Epiphany of Our Lord |
ஞானத்தைத் தேடி அதில் வளரவேண்டும் என்ற உணர்வு மனிதர்களிடம் எப்பொழுதும் இருந்துவந்தது. மனித புத்தியானது தான் அநுதினம் எதிர்கொள்ளும் காரியங்கள். பொருட்களைப் பற்றிய உண்மைகளை இன்னும் அதிகமதிகமாய் அறிய விரும்புகிறது. ஆகையால்தான் மக்கள் சில காரியங்களைக் குறித்த, தங்களின் அறியாமையை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை! இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம். ஒரு மனிதன் தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு செல்ல விரும்புகிறான். அது முதல் தடவையாதலால் வீட்டு முகவரி இருந்தும், அவனால் சரியான தெருவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் வேறொருவரின் உதவியை நாடுகிறான். முன்பின் தெரியாத அந்த மனிதன் தமக்கும் சரியான முகவரி தெரியவில்லையானாலும், அந்த இடத்தை அறிந்தவன் போல் பாவனை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், எப்படியாவது அவனுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று விருப்பம் கொண்டதால், தவறான வழியைக் காட்டிவிடுவான். ஏன் இந்த மனிதன் தவறான வழியைக் காட்டிட வேண்டும்? ஏனெனில் தனக்கு உண்மையிலேயே பாதை தெரியாது என்ற தமது அறியாமையை வெளிக்காட்டிக்கொள்ள அவன் விரும்ப வில்லை. இப்படி தமது அறியாமையை வெளிப்படுத்த விரும்பாதவன் எப்படி, அதனை போக்கிக்கொள்ள முடியும்? அதிகமதிகமாய் தேடி அறிவை வளர்ப்பதே ஞானத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவு வாயிலாகும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஞானத்தை அடைய வேண்டுமென்ற தாகமே, அந்த கீழ்த்திசை ஞானிகள் சகல ஞானங்களின் ஊற்றாகிய நித்திய ஞானமானவரை குழந்தை சேசுவை தேடிக்கொண்டுவர தூண்டியது. நூற்றாண்டு காலமாக "பூமியின் எல்லைகளையும்" (சங். 2:8) சொந்தமாகக் கொண்டவரான, நித்திய ஞானமானவரை ஒரு நட்சத்திரத்தின் மூலமாக அஞ்ஞானிகளுக்கு முன்னுரைக்கப்பட்டது. அது எப்படியெனில்: "...அவரைக் காண்பேன், ஆனால் இப்போதல்ல; அவரை தரிசிப்பேன், ஆனால் சமீபித்திருந்தல்ல. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல் இஸ்ராயேலியரிட மிருந்து எழும்பும்; அது மோவாபின் பிரபுக்களை நைய நொறுக்கும், சேத் புத்திரர்களெல்லோரையும் நாசம் பண்ணும்" (எண். 24:17). இது பாலாமின் தீர்க்க தரிசனமாகும். அஞ்ஞானியான பாலாம் இஸ்ராயேலியரை சபிக்கக் கேட்டுக்கொள்ளப்பட, அவனோ அவர்களை ஆசீர்வதிக்கும் கட்டாயத்துக்குள்ளானான்.
“மூன்று இராஜாக்கள்" என்று அழைக்கப்படும் ஞானிகளான கஸ்பார், மெக்கியோர் மற்றும் பல்தஸார் பாலாமின் இந்த தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தனர். அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டு அது மோட்சத்தி லிருந்து தங்களுக்கு வந்த அழைப்பு என உறுதிகொண்டனர் அவர்களின் இருதயத்தினுள் உள்ளரங்க வரப்பிரசாதம் செயல்படவே, நித்திய ஞானமானவரைத் தேடும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களது பயணம் எதனாலும் தடைபடவில்லை. குடும்பத்தைப் பற்றிய கவலையோ, களைப்பைத் தரும் நீண்ட பயணத்தைப் பற்றிய பிரமிப்போ, எதனையும்பற்றி கவலைப்படாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாலைவனத்தின் கடும் வெப்பத்தைப்பற்றிய சுவக்கமோ, கொள்ளைக்காரர்களைப்பற்றிய அச்சமோ, எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறப்பட்டதுபோல் "தேடியவர்கள் சர்வேசுரனைக் கண்டுகொண்டனர்." அவரை தரிசித்தார்கள். ஏனெனில்ஞானம் அவர்களோடு இருந்தது.
ஆம்! எண்ணில்லா கடினமான துன்பங்களுக்குப் பிறகு, கர்த்தரை கண்டுகொண்டார்கள். அவரை ஆராதித்தார்கள். ஞானத்தைப்பற்றி பெரிய நீண்ட பிரசங்கங்களை நிகழ்த்துபவராக அல்லாமல், அமைதியான குழந்தையாகக் கண்டுகொண்டார்கள். ஒரு தாயின் கவனமான அரவணைப்பில், பாதுகாப்பில் அவர் இருக்கக் கண்டு கொண்டனர். இதன் மூலம் சர்வேசுரன் தாமே தாழ்ச்சியின் அற்புதத்தை பிறருக்கு காண்பித்தார்.
நித்திய ஞானத்தோடு தொடர்புகொண்ட அவர்கள், கிறீஸ்துவின் பிறப்பை ஏரோதனுக்கு சொல்லாது, மாற்றுப் பாதையில் தங்களது நாடுகளுக்குச் சென்றனர். அவர்களது இச்செயலே ஞானிகள் என்ற பட்டத்தை அவர்களுக்கு தந்தது என்றால் மிகையாகாது!
நாமும்கூட இந்த ஞானிகளைப் போல கிறீஸ்துவை தேடிவந்து கண்டு ஆராதிக்கவும், அவரது சுவிசேஷ சட்டங்களின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலமாகவே நித்தியமானவரோடு நம்மையே இணைத்துக்கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் பாக்கியம் பெறுவோமாக!
Source: Salve Regina - Jan. - Feb. 2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக