Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அருட்கருவிகள் - மெழுகுவர்த்தி


  நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம்.
திருச்சி, 1941


தேவ ஆராதனைகளில் தீபம் உபயோகிப்பது தொன்று. தொட்டு வழங்கி வரும் ஓர் நல்ல வழக்கம். யூதரும் அஞ்ஞானிகளுமே இதைப் பிரயோகித்து வந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவர்களுக்குள் இதன் பிரயோகம் ஆரம்பத்தில் அவசியத்தினிமித்தம் உண்டானது என்று சொல்லக் காரணமுண்டு. அது எவ்வாறெனில், பொழுது விடியுமுன்னர் அல்லது சுரங்கங்களில் திவ்விய பலி ஆராதனை நிறைவேற்ற வேண்டியிருந்த காலத்தில் இருளைப் போக்குவதற்குத் தீபம் அவசியமாயிருந்தது. ஆனால் தீபப் பிரயோகத்தில் உன்னதமான ஞானக்கருத்துகள் அடங்கி இருக்கின்றன வென்பதைக் கிறீஸ்தவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாய்க் கண்டு கொண்டார்கள் என்பது நிச்சயம்,

வெளிச்சம் சுத்தமானது. அது அந்தகாரத்தை ஊடுருவுகிறது. அதன் எல்கைக்குள் இருப்பதையெல்லாம் பிரகாசிப்பிக்கிறது. ஆதலால், மகா பரிசுத்தரும், சர்வ வியாபியும், சகல வரங்களுக்கும் ஊற்றுமாயிருக்கிற சர்வேசுரனுக்கு அது உச்சிதமான அறிகுறி என்பது வெளிப்படை. அது தமது திவ்விய இரட்சகரையும் அவரது அலுவலையும் உருவகப்படுத்துகிறது. ஏனெனில், அவர் உலகத்தின் ஒளி, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களைப் பிரகாசிப்பிக்க வந்தவர். மெழுகுவர்த்தியை உபயோகிப்பதற்கும் விசேஷ காரணமுண்டு. மெழுகு மாசற்றதாயிருப்பதி னிமித்தம், கிறீஸ்துநாதரின் மாசற்ற சரீரத்துக்கு உருவகமாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிற திரி அவரது ஆத்துமத்துக்கு அடையாளம், அதிலிருந்து புறப்படும் சுடர் ஒரே தெய்வீக ஆளிடமாய் தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் ஒன்றித்து இருப்பதைக் காட்டுகின்றது.

பச்சாத்தாபம் ஒன்று நீங்கலாக, மற்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுகையிலெல்லாம் மெழுகுவர்த்தி உபயோகப்படுகிறது. திவ்விய பலிபூசை வேளையிலும், வேறு தேவ ஆராதனை முயற்சிகளிலும், சுற்றுப்பிரகாரங்களின் போதும், இன்னும் இதர சமயங்களிலும் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறார்கள்.

பீடத்தின்மேல் மெழுகுவர்த்தியை வைப்பது 11-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லாம். அதற்கு முந்தின காலங்களில், பீடத்துக்கு அருகாமையில் உயரமான தண்டுகளில் அல்லது சுவரிலிருந்து கொளுவியில் ஊன்றி வைப்பது வழக்கம்.

பெரிய பாட்டுப் பூசையில் ஆறு மெழுகுவர்த்திகளும், சாதாரண பாட்டுப் பூசையில் ஒரே குருவானவர் மாத்திரம் நிறைவேற்றும்போது நான்கு திரிகளும், மேற்றிராணியார் செய்யும் பாட்டுப்பூரையில் ஏழு திரிகளும், மேற்றிராணியா ருடைய சாதாரண பூசையில் நான்கும், குருக்கள் செய்யும் சாதாரண பூசையில் இரண்டு திரிகளும் கொளுத்துவது முறை. ஆயினும், உற்சவ ஆடம்பர தினங்களில் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாய் வைப்பதில் ஆட்சேபனையில்லை.

இதுவரையும் நாம் சொல்லி வந்தது தேன் மெழுகினால் செய்த திரிகளைப் பற்றியேயன்றி, மீன் திரி என்று நமது நாட்டில் வழங்கும் திரிகளைப் பற்றியல்ல. மேலே சொன்ன சமயங்களில் உபயோகிக்கிற திரி தேன்மெழுகினால் செய்து, தேவமாதாவின் சுத்திகரத் திருநாளன்று அல்லது அதற்குப் புறம்பாய் மந்திரிக்கப்பட்டிருப்பதே ஒழுங்கு. மீன் திரி அல்லது கொழுப்புத் திரி பலிபீடத்திலாவது தேவதிரவிய அதுமானங்களை நிறைவேற்றுகையிலாவது உபயோகிப்பது ஒழுங்கல்ல. இந்தத் திரிகளை மந்திரிக்கிறதுமில்லை. இவைகள் வேண்டுதல் திரி எனப்படும். இவைகள் சாதாரணமாய் ஏதாவது ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கரூபத்துக்கு முன்பாக எரிகிறவைகள், விசுவாசிகள் அந்தந்த அர்ச்சியசிஷ்டவர் மட்டில் தங்களுக்குள்ள விசேஷ பற்றுதல் வணக்கத்தைக் காட்டுவதற்காக இவைகளை உபயோகிக்கிறார்கள்.

மந்திரித்த மெழுகுதிரி ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் இருக்க வேண்டும். குருவானவர் அவ்வீட்டில் யாருக்காவது நற்கருணை அல்லது அவஸ்தைபூசுதல் கொடுக்கும்போது அந்தத் திரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டும். மரணத் தறுவாயிலிருக்கிறவன் கையில் மந்திரித்த திரியைப் பிடித்திருக்கும்படி செய்வது மகா பக்திக்குரிய ஓர் வழக்கம். இந்தத் திரியின் சுடர் அவனது விசுவாசத்துக்கும். அவன் பெற்றுக்கொண்ட தேவ வரங்களுக்கும். அவன் பெறப் போகிற நித்திய மகிமைக்கும் அடையாளமாயிருக்கிறது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக