Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 18 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 14 - அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ (Margaret Clitherow)


அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ





 அன்று 1586 மார்ச் 25-ம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். 30 வயதே நிரம்பிய குடும்பத் தலைவியான மார்க்கரேட் கிளித்தேரோ என்ற பெண்மணி தண்டனை

நிறைவேற்றப்படும் இடத்திற்கு மிகவும் அமைதியாக ஆனால் மிகுந்த உற்சாகத்துடன் வந்தாள். அவளது நிர்மலமான முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிய, சற்று நின்றவள் குனிந்து தனது காலுறைகளையும், காலணிகளையும் கழற்றி வெகு தொலைவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் அன்னாளிடம் கொடுத்து அனுப்பினாள். அவளும் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை அவள் உள்ளத்தில் எழவே, மகளுக்கு அந்தப் பரிசு!

இரவு வெகு நேரம் விழித்திருந்து பாப்பரசருக்காகவும், கர்தினால்மார், ஆயர்கள், குருக்கள், ஏன் தன்னை சாவுக்குத் தீர்ப்பிட்ட இங்கிலாந்து அரசி எலிசபெத்திற்காகவும் மன்றாடியிருந்தவளது உள்ளம் ஜெபித்துக்கொண்டே இருந்தது. அங்கே மேடையில் இருந்த நகர அதிகாரி அவளது குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கத் தூண்டவே, "இல்லை, இல்லை அதிகாரியவர்களே!, நான் எனது ஆண்டவர் சேசுவின் அன்பிற்காக சாகப் போகிறேன்" என்று பதிலளித்தாள்.

பின்னர் அவள் கூர்மையான கற்பாறையில் கிடத்தப்பட அவளது கரங்கள் சிலுவை அடையாளம் போல விரிக்கப்பட்டு இரு கம்பங்களில் கட்டப்பட, அவள் உடலில் ஒரு இரும்பு கதவு போடப்பட்டது. அந்த கதவு அவளது தேகத்தை மறைத்துக் கொள்ள அதன் மீது பெரும் பாரச் சுமைகள் போடப்பட்டன! அந்த பாரச் சுமையோடு இரும்பு கதவு அவளை நசுக்க அந்த இளம் பெண்ணின் மெலிந்த, மெல்லிய தேகம் துடித்தது! அவள் அனுபவிக்கும் அந்த வேதனை கைகளின் அசைவுகளில் தெரிய, எந்த விதமான அழுகையோ, அவலக் குரலோ எழவில்லை. 15 நிமிடங்கள் அந்த பாரத்தால் நசுக்கப்பட்ட அவளது கரங்கள் "சேசு! சேசு! என் மீது இரக்கம் வையும்" என்ற இறுதி மன்றாட்டோடு மெல்ல மெல்ல அசைவின்றி விரைத்துப் போயின! ஆம்! அந்த பெண்மணி மரணமடைந்து விட்டாள். உடல் நசுக்கப்பட்டு வேதசாட்சியமடைந்து விட்டாள்!

அவள் செய்த குற்றம் என்ன? கத்தோலிக்கக் குருக்களை தனது இல்லத்தில் பாதுகாத்து காப்பாற்றியது! கத்தோலிக்க பூசையைக் கண்டது!! 

யார் அந்த வேதசாட்சி? அவள் தான் அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ, "யார்க் நகரின் முத்து" என்று போற்றப்படும் மார்க்கரேட் 1556-ம் வருடம் யார்க் நகர ஷெரிப்பின் தலைவரான தாமஸ் மிடில்டோன் என்பவரின் மகளாகப் பிறந்தவர். புராட்டஸ்டாண்ட் மதத்தைச் சார்ந்த அவள் தமது 15-வது வயதில் செல்வந்தரான ஜான் கிளித்தேரோவுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். இயல்பிலேயே புண்ணியவதியாகத் திகழ்ந்த அவள் திருமணமான 3 வருடங்களில் கணவனின் உத்தரவோடு சத்திய வேதத்திற்கு மனந்திரும்பினாள்.

அக்காலத்தில் 8-ம் ஹென்றியால் ஏற்படுத்தப்பட்ட புராட்டஸ்டாண்ட் பதிதம் நிலைகொண்டிருந்தது. தற்போது ஆட்சி புரிந்த முதலாம் எலிசபெத்தும் கொடூரமாக கத்தோலிக்கத் திருச்சபையை துன்புறுத்தி வந்தாள். எவ்வளவுக்கென்றால், 1585-ல் இங்கிலாந்து நாட்டில் கத்தோலிக்கக் குருக்கள் எவருக்கும் இருப்பிடமோ, வேறு எந்த உதவியும் செய்யக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தையே பிரகடனப்படுத்தினாள். ஏற்கனவே கத்தோலிக்கப் பூசையில் பங்கேற்கவோ. கத்தோலிக்கப் பிரசுரங்களைக் கொண்டிருக்கவோ கூடாது என்ற கடுமையான தடை இருப்பதால் இங்கிலாந்தில் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் துன்புற்றனர். வெளிப்படையாக திவ்விய பலிபூசை நிறைவேற்ற குருக்களும், விசுவாசிகளும் அஞ்சினர். அதற்கான பதுங்கும் இடத்தைத் தேடவேண்டி வந்தது.

கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்த மார்க்கரேட் தனது இல்லத்திலேயே பதுங்கும் அறைகளை அமைத்து அங்கே குருக்களைப் பாதுகாத்து, அவர்கள் நிறைவேற்றும் பூசையைக் கண்டுவந்தாள். அவள் எந்தவிதமான அச்சத்திற்கும் இடம் தராமல் "சர்வேசுரனின் வரப்பிரசாதத்தால் எவ்வளவு குருக்கள் வரமுடியுமோ, அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடவுளின் கத்தோலிக்க ஊழியத்துக்கு எவ்வளவு முடியுமோ அனைத்தையும் செய்வேன்" என்று அடிக்கடிக் கூறுவாள்.

அவளது கணவன் தனது மனைவியின் அனைத்து காரியங்களிலும் உறுதுணையாக இருந்தார். தங்களது பிள்ளைகளான ஹென்றி, வில்லியம், மற்றும் அன்னாளை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கவும் விரும்பினர். இதற்காக மூத்த மகன் ஹென்றியை கத்தோலிக்க பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க அனுப்பி வைத்தாள். அதுவே அரசு அதிகாரிகள் அவள் மீது சந்தேகம் கொள்ள காரணமாயிற்று. அதனால் அவளது இல்லம் படை வீரர்களால் சோதிக்கப்படவே, பூசை புத்தகங்களும், ஆயத்தங்களும். பூசை மந்திரங்களும் இறுதியாக குருக்களின் பதுங்கு அறைகளும் கண்டுபிடிக்கப்படவே மார்க்கரேட் சிறைபிடிக்கப்பட்டாள்.

சொந்தப் பிள்ளைகள் சாட்சியாக்கப்பட்டதால் கொலை பாவம் அவர்கள் மீது விழ விரும்பாத மார்க்கரேட் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து, தான் செய்த காரியங்களுக்கு நியாயம் கற்பித்தாள். தனது கத்தோலிக்க விசுவாசத்தை வீரத்தோடு அறிக்கை யிட்டாள். அவள் விசாரணைக்கு மறுத்ததால் இங்கிலாந்து சட்டப்படி அவள் நசுக்கப்பட்டு மரணமடைய தீர்ப்பிடப்பட்டாள். அதனைக் கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்த அவள் ஓ! சர்வேசுரா உமக்கு நன்றி. இத்தகைய நல்ல மரணத்திற்கு நான் தகுதியானவள் அல்ல" என்று கூறினாள்.

மரண தண்டனை பெறும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் கொண்ட கத்தோலிக்க விசுவாசத்துக்காக நசுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

அவள் கொல்லப்படும் போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. மரண தண்டனை நிறைவேற்றும் சமயத்தில் சற்று நேரம் ஜெபிக்க விரும்பிய அவளிடம் அருகே இருந்த புராட்டஸ்டாண்ட் போதகன் "மார்க்கரேட் நானும் உன்னோடு ஜெபிக்கிறேன்" என்று கூறினான். அதற்கு உடனே "இல்லை, இல்லை என்னோடு நீ ஜெபிக்க முடியாது. பதிதர்களோடு விசுவாசிக்குப் பங்கில்லை. நான் உமக்காக ஜெபிக்கிறேன். நமது அரசி எலிசபெத்துக்காக அவள் மனந்திரும்பி, கத்தோலிக்க மதத்திற்கு வரவும், திருச்சபைக்கு சுயாதீனம் கொடுக்கவும் ஜெபிக்கிறேன்" என்று மறுப்புத் தெரிவித்தவள். சற்று நேரம் ஜெபித்தபின் தன்னையே கொலைஞர்களிடம் கையளித்தாள். கூரியக் கற்பாறையில் கிடத்தி, உடல் மேல் கனமான இரும்புக் கதவை போட்டு அதில் அதிகமான பாரத்தை வைத்து உடல் நசுக்கப்பட்டு அவள் வேதசாட்சியத்தைத் தழுவினாள்.

அவளது குழந்தைகளான ஹென்றி, வில்லியம் ஆகியோர் கத்தோலிக்கக் குருவாகவும், ஒரே மகள் அன்னாள் பிரான்ஸ் நாட்டில் லூவேன் நகர் அர்ச், உர்சுலா கன்னியர் சபையில் சேர்ந்தாள்.

பாப்பரசர் 6-ம் சின்னப்பர் 1970, அக்டோபர் 25-ம் நாளன்று அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் வழங்கினார்.

அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


source: Salve Regina - March 2008 issue.


To Read more about saints in Tamil - Click Here


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக