச்.ஃபுளோரியன் அந்த வீரர்களை நோக்கி, “நீங்கள் இந்த நெருப்பைப் பற்ற வைத்தால், நான் நெருப்பின் சுவாலைகள் மேல் ஏறி மோட்சம் செல்வேன்!” என்று கூறினார்.இதைக் கேட்டு பயந்த அகுவிலியுஸ், அவரை நெருப்பில் எரிப்பதற்கு பதிலாக, கசை வார்களாலும், சாட்டையாலும் அடிப்பிக்கச் செய்தான்; பின், அர்ச்.ஃபுளோரியனுடைய கழுத்தில் பெரிய கல்லைக் கட்டி, என்ஸ் என்ற ஆற்றில், அவரை  மூழ்கச் செய்துக் கொன்றான். அர்ச்.ஃபுளோரியன், கிபி 304ம் வருடம், மே 4ம் தேதி வேதசாட்சியாகக் கொல்லப்பட்டு, பாக்கியமான மோட்ச மகிமையின் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர், கிறீஸ்துவர்கள் அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த சரீரத்தை ஆற்றிலிருந்து எடுத்து, லோர்க் என்ற இடத்தில் பக்தி பற்றுதலுடன் அடக்கம் செய்தனர். 600 வருடங்களுக்குப் பின், இதே இடத்தில் அர்ச்.அகுஸ்தீனார் துறவற சபை மடம் கட்டப்பட்டது. போலந்து நாட்டின் அரசரான கசிமிர் மற்றும் கிராக்கோ நகர மேற்றிராணியாருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, 3ம் லூசியுஸ் பாப்பரசர் போலந்து நாட்டின் பாதுகாவலராக, அர்ச்.ஃபுளோரியனை ஏற்படுத்தினார்.அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த அருளிக்கங்களை போலந்து நாட்டிற்கு 1184ம் வருடம் அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, நெருப்பில் விழுந்த ஒருவர், அர்ச்.ஃபுளோரியனை நோக்கிக் கூப்பிட்டு உதவி கேட்டபோது, புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். அந்நாள் முதல், அர்ச்.ஃபுளோரியனிடம், நெருப்பினால் ஏற்படும் ஆபத்துக்காலங்களில், மக்கள் வேண்டிக்கொள்ளத் துவக்கினர். தீயினாலும், வெள்ளத்தினாலும், தண்ணீரில் மூழ்குவதினாலும் ஏற்படும் ஆபத்துக்களில் நம்மைக் காப்பாற்றுவதற்கு வல்லமையுள்ள பாதுகாவலராக அர்ச்.ஃபுளோரியன் திகழ்கிறார். அநேக நாடுகளில் தீயணைப்பு வீரர்களுடைய பாதுகாவலராக அர்ச்.ஃபுளோரியன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். 



ஆஸ்திரியா , ஜெர்மனி நாடுகளில் தீயணைப்பு வீரர்கள், “ஃபுளோரியன்” என்கிற வார்த்தையை, தீயணைப்பு நிலையங்கள் மற்றும் தீயணைப்புக்கான கனரக வாகனங்களை அழைப்பதற்கான, அவர்களுடைய வானொலி தொடர்பின் ஒரு பொதுவான அழைப்பின் அடையாள வார்த்தையாகப் பயன்படுத்துகின்றனர். தீயணைப்பு படைவீரர்கள் பயன்படுத்தும், ஃபுளோரன்டைன் என்று அழைக்கப்படுவதும், ரேடியோ கைபேசி சாதனமும் கூட அர்ச். ஃபுளோரியனுடைய பெயரினாலேயே (சிறிது மருவி அழைக்கப் படுகிறது)  அழைக்கப்படுகிறது! அர்ச் .ஃபுளோரியனுடைய சிலுவையையே  அமெரிக்கா, கனடா நாடுகள் உட்பட , அநேக நாடுகளில், தீயணைப்பு வீரர்கள் தங்களுடைய சீருடையில் அடையாளச் சின்னமாக (பேட்ஜ்) அணிந்து கொண்டிருக்கின்றனர்.🌹✝

🌹வேதசாட்சியான அர்ச்.ஃபுளோரியனே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக