வானில் தோன்றிய வெளிச்சம்! அர்ச். அல்போன்சம்மாளின் பாக்கியமான மரணம் !
அன்று 1946 ஜூலை 27-ம் நாள். பரணங்ஙானம் பங்குச்சாமியார் சகோதரி அல்போன்சம்மாளைப் பார்க்க வந்தார். கையில் ஜெபமாலையை ஏந்தியவாறு படுத்திருந்த அவளைப் பார்த்து, "சிஸ்டர், என்ன செய்தி !. எப்படி இருக்கிறீர்கள் ?'' என்று கேட்டார். அதற்கு அவள் "சுவாமி, நாளைக்கு எனக்கு ஒரு போராட்டம் நடக்கப் போகிறது. நான் அதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலளித்தாள். குருவானவர், "பலமுறை போராடிப் பழகியிருக்கிறீர்கள் தானே, போருக்கான பழைய கருவிகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.” என்று நகைச்சுவையாகக் கூறினார். அதற்கு அல்போன்சம்மாளும், "ஆமாம்! அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்'' என்று தனது ஜெபமாலையை உயர்த்திக் காட்டியவள், "எனக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்'' என்று பதிலளித்தாள். மறுநாள் - 1946 ஜூலை 28, காலையில் அல்போன்சம்மாள் வழக்கம் போல் வராந்தாவில் உட்கார்ந்தவறே ஆலயத்தில் நடக்கும் திவ்ய பலி பூசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் நோயின் தாக்குதல் அறிகுறிகள்
தோன்றின. மெல்ல எழுந்து தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். உடனே வாந்தியும், மிகக் கடுமையான வேதனையும் ஆரம்பித்தன. சத்தம் கேட்டு உதவிக்கு சகோதரிகள் வர, துன்பங்கள் தொடர்ந்தன. வழக்கமாக இப்படிப்பட்ட வேதனைத் தருணங்களில் எதுவும் பேசவோ, கண்களைத் திறக்கவோ செய்யாத அல்போன்சம்மாள் இன்று கண் திறந்து சுற்றி நின்றவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். கொடிய வேதனைகளைத் தாங்கிக் கொண்டிருந்த போதிலும் தங்களைப் பார்த்து அவள் சிரிப்பதைப் கண்ட சகோதரிகளின் கண்கள் நீரால் நிறைந்தன. வேதனை அதிகரிக்கவும் பொறுக்கமாட்டாத அல்போன்சா, "எனக்கு சகிப்பதற்குப் போதிய சக்தி இல்லை. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இது எனக்கு என் கடவுள் தந்தது தானே? நான் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் ! ஆம் ! சகிக்கத் தான் வேண்டும்'' என்று கூறியவள், வேதனையால் திக்குமுக்காடிப் போனாள்.
பின்னர், "மணி எத்தனை?”” என்று கேட்டாள். நேரம் நண்பகல் 12 ஆகிவிட்டிருந்தது. தன் உடல் மீது போர்வையை இழுத்து மூடிக்கொண்ட அல்போன்சம்மாள், திரும்பவும் வேதனை தாங்க முடியாமல் "என் மாதாவே ! என் தாயே !” என்று சத்தமாகக் கூறியவாறு சுவரில் மாட்டப் பட்டிருந்த வியாகுல மாதாவின் படத்தைத் திரும்பிப் பார்த்தாள். மாதா படத்தைப் பார்த்த அவளது முகத்தில் சாந்தமும், சமாதானமும் நிலவியது. அவளது முகத்தில் அசாதாரணமான அழகும், ஒளியும் காணப்பட சுற்றிலும் நின்றிருந்த சகோதரிகள் வியந்து போயினர்!
இதற்குள் மடத்துப் பெரிய தாயார் அங்கு வந்தார்கள். "மகளே, சமாதானமாய் இரு” என்று சொல்லி பாடுபட்ட சிலுவையை முத்தி செய்யக் கொடுத்தார்கள். சிலுவையை பக்தியோடு முத்தமிட்ட சகோதரி அல்போன்சா, " எனக்குச் சமாதானக் குறைவு எதுவும் இல்லை தாயே ” என்று கூறினாள். சிறிது நேரம் சென்றது " எனக்கு உடுப்பு உடுத்துங்கள். நான் போக வேண்டும்” என்றாள். உடுப்பு அணிந்துதானே இருக்கிறீர்கள். எதற்கு உடுப்புக் கேட்கிறீர்கள்? என்றனர் சகோதரிகள் அதற்கு அல்போன்சா, "சபை ஆடையை எனக்குத் தாருங்கள். நான் போகிறேன். என்னை அனுப்பி வையுங்கள்'' என்று வேண்டினாள். அவளது நிலையை புரிந்து ''குருவானவரை அழைத்து வரட்டுமா?'' என்று சகோதரிகள் கேட்க, அதற்கு அல்போன்சா கூறிய பதில் யாருக்கும் புரியவில்லை.
உடனே பங்கு குருவானவருக்கும், மருத்துவருக்கும் ஆள் அனுப்பினார்கள். இருவரும் ஒரே சமயத்தில் வந்து சேரவே, நாடியை பார்த்து மருத்துவர் சகோதரிக்கு கடைசி அவஸ்தைப்பூசுதல் கொடுக்கும்படி குருவானவரைக் கேட்டுக் கொண்டார். அதன்படி பங்கு சுவாமி அவஸ்தைப்பூசுதல் வழங்கி கடைசி ஆசீர் அளித்தார்.
வழக்கம்போல் மயக்கம் தெளிந்து அல்போன்சம்மாள் கண்களைத் திறப்பாள், தங்களோடு பேசுவாள் என்று சகோதரிகள் காத்திருக்க, அவள் கண்களைத் திறக்கவேயில்லை அவளுக்கு இனி இவ்வுலகக் காட்சிகள் தேவையில்லை. சத்தமின்றி அந்த மாடப்புறா தன் வான் வீட்டிற்குப் பறந்து
போய்விட்டிருந்தது. ஆம் ! சகோதரி அல்போன்சம்மாள் மரணமடைந்து விட்டாள் ! தான் முன்னறிவித்தது போல் பூமியில் தனக்காகக் காத்திருந்த எல்லோர் முன்னிலையிலும், சற்றும் ஓசையின்றி வானவர்களோடு சேர்ந்துவிட்டாள் சகோதரி அல்போன்சா! அவளது ஆன்மா 35 வருடங்கள், 11 மாதங்கள், 9 நாட்களில் தனது வாழ்வின் தேர்வை முடித்துவிட்டு வெற்றிமுடி சூட தன் சிலுவையை சுமந்து கொண்டு சேசு தனக்காக தயார் செய்திருந்த வான்வீட்டை நோக்கிச் சென்று விட்டது.
அப்போது பரணங்ஙானம் பெரிய கோவில் மணி மும்முறை ஒலித்து நின்றது. அது நண்பகல் திரிகாலமணி. தனது சொந்த வீட்டை அடைந்து விட்ட அல்போன்சம்மாளை வானுலகோர் வரவேற்று ஆசனத்தில் அமர்த்திய கீதம் போல் அது அமைந்தது.
வானத்தில் தோன்றிய வெளிச்சம் ! சிலமணி நேரத்துக்குப்பின் மரித்த சகோதரியின் புனித உடல் துறவற ஆடை அணிவிக்கப்பட்டு மடத்துக் கோவிலில் வைக்கப்பட்டது. சகோதரிகள் அவளது உடலைச் சுற்றி நின்றும், அமர்ந்தும், முழங்காலில் நின்றும் அழுவதும், செபிப்பதுமாய் பகலையும் இரவையும் கழித்தனர்.
அன்று இரவில் அல்போன்சம்மாளின் அறையின் மேல் பாகத்தில் வானில் ஒரு ஒளி தோன்றியது! ஒரு மணி நேரமாக நின்று நிலை பெற்றிருந்த அந்த ஒளியை சகோதரி செசிலியம்மாள் பார்த்து வியந்தாள். அவளைத் தொடர்ந்து பல சகோதரிகளும் அவ்வொளியைக் கண்டனர். பின்னர் பங்குக் குருவிடம் அச்செய்தி சொல்லப்பட, அவர் சர்வேசுரனுடைய செயல்கள் பல வழிகளில் வரும், மக்களின் நன்மைக்காக கடவுள் அதனைப் புனிதப்படுத்துவார். என்று சொன்னார். ஆம் ! சர்வேசுரன் தமது பிரமாணிக்கமுள்ள ஞானப்பத்தினியை மகிமைப்படுத்தினார். திருச்சபையில் பீட வணக்கத்திற்கு உயர்த்தினார்.
- திருநாள் : ஜுலை 28 அர்ச். அல்போன்சம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் !
மாதா பரிகார மலர் - July - August 2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக