பிப்ரவரி 03ம் தேதி
மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ்
இவர் ஆர்மேனியாவில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஓர் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். சபாஸ்ட் என்ற நகரின் மேற்றிராணியாராக இவர் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, கிழக்கத்திய உரோமை சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக லிசினியுஸ் என்பவன் ஆண்ட காலத்தில், மறுபடியும் கிறிஸ்துவர்களை உபத்திரவப்படுத்தும் வேத கலாபனையின் காலம் துவங்கியது.
மலைகளில் மிருகங்களை வேட்டையாடிக்கொண்டிருந்த அஞ்ஞானிகள், காட்டு மிருகங்கள் சூழ்ந்திருந்த ஒரு குகையில் நோய்வாய்ப்பட்டிருந்த மிருகங்கள் நடுவில் அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ் பயமில்லாமல் நடந்து போவதையும், அவற்றில் சில விலங்குகளைக் குணப்படுத்துவதையும் கண்டனர். இவர் சபாஸ்ட் நகர மேற்றிராணியார் என்பதை அறிந்த அஞ்ஞானிகள், இவரை பிடித்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
போகும் வழியில், ஒரு ஓநாய் ஒரு பன்றியைப் பிடித்து வைத்திருந்ததைக் கண்டு, அந்த பன்றி ஒரு ஏழைப்பெண்ணிற்குச் சொந்தமாயிருப்பதால், அதை விட்டுவிடும்படி கூறினார். அந்த ஓநாய் உடனே அர்ச்சிஷ்டவருக்குப் கீழ்ப்படிந்து, பன்றியை விட்டுவிட்டது.
சிறையிலிருந்தபோது, ஒரு சிறுவன் தொண்டையில் மீன் முள் மாட்டிக்கொண்டு சாகும் தருவாயில் இருந்தபோது, அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ் அவனை ஆசீர்வதித்து குணப்படுத்தினார்.
அக்ரிகோலாவுஸ் கவர்னருக்கு முன்பாக இவரை இழுத்துச் சென்று, கம்பளியைக் கோதிவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தூரிகையைக் கொண்டும், இன்னும் பல்வேறு கொடூரமான சித்ரவதைகளாலும் உபாதிக்கப்பட்டார்.
இறுதியில், கி.பி. 316ம் வருடம், அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ், தலை வெட்டிக் கொல்லப்பட்டார்; மகிமை மிகு வேதசாட்சிய கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். இவருடைய திரு இரத்தத்தை சேகரித்த குற்றத்திற்காக, இரண்டு சிறுவர்களும், ஏழு பெண்களும் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.
இவர் விலங்குகள் மேல் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்ததால், விலங்குகளுக்குப் பாதுகாவலராக விளங்குகிறார். தொண்டை நோயில் அவஸ்தைப்படுகிறவர்களுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார். திருச்சபையின் 14 பரிசுத்த உதவியாளர்களான அர்ச்சிஷ்டவர்களின் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.
இவருடைய திருநாளின்போது, அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ் சிலுவையின் வடிவில் இரண்டு மந்திரித்த மெழுகு திரிகளை ஒவ்வொருவர் தொண்டையிலும் வைத்து, பின்வரும் ஜெபத்தை ஜெபித்து, குருவானவர் தொண்டையை மந்திரித்து ஆசீர்வதிப்பார்:
"அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ் பரிந்துரையினிமித்தம், எல்லாம் வல்ல சர்வேசுரன் உன்னை சகல தொண்டை நோய்களிலிருந்தும் மற்ற எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்பாராக! பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே, ஆமென்."
இதன்பின், விசுவாசியின் மேல் சிலுவை அடையாளம் வரைந்து, குரு ஆசீர்வாதம் கொடுப்பார்.
மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவர் பிளேயிஸ், எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக