அமலோற்பவ கன்னிமரி
அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது. (அரு. காட்சி. 12:1)
1854 டிசம்பர் 8-ம் நாளன்று பாப்பரசர் முத். போன 9-ம் பத்திநாதர் "Ineffabilis Deus" என்ற பிரகடனத்தில் "...மிக ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிமரி, மனுக்குலத்தைக் காப்பாற்றுகிறவரான சேசு கிறீஸ்துவின் பேறு பலன்களை முன்னிட்டு, எல்லாம் வல்ல சர்வேசுவரனுடைய தனி வரப்பிரசாதத்தாலும், சலுகையாலும் தான் உற்பவித்த முதல்கணத்தில், ஜென்மப்பாவக்கறை எதுவும் அணுகாமல் காப்பாற்றப்பட்டார்கள், இந்த சத்தியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால் இது உறுதியுடனும் இடைவிடாமலும் விசுவாசிகள் அனைவராலும் விசுவசிக்கப்பட வேண்டும்..."என்று மாதாவின் அமலோற்பவத்தை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.
இந்த உண்மை பரிசுத்த வேதாகமத்திலும், திருச்சபையின் போதனைகளிலும் காணப்படும் ஒன்று கத்தோலிக்க வேதசாஸ்திரத்தை ஒத்திருக்கும் இந்த சத்தியம் பரிசுத்த கன்னிமரியாயின் மிகப்பெரிய மகிமைப் பாக்கியமாக உள்ளது. இது பல புதுமைகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
சர்வேசுவரன் ஆதாமையும் ஏவாளையும் தேவ இஷ்டப் பிரசாதத்தில் மிக உன்னதமான நிலையில் சிருஷ்டித்திருந்தார். ஆனால் விலக்கப்பட்டசு கனியினைத் தின்று, பாவம் கட்டிக்கொண்டு தேவ கோபாக்கினையைத் தண்டனையாக தங்கள் மீது தேடிக் கொண்டனர். சர்வேசுவரன் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள் மிகவும் ஆழ்ந்த பொருள் உள்ளவை: "உனக்கும் ஸ்திரீக்கும். உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள், நீயோ அவள் குதிகாலைத் தீண்டப் பிரயத்தனம் பண்ணுவாய்" (ஆதி. 3:15) இதனை சற்று ஆராய்வோம்: ஆதியாகமத்தில் இந்த வார்த்தைகளை சர்வேசுவரன் எக்காலங்களுக்கென்று மனிதர்களுக்காக கூறியது.
அவருடைய வாக்கு மகிமையாகவும், உண்மையிலும், கம்பீர மாகவும் ஒலித்தது. அவர் முன்பாக, பாவத்தால் நிலை குலைந்து போன ஆதாம், வீழ்ச்சியின் துயரத்தோடு ஏவாள், சோதிப்பவனான சாத்தான் ஆகியோர் நிற்கின்றனர். ஆதாம் ஏவாள் விலக்கப்பட்டக் கனியை உண்ணக்கூடாதென்று கடவுளால் கூறப்பட்டாலும், அவர்கள் அவருடைய பேறுபெற்றப் பிள்ளைகளாகத் திகழ்ந்தனர். ஆனாலும் தீமை நடைபெற்றுவிட்டது. சர்வேசுவரன் தயாளமுள்ள தந்தையாதலால் அவர்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கினார். அவர் பாம்பை நோக்கி, "கீழ்த்தரமான சாப்பமே, உனக்கும் பெண்ணுக்கும் அழிவுக்குரிய உடன்பாடு நீ சோதித்தாய். அவள் உடன்பட்டாள். இப்போது உனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் முழுமையான பிரிவினையையும், பகையையும் ஏற்படுத்துவோம். அது என்னால் ஏற்படுத்தப்பட்ட பகை" என்று கூறுகிறார்.
அவளது மாசுபட்ட இரத்தத்திலிருந்து, குழந்தைகளையேப் பெறுவாள். ஆனால் நான் அவளது இந்த தலை முறையினரை நிறுத்தி, உனது (பசாசின்) ஆதிக்கமில்லாத ஒரு தலைமுறையைக் கொண்டு வருவேன். நான் ஒரு பெண்ணை உனது எதிரியாகவும், பகையாளியாகவும் ஏற்படுத்துவேன். அவளிடமிருந்து பிறப்பவர் பரிசுத்தராக இருப்பார். அவள் மட்டுமல்ல, அவளது வித்தும் உனது எதிரியாக இருப்பார். நீ அவளால நசுக்கப்படுவாய். நீ அவளைத் தீண்ட முயல்வாய். ஆனால் அவளது ஆன்மாவையோ அல்லது உள்ளத்தை யோ தொடமுடியாது. நீ வீணாக அவளது குதிகாலைத் தீண்ட முயற்சிப்பாய். இப்படியாக மரியாயில், சர்வேசுவரன் தாமே பசாசோடு பகையை மூட்டியுள்ளார். அவளை அணுக முயலும் போதெல்லாம் சாத்தான் தோல்வியே அடையும். ஆனால் அவள் அதன் தலையை நசுக்குவாள். மாதா தாம் உற்பவமான அந்த கணத்திலிருந்து அமலோற்பவியாக இருக்கிறார்கள். சாத்தானால் ஒரு கண நேரத்திலும் கூட மாதாவை வெற்றிகொள்ள முடியவில்லை.
பரிசுத்த கன்னிமரியம்மாள் சம்மனசானவரால் “அருள் நிறைந்தவள்" என அழைக்கப்பட்டார்கள். அருள் நிறைவு என்பது மாதா தனது வாழ்நாளெல்லாம் கடவுளோடு முழுமையாக ஒன்றித்திருந்தார்கள் என்பதைக் குறிக்கும். அவர்கள் எந்த நேரத்திலும் பாவத்தால் கறைபடுத்தப்படவில்லை. கடவுளின் நிறைவான படைப்பாக உருவாக்கப்பட்டார்கள். அமலோற்பவியாக பரிசுத்தவதியாக
அதிதூதரான கபிரியேல் "கர்த்தர் உம்முடனே” (லூக், 1:28) என்றுரைத்து மரியாயோடு சர்வேசுவரன் இருப்பதைக் கூறுகிறார். "சர்வேசுவரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்” (லூக், 1:30) ஆதாம் இந்த வரப்பிரசாதத்தை இழந்ததால் சர்வேசுவரன் அவரை சிங்காரத்தோப்பிலிருந்து வெளியேற்றினார். அவரோடு கடவுள் இருக்கவில்லை. ஆதாம் இழந்தவைகள் அனைத்தையும் மாதா கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் ஆதாமின் பாவத்திலிருந்து விலகியிருந்தது மட்டுமல்லாமல், அவருடைய பாக்கியங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டு விலை மதிப்பில்லாத ஒவ்வொரு வரங்களாலும் அணிவிக்கப்பட்டு படைப்புகளிலேயே மிகவும் உன்னதமான சிருஷ்டியாக உயர்த்தப் பட்டார்கள்.
அர்ச். எலிசபெத்தம்மாள் மாதாவை "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதாமே” (லுாக். 1:42) என்று வாழ்த்தினாள். இந்த வாழ்த்து எதற்கு? ஏனென்றால் மரியாயின் வயிற்றின் கனியானவர் வாக்களிக்கப்பட்ட மீட்பரான அவர்களது தெய்விக மகன்! சிங்காரத் தோப்பில் சர்வேசுவரனால் ஏவாளின் பாவங்களுக்காக முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரியானவள் மரியாயே! மாதா அவரது அன்னையாக ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகையால் ஒரு சிறு பாவம் கூட அணுகாமல் பாதுகாக்கப்பட்டார்கள். பாவத்தால் பீடிக்கப்பட்ட தாயிடமிருந்து மனுவுரு எடுக்கவோ, சாத்தானால் கவரப்பட்ட பாவக் கறைபட்ட பேழையிலோ அவர் தங்குவதில்லை.
திருவழிபாடுகளிலும், பாரம்பரியத்திலும், தொன்மை கலைச்சித்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட மாதாவின் அமலோற்பவம், விசுவாச சத்தியமாக்கப்பட்ட போது. திருச்சபையின் பாப்பரசரும் வேதபாரகர்களும் இந்த உண்மையை வலியுறுத்தி அநேக நூல்களையும், பிரபந்தங்களையும் எழுதினார்கள்,
கன்னிமாமரி அறியாமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந் தார்கள், ஏனெனில் அவர்களே ஞானத்திற்கு இருப்பிடம்: தீமையிலிருந்து காக்கப்பட்டார்கள். இதனால் நன்மைதனத்திலும் நிறைவிலும் எப்போதும் நிலைத்திருந்தார்கள். ஆகையால் தான் திருச்சபை "ஓ மரியாயே நீர் எத்துணை அழகானவள்; ஜென்மப்பாவத்தின் மாசு உம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை" என்று பாடுகிறது. மரியாயின் சரீரத்தைப் பொறுத்தவரையில் வளர்ச்சி என்ற மனித இயல்பின் பரிணாமத்திற்கு உட்பட்டாலும் ஜென்மப்பாவத்தின் தாக்கம் இல்லாமையால் முழுமையான சௌந்தர்யமுள்ளதாக விளங்கியது. அவர்கள் சுகவீனத்திலிருந்துதடுக்கப்பட்டிருந்தாலும் பசி, தாகம், மனவேதனை ஆகிய உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தார்கள். அவர்கள் இந்த உலகை விட்டு கடந்து மறுமைக்குச் சென்றதும்கூட சுகவீனமோ. நோய்வாய்ப்பட்டதாலோ அல்ல. மாறாக வல்லமை வாய்ந்த தேவசிநேகமே அவர்களது சரீரத்தை நிலைகுலையச் செய்தது.
மாதாவின் அமலோற்பவத் திருநாளின் கட்டளை ஜெபம், திவ்விய பலிபூசையிலும் கூட மாதாவின் உற்பவத்தின் போது அவர்களது சரீரத்தோடு இணைக்கப்பட்ட, அசாதாரணமான ஆன்ம அழகு பெரிதும் போற்றப்படுகின்றது. கபிரியேல் தூதனால் "அருள் நிறைந்தவளே வாழ்க!" (லுாக். 1:28) என்று கடவுளின் மாதாவை வாழ்த்துவதைப் பற்றிய திருச்சபையின் விளக்கங்கள் மிகவும் அற்புதமானனை. மரியாயைப் போதிய அளவுக்கு வாழ்ந்த வேண்டுமானால் நாமும் கபிரியேல் தாதுவரின் மனப்பான்மையை கொண்டிருப்பது அவசியம். அவைகளின் உயர்வை, உன்னதத்தினை யோசிப்பது அவ்வளவு சிரமமில்லை. விசுவாசத்தோடு சம்மனசானவர் தெய்வீக நன்மைத்தனங்களோடு விளங்கிய மரியாயை ஆராதித்த போது, இந்த தாழ்ச்சியானக் கன்னிகை அந்த மகா உன்னத மகிமை உயர்வுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டு வியப்படைந்தாள் மீட்பினுடையவும். மனிதாவதாரத்தினுடையவும் பரமரகசியங்களை முன்னறிவிப்பவராக தாம் ஏற்படுத்தப்பட்ட மரியாதையினால் சம்மனசானவர் மகிழ்ச்சி யடைந்தார்.
அமலோற்பவ மாதாவின் மகோன்னதமான உயர்வு பெருமைகளையெல்லாம் திருச்சபையின் ஜெபங்களிலும், திருவழிப்பாடுகளிலும் வெளிப்படுகின்றன. மரியாயின் நாமம். எல்லா அழகோடும், தூய்மையோடும், ஒளிபொருந்திய சூரிய பிரகாசத்தோடும், அவர்களது வரப்பிரசாத சுகந்தங்களோடும் அகில உலகெங்கும் மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது. அவர்கள் ஜெருசலேமின் மகிமை உயர்வு. மக்களின் பெருமை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தெய்விக வல்லபத்தின் உருவம் உயர்ந்த பரிசுத்த பர்வதங்களின் உச்சியில் கட்டப்பட்ட கடவுளின் திருநகர்!
ஒ. அனைத்தும் பரிசுத்த பிரகாசமான மாசில்லாத கன்னிகையே, உலகமுண்டாகும் முன்பே நீர் தேர்ந்துகொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்! குற்றங்களின் பாரத்தால் நசுக்கப்பட்டு மீட்பு பற்றிய நிச்சயமில்லாமல் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் மனிதன் உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறான். நீரே எங்களது நம்பிக்கை, உம்மில் உம் வழியாகவே குற்றவாளிகள் வரப் பிரசாதத்தைக் கண்டடைகிறார்கள். நொறுக்கப்பட்டவன் ஆறுதலையும், கைவிடப்பட்டவன் அடைக்கலத்தையும், அறிவிலி ஞானத்தையும்; பாவியானவன் மன்னிப்பையும்; நீதிமான் நிலைமை வரத்தையும் கண்டடைகிறான். தாயே நீரே எங்களது ஏக அடைக்கலம்!
Source: சால்வே ரெஜினா- டிசம்பர் 2006
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக