கோவில் மணிகள்
நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941
பற்பல பொது நிகழ்வுகளுக்கும் வேத நிகழ்வுகளுக்கும் மணி அடிக்கிற வழக்கம் தொன்மையானது. எஜிப்தியர் ஓசரிஸ் என்னும் தெய்வத்தை வழிபடுவதற்கு மணி உபயோகித்தார்கள் என்று தெரியவருகிறது. ஆனால் அந்த மணிகள் வெகு சிறியவையாகவும், தட்டை வடிவமான சேமக்கல் உருவமாகவும் இருந்தன. மோயீசன் எஜிப்து தேசத்துக்குக் குருக்களுடைய பழக்க வழக்கத்தை யூதருடைய ஆராதனை முறையில் ஏற்படுத்தினார் என்று சொல்ல நியாயம் உண்டு.
உரோமையர் தங்கள் வேத சடங்குமுறைகளில் மணி உபயோகப்படுத்தினதாகத் தெரியவில்லை. சண்டையில் ஜெயித்தபின் சந்தோஷங் கொண்டாடுவதற்காக நடத்தின ஊர்வலங்களில் மணி அடித்துக்கொண்டு போவது அவர்களுக்குள் வழக்கமாயிருந்தது.
கிறீஸ்தவ ஆலயங்களில் மணியின் உபயோகம் கி.பி. 400-ம் ஆண்டில் ஏற்பட்டது. இத்தாலியாவிலுள்ள நோலா நகரத்து மேற்றிராணியாராகிய பவுலினுஸ் என்பவர் முதன்முதல் இந்த வழக்கத்தை உண்டு பண்ணினார் என்று கூறுகிறார்கள். அக்காலங்களில் தேவாராதனை சடங்குகளுக்கு மட்டுமின்றி, யாதொரு அபாயத்தை ஜனங்களுக்கு அறிவிப்பதற்காகவும் கோவில் மணியை அடிப்பார்கள். இதனிமித்தம் தேவாலயங்களில் மணிகள் அமைக்கிற வழக்கம் வெகு துரிதமாய் எங்கும் பரவிற்று. நமது நாட்டில் இந்தப் பூர்வீக வழக்கத்தை அநுசரித்து, இன்னும் சிற்சில கிராமங்களில் நெருப்புப்பிடித்தல் போன்ற விபத்துக்களை அறிவிப்பதற்குக் கோவில் மணியை அடிப்பதுண்டு. கோவில் மணி உபயோகம் கி.பி. 604-ம் ஆண்டில் சபினியன் என்னும் பாப்பானவர் காலத்தில் திருச்சபையின் அங்கீகாரம் பெற்றது. சிறிது காலத்துக்குப் பிறகு மணியை மந்திரிப்பதற்கு விசேஷ சடங்கு ஒன்று ஏற்பாடாயிற்று. கோவில் கோபுரங்களில் பெரிய மணிகளை அமைக்க ஆரம்பித்தது 11-ம் நூற்றாண்டுக்கு முன் அல்லவென்று சொல்லலாம்.
ஐரோப்பாவிலுள்ள பலவித காட்சிசாலைகளில் பழமையான பல மணிகளைக் காணலாம். விசேஷமாய் அயர்லாந்து தேசத்திலும், ஸ்காட்லாண்டு தேசத்திலும் வெகு பூர்வீகமான மணி வகைகள் இன்றும் இருக்கின்றன. அவைகளில் சில சதுர வடிவமாகவும், வெண்கலம் அல்லது இரும்புத் தகடுகளால் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. இதனால் அவைகளின் நாதம் கேட்பதற்குக் கோரமாய் இருந்ததுமல்லாமல், இக்காலத்து மணிகளைப்போல் அவ்வளவு ஓசையுள்ளதுமல்ல என்பது நிச்சயம்.
கீழ்த்திசை கிரேக்க ஆலயங்களில் 9-ம் நூற்றாண்டில் மணி உபயோகம் ஆரம்பித்தது. ரஷ்ய தேசத்திலுள்ள பெரிய மேற்றிராசனக் கோவில்களில் தான் உலகப் பிரசித்திப் பெற்ற மணிகள் இருந்தன. எல்லாவற்றிலும் மிகப் பெரிதான மணி மாஸ்கோ பட்டணத்தில் உள்ளது. அது 19 அடி உயரமும், சற்றேறக்குறைய அதேயளவு குறுக்களவிலும் இருந்தது.
சில தேவாலயங்களில், 8, 12, அல்லது 14 மணிகள் வரிசையாய்த் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இவைகள், சங்கீதத்தின் எழு ஸ்வரங்களும் தொனிக்கும்படியாக வார்க்கப்பட்டவை. இவைகள் அடிக்கப்படும்போது, செவிக்கு இனிமையான நாதத்தையும், வெகு தூரம் கேட்கக்கூடிய அளவில் ஓசையையும் உண்டாக்குகின்றன என்பது சொல்லாமலே விளங்கும். குறிப்பான சில வசனங்கள் மணிகளில் செதுக்கப்பட்டிருப்பது சகஜம். அவ்வசனங்கள் மணியின் பிரயோகத்தை எடுத்துரைக்கின்றன. இங்கிலாந்து தேசத்தில் உள்ள பழைய ஆலயங்களில் அநேக மணிகளின் மேற்பரப்பில் செதுக்கப்பட்டுள்ள சில வாக்கியங்களை நாம் வாசிக்கும் பொழுது அவைகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும். அவைகளில் சில வசனங்கள் பின்வருமாறு:
"துக்கத்தொனியால் மரணமதைத் தெரிவிக்கிறேன்”
“மின்னல், இடியின் இன்னலதைத் தவிர்க்கிறேன்”
"ஓய்வுநாளில் ஆலயத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்”
"தூங்குபவர் துரிதமாய் துயில்விட்டெழத் தொனிக்கிறேன்”
சண்டமாருதத்தைச் சதா சாந்தப்படுத்துகிறேன்” "
"அபாயம் நேரிடுங்கால் அபயமிட்டு அலறுகிறேன்...."
என்கிற வாக்கியங்கள் சில மணிகளில் காணக்கிடக்கின்றன.
மின்னல், இடி, புயல் இவைகளால் ஆபத்து நேரிடாவண்ணம் தடுப்பதற்குக் கோவில் மணிச்சத்தம் நிச்சயமான ஓர் சாதனம் என்கிற எண்ணம் அக்காலத்து ஜனங்களுக்கு இருந்ததாகத் தெரியவருகிறது. முத்தின காலங்களில் சாவுமணி அடித்த விதமும் குறிப்பிடத்தக்கத்து. இறந்தவனுடைய வயது எத்தனையோ அத்தனை தடவை தட்டு மணி அடிப்பதுதான் வழக்கமாயிருந்து.
திரிகால ஜெபத்துக்கும், திவ்விய பூசை, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் ஆகிய கோவில் ஆராதனைகளுக்கு முந்தியும் மணி அடிப்பது வழக்கம். சில இடங்களில் நடுப்பூசை நேரத்திலும் கோவில் பெரிய மணியை அடிப்பதுண்டு. நியாயமான விக்கினத்தை முன்னிட்டுத் திவ்விய பலிபூசைக்கு வர இயலாதவர்களும் தாங்கள் இருக்கிற இடத்திலிருந்து, நற்கருணையில் எழுந்தருளிவருகிற ஆண்டவரை ஆராதிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த வழக்கம் 13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள். இந்த மணிச்சத்தங் கேட்டவுடன், எல்லோரும் எங்கேயிருந்தாலும் ஒரு நிமிடம் முழந்தாட்படியிட்டு ஆராதனை முயற்சி செய்வது வழக்கமாயிருந்தது
மணி மந்திரித்தல்:
மேற்றிராணியார் அல்லது அவரிடமிருந்து விசேஷ அதிகாரம் பெற்ற குருவானவர் மாத்திரம் மணி மந்திரிக்கிற சடங்கை நிறைவேற்றலாம். மணியை மந்திரிக்கிறவரும் மற்ற குருக்களும் அதைச் சுற்றிவருவதற்கும் அதன் உட்புறத்தைத் தொடுவதற்கும் விக்கினமில்லாத விதமாய் கோளில் நடுச் சாலையில் தலைப்பில் அல்லது வேறு முக்கியமான இடத்தில் மணியைத் தொங்கவிட்டு வைக்கவேண்டும். மேற்றிராணியாரும் குருக்களும் அதை தொங்கவிடப்பட்டிருக்கிற இடத்துக்குச் சுற்றுப் பிரகாரமாய் ஏழு சங்கீதங்களைச் சொல்லித் திருச்சபைக்கும் அதைச் சேர்ந்த எல்லோருக்கும் தேவ இரக்கத்தை மன்றாடிக்கொண்டு போவார்கள். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், மேற்றிராணியார் தீர்த்தம் மந்திரித்து, அதைக் கொண்டு மணியைக் கழுவுவார். அவருக்கு உதவியாய் நிற்கிற குருக்கள் மணியின் உள்ளும் புறமும் மேற்பரப் பெல்லாம் கழுவி முடிப்பார்கள். இதனிடையில் வேறு ஏழு சங்கீதங்கள் சொல்லப்படும். சங்கீதங்களின் முடிவில் சொல்கிற ஜெபம் வெகு நேர்த்தியானது. சர்வேசுரன் தமது பிரஜைக்குத் தமது அருளை ஈந்து, மணிச்சத்தத்தைக் கேட்பதான அவர்களுடைய விசுவாசமும் பக்தியும் அதிகரிக்கவும், துஷ்ட அரூபியின் வஞ்சனைகளெல்லாம் பயனற்றுப்போகவும், ஆரோக்கியம் உண்டாகவும், மணிச்சத்தத்தைக் கேட்டு பசாசுக்கள் பறந்தோடவும் வேண்டுமென்று மன்றாடுகிறார். இன்னுமொரு ஜெபம் சொன்னபின், அவஸ்தைபூசுதலில் உபயோகிக்கிற அர்ச்சியசிஷ்ட எண்ணெயால் ஏழு இடங்களில் மணியின் வெளிப்புறத்தில் தடவுகிறார். மீண்டும் வேறொரு ஜெபம் சொல்லி மணியின் உள்வாயில் பரிமள தைலத்தால் நாலு சிலுவை அடையாளம் வரைகிறார். வேறு சில ஜெபங்களும் சங்கீதமும் சொன்னபின்னர், பெரிய பாட்டுப் பூசையில் செய்வதுபோல் சுவிசேம் பாடப்படும். இந்த சுவிசேத்தின் பாகம், நமது திவ்விய இரட்சகர் மார்த்தா, மரியம்மாள் என்னும் இரு சகோதரிகளையும் பார்க்கப்போன சம்பவத்தைக் குறிக்கிறது. கோவில் மணிச்சத்தங் காதில் விழும்போதெல்லாம், மரியம்மாளைப் போல் கடவுளைத் தியானிப்பதே மேலான காரியம் என்பதை நாம் நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக