Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

catholic saints life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
catholic saints life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 30 - அர்ச். அந்தோனினுஸ் (St. Anthonius of Florence)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 1️⃣0️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹



🌹அந்தோனியோ பியரோசி என்பது இவருடைய இயற்பெயர்; இவர் 1389ம் வருடம்  மார்ச் 1ம் தேதியன்று, சுதந்திர குடியரசு நாடான இத்தாலியின் தலைநகரான ஃபுளாரன்ஸில் பிறந்தார்.   இவருடைய 16வது வயதில், 1405ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகத் துறவற சபையில் சேர்ந்தார். வேத கல்வியும் தத்துவ இயலும் கற்று குருப்பட்டம் பெற்றார்; விரைவிலேயே, அர்ச்.சாமிநாத சபை மடங்களின் நிர்வாக அதிகாரியாக பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டார்; கொர்தோனோ, உரோமாபுரி, நேப்பிள்ஸ் ,ஃபுளாரன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டார். வேத இயலில் இவர் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றிருந்ததால், வேத இயல் வல்லுனராக புகழடைந்திருந்தார்; கி.பி.1439ம் வருடம், ஃபுளாரன்ஸ் நகரில் நடைபெற்ற திருச்சபைச் சங்கத்தில்,  பாப்பரசரின் வேத இயல்  ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.

இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448  மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற  பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.

அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி  ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான்.  அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால்,  “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.  இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝


🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்


🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹



🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 2 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 25 - அர்ச். அத்தனாசியார் (St. Anthanasius, May 2)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 2ம் தேதி

🌹பாரம்பரிய கத்தோலிக்க வேத விசுவாசத்தின் பாதுகாவலரும், ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான  

அர்ச். அத்தனாசியாரின் திருநாள்🌹




🌹மாபெரும் வேதபாரகரும் கத்தோலிக்க வேதவிசுவாசத்தின் அஞ்சா நெஞ்சரும், பாதுகாவலருமான அர்ச். அத்தனாசியார், எகிப்தின் தலைநகரான அலெக்சாண்டிரியாவில், கி.பி.294ம் வருடம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தேவபயமும் பக்தியும் உடையவர்கள். இவருடைய இளமைக் காலத்தில் மாபெரும் திறமைகளை சர்வேசுரன் இவருக்கு அருளினார்.

அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரால் கல்விகற்பிக்கப்பட்டார்;  பின், எகிப்திலுள்ள பாலைவனத்திற்குச் சென்று, அர்ச்.வனத்து அந்தோணியாருடன் அத்தனாசியார் சிறிது காலம் தங்கியிருந்தார்; கி.பி. 319ம் வருடம் அத்தனாசியார் தியோக்கோன் பட்டம் பெற்றார்.

கி.பி.323ம் வருடம், ஆரியுஸ் என்பவன், நமதாண்டவர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுடன் ஒரே வஸ்துவானவரல்லர்! ஆதலால், ஆண்டவரை சர்வேசுரனுடைய திவ்ய குமாரன் என்று கூறக்கூடாது!  என்கிற பதிதத் தப்பறையைப் போதித்தான்; இப்பதிதத் தப்பறை இவனுடைய பெயராலேயே ஆரியப் பதிதம் என்று அழைக்கப்படுகிறது; அலெக்சாண்டிரியா மேற்றிராணியார், ஆரியுஸின் போதனையை, பதிதத்தப்பறை என்ற கூறி, ஆரியுஸ் என்ற பதித குருவையும், அவனுடைய கூட்டாளிகளான 11 பதிதக் குருக்களையும் தியோக்கோன்களையும் அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்தார்! 

பின், ஆரியுஸ், செசரையாவிற்குச் சென்று, நிகோமேதியாவின் மேற்றிராணியாரான யுசேபியுஸின் ஆதரவையும், மற்ற அநேக சிரியா நாட்டின் மேற்றிராணிமார்களுடைய ஆதரவையும் திரட்டினான்; ஆரிய பதிதத் தப்பறைக் கருத்துகள் பாடல்களாக இயற்றப்பட்டு, பிரபலமடைந்திருந்த இசை மெட்டுகளில் கப்பல் மாலுமிகளால் பாடப்பட்டு வந்தன; ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகம் கப்பல் செல்கிற வரை இப்பதிதப் பாடல்கள் பாடப்பட்டு, மக்களின் இருதயங்களை ஆரியப் பதிதத் தப்பறையால் ஆக்கிரமித்தனர்; ஆரிய பதிதத் தப்பறையின் மீது தீர்வு காண்பதற்காக, 325ம் வருடம் நீசேயா சங்கம்  கூட்டப்பட்டது; இச்சங்கத்தில், ஆரிய பதிதத்தைக் கைவிடும்படியாக, ஆரியுஸிற்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டது; நீசே விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்யப்பட்டது; இச்சங்கம், அர்ச்.அத்தனாசியாரின் ஜீவியத்தை மிகவும் பாதித்தது; இதன் பின் இவருடைய எஞ்சியிருந்த ஜீவிய காலம், நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்திற்கான சாட்சியமாகத் திகழ்ந்தது! ஆண்டவருடைய தேவத்துவம் மற்றும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியத்திற்கு  எதிரானதுமான  ஆரிய பதித்திற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார்; அதற்கு எதிரான கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார்;

நிசேயா சங்கத்தில், அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டருடன் அவருக்கு உதவியாளராக அர்ச்.அத்தனாசியார் இருந்தார்;  5 மாத காலத்திற்குப் பின், அர்ச்.அலெக்சாண்டர் இறந்தார்; இறப்பதற்கு முன், அர்ச்.அலெக்சாண்டர், அத்தனாசியாரை, தனக்குப் பின் அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக நியமிக்க ஆசித்திருந்தார்; அதன்படி, அர்ச்.அத்தனாசியார், 30வது வயதில், 326ம் வருடம்,அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் ஆரிய பதிதத்தப்பறையை எதிர்த்து நின்றதால், அநேக கொடிய உபத்திரவங்களையும், துன்பங்களையும், தன் ஜீவிய காலத்தில் சந்திக்க நேர்ந்தது; இவர்  அதிமேற்றிராணியாராக இருந்த 46 வருட காலத்தில், 17 வருடங்களை நாடுகடத்தப்பட்ட பரதேச ஜீவியத்தில் கழித்தார்;  புண்ணியங்களுடையவும், சக்கரவர்த்திகளாலும், திருச்சபை அதிகாரிகளாலும் (ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணிமார்கள்) கொடூரமாக அநியாயமாக, நீ்ண்ட காலம் அளிக்கப்பட்ட உபத்திரவத் துன்பங்களுடையவும் ஜீவியம் ஜீவித்த பிறகு, கத்தோலிக்க வேத விசுவாசத்தை அஞ்சா நெஞ்சத்துடன் ஆரிய பதிதர்களிடமிருந்து காப்பாற்றிய திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும்,  பாதுகாவலருமான அர்ச்.அத்தனாசியார், அலெக்சாண்டிரியாவில், மே 2ம் தேதி 373ம் வருடம்   பாக்கியமாய் மரித்தார்; இவருடைய பரிசுத்த சரீரம் இரண்டு முறை, இடமாற்றம் செய்யப்பட்டது: முதலில், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பின்னர் வெனிஸ் நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது! இவர் வாழ்ந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலமாகும்.🌹✝

“பாரம்பரியத்திற்கு விசுவாசமாயிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள், எண்ணிக்கையில் குறைந்து, ஒரு கையளவாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் தான், நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதரின் உண்மையான திருச்சபை!”-அர்ச்.அத்தனாசியார்.🌹✝

🌹அர்ச். அத்தனாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Tags:

Feast of St. Anthanasius, 

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ - ST. ONESIMUS


வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ 




இவர்‌ பிறப்பினால்‌ ஃபிர்ஜியனாகவும்‌, பிலமோன்‌ என்பவரின்‌ அடிமையாகவும்‌ இருந்தார்‌. அர்ச்‌.பிலமோன்‌, என்பவர்‌ ஏற்கனவே அப்‌போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரால்‌ கிறீஸ்துவராக மனந்திருப்பப்பட்‌டிருந்தார்‌. 

இவர்‌, தன்‌ எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு, ஓடிப்போனார்‌; பின்‌ எதிர்பாராதவிதமாக, உரோமையில்‌, சிறைபட்‌டிருந்த அர்ச்‌. சின்னப்பரை இவர்‌ சந்திக்க நேர்ந்தது. அர்ச்‌. சின்னப்பர்‌ இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம்‌ கொடுத்தார்‌. பின்‌, இவரை,  இவருடைய எஜமானரான அர்ச்‌. பிலமோனிடம்‌ அனுப்பி வைத்தார்‌. அச்சமயம்‌, அர்ச்‌. சின்னப்பர்‌, ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு, எழுதி இவரிடம்‌ கொடுத்து அனுப்பினார்‌. அது, சுவிசேஷத்தில், நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக்‌ கிடைத்தி ருக்கிறது! அந்த கடிதத்தில்‌, பிலமோனிடம்‌, அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும்‌ மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும்‌, அர்ச்‌. சின்னப்பர்‌ கேட்டுக்‌ கொள்வதை வாசிக்கிறோம்‌. 

அர்ச்‌. சின்னப்பரின்‌ அறிவுரையின்பேரில்‌, பிலமோன்‌, ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்‌தை அளித்தார்‌; அதன்‌ பின்,‌ தன்‌ ஞான தந்தையான அர்ச்‌.சின்னப்பர்‌ ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில்‌, ஒனேசிமுஸ்‌, திரும்பி அப்போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார்‌.அவருக்கு பிரமாணிக்கத்துடன்‌ ஊழியம்‌ செய்து வந்தார்‌. 

 அர்ச்‌. சின்னப்பர்‌, கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம்‌ கொடுத்தனுப்பியபோது, அவருடன்‌ ஒனேசிமுஸையும்‌  சேர்த்து அனுப்பி வைக்தார்‌.(கொலொ 4:7-9).  பின்னர்‌, ஒனேசிமுஸ்‌, உரோமாபுரி ஆளுநனால்‌, மிகக்‌ கொடிய உபத்திரவங்களால்‌ சித்ரவதை செய்யப்பட்டார்‌; திருமணம்‌ செய்யாமல்‌ பரிசுத்த ஜீவியம்‌ ஜீவிக்கும்‌ கத்தோலிக்கக்‌ குருத்துவத்தைப்‌ பற்றி இவர்‌ பிரசங்கித்தபோது, அதைக்‌ கேட்டுக்‌ கோபமடைந்த உரோமை ஆளுநன்‌, இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள்‌ தொடர்ந்து உபாதித்தான்‌: இவருடைய கால்களையும்‌, கைகளையும்‌ குண்டாந்தடியால்‌ அடித்து, முறித்தனர்‌; பின்‌ கல்லால்‌ எறியப்பட்டு கி.பி.95ம்‌ வருடம்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌. சர்வேசுரனை சிநேகிக்கிறவர் களுக்குச்‌ சகலமும்‌ நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று, அறிந்திருக்கிறோம்‌; அவர்கள்‌, தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக் கிறார்களாமே! (அர்ச்‌.சின்னப்பர்‌ உரோமையருக்கு எழுதிய நிரூபம்‌ 8:28).

அர்ச்‌.ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


Tamil Catholic Quotes

Tamil Catholic Songs Lyrics


திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)

 தன்னையே பலியாக்கியவர்



"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.

1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும்  தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.

கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.

"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.

சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.

திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.

"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்

இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.

"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.

பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"

"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.

நான் ஒரு குரு

ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.

அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.

“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.

சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.

“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.

சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.

சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.

இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது


சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil


Life History of St. Maximillian Kolbe