Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 4 - Life History of Rose of Lima in Tamil

 அர்ச்.லீமா ரோசம்மாள்(1585-1617):

ஜீவிய சரித்திரம்:

திருநாள்:ஆகஸ்ட் 30ம்தேதி


தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1585ம் ஆண்டு ஸ்பானிய பெற்றோரான கஸ்பார், ஒலிவா தம்பதியருக்கு 11வது குழந்தை யாக அர்ச். ரோசம்மாள் பிறந்தாள். பிறந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால், பிறந்த உடனே அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து இசபெல் என்று அதற்கு அதனுடைய பாட்டியினுடைய பெயரையே வைத்தனர். குழந்தையின் முகமானது ஒரு அழகிய ரோஜா மலராக தோற்றமளித்துக் கொண்டு அந்த முகத்தை தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததையும் கண்டதால் அந்நகரத்து மேற்றிராணியாரான அர்ச்.துர்பியுஸ் குழந்தைக்கு “ரோஸ்” என்று பெயர் வைத்து கதிட்ரல் தேவாலயத்தில் ஆடம்பரமாக ஞானஸ்நானம் கொடுத்தார். “லீமா ரோஸ்” என்ற இப்பெயரே இறுதி வரை நிலைத்தது. குழந்தை பருவத்திலேயே ரோசம்மாள் சர்வேசுரனுடைய விசேஷ தேவவரப்ரசாத சலுகைகளை அடையப் பெற்றிருந்தாள். தவழ்ந்து நடக்கும் குழந்தை பருவத்திலேயே அவளுடைய தாயாருடைய அறைக்குள்ளிருந்த பெரிய பாடுபட்ட சுரூபத்தையே உற்று நோக்கியவளாக ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தாள். 3 வயது குழந்தையாக இருந்தபோது, ரோஸ், அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிட்டது.

அப்போது அவள் அனுபவித்த மிக கொடிய உபாதனையை ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் தாங்கிக் கொண்டாள். அப்போது அவள், “இதைவிட மாபெரும் வேதனையை நமது திவ்ய இரட்சகர் நமக்காக அனுபவித்தாரே” என்று கூறினாள். மற்றொரு சமயம், அவளுக்குக் காது வலி வந்தது. அது வலிக்கிறதா என்று அவளிடம் வினவியபோது, அவள், “ ஆமாம். கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் தமது முள்முடியினால் நமது நல்ல நேச ஆண்டவர் எவ்வளவு அதிகமாக வேதனையுற்றார்!” என்று பதில் கூறுவாள். ரோஸூக்கு நான்கு வயதானபோது திடீரென்று ஒரு நாள் ஜெபபுத்தகத்தை சரளமாக வாசிக்கலானாள். அவள் எப்படி அதை வாசிக்கக் கற்றுக்கொண்டாள் என்று வினவியபோது, திவ்ய குழந்தை சேசுவே அவளுக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறினாள். சின்ன ரோஸ் ஆடம்பரமான ஆடையலங்காரங்கள், அழகான உடைகளையெல்லாம் அணிவதற்கு விரும்ப மாட்டாள். இப்பூவுலகத்தைவிட பரலோகத்திற்கே அதிகம் சொந்தமானவளாக திகழ்ந்த தமது குமாரத்தியைப் பற்றி கவலையுற்றவளாக ரோஸின் தாயார், ஒலிவா, ரோஸிடம் பல சமயங்களில் உலகக் காரியங்களின் பொருட்டு மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டாள். சில சமயங்களில் வீண் உலக ஆடம்பரங்களுக்காக அவளைக் கட்டாயப்படுத்துவாள். இவ்வாறு பல சமயங்களிலும் ரோஸின் பொறுமையை சோதிப்பாள்.

 சின்ன ரோஸ் ஒருபோதும் பொறுமையை இழந்துவிடாமலும் தாய்க்கும் மற்ற பெரியவர்களுக்கும் கீழ்ப்படிவதிலும் எப்போதும் பிரமாணிக்கமுடன் இருந்தாள். அவளுக்கு 12 வயதானபோது, அவளுடைய தாய், ஒலிவா, திருமணத்திற்கான ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது, ரோஸ், தான் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையில் உட்பட்டு விட்டிலேயே ஜெபதப பரிகார ஜீவியம் ஜீவிக்கப்போவதாகத் தெரிவித்தாள். அதை பலவிதத்திலும் வெகுநாட்களாக எதிர்த்தாலும் ஒலிவா, இறுதியில் அதுவே சர்வேசுரனுடைய திருவுளம் என்று அறிந்து கொண்டாள். லீமாவில் இருந்த அர்ச்.சாமிநாதரின் மடத்தில் அச்சபையின் துணைச் சகோதரராக ஜீவித்துவந்த மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.மார்டின் தே போரஸூம் அர்ச். லிமா ரோசம்மாளும் ஞான ஜீவியத்தில் இணைந்த நண்பர்களாக ஜீவித்தனர். அவர்கள் இருவரும் எல்லாம் வல்ல சர்வேசுரனுடைய மகத்துவமான இலட்சணங்களைப்பற்றியும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றியும் அடிக்கடி தியானித்து மகிழ்வர். பெரு நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த வறுமை பிணியைப் போக்குவதற்காக மூலிகை மருந்துகளை தயாரித்து ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்களுடைய பிணியையும் வறுமையையும் நீக்குவர்.

அர்ச். லீமா ரோசம்மாள், அவளுடைய சகோதரர் ஃபெர்டினான்டுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே கட்டிய, தபோதனர்களுக்கான ஒரு குகையிலேயே வாழ்ந்து வர திர்மானித்தாள். அது மிகச் சிறியதாக இருக்கிறதே என்று எல்லாரும் எதிர்த்தனர். உடனே அதற்கு அவள், “இது நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்கும் எனக்கும் தங்குவதற்கு போதுமான இடமாக இருக்கிறது” என்று கூறினாள். இந்தக் குகையிலேயே அவள் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், இரவு பகல் முழுவதும் நேச இரட்சகருடைய திவ்ய பாடுகளைப் பற்றிய தியானத்திலும் அதற்கு காரணமான தன்னுடையவும் உலகினுடையவும் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, ஜெபதவ பரிகார ஜிவியத்திலும் செலவழித்தாள். அவளுக்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆயினும், அவளுடைய 4வது வயதிலிருந்தே அவள் அப்பழங்களைத் தொட மாட்டாள். அதே போல் அர்ச்.லீமா ரோசம்மாள் மாமிச உணவை ஒருபோதும் உட்கொண்டதே இல்லை. காய்ந்த உரொட்டித் துண்டுகளும் தண்ணீரும் சில கசப்பான கீரைகளுமே அவளுடைய அன்றாட உணவாக இருந்தது. தபசு காலத்தில் அந்த உரொட்டித் துண்டுகளையும் சாப்பிட மாட்டாள். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ தான் அவள் உறங்கும் நேரம். அவள் தன் தலைமாட்டில் கரடுமுரடான பாறைகளையும் படுக்கையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் வைத்திருப்பாள். அந்த சொற்ப நேர தூக்குமும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். 

அங்கு ஏற்படும் கொடூரமான கோடை உஷ்ணகாலத்திலும் பல நாட்கள் தண்ணீரே உட்கொள்ளாமல் தன்னையே ஒறுத்து ஜீவித்தாள். ஒரு முள்முடியை பின்னி அதைத் தன் முடி அலங்காரத்திற்குள் வைத்து மறைத்திடுவாள். எப்பொழுதும் அவள் தலைக்குள் குத்திக் கொண்டிருக்கும் இந்த முள்முடியுடனேயும் அதனால ஏற்படும் இரத்தக் காயத்துடனும் ஜீவித்து வந்தாள். மேலும், ரோஸ், தான் உடுத்தியிருந்த உடைக்குள் தன் உடல் முழுவதையம் ஒரு முரட்டு கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டவளாக, அதனால் ஏற்படும் வலியை ஒறுத்தலாக ஒப்புக் கொடுத்தும் ஜீவித்தாள். இரவு நேரங்களில் வெறுங்காலுடன் தோட்டத்தில் மிகப் பாரமான சிலுவையை சுமந்தபடி நடப்பாள். ஒரு வேலைக்காரியிடம் அதிக பளுவான விறகுக் கட்டைகளை தன் மேல் சுமத்தும்படி செய்வாள். அதுவும் அப்பாரத்தைத் தாங்கமாட்டாமல் அதனடியில் தான் விழும் வரைக்கும் அப்படிச் செய்யச் சொல்வாள்.

இவ்வாறு, தனது திவ்ய இரட்சகர் மேல் கொண்ட சிநேகத்தை முன்னிட்டு, ஒறுத்தல் செய்வதற்கான எல்லா வழிமுறைகளையும் மிக நுட்பமான விதத்தில் அர்ச்.லீமா ரோசம்மாள் கடைபிடித்துவந்தாள்.

புண்ணிய கிரியைகளிலும் சாங்கோபாங்கத்திலும் உத்தமமான விதத்தில் ஜீவித்த அர்ச்.ரோசம்மாள், தன் குடும்பத்தினருக்குத் தேவைகளை சமாளிப்பதற்காக உழைத்து வருவாள். நல்ல பூவேலைபாடுகளுடன் துணிமணிகளையும் ஆடை ஆபரணங்களையும் நூற்பதில் கை தேர்ந்தவள். இத்தொழில் மூலம் தன் குடும்பத்திற்கு போதிய வருவாய் ஈட்டி வந்தாள். இவள் தன் தோட்டத்தில் பலவித பூச்செடிகளை பராமரித்து வந்தாள். அவற்றில் மலரும் பூக்களை விற்று வருவாள். தன் தோட்டத்து மலர்களால் அர்ச்.சாமிநாதருடைய மடத்துக் கோவிலில் இருந்த தேவமாதாவின் பீடத்தை தினமும் அலங்கரிப்பது இவளுக்கு மிகப்பிடித்தமான காரியம். அர்ச்.சாமிநாதர் சபையைச் சேர்ந்த மற்ற அர்ச்சிஷ்டவர்களைப் போலவே இவளும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்று கலங்குவாள். ஏனென்றால், அதில் 10 மணி நேரம் வேலைக்குப் போய் விட்டால் மிதியான நேரம் ஜெபிப்பதற்கும் மற்ற புண்ணிய கிரியைகள் புரிவதற்கும் பற்றாமல் போகுமே என்று நினைப்பர். 

இப்பிரச்னையை இருவழிகளில் திர்த்தாள்: 

1) தூங்கும் நேரத்தை தவிர்த்தாள். 

2) மற்ற வேலை நேரம் முழுவதும் சர்வேசுரனுடன் ஐக்கியமாக ஒன்றிணைந்திருந்தாள். 

அதாவது அவள் வேலை நேரத்தில் தனது கரங்களில் நூற்கும் ஊசியைப் பிடித்திருந்தாலோ அல்லது மலர்களை பறித்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஜெபநேரத்தில் அவளுடைய கரங்கள் ஜெபமாலையைப் பிடித்துக் கொண்டிருந்தாலோ, 24 மணி நேரமும், எப்பொழுதும், அவள் தனது பரலோக பத்தாவுடன் நெருக்கமாக இணைந்திருந்தாள். அவள் நுட்பமாக எவ்வளவுக்கு தன்னைமுழுதும் சர்வேசுரனுடன் ஒன்றிணைத்து எப்பொழுதும் ஜீவித்தாளோ, அதே அளவிற்கு தான் செய்த அனைத்தையும் ஒறுத்தலாகவும் தபசாகவும் ஒப்புக் கொடுத்து வந்தாள். அநேக நேரங்களில் அவள் ஆழ்ந்த பரவசநிலையிலேயே தொடர்ந்து இருப்பாள்:

அவளுடைய தோட்டத்தில் அவள் வசித்து வந்த சிறு குகைக்கு தினமும் ஏராளமான மோட்சவாசிகள் வந்து அவளைப் பார்த்து செல்வர். கோவிலில் திவ்ய பலிபூசையின் போது திவ்ய நன்மை உட்கொண்டபிறகு, பல மணி நேரத்திற்கு காட்சி தியான பரவச நிலையிலேயே இருப்பாள். அவளை சுற்றிலும் மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கூட உணராதவளாக இருப்பாள். நரகிலிருந்து பசாசு கொடூரமான உருவத்துடன் அவள் முன்பாக நேரிடையாகவே தோன்றி அவளை வாதித்தது, சோதித்தது. ஞான வறட்சியில் நீண்ட நேரம் ரோசம்மாள் தனிமையில் விடப்பட்டாள். அத்தகைய தருணங்களில், அவள் ஆண்டவரிடம், “ஆண்டவரே! நீங்கள் என்னுடனிருந்திருந்தால், நான் இத்தகைய கொடூரமான சோதனைகளில் விடப்பட்டு சஞ்சலமடைந்திருக்க மாட்டேன்” என்பாள். அப்போது ஆண்டவர் அவளிடம், “ரோஸ்! நான் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் நீ இந்த சோதனைகளில் இவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்புகிறாயா?” என்று வினவினார். அர்ச். லீமா ரோசம்மாள் வேதசாட்சிய முடி பெறுவதற்காக அதிகம் ஜெபிப்பாள். வேதபோதக ஜீவியத்தின் மேலும் அதிகம் பற்றுடையவளாக இருந்தாள். அவள் வேதபோதகர்களுக்காக இடைவிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தாள். ஜப்பானில் நாகசாகியில் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட வேதபோதக குருக்கள் அந்த உன்னத முடியைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவள் அர்ச்.லிமா ரோசம்மாள்.

ஏனெனில் அவள் இறந்த அதே வருடத்தில் தான் அவர்களும் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டனர். ஒரு சமயம் டச்சுக்கார பதிதர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஸ்ப்ரில்பெர்கன் என்ற கடற்கொள்ளைக்காரன் 6 கப்பல்களில் கொள்ளையருடன் பெரு நாட்டின் காலவோ என்ற துறமுகத்தைக் கைப்பற்றினான். லீமா நகரத்தின் ஆண்மக்கள் அனைவரும் அவனுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் முந்தின நாள் இரவு முழுவதும் சாந்தோ டோமிங்கோ என்ற தேவாலயத்தில் திவ்ய சற்பிரசாதநாதருக்கு முன்பாக அர்ச்.லீமா ரோசம்மாளும் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையைச் சேர்ந்த பெண்களும் சிறுபிள்ளைகளும் தொடர்ந்து 40 மணிநேர ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். லீமா நகரத்தையும் கைப்பற்றி அதன் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் பீரங்கியால் தரை மட்டமாக்குவதற்கு திட்டமிடுகிறான் என்ற செய்தி அறிந்ததும் அர்ச்.லீமா ரோசம்மாள், தன் முழங்காலுக்குக் கீழ் தொங்கிய தன் உடுப்பினை கத்திரியால் வெட்டினாள். “நமது திவ்ய சற்பிரசாதநாதரைப் பாதுகாப்பதற்கான போருக்காக என்னைத் தயாரிக்கிறேன். இப்போரில் நம் நேச ஆண்டவருக்காக உயிரைக் கொடுக்க விரும்புவோர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று மற்ற பெண்களிடம் கூறினாள். பிறகு மகா பரிசுத்த திவ்ய நற்கருணையில் விற்றிருக்கும் தன் நேச ஆண்டவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நம் திவ்ய இரட்சகர் கதிர்பாத்திரத்திற்கு மேலே தோன்றினார்.

ஆண்டவருடைய திவ்ய திருத்தலைமுடியிலும், திவ்ய நெற்றியிலும், திவ்ய திருக்கண்களிலும் முள்முடியிலும், திரு இரத்தம் ஒழுகி வடிந்துக் காய்நதிருப்பதைக் கண்டாள். ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்திலிருந்து கை கால்கள் மற்றும் மணிக்கட்டுகளிலும் திரு இரத்தம் ஓடி வழிந்து காய்ந்திருப்பதையும் கண்டாள்.

சேசுநாதர்சுவாமியின் திவ்ய திருவாய், இறுதி வாக்கியத்தை கூறியபடியே திறந்திருப்பதையும், காயப்பட்டும், விங்கியும் இருப்பதையும் கண்டாள். பிறகு அவள் தன் சிநேக ஆண்டவருடைய திவ்ய திருக்கண்கள் தன்னையே நேருக்கு நேராக உற்றுப் பார்ப்பதையும் கண்டாள். உடனே அவள் தன் நேச ஆண்டவரிடம், “ திவ்ய சற்பிரசாதத்தில் விற்றிருக்கும் என் நேச இரட்சகரே! இன்று உம்மை நான் காப்பாற்றுவேனாகில் நீர் மறுபடியும் சிலுவையிலறையப்பட மாட்டீர். நீர் எனக்காக சிலுவையில் தொங்கி மரித்தபோது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இப்பொழுது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியும்!” என்று கூறினாள். பிறகு அவள் தன்னைச் சுற்றி இருந்த மற்ற பெண்களிடம், “நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னோடு யாரெல்லாம் முன்வருவிர்கள்? அவருடைய எதிரிகளுக்கு எதிராக போர் புரிவதற்கு என்னுடன் யார் நிற்கப்போகிறிர்கள்? இதோ இங்கே, நமது சரீரங்களினால் மட்டுமே பாதுகாக்கப்படும்படியாக, நம்மேல் கொண்ட எல்லையில்லா சிநேகத்தின் பொருட்டு, நம் நேச ஆண்டவர் நம்மிடையே வீற்றிருக்கின்றார்! சகோதரிகளே உதவிக்கு வாருங்கள்! நாம் அனைவரும் நமது திவ்ய இரட்சகருக்காக ஒன்றாக இறப்போமாக! தேவநற்கருணையிலுள்ள நமது நேச ஆண்டவருடைய பரிசுத்த திவ்ய சரீரத்தை அவர்கள் அடைய வேண்டுமானால், முதலில் அவர்கள் நமது சரீரங்களை வெட்டி விழ்த்தட்டும். பிறகு வெட்டப்பட்ட நமது சரீரங்களின் வழியாக மட்டுமே அவர்கள் நம் ஆண்டவரை நெருங்க முடியும் என்பதை அந்த கடல் கொள்ளையருக்கு பறைசாற்றுவோம்!” என்று கூறினாள். 

மனித சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு உன்னதமான பரலோக சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டவளாக, அர்ச்.லீமா ரோசம்மாள் இவ்வாறு கூறக் கேட்டதும், தமது உன்னதமான பலவினத்தில், அதாவது ஒரு அப்பத்தின் வடிவில் விற்றிருக்கும் தங்களுடைய திவ்ய இரட்சகரைப் பாதுகாக்கும் கேடயங்களாக தங்கள் சரீரங்களையும் தங்களுடைய உயிரையும் கையளித்தல் என்ற ஏக தேவசிநேகமுயற்சியில் அங்கிருந்த பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவருடைய ஆத்துமங்களும் அசாதாரண முறையில் ஒன்றிணைந்தன. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் அபாயத்திலிருந்து தங்களுக்காகவோ அல்லது தங்களுடைய குடும்பத்தினருக்காகவோ பயத்தால் ஏற்படும் யாதொரு ஒரு அசைவுமின்றி, விரைவில் அந்த தேவாலயத்தில் நிகழப்போகும் (என்று அவர்கள் எண்ணியிருந்தனர்)

அவசங்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் எதிராக ஒரே ஆத்துமமாக ஒன்றித்து செயல்படுவதற்கு தயாராக இருந்தனர். இவ்வாறு அர்ச்.சாமிநாதர் 3ம்சபை உறுப்பினர்களான அர்ச்.ரோசம்மாளும் மற்ற பெண்களும் சாந்தோ டோமிங்கோ தேவாலயத்தில் மகா பரிசுத்த தேவநற்கருணையில் விற்றிருக்கும் தங்கள் நேச ஆண்டவரைப் பாதுகாப்பதற்காக தங்களையே அர்ப்பணித்த அதே சமயம், காலவோ என்ற இடத்தை கடற்கொள்ளையர் பீரங்கியால் இருமுறை தாக்கினர். அங்கிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்த சில வீடுகளை தரைமட்டமாக்கினர். கப்பல் தளத்தில் இருந்த தனது அறையில் கடற்கொள்ளையரின் தலைவன் ஸ்பில்பெர்கன் வெற்றிக்களிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மேஜை மீது காலவோ மற்றும் லிமா நகரத்தின் வரைபடம் இருந்தது. அந்நகரங்களின் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் தகர்ப்பதற்காக குறித்தான். அவன் வானத்தை நோக்கி ஆணவத்துடன் சிரித்தான். ஏனெனில் அவன் தன் ஆத்துமத்தை வெகுகாலத்திற்கு முன்பாகவே பெரும்பாவங்களினால் இழந்திருந்தான். பிறகு அவன் தன்னிடமிருந்த தொலைநோக்கிக் கருவியை எடுத்து அதன் லென்ஸைத் துடைத்தான். பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே புறப்படும் சமயத்தில் அவன் ஒருவித திமிர்வாத நோயினால் பாதிக்கப்பட்டவனாக, திடீரென்று அலறிக் கீழே விழுந்தான். 

அவன் விழுந்த 15வது நிமிடத்தில் அவனுடைய 6 கப்பல்களுடன் கடற்கொள்ளையர் அனைவரும் பெரு நாட்டைவிட்டு விரைந்து ஓடி மறைந்தனர். ஏனெனில் தலைவன் இல்லாமல் அவர்களால் சண்டைபோடமுடியாது. இவ்வாறு அர்ச்.லீமா ரோசம்மாளுடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் தயவாய் செவிசாய்த்தார். லீமா நகரத்தை சர்வேசுரன் அர்ச்.ரோசம்மாளின் ஜெபத்தினால் இவ்வாறு காப்பாற்றியதற்காக லீமா நகர மக்கள் அர்ச்.லீமா ரோசம்மாளை நன்றிபெருக்குடன் கொண்டாடியது.

ரோசம்மாள், தன் தந்தை, கொன்சாலோவின் உதவியுடன் கோவிலிலிருந்து விட்டிற்கு சென்றாள். “நமது நேச ஆண்டவருக்காக நம் உயிரை விடுவதற்கு என்ன அருமையான சந்தர்ப்பம் இது!” என்று கூறினாள். தொடர்ந்து கடைபிடித்துவந்த கடின தபசினால், பரலோகத்தின் தேவபத்தாவுடன் அவள் அடைந்த உன்னதமான காட்சி தியான ஜீவியத்தின் உச்சநிலை ஐக்கியமானது, பல சரீர அடையாளங்களினால் அர்ச்.ரோசம்மாளிடம் வெளிப்படையாக காணப்பட்டது. அவளுடைய சரீரம் முழுவதும் வேதனையாலும், பலவினத்தாலும் காய்ச்சலாலும், தலை முழுவதும் இடைவிடாத வலியாலும் வாதிக்கப்பட்டாள். தண்ணீர் அருந்தினால் கூட இறந்துவிடுவாள் என்பதால் குடிக்க தண்ணீரின்றி கொடிய தாகத்தினால் இறக்கும் வரைக்கும் வருந்தினாள்.

1617, ஆகஸ்ட் 24ம் நாளன்று, 31வது வயதில் இறுதி அவஸ்தை பூசுதலைப்பெற்று திவ்ய நற்கருணை நாதரை தனது இருதயத்தில் வரவேற்றபடியே பாக்கியமான மரணமடைந்தாள். லீமா நகர மக்கள் அனைவரும் துக்கித்தனர். அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவள் மருத்துவம் செய்து குணமாக்கிய எண்ணற்ற நிக்ரோக்கள், செவ்விந்தியர், தேவதிரவிய அனுமானத்திற்கு அவளால் திரும்ப அழைத்து வரப்பட்ட மனந்திரும்பிய ஸ்பானியர்கள் மற்றும் எல்லா உயர்குடிமக்கள் அனைவரும் அவளுடைய பிரேதப்பெட்டிக்கு இருமருங்கிலும் முழங்காலில் இருந்து ஜெபமாலை ஜெபித்தனர். 1671 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அர்ச்சிஷ்டவளாக பாப்பரசர் லீமா ரோசம்மாளை பீடத்திற்கு உயர்த்தினார்.†

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக