Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 பிப்ரவரி, 2023

சாம்பல் புதன்

 சேசுகிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்.


01 தபசு காலத்தில் அவசியமாய் அநுசரிக்கவேண்டிய விசேஷங்கள்: 


சாம்பல் புதன்.



1-ம் ஆயத்த சிந்தனை - தேவ கட்டளையை மீறி நடந்த நமது ஆதித் தகப்பனைப் பிதாவாகிய சர்வேசுரன் பார்த்து “நீ உற்பத்தியான மண்ணுக்குத் திரும்பிப் போகுமட்டும் உன் நெற்றியின் வேர்வையால் உனது ஆகாரம் புசித்துத் தூசியாய் இருக்கிற நீ திரும்பவும் தூசி யாய்ப் போகக்கடவாய்” என்று சொல்லும் பயங்கரமான வாக்கியத்தை நீ கேட்பதாகப் பாவித்துக்கொள். 

2-ம் ஆயத்த சிந்தனை - உனது ஒன்றுமில்லாமையை உணர்ந்து எப்பொழுதும் உன்னைத் தாழ்த்தி அடிக்கடி மரணத்தைத் தியானித்து, தவத்தால் சரீரத்தைத் தண்டித்து ஒறுத்துத் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடப்பதற்கான இஷ்டப்பிரசாதத்தை கட்டளையிட சேசுநாதரை மன்றாடுவாயாக.

சேசுநாதருடைய உருக்கத்துக்குரிய இத்தியானங்கள் எந்த அந்தஸ்திலும் இருக்கக்கூடிய சகல கிறீஸ்தவர்களுக்கும் மகா பிரயோசனமாயிருக்கும். தியானம் செய்யப் பழகாதவர்கள் முதலாய் இத்தியானங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவைச் சிறுகச் சிறுகக் கவனமாய் வாசித்தால் தியானம் செய்யும் விதத்தைக் கற்றுக் கொள்ளலாம். 

ஒவ்வொரு தியானத்துக்கு முன் 2 ஆயத்த சிந்தனைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. முதல் சிந்தனையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும், தான் தியானம் செய்ய இருக்கும் பொருளைப் புத்திக் கண்ணால் பார்ப்பதாக மனதில் ரூபிகரித்துக் கொள்ள வேண்டியது. 2-ம் சிந்தனையில் தியானத்திலே தான் செய்யும் நல்ல பிரதிக்கினையைச் சர்வேசுரன் ஆசீர்வதிக்கவும், அல்லது தான் கேட்கும் மன்றாட்டை அவர் அளிக்கவும் தாழ்ச்சியுடன் வேண்டிக் கொள்ளுகிறது. ஆயத்த சிந்தனையில் இரண்டொரு நிமிஷம் செலவழித்து, இருதயத்தில் பக்தி விசுவாசத்தை எழுப்பி, வாசிக்கப் படும் பொருளைக் குறித்துத் தியானிக்க வேண்டியது.

சாதாரணமாக நாள் தோறும் அரைமணி நேரம் தியானம் செய்யப் பழக்கப்பட்டவர்கள், அநேக விசை தியான வேளையில் பக்தி கவனமின்றி வெகு பராக்குக்கும், மனவறட்சிக்கும் உள்ளாகி, யாதோர் பிரயோசனமும் அடையாமல் போவார்கள். 

அப்பேர்ப்பட்ட சமயத்தில் சேசுநாதருடைய திருப்பாடுகளைக் குறித்துத் தியானம் செய்வார்களேயாகில் மேற்படி குறைகளுக்கு உள்ளாகாமல் அதனால் வெகு ஞானப் பிரயோசனங்களை அடைந்து சாங்கோபாங்கத்தில் (புண்ணியத்தில்) அதிக வளர்ச்சி அடைவார்களென்று அறியவும்.

அநேக பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் சேசுநாதருடைய திருப் பாடுகளைத் தங்கள் அனுதினத் தியானமாகத் தெரிந்து கொண்டார்கள். அப்படியே தேவமாதா சிமியோனுடைய தீர்க்கதரிசனத்தைக் கேட்டது முதல் தமது மரணபரியந்தம் தமது பிரிய குமாரனுடைய பாடுகளைக் குறித்து நினைத்து அழுவார்கள். அர்ச். இராயப்பர் நமது கர்த்தருடைய பாடுகளைக் குறித்து நினைக்கும் போது, படும் கஸ்தி அழுகையால் தமது கன்னத்தில் பள்ளம்படும்படி அவ்வளவு ஏராளமாய்க் கண்ணீர் சொரிந்தார். அர்ச். இஞ்ஞாசியாரும் சிலுவை அருளப்பரும் பாடுகளைக் குறித்துத் தியானம் செய்யும்படி படிப்பித்தார்கள். அர்ச். சவேரியார் திருப்பாடுகளின் மேல் வைத்த விசேஷ பக்தியால் தமது சிலுவைச் சுரூபத்தை விட்டுப் பிரிய மனமின்றி, அத்திருச்சிலுவையின் இரகசியத்தைக் குறித்துத் தியானித்து வருவார். திருச்சபையில் பேர்பெற்ற சாஸ்திரியாகிய அர்ச். தோமாஸ் அக்குயினாஸ் என்பவர் பாடுபட்ட சுரூபத்தைத் தமது கண்கள்முன் வைத்து, அதன் பேரில் தியானித்ததால் அரிதான சாஸ்திரங்களை அறிந்து கொண்டார். அர்ச். ஐந்து காய பிரான்சீஸ்கு என்பவர் சேசுநாதருடைய திருப்பாடுகளை இடைவிடாமல் தியானித்து வந்தபடியால் அதற்குச் சம்பாவனையாக நமதாண்டவர் தமது ஐந்து காயங்களை அவருடைய சரீரத்தில் பதியச்செய்தார். அர்ச். லிகோரியாரும், பிரான்சீஸ்கு சலேசியாரும், இன்னும் கணக்கற்ற அர்ச்சியசிஷ்டவர்களும் திருப்பாடுகளின் பேரில் வெகு பக்தி வைத்துத் தியானித்ததுமன்றி, மற்றவர்களும் இவ்விதம் செய்யும்படி தூண்டி விட்டுப் பாடுகளைக் குறித்து அநேக புத்தகங் களை எழுதி வைத்தார்கள்.

தமது திருப்பாடுகளின் மேல் விசேஷ பத்தி வைத்து அவைகளை அடிக்கடி தியானிப்பவர்களை நமதாண்டவர் அதிகமாய்ச் சிநேகித்து, அவர்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து வருவா ரென்பது சத்தியம். “யாதொருவன் நாம் பாடுபட்ட சுரூபத்தைப் பக்தியோடு எத்தனைவிசை பார்ப்பானோ, அத்தனை விசையும் நாம் நமது இரக்கமுள்ள கண்களை அவன் மேல் திருப்புவோம்” என்று ஜெர்த்துருத்தம்மாளுக்குக் காட்டிய காட்சியில் நமதாண்டவர் திருவுளம்பற்றியிருக்கிறார்.

ஆகையால் இந்தத் தியானங்களை வாசிக்கும் பக்தியுள்ள ஆன்மாக்களே, சேசுநாதருடைய திருப்பாடுகளின் மேல் விசேஷ பக்தி வைப்பது நமக்கு எவ்வளவு பிரயோசனமென்று நமது கர்த்தருடைய வார்த்தைகளால் தெளிவாய் விளங்குகின்றது. 

இச்சிறு புத்தகம் தபசு காலத்துக்காக எழுதப்பட்ட போதிலும், வருஷத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தோறும் இதில் ஓர் தியானத்தைச் செய்வது உத்தமம்.

திருப்பாடுகளைக் குறித்துத் தியானிக்கும் பிரிய சகோதரரே, சேசுநாதர் சுவாமி பாடுபட்டு மரிக்கும்போது நடந்த அற்புதங்கள் உங்கள் இருதயத்திலும் நடக்குமென்பது தப்பாது. பூமி அதிர்ந்து நடுநடுங்கினது போல மண்ணான உங்கள் சரீரம்தான் கட்டிக் கொண்ட பாவ அக்கிரமங்களைக் கண்டு வெட்கி, மனஸ்தாபப்பட்டு தன் ஆத்துமத்துக்கு அடங்கி நடக்கும் கல்மலைகள் பிளந்து தகர்ந்ததுபோலப் பாறைக்கொப்பான உங்கள் இருதயம் பாடுகளைத் தியானிப்பதால் மெழுகுபோல் உருகும். தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாய்க் கிழிந்ததுபோல் உங்கள் இருதயத்தை மூடிக்கொண்டிருக்கும் சுகபோக ஆசாபாசப் படலங்கள் அகன்று போகும். கடைசியாய் நமதாண்டவர் மரித்த மூன்றாம் நாள் மகிமையுள்ளவராய் உயிர்த்ததுபோல் நீங்களும் அவர் திருப்பாதம் போய்ச் சேர்வீர்கள் என்பது நிச்சயம். ஆகையால் பக்தியுள்ள ஆன்மாக்களே, திருப்பாடுகளைக் குறித்து அடிக்கடி தியானிக்கிறதுமன்றி, மற்றவர்களும் இவ்விதம் செய்யும்படி பிரயாசைப் படுவீர்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக