Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 6 ஜனவரி, 2024

தேவமாதாவின் மகிமைமிகு மோட்சாரோபணம்

 "ஆதித்திருச்சபையின் மகாத்துமாவானவரும் வேதவல்லுனருமான ஓரிஜன் என்பவர் தேவமாதாவின் மோட்சாரோபணத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்: " மோட்சத்தில் மகிமையுடன் தேவமாதா பிரவேசிப்பதைக் கண்ணுற்ற பரிசுத்த ஆத்துமங்கள், "முள்ளும் உபாதனைகளும் நிறைந்த பூமியாகிய பாலைநிலத்திலிருந்து, நமது நேச ஆண்டவரே வெகுவாய் களிகூர்ந்து தம்முடன் மாபெரும் மகிமையுடன் அழைத்துவரும் பேரெழில் மிக்க இப்பெண்மணி யார்? (உன்னத சங்கீதம் 8:5)
ஆண்டவர் தமது திருத்தோள்மேல் சாய்ந்து கொண்டு வருபவர்களும் மகா பரிசுத்தமும் அதிஉன்னத புண்ணியங்களும் நிறைந்தவர்களுமான இவர்கள் யார்?" என்று ஒருமித்தகுரலில் வினவியபோது, தேவமாதாவுடன் சூழ்ந்து வந்த சம்மனசுகள், "அவர்கள், நமது தேவாதி தேவனும் ராஜாதி ராஜாவுமான சர்வேசுரனின் தாயார்' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பிரியதத்தத்தினால் பூரணமானவர்களுமான அவர்கள் நம் இராக்கினி' அர்ச்சிஷ்டவர்களுக்கெல்லாம் மேலானவர்களும் நம் சர்வேசுரனின் பிரிய நேசமான பத்தினியும் அமல உற்பவியும் பரிசுத்த புறாவுமாக விளங்குகின்றார்கள்' சகல சிருஷ்டிகளிலும் அதி உன்னத மேன்மைமிகுந்த சிருஷ்டியாக திகழ்கிறார்கள் என்று பதில் கூறினர். உடனே சகல மோட்சவாசிகளும் தேவமாதாவைப் போற்றிப் புகழ்ந்து ஆர்ப்பரித்து, "ஓ! எங்கள் ஆண்டவளே! எங்கள் இராக்கினியே! நீரே எங்கள் பரலோக நாட்டின் மகிமையும் மகிழ்ச்சியுமாகவும் எங்கள் அனைவருக்கும் மகிமையாகவும் விளங்குகின்றீர். உமது வரவு நல்வரவாகுக! நீர் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவீராக! இதோ உமது அரசு! இதோ உமது ஊழியரான நாங்கள் எப்போதும் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய காத்திருக்கிறோம்!" என்று பாடினர்.

தேவமாதாவை தங்களுடைய இராக்கினியாக வணங்கி வாழ்த்தி வரவேற்பதற்காக எல்லா அர்ச்சிஷ்டவர்களும் அங்கு ஒன்று கூடி வந்தனர். அப்போது பரிசுத்த கன்னியர்கள் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம்," ஓ மிகவும் பரிசுத்த ஆண்டவளே! நாங்களும் இப்பரலோகத்தின் அரசிகள் தான். ஆனால் நீரே எங்கள் அனைவருக்கும் இராக்கினி! ஏனென்றால், நீரே முதலில் உமது பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் அனைவருக்கும் மேன்மைமிகுந்த நன்மாதிரிகையாக திகழ்கின்றீர்! அதற்காக உம்மைப் போற்றி உமக்கு நன்றி செலுத்துகின்றோம்!" என்று கூறினர். அதன் பிறகு ஸ்துதியர்களும் வேதபாரகருமான சகல அர்ச்சிஷ்டவர்களும், தமது பரிசுத்த ஜீவித்தினால், தங்களுக்கு மிக அழகிய உன்னதமான நற்புண்ணியங்களைக் கற்பித்து அவற்றில் நடப்பித்த தங்கள் தேவ ஆண்டவளுக்கு நன்றியும் வாழ்த்துதலும் வணக்கமும் செலுத்தினர்.

பிறகு, சகல வேதசாட்சிகளும் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம் வந்தனர். தமது திவ்ய குமாரனின் பரிசுத்த பாடுகளின் மீதான வேதனைகள் மற்றும் வியாகுலங்களில் இவ்வுலக ஜீவியம் முழுவதும் நிலைத்திருந்த தேவமாதா தங்களுடைய தேவஆசிரியையாகவும் வேதசாட்சியத்தில் திவ்ய சேசுநாதர் சுவாமிக்காக தங்கள் உயிரை விடுவதற்கு தேவையான ஞானபலத்தை தமது பேறுபலன்களினால் பெற்றுத் தந்ததற்காகவும் தங்களுடைய திவ்ய இராக்கினிக்கு நன்றியும் ஸ்துதியும் தோத்திரமும் செலுத்தினர்” அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் +


எல்லா அப்போஸ்தலர்களுடைய சார்பில் அர்ச். யாகப்பர் தேவமாதாவிடம் வந்து இவ்வுலகில் இருந்தபோது தங்களுக்கு தேவமாதா செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்தினார். அடுத்ததாக தீர்க்கதரிசிகள் வந்தனர். தேவமாதாவை அவர்கள் வணங்கி வாழ்த்தி, "எங்கள் ஆண்டவளே! எங்களுடைய எல்லா தீர்க்கதரிசனங்களும் முன்குறிக்கும் அடையாளங்களாக உம்மையே சுட்டிக் காட்டின” என்றனர். பிறகு, பிதாப்பிதாக்கள் வந்தனர். தேவமாதாவிடம் அவர்கள், "ஓ மிகவும் பரிசுத்த மரியாயே! நீரே எங்கள் நம்பிக்கையாக விளங்கினீர். உமது வரவிற்காக நாங்கள் நீண்ட காலம் வெகு பக்திபற்றுதலுடனும் பெருமூச்சுகளுடனும் காத்திருந்தோம்" என்று கூறினர். அவர்களுடன் நமது ஆதிப்பெற்றோரான ஆதாமும் ஏவாளும் வந்தனர். அவர்கள் மாதாவுக்கு மகா பிரியத்துடன் நன்றிசெலுத்திக் கொண்டே தேவமாதாவிடம், "ஆ பிரிய குமாரத்தியே! நாங்கள் மனுக்குலத்திற்கு ஏற்படுத்திய காயத்தைக் குணப்படுத்தினீர். எங்கள் அக்கிரமத்தினால் இழந்துபோன தேவஆசீரை மனுக்குலத்திற்கு நீர் பெற்றுக் கொடுத்தீர்! உம்மாலேயே நாங்கள் இரட்சணியமடைந்தோம். அதன்பொருட்டு நீர் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுவீராக!" என்று கூறினர். அர்ச். சிமியோன் தேவமாதாவின் திவ்ய பாதங்களை முத்தமிட்டார். அதன்பிறகு, தன் கைகளில் திவ்ய பாலனை ஏந்திய நாளைப்பற்றி மிக ஆனந்த அகமகிழ்வுடன் தேவமாதாவிடம் ஞாபகப்படுத்தினார். அர்ச். சக்கரியாஸ்,

அர்ச். எலிசபெத்தம்மாளுடன் வந்தார். மகா தாழ்ச்சியுடனும் உத்தம சிநேகத்துடனும் தங்களை சந்திக்க தங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்தமைக்காக மாதாவுக்கு நன்றி செலுத்தினர். அதனால் தாங்கள் திரளான தேவவரப்ரசாதங்களைப் பெற்றதாகக் கூறினர். அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் அங்கு வந்தார். மாதா, தமது திவ்ய குரலினால் தன்னை அர்ச்சித்ததற்காக அவர் மிகுந்த சிநேகத்துடன் தேவமாதாவுக்கு நன்றி செலுத்தினார். மாதாவுடைய பரிசுத்த பெற்றோர்களான அர்ச். ஜோக்கிம், அர்ச். அன்னம்மாள் மாதாவை அணுகி, ஓ ஆண்டவரே! எத்தகைய கனிவுடன் அவர்கள் தேவமாதாவை ஆசீர்வதித்தனர்! அவர்கள் மாதாவை வாழ்த்திக் கொண்டே, “ஓ நேச குமாரத்தியே! உம்மை எங்கள் குழந்தையாகப் பெற்றது எத்தகைய பெரிய பாக்கியம்! இப்பொழுது நீர் எங்களுடைய இராக்கினியாக இரும். ஏனெனில் நீர் எங்கள் சர்வேசுரனுடைய தாயார்! உம்மை வணங்கி தோத்தரித்து ஸ்துதிக்கிறோம்!" என்றனர்.

அர்ச்.சூசையப்பர் அங்கு தோன்றுகிறார். அவர் எத்தகைய உன்னதமான சிநேகத்துடன் மாதாவிடம் வருகிறார் என்று யாரால் சரிவர உணரக்கூடும்? பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், தமது திவ்ய பத்தினி மகத்தான வெற்றி வாகையுடன் பரலோக மகிமைக்குள் நுழைவதையும் அங்கு பரலோக இராக்கினியாக முடிசூட்டப்படுவதையும் காணும்போது, எத்தகைய ஆனந்த அக்களிப்பு எய்தினார் என்பதை யாரால் விவரிக்கமுடியும்? அவர் மகா கனிவுடன், "ஓ என் ஆண்டவளே! என் பிரிய பத்தினியே! நமது ஆண்டவரின் தாயாரான உம்மை எனது பத்தினியாக ஏற்படுத்தத் திருவுளமான நமது சர்வேசுரனுக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்தப்போகிறேன? நித்திய வார்த்தையானவரின் திவ்ய பாலத்துவத்தைப் போஷித்து அவருக்கு பணிவிடைசெய்தும் அவரை எனது கரங்களில் ஏந்தியும் மகிழ்ந்தேன். அதனால் வெகுவான விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்ள தேவையான உன்னத அந்தஸ்தை உமது வழியாகவே நான் அடைந்தேன். திவ்ய சேசுவுக்கும் என் பரிசுத்த பத்தினியான உமக்கும் நான் இப்பூமியில் ஊழியம் செய்த அந்த மணித்துளிகள் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுவனவாக! இதோ நம் சேசு! பெத்லேகமில் நாம் அவரைப் பார்த்தது போல இனி அவர் மாட்டுக் கொட்டிலில் வைக்கோலின் மேல் படுத்துறங்க மாட்டார். நசரேத்தில் ஒரு தச்சுக்கூடத்தில் நம்முடன் வாழ்ந்தது போல அவர் யாவராலும் வெறுக்கப்பட்ட ஒரு தரித்திரராக இருக்க மாட்டார். உலகின் இரட்சணியத்திற்காக அந்த அவமான மரத்தில் இனி அவர் அறையப்படமாட்டார். ஆனால், அவருடைய தந்தையான பிதாவாகிய சர்வேசுரனின் வலது பாரிசத்தில் பரலோக பூலோக அரசராகவும் ஆண்டவராகவும் முடிசூட்டப்பட்டு வீற்றிருக்கிறார். மேலும், இப்பொழுது என் இராக்கினியே! இனிமையான அவருடைய திவ்ய பாதங்களைவிட்டு நாம் ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டோம்! அங்கு அவரை நாம் நித்தியத்திற்கும் ஸ்துதித்துக்கொண்டும் சிநேகித்துக் கொண்டும் இருப்போம்" என்றார்.
பிறகு, எல்லா சம்மனசுக்களும் வந்து, சம்மனசுக்களின் இராக்கினியை வணங்கினர். அவர்களைக் கண்ட தேவமாதா பூமியில் அவர்கள் தமக்களித்த அனைத்து பணிவிடைகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி செலுத்தினார்கள். விசேஷமாக மாதாவின் மகிமைகளை சுமந்து சென்றவரான அர்ச்.கபிரியேல் அதிதூதர், தம்மிடம் மகிழ்ச்சியின் துாதுவராக வந்து, தான் சர்வேசுரனின் தாயாராக சர்வேசுரனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சுபசெய்தியை அறிவிக்க வந்ததற்காக நன்றி செலுத்தினார்கள். அதன்பிறகு, தாழ்ச்சி மிகுந்த மகா பரிசுத்த கன்னிகை சர்வேசுரனின்தேவமகத்துவத்தை முழங்காலில் இருந்து ஆராதித்தார்கள். தனது ஒன்றுமில்லாமையில் மூழ்கியவர்களாக, தேவமாதா, தனக்கு சர்வேசுரனுடைய பரிசுத்த நன்மைத்தனம் அளித்த எல்லா தேவவரப்ரசாதங்களுக்காகவும் விசேஷமாக நித்திய வார்த்தையானவருக்கு தன்னை தாயாராக ஏற்படுத்தியமைக்காகவும் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம் எத்தகைய அளவில்லா சிநேகத்துடன் மாதாவை ஆசீர்வதித்ததை யாரால் புரிந்து கொள்ளக் கூடும்? அவ்வாறு புரிந்து கொள்பவரால் மட்டுமே பரமபிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்ய குமாரத்தியையும், திவ்ய சுதனாகிய சர்வேசுரன் தமது பரிசுத்த மாதாவையும், திவ்ய இஸ்பிரீத்துசாந்துவான சர்வேசுரன் தமது பரிசுத்த பத்தினியையும் எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிதாவாகிய சர்வேசுரன் தமது வல்லமையை அளித்து மாதாவுக்கு முடிசூட்டினார். அவ்வாறே, சுதனாகிய சர்வேசுரன் தமது ஞானத்தைக் கொண்டும் திவ்ய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தமது சிநேகத்தைக் கொண்டும் மாதாவுக்கு முடிசூட்டினார்கள். மூன்று தேவஆட்களும் சேசுநாதர்சுவாமியின் வலதுபக்கத்தில் மாதாவை அமரச் செய்தனர். அங்கு பரலோக பூலோக இராக்கினியாக தேவமாதாவுக்கு முடிசூட்டினர். மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம், சும்மனசுக்களுக்கும் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவமாதாவை தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ளவும் மாதாவுக்கு ஊழியம் செய்து மாதாவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் கட்டளையிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக